குடும்ப ஒற்றுமைக்கு அருளும் அருள்மிகு இருதயாலீஸ்வரர்.!
நிரஞ்சனா
திருவள்ளுர் மாவட்டம், திருநின்றவூரில் உள்ளது இந்த திருக்கோயில்.
அரக்கோணம் செல்லும் ரயில் மூலமாக திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் இறங்கி, ஒன்றரை கி.மீட்டர் தூரம் சென்றால் இருதயாலீஸ்வரர் திருக்கோயிலை அடையலாம்.
திருநின்றவூர்
திருநின்றவூர் என்றவுடன் உங்களால் ஓரளவுக்கு யூகிக்க முடியும், இந்த ஊருக்கு திருமகளின் ஆசியும் இருக்கிறது என்று. ஆம். மகாலஷ்மிக்கு திருமகள் என பெயரும் உண்டு. மகாலஷ்மி இந்த பகுதிக்கு வந்து நின்றதால்தான், திரு – நின்ற – ஊர் = திருநின்றவூர் என்று பெயர் அமைந்தது என்கிறது புராணம். அதை பற்றி முதலில் தெரிந்து கொண்ட பிறகு இருதயாலீஸ்வரரை பற்றியும் தெரிந்துக்கொள்வோம்.
ஒருநாள் வைகுண்டத்தில் யோக நித்திரையில் இருந்தார் ஸ்ரீமந் நாராயணன்.
அப்போது திருமகள் வந்து பெருமாளை எழுப்பினார். ஆனால் பகவான் விழிப்பதாக இல்லை. இதனால் திருமகள் கோபம் அடைந்தாள். “உண்மையாக தூங்குபவரை எழுப்பிவிடலாம், ஆனால் தூங்குவது போல் நடிப்பவரை எழுப்புவது சிரமம்தான்” என்று கோபமாக கூறி, வைகுண்டத்தை விட்டு பூலோகத்திற்கு வந்து, ஒரு இடத்தில் தங்கிவிடுகிறார்.
தன் மகள் வைகுண்டத்தில் இல்லாததால் அவள் எங்கு இருக்கிறாள்? என்று திருமகளை தேடி வருகிறார் தந்தை சமுத்திரராசன்.
ஒருகாட்டில் திருமகள் இருப்பதை கண்ட சமுத்திரராசன், “என்ன நடந்தது? ஏன் உன் கணவனை விட்டு பிரிந்து இந்த காட்டில் தனியாக இருக்கிறாய்.?” என்று கேட்க, “அவர் எனக்கு மரியாதை தரவில்லை. அவரே வந்து என்னை அழைத்தால்தான் நான் மீண்டும் வைகுண்டத்திற்கு செல்வேன்.” என்றாள் திருமகள். தன் மகளுக்கு துணையாக சமுத்திர ராசனும் அந்த காட்டிலேயே தங்கி விட்டார்.
தன் மனைவியை, சமாதானம் செய்து அழைத்து வர விஷ்ணுபகவான் கருட வாகனத்தில் பூலோகம் வருகிறார்.
அதே சமயம், பூலோகத்தில் இருக்கும் திருமகள், தன் கணவரின் வருகைகாக வழி மேல் விழி வைத்து வானத்தை நோக்கியபடி காத்திருந்தாள். அப்போது அவள் எதிர்பார்த்ததுபோல், வான் வழியாக ஸ்ரீவிஷ்ணுபகவான் கருட வாகனத்தில் வந்துக்கொண்டிருப்பதை கண்ட திருமகள் மகிழ்ச்சி அடைந்தாள்.
”என் வருகையை எதிர்நோக்கி நீ நின்ற இந்த பகுதி இனி, “திரு நின்ற ஊர்” என அழைக்கப்படும் என கூறி, திருமகளையும் தன் மாமனாரையும் அழைத்து சென்றார் ஸ்ரீமந் நாராயணன். அன்று முதல், பிரிந்த தம்பதிகளை ஒன்று சேர்த்த ஊர், திருநின்றவூர் என போற்றப்படுகிறது.
இருதயாலீஸ்வரர்
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் பூசல நாயனார் அவர் பிறந்த ஊர் திருநின்றவூர்.
