Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

திருப்புமுனை தரும் மகாசக்தி தேவி






தன் மகளுக்கு ஏற்ற நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதால் அரசர் ஒரு அறிவிப்பு செய்தார். “எல்லா லட்சணங்களும் பொருந்திய நம் இளவரசிக்கு இணையான திறமைகளுடன் உள்ள ஒரு மணமகன் தேவை. அத்தகைய இளைஞர் இருந்தால் அரசரை உடனே சந்திக்கவும்.” என்று நகரம் முழுவதும் முரசு கொட்டி அறிவித்தார்கள்.


மதுமந்தம் நாட்டின் மருமகனாக அமைய விருப்பம் கொண்டு, நான் நீ என்று போட்டி போட்டார்கள் பலர். எதிரிநாட்டு அரசர்களும் இளவரசியின் அழகில் மயங்கி, விரோதத்தை மறந்து அரசரிடம் சம்மந்தம் பேச முன் வந்தார்கள். ஆனால் வித்யாவதி ஒரு நிபந்தனை விதித்தாள். “மணமகன் வாள் வீரனாக இருந்தால் மட்டும் போதாது. புத்தி வீரனாகவும் இருக்க வேண்டும். அப்படி நல்லறிவு யாரிடம் இருக்கிறதோ அவரையே மணப்பேன்.” என்றாள்.


வித்யாவதி, வேத வேதாந்தம், வியாகரணம், தர்க்கம் போன்ற சாஸ்திரங்களை நன்றாக கரைத்து குடித்தவளாக திகழ்ந்தாள். மணமகன் தேர்வுக்கு வந்த பலரும் அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரியாதவர்களாக திணறினார்கள். அத்துடன் தன்னிடம் தோற்றவர்களை கிண்டலடித்து அனுப்புவதையும் ஒரு வேடிக்கையான வேலையாக செய்தால் வித்யாவதி.


பெரிய பெரிய புலவர்கள், பண்டிதர்கள், வீரர்கள், அரசர்கள் எல்லோரையும் வித்யாவதி அவமானப்படுத்துகிறாளே என்று மனம் நொந்தார் மன்னர். மன்னரை விட மனம் நொந்தார் அம்பரீஷன். இவர்தான் வித்தைகளை அவளுக்கு கற்று தந்தவர். வித்யாவதியின் குருநாதர்.


தன் மாணவியின் அறிவு செருக்கை அடக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதனால் வித்யாவதியிடம் தோற்றவர்களுடன் கூட்டு சேர்ந்தார் குருநாதர். திருமண வாழ்க்கை அமைவதெல்லாம் இறைவன் தருகிற வரம். அதை ஒருவர் தாமாக தீர்மானிக்க முடியாது என்பதை அவளுக்கு உணர்த்த வேண்டும். அதற்காக அவள் அறிவுக்கு எள்ளளவும் இணையாக இல்லாத ஒருவனை தேடிபிடித்து அவனையே அவள் தலையில் கட்ட வேண்டும். இதை செய்து அவள் தலையில் நாம் குட்ட வேண்டும் என்று தீர்மானித்தார் குருநாதர்.


கிடைத்தான் வடிகட்டிய மடையன்


ஆடு மேய்க்கும் இடையன் ஒருவன் இருந்தான். அவன் மிக வெகுளியான காளி பக்தன். தினந்தோறும் காலையில் காளிகோவிலுக்கு சென்று கோயிலை சுத்தப்படுத்தி, அம்மனுக்கு தீபம் ஏற்றி, அந்த காட்டுபகுதியில் இருக்கும் பூக்களை பறித்து தனக்கு தெரிந்தவரை பூஜை செய்து வணங்கிவிட்டு ஆடு மேய்க்க சென்றுவிடுவான்.


ஒருநாள் அவன் தன் ஆடுகள் சாப்பிட தழைகளுக்காக மரக்கிளையின் நுனியில் அமர்ந்து வெட்டி கொண்டு இருந்தான். அப்போது அந்த வழியாக குருநாதரும் அவருடன் வந்த சில பண்டிதர்களும் இந்த காட்சியை பார்த்தார்கள். “டேய் தம்பி, நுனிகிளையில் உட்கார்ந்து கொண்டு அடிகிளையை வெட்டுகிறாயே. உனக்கு அறிவே இல்லையா?” என்றார்கள்.


“என்ன சாமீ புரியாம பேசறீங்க. அடிகிளையில் உட்கார்ந்து வெட்டினா இன்னிக்கெல்லாம் உட்கார்ந்து வெட்டனும். அதனால்தான் சீக்கிரம் வெட்டுறதுக்கு நுனிகிளையில் உக்காந்து வெட்றேன். உங்களுக்குதான் அறிவே இல்ல. அய்யோ அய்யோ….?“ என்று பதில் சொன்னான்.


இதை கேட்ட அவர்கள், “அட இப்படி ஒரு வடிகட்டிய முட்டளா? அவன்தான் நம் இளவரசி வித்யாவதிக்கு ஏற்ற கணவன்.” என்று நினைத்து சிரித்துக் கொண்டே, முட்டாளிடம் உனக்கு நிறைய உணவு தருகிறோம். ஆடுகளுக்கு வருடம் முழுவதும் தீனி தருகிறோம். காளி கோயிலையும் பார்த்துக் கொள்கிறோம் என்று அவனுக்கு ஆசையை காட்டி, அவனை பெரிய புலவர்களை போல அலங்கரித்து கொண்டு, பல்லக்கில் அமர வைத்தார்கள்.


“நாம் இன்று இளவரசி ஒருவளை சந்திக்க செல்கிறோம். இளவரசி என்ன கேள்விகேட்டாலும் வாயே திறக்கக்கூடாது. மீறி திறந்தால், நாங்கள் உனக்கு தந்த வாக்குறுதி எதையும் செய்து தர மாட்டோம். அத்துடன் உன் தலையும் அங்கேயே வெட்டப்படும்.” என்று அவனை பயமுறுத்தி அழைத்து சென்றார்கள்.


“இளவரசியை திருமணம் செய்ய விரும்பி ஒரு பெரிய பண்டிதர் வந்திருக்கிறார். நான் சோதித்து பார்த்தவரை அவர் அறிவாளியாகதான் தெரிகிறார். இளவரசியும் அவரிடம் பேசிவிட்டால் நிச்சயம் திருமணத்திற்கு சம்மதிப்பார்.” என்று அரசரிடம் சொன்னார் குருநாதர். உடனே அந்த பண்டிதரை அழைத்து வாருங்கள் எனக் கேட்டுக் கொண்டார் அரசர்.


மன்னரின் முன் அழைத்து வந்தார்கள் குருநாதர் தயார் செய்த மடையனை. அரசர் அந்த முட்டாளை பார்த்தவுடன், அட அட மிக அழகாக இருக்கிறார். முகத்தில் இராஜகலை தெரிகிறது. உங்கள் பெயர் என்ன.?” என்று கேட்டார் அரசர்.


“என் பேரா….. பேரு…. ராபணா. நா….” என்று அவன் மேலும் பேசுவதற்கு முன் குருநாதர் குறுக்கிட்டார்.


“புலமையான தமிழ் என்பது பண்டிதர்களுடன் பேசும்போதுதான் பேச வேண்டும். மற்றபடி எளிமையான தமிழ்தான் தனக்கு பிடிக்கும் என்று பண்டிதர் ராபணா அவர்கள் என்னிடம் சொல்லி இருக்கிறார்.” என்று சமாளித்தார் குருநாதர்.


“நல்லது…நல்லது.” என்ற அரசர், இளவரசியை அழைத்தார்.


வித்யாவதி ராபணாவை பார்த்தாள். அவனிடம் எதுவும் பேசாமல் சைகையால் இளவரதி தன் கைவிரலில் ஒரு விரலை நிமிர்த்தி காட்டினாள். அதற்கு ராபணா, இரண்டு விரலை நிமிர்த்தி காட்டினான். நீ என்ன கேட்டாய் என்று இளவரசியிடம் கேட்டார் அரசர். அதற்கு இளவரசி, “பரம்பொருள் ஒருவரே. என்றேன்.” என்றாள். உடனே குருநாதர் அம்பரீஷன், “நம் ராபணா இரண்டு விரலை உயர்த்தி ஜீவாத்மா, பரமாத்மா என இரண்டு பரம்பொருள் உண்டு என்கிறார்.” என்றார் குருநாதர்.


இதை கேட்ட இளவரசி, “ஆம், நானும் அவர் அறிவின் ஞானத்தை புரிந்துக் கொண்டேன்.” என்றாள் வெட்கத்துடன். வித்யாவதி திருமணத்திற்கு சம்மதித்தாள்.


வித்யாவதியால் அவமானப்பட்டவர்களுக்கு ஏக சந்தோஷம். ஒரு மடையனை “அறிவு ஞானி” என்கிறாளே, அடடா இவளுக்கு என்ன அறிவு.?” என்று அவர்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள். வித்யாவதியின் கணவராகி நாளை நாடாளப் போவது ஒரு முட்டாள்.” என்று மகிழ்ந்தார்கள் எதிரிகள்.


இன்னாருக்கு இன்னார் என்று இறைவன் எழுதி வைத்தான்


இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்திருப்பான் இறைவன். தமக்கு வாழ்க்கை துணையாக வருபவர் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்பினாலும், இறைவனின் விருப்பம் மட்டுமே நடக்கும் அல்லவா. அதுபோல்தான் நடந்தது இளவரசியின் வாழ்வில்.


வித்தியாவதி – ராபணா திருமணம் சிறப்பாக நடந்தது.


முதலிரவில் வித்யாவதியிடம் ராபணா பேசும்போது தமிழை கொச்சையாக பேசுவதை கேட்டு, அவன் ஏதோ வேடிக்கையாக பேசுகிறான் என்று நினைத்தாள். ஆனால் அவன் அப்படியே தொடர்ந்து பேசுவதை கேட்டு உண்மையை தெரிந்துக் கொண்டு அதிர்ந்தாள். அழுதாள்.


“நீ யார் என்பதை சொல்லி விடு.” என்றாள் கோபமாக.


“எல்லாத்தையும் சொல்லிப்புட்றேன். நான் சொல்றத உன் அப்பன் கைல சொல்லி எனக்கு அடிவாங்கி தந்துடாதே.“ என்று கூறி கொண்டே நடந்ததை ஒன்று விடாமல் சொன்னான் ராபணா.


“அய்யோ கடவுளே… நான் ஏமாந்துவிட்டேனே.” என்று கதறினாள்.


“என்னது உன்னையும் ஏமாத்தி புட்டானுங்களா… அய்யய்யோ… அப்டினா என் ஆடுகளுக்கு தீனி கெடைக்காதா..? என் வாயிறார சோறு கெடைக்காதா..? என் காளியாத்தவுக்கு பூச நடக்காதா..?” என்று அழுதான் ராபணா.


வித்யாவதி மயங்கி விழுந்தாள்.


ராபணாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அரசர் தம்மை கொன்றுவிடுவாரோ என்ற பயத்தில் அரண்மனையில் இருந்து தப்பி ஓடினான். வழியில் குருநாதரை பார்த்தான். அந்த நள்ளிரவில் நாட்டைவிட்டு தப்பி செல்ல அவரும் பெட்டி படுக்கையுடன் சென்றுக் கொண்டிருந்தார். குருநாதரை துரத்தினான். அந்த இருளில் எங்கோ ஓடி ஓளிந்தார். ராபணா, ஏமாற்றத்துடன் காளி கோயிலுக்குள் சென்று கதவை முடிக் கொண்டு, உயிர் பயத்தில் காளி தேவியை பார்த்து,


“அம்மா காளியாத்தா… நா செத்தா உன் கோயில யாரு சுத்தமா வச்சிருப்பான்.? யாரு விளக்கு ஏத்துவான்.? யாரு உன் மேலே அன்பா இருப்பான்.? என்ன மாதிரி யாரு உனக்கு பக்தன் கெடைப்பான்.?” என ஓவென கதறி அழுதான்.


காளிதேவி தோன்றினாள் – ராபணா “காளிதாசர்” ஆனார்.


அப்போது காளிதேவி நகர்வலம் சென்றுவிட்டு திரும்பினாள். கோவிலின் கருவறை சாத்தி இருப்பதை கண்டு கதவை தட்டினார் காளிதேவி. கருவறையில் இருந்த ராபணா “கதவை திறக்க மாட்டேன். நான் முட்டாள் இருப்பதாக என் பொண்டாட்டி சொல்றா. அவ எதிர்பார்க்கிறது மாதிரி என்னை மாற்று அப்படி செய்தால்தான் கதவை திறப்பேன்“ என்றான் ராபணா.


“சரி. அப்படியே ஆவாய். கதவை திற.” என்றாள் காளிதேவி.


கருவறை கதவை திறந்தான் ராபணா. மகாகாளி நின்றுக் கொண்டிருந்தாள். “ அம்மா.. என்று கதறியபடி காலில் விழுந்தான்.” அவனை எழுப்பினாள்.


“நீ காளிதாசனாக உலக புகழ் பெறுவாய்.” என்று ஆசி வழங்கினார் காளிதேவி.


மறுநிமிடமே “சியாமளா தண்டகம்“ என்ற ஸ்தோத்திரம் பாடினார் காளிதாசர். இதன் பிறகு காளிதாசர் மனைவியுடன் இணைந்தார். அவர் புகழ் நாடெங்கும் பரவியது. மன்னர் போஜராஜன் காளிதாசரின் புகழை அறிந்து அழைப்பு விடுத்தார். காளிதாசர் எண்ணற்ற காவியங்களை படைத்தார். “மகாகவி காளிதாஸர்” எனப் போற்றப்பட்டார்.


சகதியும் ஒரு புள்ளியால் சக்தியாவது போல சக்திதேவியை வணங்கினால் இன்னல்கள் மறையும். எடுக்கும் முயற்சி வெற்றி பெரும். முட்டாளும் பண்டிதன் ஆவான். தன் பக்தனை நிழல் போல துணை நின்று காப்பாள். என்றென்றும் வாழ்வை பொன்மயமாக ஜொலிக்க வைப்பாள் மகாகாளி சக்திதேவி.


Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 


சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும் 


சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள் 


CLICK FOR VIDEO PAGE


editor@bhakthiplanet.com


இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்


For Astrology consultation Click Here



© 2012 bhakthiplanet.com  All Rights Reserved


தமிழ் – ஆங்கில இணையதள பத்திரிக்கையான நமது பக்திபிளானட்.காம், வளரும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்தவும், புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு அறிமுக மேடையாகவும் இருந்து வாய்ப்பு தருகிறது. கதை, கவிதை, கட்டுரை போன்ற உங்கள் படைப்புகள் பக்திபிளானட்.காம் இணையதளத்தில் பிரசுரமாக விரும்பினால் editor@bhakthiplanet.com க்கு அனுப்புங்கள். படைப்புகள் தமிழில் மட்டுமே அனுப்ப வேண்டும்.  ஏற்கெனவே பிரசுரமாகியிருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புகளை திருத்தவோ, சுருக்கவோ ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு.

Posted by on Feb 10 2012. Filed under அம்மன் கோயில், ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »