Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

இராமருடன் மோதிய ஆஞ்சநேயர்

நிரஞ்சனா 

ஸ்ரீ இராம பக்தரான ஆஞ்சநேயர், அதே இராமனிடம் மோதினார் என்பதை அறியும்போது ஆச்சரியமாகவே இருக்கும். விதியின் விளையாட்டில் இருந்து யார்தான் தப்பிக்க முடியும்?. யாரும் தொடர்ந்து நண்பர்களாக இருக்கமுடியாது, அதுபோல தொடர்ந்து ஒருவருக்கு எதிரியாகவும் இருக்க முடியாது. காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும். இந்த விதியின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது. அதனால்தான் நாரதமுனிவரின் சூழ்ச்சியில் ஸ்ரீஇராமரும் அனுமனும் மோதிக் கொண்டார்கள்.  அந்த சம்பவத்தை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

உலகம் சுபிட்சமாக இருக்கவேண்டும் என்று நினைத்த ஸ்ரீராமர் தன் பட்டாபிஷேகம் முடிந்த பிறகு வசிஷ்டர், விஸ்வாமித்திரர், அத்ரி முனிவர் ஆகியோரை அழைத்து  யாகம் ஒன்றை நடத்தச் சொன்னார்.

ஒருநாள், சிற்றசரான சகுந்தன் என்பவர், வேட்டையாடிவிட்டு வரும் வழியில் யாகசாலையின் பக்கமாக வந்துக் கொண்டு இருந்தார். அங்கு பிரமாண்டமாக யாகங்கள் நடந்துகொண்டு இருப்பதை பார்த்தார்.

“பல மிருகங்களை வேட்டையாடிவிட்டு வந்திருக்கிறோம், புனிதமான யாகம் நடக்கும் போது யாகசாலைக்குள் நுழைவது சரியல்ல” என்று எண்ணி, யாகசாலையை கடக்க முயன்றார் அரசர். அப்போது வசிஷ்டமுனிவர் சகுந்தனை பார்த்துவிட்டதால், சகுந்தன், வசிஷ்ட முனிவருக்கு மட்டும் வணக்கம் சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். இதை கண்ட நாரதமுனிவர் சும்மா இருப்பாரா?. “கிடைத்ததடா நமக்கு ஒரு வேலை” என்று நினைத்து, “இதை வைத்தே நாம் கலகத்தை உண்டாக்க வேண்டும்” என்று தீர்மானித்து, சின்ன விஷயத்துக்கும் கோபப்படும் விஸ்வாமித்தரிடம், “பார்த்தீர்களா சகுந்தனின் ஆணவத்தை. வசிஷ்ட முனிவரை மட்டும் வணங்கிவிட்டு உங்களுக்கு மரியாதை தராமல் போய் விட்டான்.” என்று கலக தீயை பற்ற வைத்தார் நாரத முனிவர்.

முனிவரின் உத்தரவு

நாரதமுனிவர் அப்படி சொன்னவுடன் விஸ்வாமித்திரருக்கு கோபம் ஏற்பட்டது. “ஆமாம். நானும் கவனித்து கொண்டுதான் இருந்தேன். பதவி திமிர் பிடித்தவன். அவனை என் சாபத்தால் இருக்கும் இடம் தெரியாமல் செய்கிறேன்.” என்றார் விஸ்வாமித்திரர்.

“அதெல்லாம் வேண்டாம். நீங்கள் ஸ்ரீ இராமசந்திரமூர்த்திக்கே குரு. அதனால் இராமரிடம், உங்களை மதிக்காத சகுந்தனை என்ன செய்யலாம் என்று கேளுங்கள்.” என்றார் நாரதர்.

விஸ்வாமித்திரரும் நாரதர் சொன்னதுபோல இராமரிடம் சென்று, “இராமா.. எனக்கு ஒருவன் மரியாதை தரவில்லை. நீ அவனுக்கு என்ன தண்டனை தருவாய்.?” எனக் கேட்டார்.

“உங்களுக்கு தெரியாததா.? என்ன தண்டனை தரவேண்டும் என்று நீங்களே ஆணையிடுங்கள்.” என்றார் ஸ்ரீஇராமர்.

“அவன் தலை என் காலில் விழ வேண்டும். சூரியன் அஸ்தமம் ஆவதற்குள் என் உத்தரவை நீ நிறைவேற்ற வேண்டும் இராமா.”என்றார் விஸ்வாமித்திரர்.

