வெற்றி நிச்சயம் இது வேதமந்திரம்
Niranjana
நாம் வெற்றி பெற முதல் தேவை என்ன? முயற்சியா? பணமா? சிபாரிசா? என்றால் முதலில் இவைகளை விட மிக மிக முக்கிய தேவை மன தைரியம் – தன்னம்பிக்கை.
முயற்சி செய்து செய்து ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது என்று மனம் தளர்ந்தால் வரப் போகிற வெற்றி, தோல்வியாக மாறி விடும். மன தைரியம் இருந்தால்தான் தோல்வியை கூட தோல்வியாக எண்ணாமல் அனுபவ பாடமாக்கி வெற்றியை கிடைக்கச் செய்யும். மன தைரியம், உடல் பலத்தை தரும். எந்த செயலையும் ஈடுபாடுடன் செய்ய வைக்கும்.
உடல் நலம் சரியில்லாமல் மருத்துவரிடம் சென்றால் அங்கே அந்த மருத்துவர் கேட்கும் முதல் கேள்வி, உங்களுக்கு நன்றாக தூக்கம் வருகிறதா,? நன்றாக பசி எடுக்கிறதா? என்றுதான் கேட்பார். இவை இரண்டும் சரியாக இருந்தால் உடலில் பெரிய பிரச்னை இல்லை. மன அமைதியோடு இருக்கிறீர்கள் என்பதை மருத்துவர் புரிந்துக்கொள்வார்.
மனஅமைதி இருந்தால்தான் தூக்கம் வரும், சோறும் வயிற்றில் இறங்கும். மருத்துவர்கள் நோய்களுக்கு கொடுக்கும் மருந்தும் வேலை செய்யும்.
மனகவலை உடலை மட்டும் கொல்லாது. வாழ்க்கையில் கிடைக்கும் சின்ன சின்ன சந்தோஷத்தையும் சேர்த்து கொன்றுவிடும்.
ஒரு அரசர் தன் மந்திரிகளை அழைத்து, “நான் கேட்கும் கேள்விக்கு யார் சரியான பதில் சொல்கிறீர்களோ அவர்களுக்கு சிற்றரசர் பதவி தருகிறேன்.” என்றவர், “என் கேள்வி இதுதான்” என பேச தொடங்கினார்.
“ஒருவர் வெற்றியடைந்த பிறகு, அந்த நபரிடம் ஒரு வார்த்தை சொன்னவுடன் அந்த வெற்றியை பெற்ற நபர் மனம் கலங்க வேண்டும். அதே வார்த்தையை தோல்வியடைந்த நபரிடம் சொன்னால், அந்த தோல்வியடைந்த நபர் அந்த வார்த்தையை கேட்டு மகிழவேண்டும். அப்படி என்ன வார்த்தை சொல்வீர்கள்.?” என கேட்டார் மன்னர்.
இதை கேட்ட மந்திரிகளுக்கு குழப்பம். “அது எப்படி? ஒரே வார்த்தையை வெற்றி பெற்றவனிடம் சொன்னால் அவன் கலங்க வேண்டும், தோல்வியடைந்தவனிடம் சொன்னால் அவன் மகிழவேண்டுமா? அது என்ன வார்த்தையாக இருக்கும்?” என்று தலையை பீய்த்துக் கொண்டு யோசித்தார்கள்.
அப்போது ஒரு மந்திரி மட்டும் எழுந்து, “அரசே, வெற்றியடைந்தவனிடமும் தோல்வியடைந்தவனிடமும், “இதுவும் மாறும்” என்ற இந்த வார்த்தையை சொன்னால் போதும். வெற்றி பெற்றவன் வருங்காலத்தை நினைத்து அஞ்சுவான், தோல்வியடைந்தவன் மன தெளிவும் நம்பிக்கையும் பெற்று மகிழ்ச்சி அடைவான்.” என்றார்.
அரசர், அந்த அமைச்சரை பாராட்டி பரிசுகளை தந்து, சிற்றரசர் பதவி வழங்கி கௌரவித்தார்.
ஆம். வாழ்வில் எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறும். அந்த மாற்றத்தை சர்வ சாதாரணமாக எடுத்துக்கொண்டோம் என்றுச் சொன்னால், தோல்வியை கண்டு கலங்கி, மனம் துவண்டு போகாது. மனஅழுத்தம் என்பதும், குழப்பம் என்பதும் வாழ்நாள் முழுவதும் நம்மை நெருங்காது.
“வருவதை கண்டு மயங்காதே. போவதை கண்டு கலங்காதே மனமே“ என்றார் ஒரு கவிஞர். ஏற்றமும் – இறக்கமும் – வருவதும் – போவதும் காலத்தால் நிகழும் சாதாரண விஷயங்கள்.
எதையும் நல்லநோக்கத்தோடு அணுக வேண்டும். இதனால் எடுக்கும் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும். இல்லை என்றாலும், “மீண்டும் போராடி வெற்றி பெறுவேன்.” என்ற மன தைரியத்தை வளர்க்க வேண்டும்.
செடிக்கு உரம் போல், மனதிற்கு நல்ல எண்ணங்கள்தான் உரம்.
இந்திய ஒலிம்பிக் போட்டியில் குத்து சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற மேரிகோம் என்ற அந்த பெண், இரண்டு குழந்தைகளுக்கு தாய்.
உங்கள் வெற்றிக்கு என்ன காரணம்? என்று பத்திரிக்கை நிருபர்கள் கேட்டபோது, என்ன சொன்னார் தெரியுமா?, “ஆரம்பத்தில் எதிராளியை அடிக்கவே பயப்படுவேன். ஆனால் என் கோச்தான், “நீ ஏன் பயப்படுகிறாய்.? உன்னோடு மோதுபவரை ஆண் என்று நினைத்துக்கொள். பெண் என்று நினைக்காதே. உன்னைவிட பலமான ஆண் உன் எதிரில் நிற்பதாக நினைத்து, ஓங்கி குத்தினால்தான் வெற்றி. இல்லாவிட்டால் உன் முகம் காணாமல் போய்விடும்.” என்று சொல்லி அவர் தீவிரமாக பயிற்சி கொடுத்ததால்தான் 5 முறை உலக சாம்பியன் ஆனேன். அதுவே நம் நாட்டுக்கு ஒலிம்பிக் பதக்கத்தை பெறக் காரணம்.” என்றார் மேரிகோம்.
நமக்கு வெகு தூரத்தில் இல்லை வெற்றி. அது நம் மனதுக்குள்தான் – நம் சிந்தனையில்தான் இருக்கிறது.
வெற்றியை தேடி நீங்கள் ஓடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் முயற்சியும் நல்ல நம்பிக்கை மட்டுமே. இவையே வெற்றியை உங்களை நோக்கி ஓடி வர செய்யும்.
நம்பிக்கையோடு செயல்படுங்கள். “சிறுதுளி பெரு வெள்ளம்” என்பதை வார்த்தை ஜாலத்திற்காக நம் முன்னோர்கள் சொல்லவில்லை அது அனுபவ உண்மையும் கூட.
தன்னம்பிக்கையுடன் நாம் செய்யும் சின்ன சின்ன நல்ல முயற்சிகள்தான், ஒருநாள் நாமே எதிர்பாரததைவிட பெரிய அளவில் சாதனை மனிதர்களாக நம்மை மாற்றும்.!
மேலும் நீங்களும் ஜெயிக்கலாம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
http://www.youtube.com/bhakthiplanet
பதிவுஇலவசம்! http://www.goodlifematrimony.com/
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
© 2012 bhakthiplanet.com All Rights Reserved