Wednesday 25th December 2024

தலைப்புச் செய்தி :

குடும்ப ஒற்றுமைக்கு அருளும் காஞ்சனமாலை அம்மன்

நிரஞ்சனாNIRANJHANA

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மீனாட்சி அம்மன் கோயில் வழியாக வந்தால், புதுமண்டபத்தின் கிழக்கில், கீழ ஆவணி மூல வீதியிலிருந்து பிரியும் ஏழு கடல் தெரு உள்ளது. இந்த இடத்தில் அமைந்துள்ளது அருள்மிகு காஞ்சனமாலை அம்மன் திருக்கோயில்.

காஞ்சனமாலை அம்மனை வணங்கினால், ஸ்ரீமீனாட்சி – சுந்தரேஸ்வரரின் அருளாசி பெற முடியும். காஞ்சனமாலை அம்மனை இந்த ஆலயத்தில் வந்து தரிசித்தால், பிரிந்த கணவன் – மனைவி ஒன்று சேருவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் என்பது ஐதீகம்.

காஞ்சனமாலைக்காக ஒரு கிணற்றில் சிவபெருமான், ஏழு கடல் தோன்ற செய்தார். காஞ்சமாலை யார்? சிவபெருமான் ஏழு கடல் தோன்ற செய்த காரணம் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.

காஞ்சனமாலை

மதுரையை ஆண்ட மலையத்துவஜ பாண்டியனின் மனைவி காஞ்சனமாலை. இவர்களின் மகள் மீனாட்சி. மதுரையின் ஆட்சி பொறுப்பை மீனாட்சி ஏற்றார். பிறகு மீனாட்சிக்கும் – சிவபெருமானுக்கும் திருமணம் நடைப்பெற்றது.

 “என் மகள் மீனாட்சியின் திருமணத்தை பார்த்துவிட்டேன், உலகத்தையே ஆளும் ஈசன் என் மருமகன். இந்த பெருமையே எனக்கு போதும். எனது கணவரும் இறைவனடி சேர்ந்தார். அதனால் இனி நான் பிறவாப் பெரு நிலை அடைய விரும்புகிறேன். அதற்கு என்ன வழி.?” என கௌதம முனிவரிடம் கேட்டார் காஞ்சனமாலை.

“பிறவா நிலை அடைய மூன்று விதிமுறைகளில் ஏதாவது ஒன்றை கடைபிடிக்க வேண்டும். முதல் விதிமுறை, தர்மம் செய்ய வேண்டும். தியானம் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் பொய் உரைக்கக்கூடாது. இதுவே முதல் நிலை.

“சிவாய நம” எனும் மந்திரத்தை தினமும் சொல்ல வேண்டும். வேத நூல்களை படிக்க வேண்டும். யாகங்கள் செய்ய வேண்டும். இதுவே இரண்டாம் நிலை.

சிவபெருமானின் ஆலயத்தை வலம் வருவது, ஸ்தல யாத்திரை செல்வது, ஏழு கடலில் நீராடுவது இவை மூன்றாம் நிலை. இதில் ஏதாவது ஒன்றை கடைபிடித்தால் பிறவா நிலை அடையலாம்.” என்றார் கௌதம முனிவர்.

அதற்கு காஞ்சனமாலை, தமக்கு வயதாகிவிட்டதால் இனி பல ஆலயங்களுக்கு செல்ல இயலாது. அதனால் கடலில் நீராடுவதுதான் சரியாக இருக்கும் என்று தீர்மானித்தாள். மதுரையில் வைகையாறுதானே உள்ளது கடல் இல்லையே. அதுவும் ஏழு கடலில் நீராட வேண்டுமே. அதனால் எனக்கு பிறவாநிலை அடையும் பாக்கியம் இல்லை என தன் மகள் மீனாட்சியிடம் சொல்லி வருந்தினாள்.

தாயாரின் மனவருத்தத்தை அறிந்த மீனாட்சி, தன் கணவரான சிவபெருமானிடம் சென்று, தம் தாயார் பிறவா நிலை அடைய ஏழு கடலில் நீராட வேண்டும் என விரும்புகிறார் என சொன்னாள்.

“உன் தாயின் விருப்பம் நிறைவேறும். இந்த மதுரை மாநகரில் ஏழு கடலும் வந்தடையும்.” என்ற ஈசன், ஏழு கடலும் மதுரை நகரில் இருக்கும் ஒரு கிணற்றில் வரவழைத்து அருள் புரிந்தார்.

ஏழு கடலும் ஒரே கிணற்றுக்குள் சங்கமித்ததால் காதை கிழிக்கும் சப்தத்துடன் கடலின் அலை ஒசை கிணற்றுக்குள் ஒலித்தது. மக்கள் பயந்தார்கள். கடல் இல்லாத ஊருக்குள் அதிரும் கடலின் அலையோசை கேட்டு திகைத்தார்கள். இதை கண்ட தேவர்களும் – முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று, “ஏழு கடல் ஓசைகளை, கேட்டு மக்கள் பயப்படுகிறார்கள்.” என்று எடுத்து கூற, சிவபெருமான், கிணற்றில் தோன்றிய ஏழு கடலையும் அமைதிப்படுத்தினார்.

“மதுரை நகரையே கடலின் அலை  ஓசை அதிர வைக்கிறதே? மதுரையில் கடல் எங்கே இருக்கிறது.?” என மகள் மீனாட்சியிடம் கேட்டார் காஞ்சனமாலை.

Bhakthi Planetஇவை சிவபெருமானின் திருவிளையாடல் என தெரிந்துக்கொண்ட மீனாட்சி புன்னகையுடன், “அம்மா, உங்களுக்காக என் கணவர் ஏழு கடலையும் ஒரு கிணற்றுக்குள் வரவழைத்திருக்கிறார். வாருங்கள் காட்டுகிறேன்.” என்று சொல்லி, காஞ்சனமாலையை அழைத்த சென்று அந்த அதிசய கிணற்றை காண்பித்தாள் மீனாட்சி. அந்த கிணற்றின் அருகில் சென்றவுடன் காதை கிழிக்கும்படியான கடல் அலைகளின் ஓசை ஒலித்தது. கிணற்றுக்கு எட்டி பார்த்தாள் காஞ்சனமாலை. கிணற்றுக்குள் ஏழு கடல் அலைகளும் ஒன்றோடு ஒன்று மோதும் அதிசயத்தை கண்டாள்.

இருந்தாலும் காஞ்சனமாலையின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. அதை கவனித்தாள் மீனாட்சி.

“அம்மா, இன்னும் என்ன வருத்தம்?” என கேட்டாள்.

“திருமணமான ஒரு பெண், புண்ணிய நதிகளில் நீராடுவதாக இருந்தால், தன் கணவரின் கைபிடித்து நீராடினால்தான் அவள் பாக்கியசாலி என்று சாஸ்திரம் சொல்கிறது. ஆனால் உன் தந்தை இறைவனடி சென்றுவிட்டார். அவரை சொர்க்கத்தில் இருந்து வரவழைத்து அவர் கரம் பிடித்து நான் இந்த புண்ணிய கடலில் நீராடினால்தான் அது எனக்கு மகிழ்ச்சியை தரும்.” என்றார் காஞ்சனமாலை.

“அம்மா, இறந்து போனவர்களை திரும்ப அழைத்து வருவதெல்லாம் இயலாத காரியம். ஆனாலும், தந்தை நம்முடனே இருக்கிறார். அந்த நம்பிக்கையில் நீராடு” என மகள் மீனாட்சி எவ்வளவு சொல்லியும் காஞ்சனமாலை சமாதானம் அடையவில்லை.

“இல்லை மீனாட்சி. அப்படி என்றால் சாஸ்திரபடி பிறவாநிலை அடையும் பாக்கியம் எனக்கு இல்லை என ஆகிவிடும். ஏழு கடலில் நீராடியும் காஞ்சனமாலையின் விருப்பம் நிறைவேறவில்லை என அவப்பெயர், இந்த ஏழு புண்ணிய கடலுக்கும் உண்டாகும். அதனால் வேண்டாம். என் கணவர் என் கரம் பிடித்து இந்த ஏழு கடலில் நீராடும் காலம் வரும்வரை நான் காத்திருப்பேன்.”என்றார் காஞ்சனமாலை.

தன் தாயாரின் கடைசி ஆசை நிறைவேறவில்லையே என மீனாட்சி வருந்தினாள். இதனால், சிவபெருமானும் மனம் இறங்கினார். அதனால் இந்திரனிடம் மலையத்துவஜ பாண்டியனை தக்க மரியாதையுடன் புஷ்பக விமானத்தில் அழைத்து வரும்படி இந்திரனுக்கு உத்தரவிட்டார் ஈசன்.

இந்திரனும் மலையத்துவஜ பாண்டியனை சொர்க்க லோகத்திலிருந்து மதுரைக்கு அழைத்து வந்தார்.

காஞ்சனமாலையின் விருப்பபடியே, அவள் தன் கணவரின் கைபிடித்து கிணற்றில் தோன்றிய ஏழு புண்ணிய கடலில் நீராடி பிறவா நிலை அடைந்தாள்.

காஞ்சனமாலைக்காக ஏழு கடலை சிவபெருமான் வரவழைத்த இடமே “ஏழு கடல் தெரு”  என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியிலேயே காஞ்சனமாலையும் தெய்வமாக போற்றப்பட்டு அவருக்கு கோயிலும் இருக்கிறது.

இந்த ஆலயத்திற்கு வந்து காஞ்சனமாலை  அம்மனை தரிசித்து தங்களுடைய வேண்டுதலை அம்மன் முன் சொல்லி வணங்கினாலே நிச்சயம் காஞ்சனமாலை அம்மன் தன் பக்தர்களுடைய வேண்டுதலை நிறைவேற்றி, மீனாட்சி – சுந்தரேஸ்வரரின் அருளாசி கிடைக்கவும் அருள் புரிகிறார். கருத்து வேறுபாடு உள்ள கணவன் – மனைவி இந்த ஆலயத்திற்கு வந்து அம்மனை தரிசித்தால், கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமையும் அன்பும் நிலைத்து நீடிக்கும்.!

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Feb 28 2013. Filed under அம்மன் கோயில், ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், சிவன் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »