உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது?
நிரஞ்சனா
தஞ்சையை ஆண்ட மன்னர் இராஜராஜ சோழனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது எது? என்பதே மன்னரின் சந்தேகம். அரசரின் சந்தேகத்திற்கான பதிலை சிற்பி ஒருவர், ஒரு சிலையின் மூலமாக விளக்கினார். அதை கேட்டு இராஜராஜ சோழன் மகிழ்ந்து, ஆயிரம் பொன் பரிசு தந்து, தஞ்சை பெரிய கோவிலுக்கான சிற்ப வேலைகளுக்கான பொறுப்புகளையும் அந்த சிற்பிக்கே தந்தார்.
இராஜராஜ சோழனின் கேள்விக்கு விடை தந்த சிற்பி வடித்த சிலை என்ன என்பதை தெரிந்துக்கொண்டால் உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது எது? என்ற கேள்விக்கு விடை கிடைத்து விடும்.
ஆயிரம் பொன் பரிசு
மன்னர் இராஜராஜ சோழனுக்கு ஒரு கேள்வி எழுந்தது. உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய பொருள் எது என்பதே அவர் கேள்வி. “மன்னரின் கேள்விக்கான சரியான விளக்கத்தை அறிஞர்கள் மட்டுமல்லாமல் மக்களும் அளிக்கலாம். அனைவரையும் மகிழ்விக்கும் பொருளை அரண்மனையில் இருக்கும் கொலுமண்டபத்தில் வைத்து விடுங்கள், யாருடைய பொருள் அரசருடைய சந்தேகத்திற்கு சரியான விடை தருகிறதோ அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு.” என அறிவிக்கப்பட்டது.
மக்களும் யோசித்து, அவர்களுக்கு தெரிந்து மகிழ்ச்சியை தரும் பொருட்கள் எவையோ அவற்றை கொண்டு வந்து அரண்மனை கொலு மண்டபத்தில் வைத்துவிட்டு ஆயிரம் பொற்காசுகள் பரிசுக்காக காத்திருந்தார்கள்.
மறுநாள், மன்னர் ராஜராஜ சோழர் கொலு மண்டபத்திற்கு வந்து பார்த்தார். மக்கள் வைத்த பொருட்கள் மண்டபத்தில் நிரம்பி இருந்தது.
ஒவ்வொரு பொருட்களாக அரசர் பார்த்துக் கொண்டே வந்தார்.
முதலில், சிறிய அளவு பொன் இருந்தது. அதன் கீழே, “செல்வமே மகிழ்ச்சி தரக்கூடியது” என எழுதப்பட்டிருந்தது.
ஆனால், “செல்வந்தர்களுக்கும், நோயாளிகளுக்கும் செல்வம் எப்படி மகிழ்ச்சியை தரும்?” அதனால் இது சரியான விளக்கம் அல்ல.” என அதை நிராகரித்தார் மன்னர்.
அடுத்ததாக, இசை கருவி இருந்தது. அதன் கீழே, “இசையே மகிழ்ச்சி தரக்கூடியது” என எழுதப்பட்டிருந்தது.
ஆனால், “காது கேட்காதவர்களுக்கு இந்த இசை எப்படி மகிழ்ச்சியை தர முடியும்? இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என நிராகரித்தார்.
அடுத்து, அழகான மலர்கள் இருந்தன.
“இவை, கண் தெரியாதவர்களுக்கு எப்படி மகிழ்ச்சியை தர முடியும்?. அதனால் இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது”
அடுத்து, இனிப்பான பலகாரங்கள் இருந்தது. “நோயாளிகளுக்கு எப்படி இனிப்பு மகிழ்ச்சியை தரும்?” என்று கூறி அதனையும் நிராகரித்த மன்னர் இராஜராஜ சோழர், அடுத்தாக ஒரு பெரிய சிவலிங்கத்தின் அருகில் வந்தார்.
அந்த சிவலிங்கத்தின் கீழே ஒரு சிற்பம். அதில் ஒரு தாய், பசியில் இருக்கும் ஒரு சிறுவனுக்கு உணவு தருவது போல அந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த சிற்பத்தின் கீழே “அன்பே சிவம்” என்று எழுதப்பட்டிருந்தது.
இந்த சிலையை வைத்த சிற்பியை அழைத்து வாருங்கள் என்றார் மன்னர். வறுமை தின்ற உடலுடன் ஒரு ஏழை சிற்பி, மன்னரின் முன் அழைத்து வரப்பட்டார்.
“நீங்கள்தான் இந்த சிலையை இங்கு வைத்தீரா? இதன் பொருள் என்ன என்பதை விளக்கமாக சொல்லுங்கள்.” என்றார் மன்னர் அந்த சிற்பியிடம்.
“அரசே நான் ஒரு சிற்பி, இந்த சிலையை வடிவமைத்தது அடியேன்தான். சிவலிங்கத்தின் கீழே ஒரு பெண்மணி அன்போடு ஒரு சிறுவனுக்கு உணவு தருகிறாள். இந்த உலகில் அன்பை மட்டும்தான், கண் தெரியாதவர்ளும், காது கேட்காதவர்களும், வாய் பேச முடியாதவர்களும் உணர முடியும். அதேபோல் உடல்நலம் இல்லாதவர்களும் அன்பைதான் எதிர்பார்க்கிறார்கள். அன்பு மட்டுமே உலகில் சிறந்தது. அன்பிருந்தால் எதிரியையும் நண்பனாக்கும். அன்பு இல்லையெனில் நண்பனையும் எதிரியாக்கும். உலகில் சிறந்ததும், அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியதும் அன்பு. அன்புதான் இறைவன். அதனால்தான் சிவலிங்கத்தின் கீழே தாயன்பு கொண்ட ஒரு பெண்மணியை வடிவமைத்து, ”அன்பே சிவம்” என்று எழுதி வைத்தேன்.” என விளக்கினார் சிற்பி.
இதை கேட்ட அரசர் மிகவும் மகிழ்ந்தார்.
“உலகத்திலேயே அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது எது என்ற என் சந்தேகத்திற்கு அற்புதமான விளக்கம். நீங்கள் ஒரு சிற்பி என்பதால் நான் கட்டும் தஞ்சை கோவிலுக்கு நீங்களே சிற்ப வேலையை செய்யுங்கள்.” என்று கூறி ஆயிரம் பொன்னையும் பரிசாக சிற்பிக்கு தந்து, ஏழை சிற்பியின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினார் அரசர்.
அன்புக்கு கட்டுப்படாதவர்கள் இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள்?. அன்புதான் அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது. அன்பே சிவம்.!
Send your feedback to: editor@bhakthiplanet.com
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
http://www.youtube.com/bhakthiplanet
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2013 bhakthiplanet.com All Rights Reserved