ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடும் முறை எப்படி?
வீட்டில் ஆரோக்கியமாக உள்ள எல்லோருக்கும் பொதுவான உணவுகள் ஆஸ்துமா நோயாளிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடும். எனவே ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவருக்கு உணவு கொடுக்கும் போது கவனம் தேவை.
குறிப்பாக ஆஸ்துமா தீவிரமாக இருக்கும்போது அதிக கவனம் தேவை. ஏனென்றால் சிலவகையான உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தி உடனடி எதிர்விளைவுகளை உருவாக்கி விடுகின்றன.
சிலவகையான, புரதம் சார்ந்த உணவுகள், திராட்சை, வாழைப்பழம், இளநீர், தயிர், மோர், பலாப்பழம் போன்றவற்றை சாப்பிட்ட 30 நிமிடங்களுக்குள் சிலருக்கு மூக்கில் நீர் வடியத் தொடங்கிவிடும். தொடர்ந்து மூச்சு விடுவதிலும் சிரமம் ஆகிவிடும். கூடவே இருமலும் தோன்றி விடும். எனவே ஆஸ்துமா நோயாளி பழவகைகள் அனைத்தையும், எண்ணெய், நெய் பலகாரங்கள், இனிப்புப் பண்டங்கள், முந்திரி மற்றும் பாதாம்பருப்பு, இளநீர், நிலக்கடலை ஆகியவற்றையும் உறுதியாகத் தவிர்த்து விடுதல் வேண்டும். பேரீச்சம்பழம், கிஸ்மிஸ்பழம் ஆகியவற்றை உண்ணலாம்.
முதலில் ஒரு நோயாளி என்ன வகையான உணவு வகைக்குப் பழக்கப்பட்டவராக இருக்கிறாரோ அதையே பின்பற்றி வருமாறு செய்தால் நன்று. ஒருவர் சைவ உணவுப் பழக்கமுடையவரானால் சைவ உணவையும், அசைவரானால் அசைவ உணவையும் உண்டுவருவது நலம்.
உணவுப் பழக்கத்தில் பெரும் மாற்றங்களைச் செய்யாதிருத்தல் நன்று. என்றாலும், சிலவகைப் பொருட்கள் நோயைப் பெருக்குகிறது என்று தெரிந்தால் அவை தவிர்க்கப்படவே வேண்டும். எனினும் சிலபொருட்கள் சில நோயாளிகளின் நோயைப் பெருக்கிவிடுகிறது. என்றாலும் அந்த உணவுவகை மற்றொருவரை அது எவ்வகையிலும் பாதிப்பதே இல்லை என்பதையும் நாம் அறிந்திருத்தல் நலம்.
முதலில் நோயாளி ஒரு நாளில் எத்தனை முறை, எவ்வகையான பொருட்களை உண்கிறார் என்பதை அறியவேண்டும். ஆஸ்துமா நோய் தீவிரமாக இருக்கும்போது அரிசிக்கஞ்சி, பால் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்த்த ஆகாரங்களே கொடுக்கப்பட வேண்டும். பின்னர் இளைப்பு சற்று குறைகிறபோது பகல் நேரங்களில் மட்டும் கடினமான உணவு கொடுக்கலாம். சில சமயங்களில் ஆஸ்துமா தொடர்பான இளைப்பு பலநாட்கள் கூட இருப்பதுண்டு.
அப்போது அவருக்கு நீர் கலந்த ஆகாரமே (Liquid Food) அவசியமானால் இரண்டுமணி நேரத்திற்கு ஒருமுறை கொடுக்கலாம் ஒரு கப் அதிகமாகத் தோன்றினால் அதையும் சற்றுக் குறைத்துக் கொள்ளலாம் பெரும்பாலும் பால் கலந்த உணவாகவே அல்லது பாலாகவே இருப்பது நல்லது.
ஆஸ்துமாவின் போது இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் குறைந்து தாழ்சர்க்கரை நிலை தோன்றுகிறது. எனவே அப்போது தேன் மற்றும் மாவுப் பொருட்கள் நிறைந்த உணவுப் பொருட்களை தேவையான அளவு கொடுக்கலாம்.
நாம் உண்ணும் உணவுப் பொருட்கள், பல்வேறு வகையான சீரான நீர்களால் ( Enzyms) சாதாரண துகள் ஆக உடைக்கப்பட்டு செரிமானத்திற்கு ஏற்றதாக ஆக்கப்படுகின்றன. அவ்வாறான நிகழ்ச்சிப் போக்கில் கல்லீரலில் பொசியும் பல்வேறு என்சைம்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. தசை நார்களின் மட்டத்தில் கூட சில என்சைம்கள் உள்ளன. அவை உணவில் உள்ள வேண்டாத துகள்களைக் கூட நொறுக்கி அரைத்து, தசைநார்களில் காணப்படும் பொருட்களாக மாற்றுகின்றன. இவ்வாறாக உண்ணப்பட்ட பொருட்களின் இறுதிப்பகுதிகூட உட்கிரகிக்கப்பட்டு உடலுக்கு ஏற்றதாக ஆக்கப்படுகின்றன.
இரைப்பை மற்றும் குடற்பகுதிகளில் சீரணததாலோ அல்லது வளர்சிரை மாற்றத்தாலோ ஏதாவது இடையூறு நிகழ்ந்தால் – சீரணத்தின் இறுதிப்பகுதிகளில் பொருட்கள் குடலிலோ, கல்லீரலிலோ அல்லது இரத்த ஓட்டத்திலோ தேங்கி நின்றுவிடுகின்றன.
வளர்சிதை மாற்றத்தின் போது வெளியேற்றப்பட வேண்டிய பொருட்கள் தோன்றுகின்றன. மலம், சிறுநீர், வியர்வை ஆகியவற்றின் மூலம் இந்தக் கழிவுப்பொருட்கள் ஒழுங்காக வெளியேற்றப் படாதிருந்தால் அவை நுரையீரலுக்கு இரத்த ஒட்டத்தின் மூலம் எடுத்துச்செல்லப்படுகிறது. அவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட இரத்தம் சரியான முறையில் தூய்மைப் படுத்தப்படாமல் நுரையீரல் வழியாக மூச்சுக்குழல்களுக்குச் செல்லும் பொழுது அங்கு ஒருவகையான தடையை ஏற்படுத்தி ஆஸ்த்மாவைத் தோற்றுவிக்கிறது. எனவே தினமும் முழுவதுமாக மலம் கழித்துவிடுவதோடு இயற்கையின் மலமிளக்கிகளான பட்டினி இருந்தும், ஏராளமான நீர் அருந்தியும், சீரணத்தையும், வளர்சிதை மாற்றத்தையும் ஊக்குவித்தல் முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
ஆஸ்துமா நோய் உண்மையில் ஒருவருடைய சீரணிக்கும் திறனுக்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் தேவையான அளவுக்கும் அதிகமாக உண்பதால் தோன்றும் ஒரு நோய்தான். எனவே நோயாளி மிகுதியான உணவு உண்பதற்குப் பதிலாக முடிந்தபோதெல்லாம் உண்ணவிரதம் இருப்பது இன்றியமையாதது.
ஆஸ்துமா நோயின்போது மிகக்குறைவான அளவே உணவு உட்கொள்ளவேண்டும் ஏனெனில் இரவு நேரங்களில் சீரணமண்டலம் மற்றும் வளர்சிதை மாற்றம் ஆகியவை உடலின் செயல்கள் மிகவும் குறைவாய் இருப்பதால் மந்தமாக இருக்கிறது. எனவே ஆஸ்துமா நோயாளிகள் இரவு நேரங்களில் மிகவும் எளிய உணவைக்குறைவாகவே உண்ணவேண்டும். அல்லது பட்டினி இருக்கவேண்டும்.
ஆஸ்த்மா நோயாளி எப்போதும் வயிறு நிறையச் சாப்பிடக்கூடாது. அரைவயிற்றுக்குச் சாப்பிடும்போதுகூட அவரசமில்லாமல் நன்றாக மென்று அரைத்து எந்தவிதமான விருப்பு, வெறுப்பு, கோபதாபங்கள் இல்லாது மனஅமைதியுடன் உண்ணல் வேண்டும். இவர்கள் விருந்துகளில் கலந்து கொள்ளக்கூடாது. கல்யாண வீடுகளிலோ வேறு விசேஷங்கள் நடைபெறும் வீடுகளிலோ பரிமாறப்படும் உணவு வகைகளைத் தவிர்க்கவேண்டும். ரொட்டிக்கடைகளில் தயாரிக்கப்படும். கோதுமை ரொட்டி, தேன் மிகவும் பயனுள்ளது.
தூதுவளைக்கீரை, அரைக்கீரை, கண்டங்கத்திரி ஆகிய கீரைகளை உணவுடன் மிகுதியாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
இஞ்சிச்சாறு, முருங்கைப்பட்டைச்சாறு ஆகியவற்றை நோய்கண்ட சமயம் சிறிது சிறிதாகப் பலமுறை சாப்பிடலாம் சூரியன் மறைவதற்கு முன்னமே இரவு உணவை உட்கொள்ளுதல் மிகவும் நல்லது.
ஆஸ்துமா நோயாளி தவிர்க்கவேண்டிய உணவுப்பொருட்கள்
சாதாரணமாக ஆஸ்த்மா நோய் மிகுதியாக உண்பதால் அதாவது தன்னுடைய உடலின் சீரண உறுப்புக்கள் எளிதில் சீரணித்து உட்கிரகித்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு அதிகமாக உண்பதால் தோன்றுகிற ஒரு நோய்தான்.
எனவே ஆஸ்த்மா நோயாளி அதிகமாக உண்பதற்குப் பதிலாக மிகக் குறைவாக இரவு நேரங்களில் பட்டிணி இருப்பது நல்லது.
ஏனெனில் அப்போது செரிமான உறுப்புகளும், உடலும் ஓய்வு நிலையிலிருக்கும். வளர்சிதை மாற்றமும் மிக மெதுவாகவே நடைபெறும்.
ஆஸ்த்மா நோயாளி தயிர், மோர் ஆகியவற்றைப் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரவு நேரங்களில் இரத்த ஓட்டம் சற்று வேகம் குறைந்தாகிவிடுகிறது. தயிர், மோர் ஆகியவற்றைப் பயன்ப்படுத்தினால், அது மேலும் மந்தமாகி உடல் ஊட்டம் பெறுவதை மேலும் மந்தமானதாக்கி உடல் ஊட்டம் பெறுவதைத் தடுக்கிறது. அது தூக்கத்தைக் கெடுக்கிறது.
நல்ல உடல்நலமும், உழைப்பும் உடையவர்களுக்கு தயிர், மோர் சிறந்த பயனளிக்கிறது. ஒரு ஆஸ்த்மா நோயாளிக்கு இது விஷம் போன்றதாகி விடுகிறது. ஆஸ்த்மா நோயாளிக்குப் பொதுவாக இரத்த ஓட்டம் குறைவான வேகமுடையதாகவே இருக்கும். அதன் விளைவாக மூச்சுக்குழலை வேக்காடு, இளைப்பு, அடைப்பு ஆகியவை தோன்றுகின்றன.
இதே போன்று உடலுக்கு நலன் தரக்கூடிய வாழைப்பழம் ஆஸ்துமா நோயாளியின் உடலுக்கு ஊறுவிளைவிக்கிறது. அவர் அதைச் செரிக்க இயலாமல் திணறுகிறார். மேலும் அது அதிகமான சளியை உற்பத்தி செய்கிறது. அதனால் அது மூச்சுக்குழல்களில் இளைப்பையும், அடைப்பையும் உண்டாக்குகிறது. உடல் நலம் உள்ளவர்களுக்குக் குளிர் பானங்களும், பழச்சாறுகளும், பெரும் ஊட்டச் சத்துள்ளவையாகவும் பயனுள்ளவையாகவும் விளங்குகின்றன.
ஆனால் ஆஸ்த்மா நோயாளிக்கு அவை செரிமானத்தையும், வளர்சிதை மாற்றத்தையும் தடை செய்தால் மூச்சுக் கிளைக்குழல்களில் வேக்ககாட்டையும் அடைப்பையும் தோற்றுவிப்பதாக இருப்பதால் பெருந்துன்பத்தை விளைவிக்கிறது.