மரியாதை தரவில்லை என்கிற அற்ப விஷயத்துக்காக ஒரு உயிரை எடுக்க சொல்கிறாரே என்று சற்று யோசித்த ஸ்ரீராமர், இந்த விஷயத்தில் நாரதர் ஏதோ உள்வேலை செய்கிறார் என்பதையும் உணர்ந்து கொண்டார்.

குருவின் உத்தரவுக்கு பணியவில்லை என்றால், அவரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால் அரைமனதோடு போருக்கு தயாரானார் ஸ்ரீஇராமர்.

இராமர் போருக்கு வரும் விஷயத்தை சகுந்தனை சந்தித்து நாரதர் சொன்னார். “நீ வசிஷ்டரை வணங்கிவிட்டு,  வேண்டும் என்றே விஷ்வாமித்திரரை வணங்காமல் சென்றுவிட்டதாக விஷ்வாமித்திரர் நினைத்து கடும் கோபம் அடைந்து இராமரிடம் சொல்லி, உன் சிரசை வெட்டும்படி உத்தரவிட்டார். குருவின் கட்டளைக்கு பணிந்து ஸ்ரீஇராமரும் வந்தக் கொண்டிருக்கிறார்.” என்று விஷயத்தை கூறினார் நாரதர்.

“வணங்காமல் சென்றது ஒரு குற்றமா? இதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?” என்று பதற்றம் அடைந்த சகுந்தன், தன் உயிரை எப்படி காப்பாற்றுவது? என்று நாரத முனிவரிடமே ஆலோசனை கேட்டார்.

அதற்கு நாரத முனிவர், “ஆஞ்சநேயரின் தாயார் அஞ்சனாதேவி, கானகத்தில் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார். அங்கு சென்று அவரிடம் உதவி கேள்.” என்றார்.

நாரதமுனிவரின் ஆலோசனையின் பேரில் கானகத்திற்கு  சென்ற சகுந்தனால் அஞ்சனாதேவியை சந்திக்க முடியவில்லை. அதனால்  பெரிய நெருப்பை உண்டாக்கினார் அரசர்.

“தாயே அஞ்சனாதேவி.. என்னை காப்பாற்று.” என்று கத்திக்கொண்டே தீயில் விழச் சென்றார். அப்போது அஞ்சனாதேவிதோன்றி, “ஏன் உனக்கு இந்த விபரீத யோசனை.? எதற்கும் அஞ்சாதே. உன்னை காப்பேன்.” என்று சகுந்தனுக்கு வாக்குறுதி தந்த அஞ்சனாதேவி, ”என்ன நடந்தது என்பதை பதறாமல் சொல்.”  எனக் கேட்டார்.

ஸ்ரீஇராமர் என்னை போரிட்டு கொல்ல வருகிறார்.” என்றார் சகுந்தன்.

“இராமருக்கு கோபம் வரும்படியான காரியம் என்ன செய்தாய்.?”

“நான் ஒன்றும் செய்யவில்லை தாயே”

“ஒன்று செய்யாமல் எப்படி ஒருவன் உன்னை கொல்லும் அளவுக்கு ஆத்திரப்படுவான். தயங்காமல் சொல் நீ என்ன செய்தாய்?.”

“ஸ்ரீ இராமர் ஒரு பிரமாண்ட யாகம் நடத்தினார். அதில் எண்ணற்ற முனிவர்கள் பங்கேற்றார்கள். அந்த சமயம் ஒருநாள் வேட்டையாடிவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த நான், அந்த யாக சாலை வழியாக வந்தேன். யாகம் நடப்பதை கண்டேன். அதில் நானும் கலந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையிருந்தாலும், வேட்டையாடிவிட்டு நேராக யாகத்தில் கலந்துக்கொள்ளக் கூடாது என்பதால் அங்கிருந்து செல்ல முயன்றேன். அப்போது வசிஷ்ட முனிவர் என்னை பார்த்துவிட்டார். அவரை வணங்கி விட்டு திரும்பிவிட்டேன். அங்கு விஸ்வாமித்ர முனிவரும் இருந்திருக்கிறார். சத்தியமாக நான் அவரை கவனிக்கவில்லை. ஆனால் அவர் என்னை பார்த்திருக்கிறார். நான்  அவரை வணங்கி மரியாதை செய்யவில்லை என்ற கோபத்தில் ஸ்ரீஇராமரிடம் என்னை கொல்ல சொல்லி இருக்கிறார். அதனால் ஸ்ரீஇராமரும் என்னை போரிட்டு கொல்ல வருகிறார். இதுதான் நடந்தது தாயே.” என்றார் சிற்றசரான சகுந்தன்.

