வெறுங்காலில் ஓடுவதுதான் நல்லது!
இறைவனுக்காக வேண்டிக்கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை செல்வார்கள் பக்தர்கள். சைவ, வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் பக்தர்கள் ஆண்டுதோறும் சிவாலய ஓட்டம் ஓடுவார்கள். இதனால் இறைவனின் அருளும் அத்துடன் காலணி அணியாமல் வெறுங்காலில் நடப்பதால் கால்பாதத்திற்கு நன்மையும் கிடைக்கிறது.
வெறுங்காலில் நடப்பதிலும் ஓடுவதிலும் மருத்துவ நன்மையும் உள்ளதாக இப்போது ஆராய்சியாளர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
இதை பற்றி 2009-ம் ஆண்டில் கிறிஸ்டோபர் மெக்டோகால் என்பவர் பான் டு ரன் என்ற புத்தகம் எழுதி உள்ளார். அந்த புத்தகத்தில், மெக்சிகோவைச் சேர்ந்த தாராஹுமாரா இந்தியர்களுடன் சிறிது காலத்தைக் கழித்தார். அப்போது அவர்கள் வெறுங்காலில் நீண்ட தூரத்துக்கு வெகுவேகமாக ஓடுகிறார்கள் என்கிறார். ஆனால் ஷூக்களை பயன்படுத்தும் நவீன உலகத்தினரைப் போல அவர்கள் காயங்களுக்கும் உள்ளாவதில்லை என்கிறார் கிறிஸ்டோபர் மெக்டோகால்.
இன்றைய குஷன் அமைப்பு ஷூக்கள், ஓடுவதற்கான நமது இயற்கையான நுட்பத்தை மாற்றிவிடுவதால் காயங்களுக்கு முக்கிய காரணமாக அமைகின்றன என்றும் குறிப்பிடுகிறார் கிறிஸ்டோபர்.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்கள் வெறுங்காலுடனோ அல்லது மெல்லிய அடிப்பகுதியை கொண்ட ஷூவை அணிந்துக்கொண்டோதான் ஓடுகிறார்கள்.
அதனால்தான் இன்றைய மருத்துவர்கள், தடகள வீரர்கள், பயிற்சியாளர்கள் அனைவருமே நவீன ஷூக்களில் உள்ள எக்ஸ்ட்ரா குஷனும், ஆதரவு அமைப்பும் தேவையில்லை என்று கூறுகிறார்கள். காரணம், நம் பாதங்களுக்கு இயற்கையாகவே இந்த அமைப்புகள் இருக்கிறதாம்.
அதேபோல பெங்களுரின் ஒரு முன்னனி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ நிபுணரான சஞ்சய்ஹெக்டே, “மனித பாதங்களின் இயற்கையான உயிர்பொறியியல், ஒடுவதற்கு மிகவும் பொருத்தமானது. ஷூக்களின் ஒரே அனுகூலம், கற்கள், முட்களில் இருந்து அவை பாதங்களைப் பாதுகாப்புதுதான். மற்றபடி காலணிகளால் பாதங்களின் உயிர்பொறியியல் பாதிக்கப்பட்டு காயங்கள்தான் ஏற்படும்.” என்கிறார். அதனால் வெறுங்காலில் ஓடுவதைப் படிப்படியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் இவர் அறிவுறுத்துகிறார்.
இதேபோல ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பரிணாம உயிரியல் துறைப் பேராசிரியர் டாக்டர் டான் லீபர்மேன், ஷூக்களின் குதிகால் பகுதியின் குஷன் அமைப்பையும், மனித கால்களின் குதிகால் அமைப்பையும் ஒப்பிட்டு ஆய்வு செய்திருக்கிறார்.
அவர் கூறுகையில், “ஷூக்களின் குஷனைவிட மனித கால்களின் குதிகால், தரையைத் தொடும்போது அதிர்வைக் கிரகிப்பதற்காக சிறப்பாக அமைந்துள்ளது. வெறுங்காலில் அதிர்வுத் தாக்கம் குறைவாக இருக்கிறது.” என்கிறார்.
வெறுங்காலில் ஓடுபவர்களைவிட ஷூக்களை அணிந்து ஓடுபவர்கள்தான் சீக்கிரம் சோர்வு அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆராய்ச்சி.
நடைபயிற்சி செய்யும்போதும் முடிந்த அளவில் வெறுங்காலில் நடைபயிற்சி செய்யலாம் என்றாலும், நம் ஊரில் தெருவிலேயே குப்பை கொட்டுவதாலும், ரோட்டிலேயே எச்சில் துப்புவதாலும், வெறுங்காலில் நடக்கும்போது அந்த அசுத்தங்களை மிதித்து அதனால் புதிய நோய்கள் தாக்கக்கூடும் என்கிற நிலை உள்ளதால், வெறுங்காலில் நடைப்பயிற்சி செய்ய சாத்தியமில்லை. ஆனால், நாகரிகம் என்று எண்ணி, வீட்டுக்குள் கூட செருப்பு அணிந்து நடப்பவர்கள், இனி வீட்டிலாவது காலணி அணியாமல் வெறுங்காலில் நடந்து உங்கள் கால்பாதங்களை நல்லமுறையில் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.!
-Niranjhana