வாழ்வின் இருள் நீக்கி வெளிச்சம் தரும் சுருட்டப்பள்ளி சிவன்!
Written by NIRANJANA
சென்னையில் இருந்து சுமார் 56 கிலோ மீட்டர் தொலைவிலும், திருப்பதியில் இருந்து 75 கி.மீ. தொலைவிலும் தமிழ்நாடு – ஆந்திரா எல்லையில் சுருட்டப்பள்ளி உள்ளது.
ஒவ்வொரு ஜீவராசிகளையும் காப்பது இறைவன்தான். ஆபத்தில் இருந்து காப்பாற்றி நல்வாழ்வை தரும் ஆற்றல் இறைவனுக்கு மட்டும்தான் உண்டு.
இறைவன், மனிதர்களுக்கு போதுமான அறிவும், தைரியமும் கொடுக்கிறான். ஆம். குழந்தையாக இருக்கும்போது நடக்க தெரியாமல் இருந்தாலும், விடா முயற்சியால் நடக்க கற்றுக்கொள்கிறது குழந்தை. இதே விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் பலருக்கு கடைசிவரை இருப்பதில்லை.
எப்படி வாழ்ந்தால் வாழ்நாள் இனிதாகும் என்றால், நடந்ததை பற்றி சிந்திக்ககூடாது அப்படி சிந்திப்பவன் முட்டாள். நடக்கபோவதை பற்றி யோசிக்ககூடாது அப்படி யோசிப்பவன் மூடன், நடப்பபது எதுவாக இருந்தாலும் அதை அமைதியாக ஏற்று வாழ்பவனே அறிவாளி. அவர்கள் நிச்சயம் வருவார்கள் முதலாளியாக.
ஆம்.
குழப்பங்கள், பிரச்னைகள் ஏற்படும்போது அமைதியாக இருந்தாலே அந்த பிரச்னை தானாகவே நீங்கிவிடும். அமைதியாக இருக்கும் ஆழ்கடலில்தானே முத்து கிடைக்கிறது. அதுபோல அமைதியாக இருந்து வெற்றிபெறுவதுதான் நிரந்தர வெற்றி.
வெற்றி கிடைக்க வேண்டுமானால் முதலில் தோல்வியை சந்திக்கவேண்டும். தோல்வியே காணாமல் வெற்றிபெற்றால், பிறகு ஏதே ஒரு காரணத்தால் தோல்வி நேரும்போது, அதை தாங்கும் மனம் இல்லாமல் விபரீத முடிவுகளை எடுக்கும் அளவுக்கு மனதில் தேவை இல்லா எண்ணங்கள் ஏற்படும்.
முதலில் முயற்சிக்கும்போது நீ தோல்வியை பெற்ற பிறகு வெற்றியை பெறு. அதுதான் உன் வாழ்க்கைக்கு நிரந்தர வெற்றியை தரும் என்பார்கள் – வெற்றியை கண்ட அனுபவஸ்தர்கள்.
அமிர்தம் கிடைத்தால் வெற்றி. அதற்கு முன் விஷம் கிடைத்தது தேவர்களுக்கு. இதனால் தேவர்கள் தோல்வி அடைந்தார்கள் என்று சொல்ல முடியாதல்லவா.
கஷ்டம் இருந்தால் அதில் ஒரு நன்மை பிறக்கும். கெட்ட காலம் வந்தால்தான் நல்லகாலம் பிறக்கும். பாற்கடலில் அமிர்தமும் இருந்தது, விஷமும் இருந்தது. விஷம் வெளியேறிய பிறகுதான் தேவர்களுக்கு அமிர்தம் கிடைத்தது.
பாற்கடலைபோல்தான் வாழ்க்கையும். நல்லது, கெட்டது இந்த இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை. இருட்டில் பயப்படாமல் சென்றால்தான் வெளிச்சத்தை காணமுடியும்.
நீலகண்டேஸ்வரர் பெயர் வந்ததன் காரணம்
தேவர்களும் – அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது முதலில் விஷம் வெளிவந்தது. அந்த விஷத்தை மீண்டும் கடலில் போட்டால் இனி உலகத்தில் எந்த ஜீவராசிகளும் உருவாகாது. ஆகவே அந்த விஷத்திற்கு ஒரு இடம் கிடைத்துவிட்டால்தான், பாற்கடலில் இருக்கும் அமிர்தம் கிடைக்கும். என்ன செய்வது? என்று குழம்பிய தேவர்கள் சிவபெருமானிடம் ஓடி வந்தார்கள்.
இந்த விஷத்தை என்ன செய்வது? என்று தேவர்கள் கேட்க, தாய் உள்ளம் கொண்ட தாயுமானர், அதற்கு தீர்வு சொல்லி நேரம் கடத்தாமல், தேவர்களிடம் இருந்த விஷத்தை தானே உண்டார்.
சிவபெருமானுக்கு ஏதாவது விபரீதம் ஆகிவிடுமோ என்று பதறிய பார்வதி தேவி, ஈசன் சாப்பிட்ட விஷம் உடல் முழுவதும் பரவி விடக்கூடாதே என்று எண்ணி, ஈசனின் கழுத்தை இறுக்கபிடித்துக்கொண்டார். இதனால் சிவபெருமான் உண்ட விஷம் கழுத்தின் கண்டத்தில் அப்படியே நின்று, நீல நிறமாக மாறியது. இதனால் இறைவன், “நீலகண்டஸ்வரர்” என பெயர் பெற்றார்.
சுருட்டப்பள்ளி உருவான கதை
விஷம் உண்ட பிறகு ஈசனுக்கு சில நிமிடம் மயக்கம் ஏற்பட்டது. இதனால் ஓய்வெடுக்க விரும்பி பூலோகத்திற்கு வரும்போது, புங்கை மரங்கள் அதிகம் இருக்கும் அமைதியான இடத்தை கண்டார்.
உடன் வந்த பார்வதிதேவின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டு விஷம் உண்ட களைப்பை போக்கிக்கொண்டார் சிவபெருமான்.
ஈசன், விஷ்ணு பகவானைபோல் சயனகோலத்தில் வீற்றிருந்தார். சர்வேஸ்வரனை தரிசிக்க தேவர்கள் அனைவரும் பூலோகத்திற்கு வந்தார்கள். ஈசனை பள்ளிகொண்டேஸ்வரராக தரிசித்தார்கள்.
சிவபெருமான் சுருண்டு படுத்ததால், “சுருட்டப்பள்ளி” என்று பெயர் ஏற்பட்டது என்று பாமர பக்தர்கள் சொல்கிறார்கள். ஆனால் ஸ்தலபுராணத்தை பார்த்தால் இந்த இடம், “சுரர்பள்ளி” என்று அழைக்கப்படுகிறது. “சுரர்” என்றால் தேவர்கள் என்ற அர்த்தமாம். தேவர்கள் குழுமியிருந்த இடம் என்பதால், “சுரர்பள்ளி” என்று பெயர் என்கிறது ஸ்தல புராணம்.
வால்மீகி முனிவருக்கு காட்சி கொடுத்த பள்ளிகொண்ட சிவன்.
வால்மீகி முனிவர் சிவபெருமானை தரிசிக்க விரும்பினார். அவர் விருப்பத்தை அறிந்த ஈசன், முனிவருக்கு காட்சி கொடுத்ததால் “வால்மீகிஸ்வரர்” என்று பெயரும் சர்வேஸ்வரனுக்கு உண்டு.
பரிகாரம்
பள்ளிகொண்ட சிவபெருமானை தரிசிக்கும்போது, மரகத நாயகியை தரிசித்தால் வாழ்க்கையே பசுமையாக மாறும். சர்வேஸ்வரனை பிரதோஷ காலத்தில் தரிசித்தால், தரிதிரங்கள் நீங்கி வளமை பெருகும்.
அத்துடன், இந்த ஆலயத்தில் தட்சணாமூர்த்தி தன் மனையியுடன் காட்சி தருகிறார். இதனால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். பிள்ளைகளுக்கு நல்ல கல்வி ஞானம் ஏற்படும்.
“என்ன செய்வது என்று தெரியலே சுருண்டுபோய் கிடக்கிறேன்” என்று சொல்பவர்களா நீங்கள்?. அப்படியானால் முதலில் சுருட்டப்பள்ளி சிவனை தரிசியுங்கள். சுருண்ட வாழ்க்கையை தலை நிமிர வைப்பார் பள்ளிகொண்டேஸ்வரர்!.
Send your feedback to: editor@bhakthiplanet.com
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
http://www.youtube.com/bhakthiplanet
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2013 bhakthiplanet.com All Rights Reserved