Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

கோடி வரங்களை தரும் தஞ்சை கோடியம்மன்

Niranjana

தஞ்சை மாவட்டத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு கோடியம்மன், தஞ்சையின் எல்லையில் காவல் தெய்வமாகவும் இருக்கிறார்.

அற்புதம் நிறைந்த கோடியம்மன் தோன்றிய வரலாறு என்ன என்பதையும், சோழ மன்னரின் நாட்டை கைப்பற்ற வேண்டும் என்று எண்ணி, எதிரிநாட்டு அரசரான சத்துருகோபன் திட்டமிட்டு போருக்கு வந்தபோது, சத்துருகோபனுடன் போரிடும் அளவுக்கு போதிய நிதி நிலை இல்லை என வருந்திய சோழ மன்னரை, எவ்வாறு கோடியம்மன் காப்பாற்றினார் என்பதையும் இன்று நாம் தெரிந்துக்கொள்வோம்.

அழகாபுரி

அழகாபுரியில் முனிவர்கள், நாட்டுநலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் யாகம் செய்தார்கள். இந்த யாகம் நல்லமுறையில் பூர்த்தி அடைந்தால் நம் கீர்த்தி அழியும், அதன் பிறகு யாரையும் அதிகாரம் செய்ய முடியாது என அஞ்சிய தஞ்சன் என்பவனின் அசுர படையினர், யாகத்தை அழித்தார்கள்.

இதனால் கோபம் அடைந்த முனிவர்களின் ஒருவரான பராசரர், அன்னை சக்திதேவியை வேண்டி தவம் இருந்தார். முனிவரின் தவத்தை ஏற்ற அன்னை ஆதிபராசக்தி, “கவலை வேண்டாம். அந்த அசுரனை வீழ்த்துவோம்.” என்று கூறி, அசுரனை போர்களத்தில் சந்தித்தார் ஆதிபராசக்தி. அன்னை மகாசக்தி, சாந்த சொரூபியாக இருக்கும்போது பச்சை நிறத்தில் இருந்தார். போர் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருந்தது.

அசுரனான தஞ்சனை அழித்தாலும் இறந்த பிறகும் மீண்டும் மீண்டும் உயிர் பெற்று வந்தான்.

இப்படியே அந்த அசுரன் கோடி தடவை உயிர் பெற்றான். அம்மனும் அந்த அசுரனை அழிக்க கோடி அவதாரங்கள் எடுத்தாள்.

பொறுமையிழந்த ஆதிபராசக்தி, கடும் கோபம் அடைந்தாள். இதனால் அம்மனின் பச்சை மேனி நிறம் சிகப்பாக மாறியது.  இனி அவன் பிறவி எடுக்காதபடி வீழ்த்தினாள். தன் அழிவை உணர்ந்துக்கொண்ட தஞ்சன், இறக்கும் போது கோடியம்மனிடம், “தாயே, என்னை மன்னித்து விடுங்கள். கோடி அவதாரங்கள் எடுத்து என்னிடம் தாங்களே போர் செய்த இந்த இடத்திற்கு, தஞ்சன் என்கிற என் பெயராவது நிலைக்க அருள் புரியுங்கள்.” என்று கேட்டுக்கொண்டான்.

அம்மனும் அசுரனின் விருப்பபடி, “தஞ்சன் ஊர்” என்று அழைக்கும் படி முனிவர்களிடம் உத்தரவிட்டார். தஞ்சன் ஊர் என்ற பெயர்தான் இப்போது “தஞ்சாவூர்“ என்று மாறியது.

மகாகாளி, அசுரனை அழிக்கும் முன்னர், பச்சை வண்ண நிறத்தில் தோன்றியதால் “பவளக்காளி“ என்ற பெயரும் அன்னைக்கு உண்டு. அத்துடன், கோடி அவதாரங்கள் எடுத்து அசுரனை அழித்ததால் “கோடியம்மன்” என்றும் அழைக்கப்பட்டாள்.

இந்த கோடியம்மன், சோழ மன்னருக்காகவும் கோடி அவதாரங்கள் எடுத்தார் என்ற தகவலும் இருக்கிறது. எது என்ன?

எதிரிகளை வீழ்த்திய கோடியம்மன்

சோழ நாட்டில் போதிய மழை இல்லாததால் விவசாயம் இல்லை. இதனால் உணவு பஞ்சம் ஏற்பட்டது. வறுமையும் தலைவிரித்தாடியது. அந்த நேரத்தில் சோழ நாட்டை ஆண்டு வந்த சோழ மன்னருக்கும் உதங்கன் என்கிற ஒருவருக்கும் மோதல் இருந்தது.

அதனால் உதங்கனை நாட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டார் அரசர்.

இதனால் ஆத்திரம் அடைந்த உதங்கன், சோழ அரசனின் எதிரியான எதிர்நாட்டு அரசன் சத்துருகோபனிடம் சேர்ந்துக்கொண்டான்.

“தற்போது சோழ நாட்டில் மழை இல்லை. அதனால் வளம் இன்றி நாடு வறுமையில் இருக்கிறது. இதுதான் சமயம், சோழநாட்டின் மீது படையெடுங்கள். வெற்றி உங்களுக்குதான்.” என்று எதிர்நாட்டு அரசன் சத்துருகோபனிடம் சொல்லி, சோழ மன்னருடன் தனக்கு இருந்த முன்விரோதத்தால் பழி தீர்க்க திட்டமிட்டான் உதங்கன்.

உதங்கன் சொல்வதும் சரிதான் என்று சத்துருகோபனும் சோழநாட்டை கைப்பற்ற வந்துக்கொண்டிருந்தான். இதை கேள்விபட்ட சோழ மன்னர், நாடே வறுமையில் இருக்கும் இந்த நேரத்தில், போர் செய்ய வருகிறானே சத்தருகோபன்.? இது முறையா? என்று கலக்கம் அடைந்தார்.

தன் மன வருத்தத்தை வசிஷ்ட முனிவரிடமும் கூறினார் மன்னர்.

அஞ்சாதே. நீ கோடியம்மனை வணங்கு. நிச்சயம் உனக்கும் உன் நாட்டுக்கும் அவள் காவல் இருப்பாள்.” என்று கூறினார்  முனிவர்.

கோடியம்மனை மனதார நினைத்து வழிபாடு செய்தார் சோழ மன்னர். இதன் பயனாக அன்னை காளிதேவி சோழ மன்னரின் முன் தோன்றி, “கலங்க வேண்டாம். என் அருள் உனக்கு உண்டு.” என்று கூறி, போர்களத்தில் கோடி அவதாரங்கள் எடுத்து, எதிரிநாட்டு படை வீரர்களை ஒட ஒட விரட்டினாள் அன்னை.

தன் நாட்டை காப்பாற்றி தந்த கோடியம்மனுக்கு ஆலயம் எழுப்பினார் சோழ மன்னர். தன் நாட்டுக்கு காவலாக இருந்து வெற்றியை தந்த கோடியம்மனை காவல் தெய்வமாக வழிபட்டார் மன்னர்.

பெருமாளின் மார்பில் ஸ்ரீமகாலஷ்மி வீற்றிருப்பது போல், கோடியம்மனின் தலையில் சிவபெருமான் வீற்றிருக்கிறார்.

ஒரு கணவன், தன் மனைவியை எப்போது இதயத்தில் வைத்து நேசிக்க வேண்டும். மனைவி, தன் கணவனை தலைக்கு மேல் கொண்டாட வேண்டும் என்ற தத்துவம் இதை நமக்கு உணர்த்துகிறது.

அதனால் சக்திதேவிக்கு இருக்கவேண்டிய சிம்ம வாகனம் இந்த கோடியம்மன் ஆலயத்தில் இருக்காது. அதற்கு பதிலாக சிவபெருமானின் நந்தி வாகனம் அமைந்திருக்கிறது.

பரிகாரம்

கோடியம்மனை தரிசித்தால் விரோதிகளின் தொல்லைகள் நீங்கும். அம்மனுக்கு எழுமிச்சை மாலை அணிவித்தால் தடைகள் அகலும். அம்பாளுக்கு சேலை வழங்கினால் நோய்கள் விலகும். பால் அபிஷேகம் செய்தால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை இல்லாமல் இருப்பவர்கள் செவ்வாய் கிழமையில் இரண்டு நல்லெண்ணைய் தீபம் ஏற்றி எழுமிச்சை மாலையை அம்பாளுக்கு அணிவித்தால் கருத்து வேறுபாடுகள் நீங்கி, குடும்பம் மேன்மை அடையும்.  

முனிவர்களுக்காகவும், சோழ மன்னருக்காகவும், கோடி அவதாரங்கள் எடுத்து அவர்களை காத்தருளியது போல, நிச்சயம் நம் கஷ்டங்களையும் நிவர்த்தி செய்ய மனித உருவத்தில் தோன்றி, நமக்கு என்றும் துணை இருப்பாள் தஞ்சை அருள்மிகு கோடியம்மன்.!

http://www.youtube.com/bhakthiplanet

பதிவுஇலவசம்! http://www.goodlifematrimony.com/

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com  

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Oct 30 2012. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »