நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத வகையில் அமெரிக்காவில் இந்து கோவில்
போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமி நாராயணன் சன்ஸ்தா என்ற அமைப்பு அமெரிக்காவில், லாஸ்ஏஞ்சல்ஸ் பகுதியில் ஆலிவுட் சிட்டி அருகே சினோ ஹில்ஸ் என்ற இடத்தில் பிரமாண்டமான சுவாமி நாராயணன் கோவிலை ரூ.550 கோடி செலவில் கட்டி உள்ளது. 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பிரமாண்டான இக்கோவில், அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய இந்து கோவில்களில் இது முதன்மையானதாக உள்ளது.
கைகளால் கவனமுடன் செதுக்கப்பட்ட 35 ஆயிரம் இத்தாலிய மார்பிள் கற்கள் மற்றும் இந்திய மணற்பாறைகளை கொண்டு இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. 2 மிகப்பெரிய குவிமாடங்களும், 5 கலசங்களும், 4 பால்கனிகளும், 122 தூண்களும், வில் போல் வளைந்த 129 விதானங்களும் அமைந்துள்ளன.
கைகளால் செதுக்கப்பெற்ற 6,600 சிற்பங்கள், இக்கோவிலை அலங்கரிக்கின்றன. உந்துசக்தி, பக்தி, அர்ப்பணிப்பு உணர்வு ஆகிய குணநலன்களை வலியுறுத்துவதாக இந்த சிற்பங்கள் அமைந்துள்ளன. இந்தியாவில் இந்த சிற்பங்கள் உருவாக்கப்பட்டு, கப்பல் மூலமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த கோவில், நில நடுக்கத்தால் பாதிக்கப்படாத வகையில், ‘கட்டிங் எட்ஜ்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. உலகிலேயே இப்படி கட்டப்பட்ட முதல் கோவில் இதுவே ஆகும். அதனால் இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சூரியசக்தி மின்சார உற்பத்தி சாதனங்கள் கோவிலில் நிறுவப்பட்டுள்ளன. அதில் கிடைக்கும் சூரிய சக்தி மின்சாரம்தான், கோவிலில் பயன்படுத்தப்படுகிறது. எனவே, சுற்றுச்சூழலுக்கு கெடுதல் இல்லாத வகையில் கோவில் இயங்கி வருகிறது. மனதை அமைதிப்படுத்தும்வகையில் கோவில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக சுவாமி நாராயணன் சன்ஸ்தா நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
இந்த கோவில் கடந்த மாதம் 23–ந்தேதி, திறந்து வைக்கப்பட்டது. இந்த கோவில், சினோ ஹில்ஸ் நகருக்கே பெருமை சேர்ப்பதாக அந்நகர மேயர் பீட்டர் ரோஜர்ஸ் தெரிவித்தார்.