அவர் சிறந்த சிவபக்தர். என்றென்றும் சிவபெருமானை நினைத்தபடியே இருப்பார். “வேலைக்கு போகாமல் எந்நேரமும் சிவ சிவா என்றால் சிவனா வந்து படி அளப்பார்” என்று ஊரில் பலர் பூசலாரிடம் கேலி பேசுவார்கள். அந்த மூடர்களின் அறியாமையை கண்டு அவர்களை பார்த்து பரிதாப்படுவாரே அன்றி, தன்னை அவர்கள் கேலி பேசுவதை பற்றி கவலைப்படாமல் அமைதியாக இருப்பார். யாருடனும் பூசல் வைத்துக்கொள்ள மாட்டார் பூசலார்.
அமைதியாக இருக்கும் ஆழ்கடலில்தான் முத்துக்கள் இருக்கும். அதுபோல அமைதியாக இருப்பவர்களிடத்தில்தான் இறைவனின் அன்பு இருக்கும்.
குறை பேசுபவர்கள் பேசி கொண்டேதான் இருப்பார்கள். அவர்களின் வாயை மூட முடியாது என்பதால் அமைதியாகவே இருந்து சிவபெருமானை தன் இருதயத்தில் எப்போதும் தொழுதார்.
அனுமனின் இதயத்தில் இராமர், பூசலார் இதயத்தில் ஈசன்.
இருதயத்தில் கட்டிய கோயில்
பூசலாருக்கு ஒரு லட்சியம் உண்டு. சிவபெருமானுக்கு ஒரு திருக்கோயிலை கட்ட வேண்டும் என்பதுதான் அந்த லட்சியம். ஆனால் அதற்கான வசதி தம்மிடத்தில் இல்லையே என்கிற கவலை அவருக்கு இல்லை. “கற்கலால் கட்ட முடியாவிட்டால் என்ன? நம் இருதயத்தில் எழுப்புவோம் ஈசனுக்கு ஓர் ஆலயத்தை” என தீர்மானித்து, அவ்வாறே ஒரு சிவாலயம் கட்டும் பணியை தொடர்ந்தார் பூசலார்.
தமது இருதயத்தில் திருக்கோயிலின் கட்டட பணி படிபடியாக முன்னேறுவதாகவும், விரைவில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதாகவும் திருநின்றவூர் மக்களிடம் சொல்லி வந்த பூசலார்.
ஒருநாள் திருநின்றவூர் மக்களிடம், “இருதயத்தில் நான் கட்டி முடித்த திருக்கோயிலுக்கு நாளை கும்பாபிஷேகம்” என்றார்.
எப்போதும் போல அவர் சொல்வதை இப்போதும் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை மக்கள்.
அதேசமயம், காஞ்சிபுரத்தை ராஜசிம்மன் என்கிற மன்ன்ர் ஆட்சி செய்து வந்தார். தன்னுடைய செல்வபலத்தால் சிவபெருமானுக்கு கைலாசநாதர் ஆலயம் என்கிற பெயரில் மிக பிரம்மாண்டமான ஆலயத்தை கட்ட தொடங்கினார். ஆலயபணி சிறப்பாக நடந்து முடிந்தது.
விடிந்தால் கும்பாபிஷேகம்.
அந்த மகிழ்ச்சியில் அன்றிரவு உறங்கினார் மன்னர். அப்போது அவர் கனவில் சிவபெருமான் தோன்றினார்.
“நீ குறித்த முகூர்த்தத்தில் கும்பாபிஷேகத்திற்கு எம்மால் வர இயலாது. நீ குறித்த அதே முகூர்த்தத்தில் திருநின்றவூரில் நமது பக்தனான பூசலார் எமக்கு திருக்கோயில் கட்டி உள்ளான். நாம் அங்கு இருப்போம். அதனால் நீ எழுப்பிய ஆலயத்தின் கும்பாபிஷேக முகூர்த்த நேரத்தை தள்ளி வை.” என்று ஈசன் கூறி மறைந்தார்.
தாம் கண்ட கனவை தன் மனைவியிடமும் மந்திரிகளிடமும் சொன்னார் அரசர். அத்துடன், உடனே திருநின்றவூருக்கு புறப்பட்டு, பூசலார் என்பவர் கட்டிய திருக்கோயிலின் கும்பாபிஷேகத்தில் கலந்துக்கொள்ள வேண்டும் என தீர்மானித்து, அந்த நள்ளிரவில் திருநின்றவூர் வந்தார் காஞ்சி மன்னர்.
மேளதாளத்துடன் பெரும் படையாக திருநின்றவூருக்கு வந்து சேர்ந்த மன்னருக்கு ஒரே ஆச்சரியம். அந்த ஊரில் கும்பாபிஷேகம் நடப்பதற்கான அறிகுறியே இல்லை. ஊரே அமைதியாக இருந்தது. காஞ்சி மன்னர் ஏன் பெரும் படையுடன் இந்த நள்ளிரவில் வந்திருக்கிறார் என திருநின்றவூர் மக்கள் குழம்பி போனார்கள்.
பயத்துடன் நின்றிருந்த சிலரிடம், “நாளை கும்பாபிஷேகம் நடக்க இருக்கும் சிவாலயத்திற்கு எந்த வழியாக செல்ல வேண்டும்” என கேட்டார் மன்னர்.
நாளை காஞ்சியில்தானே இந்த மன்னர் கட்டிய கோயிலின் கும்பாபிஷேகம் இருப்பதாக கேள்விப்பட்டோம். ஆனால் இவரோ நம் ஊருக்குள் வந்து வழி கேட்கிறாரே, என குழம்பிய மக்கள்,
“அரசே இந்த ஊரில் எந்த கோயிலின் கும்பாபிஷேகமும் இல்லை.” என்றார்கள்.
“பூசலார் என்பவர் சிவாலயம் கட்டி இருக்கிறாரமே?” என்றார் அமைச்சர் ஒருவர்.
“என்ன பூசலாரா? அடுத்த வேலை உணவுக்கே வழி இல்லாதவர் அவர். அவராவது கோயில் கட்டுவதாவது.” என்று சொல்லி சிரித்தனர் மக்கள்.
ஆனால் அதில் ஒருவனுக்கு, “நாளை என் இருதயத்தில் கட்டிய கோயிலுக்கு கும்பாபிஷேகம்” என பூசலார் சொன்னது நினைவுக்கு வந்தது. மன்னரின் முன்னே தயக்கத்துடன் வந்து நின்றான் அவன்.
“அரசே, இவ்வூரில் பூசலார் என்பவர் இருக்கிறார். அவர் ஒரு சிவ பக்தர். எப்போதும் இலுப்பை மரத்தின் மேல் தூங்கிக்கொண்டே இருப்பார். கேட்டால் தியானத்தில் இருப்பதாக சொல்வார். கொஞ்சம் நாட்களாக தமது இருதயத்தில் ஈசனுக்கு கோயில் கட்டுவதாக சொல்லி வந்தார். நேற்று கூட, ”நாளைக்கு என் இருதயத்தில் கட்டி வரும் கோயிலுக்கு கும்பாபிஷேகம்” என்று சொன்னார். அவர் பித்து பிடித்தவர் போல பேசுவதாக நினைத்தோம்.” என்றான் அவன்.
மன்னர் அதிர்ச்சி அடைந்தார். இந்த நிமிடம் வரை நான்தான் சிறந்த சிவபக்தன் என்ற எண்ணத்திலும், பெரும் பொருட் செலவில் கோயில் கட்டுவதாக அரசனுக்குரிய ஆணவத்திலும் இருந்தேன். ஆனால் சிவ பெருமான் என் புத்திக்கு பாடம் புகட்டினார். ஈசனின் கவனம் முழுவதும் பூசலார் தம் இருதயத்தில் கட்டும் கோயிலில் மீதுதான் இருந்திருக்கிறது. ஈசனின் அன்பை முழுதும் பெற்ற ஞானி பூசலார்தான். அவர் ஒரு மகான். அவரை சந்தித்தே ஆக வேண்டும்.
ஈசனின் ஆணைப்படி பூசலார் தம் இருதயத்தில் கட்டிய திருக்கோயிலின் கும்பாபிஷேகத்தில் கலந்துக்கொண்டு, அதே வடிவமைப்புடன் இதே திருநின்றவூரில் பூசலார் விருப்பப்படி சிவாலயம் கட்ட வேண்டும் என தீர்மானித்த மன்னர், பூசலாரை தேடி ஒவ்வொரு இலுப்பை மரமாக பார்த்துக் கொண்டே வந்தார்.
அப்போது ஒரு மரத்தின் உச்சியில் ஒருவர் அமர்ந்து இருந்தார். அவர்தான் பூசலார் என்றனர் மக்கள். அந்த சமயம் பொழுதும் விடிந்துவிட்டது.
பூசலாரை வணங்கினார் மன்னர். ஒரு மன்னரே வணங்குகிறாரே என்று முதல் முறையாக அவ்வூர் மக்களும் பூசலாரை வணங்கினார்கள்.
“சுவாமி, நான் காஞ்சி மாநகரில் கைலாசநாதர் ஆலயம் எழுப்பி உள்ளேன். இன்று அக்கோயிலுக்கு கும்பாபிஷேகம். ஆனால் தாங்கள் ஒரு சிவலாயம் கட்டுவதாகவும், இன்று தாங்களும் கும்பாபிஷேகம் நடத்த இருப்பதாகவும், அதனால் ஈசன் தாங்கள் கட்டிய கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துக்கொள்ள இருப்பதால், நான் கட்டிய கோயிலின் கும்பாபிஷேகத்தை தள்ளி வைக்க வேண்டும் என்றும், எமது கனவில் சிவபெருமான் கூறினார். உங்கள் ஆலயம் எங்கே இருக்கிறது.? அதை நான் காணும் பாக்கியம் பெற்றவனா? என்றார் மன்னர் ராஜசிம்மன்.
அரசர் இப்படி சொன்னவுடன், “என் இருதயத்தில் எழுப்பிய திருக்கோயிலுக்கு, ஈசனே இந்த அளவுக்கு முக்கியதுவம் தந்துள்ளாரே, நான் என்ன பாக்கியம் செய்தேன். இதோ பாருங்கள், இதுவே நான் கட்டிய திருக்கோயில்” என பூசலார், தன் இருதயத்தை காட்ட, இருதயத்தில் அழகான ஒரு ஆலயம் காட்சியாக அனைவரின் கண்களுக்கும் தெரிந்தது. இந்த அதிசயத்தை கண்ட மன்னரும், மக்களும் மெய்சிலிர்த்து போனார்கள். பூசலார் கண்களில் ஆனந்த கண்ணீர். அதுவே அவர் எழுப்பிய கோயிலின் கும்பாபிஷேக புனித நீராக பூமியில் தெளித்தது.
பிறகு மன்னர் ராஜசிம்மன், பூசல நாயனார் இருதயத்தில் காட்சி தந்த அதே கட்டட வடிவமைப்பில், திருநின்றவூரில் ஒரு ஆலயத்தை எழுப்பி, சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, அந்த சிவலிங்கத்திற்கு “இருதயாலீஸ்வரர்” என்று பெயர் சூட்டி போற்றி வணங்கினார்.
தாயின் கருவறையில் பிள்ளை இருப்பதை போல, இருதயாலீஸ்வரர் கருவறையில் பூசல நாயனாரும் இருக்கிறார்.
திருநின்றவூரில் இந்த அற்புத கோயிலையும், இறைவனையும், அம்பாளையும், பூசல நாயனாரையும் தரிசித்தால், நாம் நினைக்கும் நல்ல எண்ணங்கள் யாவும் சுபிக்ஷமாக நிறைவேறும்.
இந்த திருநின்றவூரில் இருக்கும் இருதயாலீஸ்வரரையும் மரகதம்பாளையும் வணங்கினால் சகல நலன்களும் கிடைக்கும்.
அத்துடன், இறைவனுக்கும் அம்பாளுக்கும் தேன், பால் அபிஷேகம் செய்து, வாசனை மலர்களையும், வஸ்திரத்தையும் அணிவித்து வணங்கினால் கோடி நன்மை தேடி வரும்.
இருதயாலீஸ்வரர் என இங்குள்ள இறைவன் அழைக்கப்படுவதால், இருதய நோயாளிகளுக்கு நல்ல மருத்துவராக இருக்கிறார் இருதயாலீஸ்வரர் என்பதும் ஒரு ஐதீகம்.
பிரிந்த தம்பதியை சேர்த்து வைத்த ஊர் என்ற பெருமையும் இவ்வூருக்கு இருப்பதால், இந்த திருநின்றவூர் திருக்கோயிலில் நம் பாதம்பட்டாலே திருமகள் அருளாலும், ஈசனின் பேரருளாலும் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். முன்னேற்றங்களுக்கும் வழி பிறக்கும்.!
Send your feedback to: editor@bhakthiplanet.com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2013 bhakthiplanet.com All Rights Reserved