வால்கோட்டை

அனைத்தையும் பொறுமையாக கேட்ட அன்னை அஞ்சனாதேவி, “உன் மீது எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. ஆனாலும் ஸ்ரீஇராமரிடம் இருந்து உன்னை காப்பாற்ற என்னால் முடியாது. அதனால் உன்னை காப்பாற்றும் பொறுப்பை என் மகன் ஆஞ்சநேயனிடம் ஒப்படைக்கிறேன். என்று கூறி ஸ்ரீஅனுமனை அழைத்தார் அஞ்சனாதேவி.

தாயின் அழைப்பை ஏற்று அஞ்சனாதேவி முன் தோன்றினார் அனுமந். நடந்ததை அவரிடம் விவரித்த அன்னை, ” ஸ்ரீஇராமரால் மரணம் ஏற்பட்டுவிடுமோ என சகுந்தன் பயந்து, இவனே பிராணதியாகம் செய்துக்கொள்ள தீயில் குதிக்க எண்ணினான். நான் இவனை தடுத்துவிட்டேன். இனி இவனை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உன்னுடையது. இது உன் தாயின் ஆணை.”

“அப்படியே ஆகட்டும் தாயே” என்ற அனுமன், தன்னுடைய வாலால் ஒரு கோட்டையை அமைத்தார். அந்த வால்கேட்டைக்குள் சகுந்தனை பத்திரமாக பதுங்க வைத்தார். பிறகு தன் வாலின் மீது அமர்ந்துக்கொண்டார் ஆஞ்சநேயர்.

சகுந்தன், அஞ்சனாதேவி ஆட்சி செய்யும் வனத்தில் பதுங்கி இருக்கிறான் என்பதை அறிந்த ஸ்ரீஇராமரும்-லஷ்மணனும் வனத்திற்குள் நுழைந்தார்கள். அங்கே வாலால் மலைபோல கோட்டை அமைந்து இருப்பதை கண்டார்கள். அந்த வால்கோட்டைக்குள்தான் சகுந்தன் பதுங்கி இருக்கிறான் என்பதை தெரிந்துக்கொண்டு, அஸ்திரங்களை மழைபோல மலை மீது செலுத்தினார்கள்.

சுவற்றியில் அடித்த பந்து போல ஸ்ரீராமரும் – ஸ்ரீலஷ்மணனும் ஏய்த அம்புகள் வால்கோட்டையை தொட்டுவிட்டு திரும்பி வந்து ஸ்ரீஇராம-லஷ்மணரின் பாதத்தில் வந்து விழுந்தது.

இதை கண்ட ஸ்ரீஇராமரும், லட்சுமணனும் ஆச்சரியப்பட்டார்கள். யாருடைய வால்கோட்டை அது? ஏன் அந்த கோட்டையை நம் அஸ்திரங்கள் தாக்க முடியாமல் திரும்புகிறது? என்று இருவரும் யோசிக்கும்போது, யுத்த களத்திற்கு கலக நாடகத்தை தொடங்கி வைத்த நாரதர் அங்கு வந்தார்.

“எத்தனை கோடி அஸ்திரங்களை வீசினாலும் அந்த வால்கோட்டை தாக்காது இராமா.” என்றார் நாரதர்.

“என்ன காரணம்?” எனக் கேட்டார் லஷ்மணன்.

“இராமனுக்கு தெரியாத காரணமா? உன் அண்ணனின் புன்னகையை பார் லஷ்மணா… அதுவே சொல்லும் அந்த காரணம்” என்றார் நாரதர்.

“அண்ணா.. என்ன இது விளையாட்டு. நம் அஸ்திரம் அந்த வால்கோட்டையை தாக்கததற்கு காரணம் உங்களுக்கும் தெரியுமா?. தெரிந்தேதான் அஸ்திரம் ஏவினீர்களா அண்ணா.? அந்த காரணத்தை எனக்கு சொல்லக் கூடாதா?” என அப்பாவியாக கேட்டார் லஷ்மணன்.

“நம் இராமர் சொல்வது இருக்கட்டும். காரணம் உனக்கும் புரியவில்லையா லஷ்மணா.? சங்கை காதில் வைத்தால் கடலின் ஓசை ஒலித்துகொண்டே இருப்பதுபோல, இதோ இந்த காற்றில் இராம நாமம் ஒலித்துகொண்டே இருப்பதை நீ கவனிக்கவில்லையா.? ஒலி அலைகளாக இராம நாமம் ஒலிப்பதை நன்றாக கவனித்து கேள்.” என்றார் நாரதர்.

அப்போதுதான் லஷ்மணர் கவனித்தார் அந்த வனத்தில் எங்கும் ”இராம்” “இராம்” “இராம” என்று நாமம் ஒலித்தது.

“அண்ணா… இது நம் அனுமனின் குரல். அப்படியென்றால் அந்த வால்கோட்டை…..?”

“நம் அனுமனின் கோட்டை” என்றார் ஸ்ரீஇராமர்.

“இராமா…உன்னை விட உன் நாமத்திற்கு மகிமை அதிகம் என்று அன்னை சீதாதேவி ஒருநாள் சொன்னாரே. அதுபோலதான் அனுமன் உன் நாமத்தை உச்சரிக்க உச்சரிக்க உன் நாமம் அனுமனின் வால்கோட்டையை சுற்றி காக்கிறது. உன் நாம மந்திரத்தை எந்த அஸ்திரம் வீழ்த்தும் இராமா.?” அன்னை சீதாதேவிக்கு தெரிந்த இராமா நாமத்தின் மகிமை, ஸ்ரீஇராம பக்தனான அனுமனின் மூலமாக இவ்வூலகத்திற்கு உணர்த்தவே இந்த ஸ்ரீஇராமா-அனுமன் யுத்த சம்பவம்.  இராமா நாம மகிமையை உலகம் அறிய செய்ய நானும் காரணமாக இருந்தேன் என்பது எனக்கு பெருமை.” என்றார் நாரதர்.

இராம நாமம்

“உன் கலகத்தால்தானே இந்த போர் ஏற்பட்டது. இதற்கு தீர்வை நீயே சொல். குரு விஸ்வாமித்ரரிடம், சகுந்தனின் சிரசை அவர் காலடியில் வைப்பதாக கூறி இருக்கிறேன். இதற்கு என்ன செய்ய போகிறாய்.? நீயே ஒரு முடிவை சொல்.” என்றார் நாரத முனிவரிடம் ஸ்ரீஇராமர்.

வால்கோட்டையில் மறைந்திருந்த சகுந்தனை நாரதமுனிவர் அழைத்தார்.

“சூரியன் அஸ்தமனம் ஆவதற்குள், விஸ்வாமித்ரரின் பாதங்களில் உன் சிரசுபடும்படி விழுந்து நமஸ்காரம் செய்.” என்றார் நாரத முனிவர்.

அதன்படி, சூரியன் அஸ்மனம் ஆவதற்குள்ளாக சகுந்தன், ஸ்ரீஇராம-லஷ்மணர்-ஆஞ்சநேயர் மற்றும் நாரத முனிவருடன் விஸ்வாமித்ரரை சந்தித்து அவர் பாதத்தில் விழுந்து நமஸ்கரித்தார்.

ஸ்ரீராமர், “குருவே நீங்கள் சொன்னதுபோல சூரியன் அஸ்தமனம் ஆவதற்குள் சகுந்தனின் சிரசு உங்கள் பாதத்தை தொட்டுவிட்டது. இப்போது மகிழ்சியா? உங்கள் கோபம் தணிந்ததா.?” என்றார்.

“ஆத்திரகாரனுக்கு புத்தி வேலை செய்யாது என்பதை நான் அறிந்துகொண்டேன். சிறு  விஷயத்திற்கு ஒரு உயிரை எடுக்க துணிந்ததை நினைத்து வருந்துகிறேன்.” என்றார் முனிவர் விஸ்வாமித்திரர்.

நாரத முனிவரின் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள் இந்த சம்பவத்தால் நாம் அறிய வேண்டியது,  ஸ்ரீஇராம நாமத்தின் மகிமை.

ஸ்ரீஇராமா நாமத்தை உச்சரிக்க உச்சரிக்க எந்த துஷ்ட சக்தியாலும் அல்லது வீண் விவகாரங்களாலும் ஒருவரை வீழ்த்த முடியாது.

தினமும் 108 முறை ஸ்ரீஇராம நாமத்தை மனதில் உச்சரித்தால் நிச்சயம் வாழ்நாள் முழுவதும் ஸ்ரீஇராமரின் ஆசியாலும் ஆஞ்சநேயரின்  அருளாலும் வெற்றி வெற்றி வெற்றிதான்.!

ஸ்ரீஇராம் ஜெய இராம். ஜெய ஜெய இராம்.!

For More Articles in ENGLISH & TAMIL Visit: www.bhakthiplanet.com

http://www.youtube.com/bhakthiplanet

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Oct 19 2012. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »