எண்ணங்களை நிறைவேற்றி தரும் எண்கண்முருகன்
நிரஞ்சனா
திருவாரூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள திருதலம் எண்கண் முருகன் திருகோயில்.
மனம் செம்மையானால் மந்திரம் ஜெபிக்க தேவையில்லை என்ற ஆன்றோர்களின் வாக்கு நூற்றுக்கு நூறு சரியானேதே என்று பல புராணங்களையும், இதிகாசங்களையும் படிக்கும்போது தெரிகிறது. இறைவனை போற்றி பாடி மகிழ்விப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அதுபோல எண்ணம் முழுவதும் இறைவனை நினைத்திருந்து அருள் பெற்றவர்களும் பலருண்டு. அப்படி ஒருவர் இறைவனான முருகப்பெருமானின் கருனையை முழுமையாக பெற்றார். அவரை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.
முத்தரச சோழர்
முத்தரச சோழர், தாம் கட்டிய திருகோயிலில் அழகான முருகபெருமான் சிலையை பிரதிஷ்டை செய்ய நினைத்தார். அதனால் பல சிற்பிகளிடம் அந்த பொறுப்பை தந்தும் அந்த சிற்பிகள் செய்து தந்த சிலைகள் திருப்திகரமாக இருக்கவில்லை. இதனால் மனசங்கடத்தில் இருந்தபோது ஒரு சிற்பி அரசரை சந்தித்து தன் சிற்ப திறனை காட்டினார். மன்னர் மகிழ்ந்தார். அதனால் அந்த சிற்பியையே முருகப்பெருமானின் சிலையை உருவாக்கச் சொன்னார். அத்திருப்பணியை ஏற்ற சிற்பியும் கண்ணும் கருத்துமாக அருமையானதொரு முருகன் சிலையை உருவாக்கி தந்தார்.
அச்சிலையை கண்ட அரசர் ஆச்சரியம் அடைந்தார். “இது சிலைதானா? அல்லது முருகனே நேரில் வந்து நிற்கிறானா?” என்று பிரமித்து போனார் மன்னர். அந்த சிற்பி செதுக்கிகொடுத்த சிலைதான் இன்றும் நாம் வழிப்படும் சிக்கல் சிங்காரவேலன்.
தன் நாட்டில் மட்டும்தான் இந்த தத்ருபமான முருகன் சிலை இருக்க வேண்டும். வேறு எங்கும் இந்த உயிர் உள்ள சிலை போல ஒரு சிலையை இந்த சிற்பி உருவாக்கக் கூடாது என்ற பேராசையில் அந்த சிற்பியின் கட்டைவிரலை வெட்டி விடுகிறார் அரசர்.
போனது என் கட்டைவிரல்தானே… திறமை இல்லையே.. நான் கற்ற கலையில்லையே…என்ற தன்னபிக்கையில் மனம் தளராமல் வேறு ஒரு ஊருக்கு சென்று அங்கேயும் இறைவன் தந்த திறமையால் சிக்கல் சிங்காரவேலவனை போல ஒரு முருகப்பெருமானின் சிலையை வடித்தார். அந்த முருகப்பெருமானின் சிலை எட்டுகுடிதலத்தில் இருக்கிறது.
இதை கேள்விபட்ட முத்தரச சோழர் கடும் கோபம் கொண்டு, “கண் இருப்பதால்தானே ஒரே மாதிரியான சிலையை அந்த சிற்பி வடிக்கிறான்.” என்று எண்ணிக்கொண்டு அந்த சிற்பியின் இரு கண்கள் பறித்துவிடுகிறான்.
கண்கள் இல்லை என்றால் என்ன?
கண்கள் இல்லை என்றால் என்ன? சிக்கலிலும், எட்டுக்குடியிலும் செய்த சிலையை போலவே என் மனகண்ணிலேயே ஒரு சிலையை உருவாக்குகிறேன். அதற்கு நான் வணங்கும் முருகப்பெருமான் துணையிருப்பார்.” என்று மனதால் முருகப்பெருமானை வணங்கி தன் கால் போன போக்கில் சென்றார்.
வெகு தூரம் பயணம் செய்ததால் சிற்பி சோர்வடைந்து ஒரு இடத்தில் அமர்ந்தார். தாம் அமர்ந்த இடத்தில் ஒரு சிலை வடிப்பதற்கு உகந்த கல் இருப்பதை தடவி பார்த்தே உணர்ந்தார் சிற்பி. வித்தை தெரிந்தவர் சும்மா இருப்பாரா? உடனே அந்த கல்லை முருகப்பெருமான் சிலையாக உருவாக்க, கந்தனின் உருவத்தை தன் மனக்கண்ணாலேயே பார்த்து, அதன்படி முருகப்பெருமானின் சிலையை வடித்தார் சிற்பி.
அந்த நேரத்தில் அந்த பக்கமாக வந்த ஒரு சிறுமி, “ஐயா.. உங்களுக்கு கண் தெரியாதா? நான் வேண்டுமானால் உங்களுக்கு உதவியாக இருக்கட்டுமா?” என்று கூறி அந்த சிற்பிக்கு உதவியாக இருந்தாள் அந்த சிறுமி.
மனதை விட சிறந்த கண் இந்த உலகத்திலேயே இல்லை. மற்றவர்களிடம் பழகும்போது அவர்கள் நல்லவர்களா – தீயவர்களா? என்று அறியும் திறன் முகக்கண்ணை விட அகக்கண்ணுக்கு தான் இருக்கிறது. நாம் பல சமயம் முகக்கண்ணைதான் நம்புகிறோம் அகக்கண்ணுக்கு வேலை தருவதில்லை. சில நேரம் விதி கூட நாம் அகக்கண்ணை பயன்படுத்த விடுவதில்லை என்றும் சொல்லலாம். இதனால் ஏமாற்றம் – தோல்வி எல்லாம் உண்டாகிறது. அதனால்தான் கண் இருந்தும் குருடர் என பெயர் வாங்குகிறோம்.
அப்படி ஒரு மகிமை வாய்ந்த மனக்கண்ணாலேயே சிக்கல், எட்டுகுடி போன்ற முருகப்பெருமான் சிலையை போலவே ஒரு திருமுருகனை உருவாக்கினார் சிற்பி. ஆனால் முருகப்பெருமானுக்கு கண் வைக்கும் போது, அந்த சிற்பி மனம் வருந்தினார். காரணம், தமக்கு கண் பார்வை இருந்திருந்தால் இறைவனுக்கு இன்னும் அழகான கண்கள் வைக்க முடிந்திருக்குமே என்று நினைத்து கொண்டே சிலையை செதுக்கும் போது, அந்த சிலையில் இருந்து ஒரு சிறு கல் சிதறி சிலையின் கீழே அமர்ந்திருந்த சிறுமியின் மேல்பட்டு ரத்தம் சிதறி சிற்பியின் கண்களில் பட்டவுடன் சிற்பிக்கு கண்பார்வை வந்தது.
தமக்கு கண்பார்வை வந்ததை கண்டு மகிழ்ச்சியடைந்த சிற்பி தனக்கு உதவியாக இருந்த சிறுமியை தேடியபோது அந்த சிறுமி அங்கில்லை.
சிற்பியின் எண்ணமே கண்ணாக இருந்து முருகப்பெருமானின் சிலையை வடித்ததால் அந்த பகுதி, “எண்கண் திருத்தலம்” என்ற பெயர் பெற்றது. அத்துடன் எண்கண்வேலவன் என்று இறைவனும் அழைக்கப்பட்டார்.
பிரம்மபுரீஸ்வரர்
பிரம்மதேவனுக்கு பிரணவத்தின் பொருள் தெரியாததால் முருகப்பெருமானின் கோபத்திற்கு ஆளானார் பிரம்மா. பிரணவத்தின் விளக்கத்தை சிவபெருமான் கந்தனிடம் கேட்டு தெரிந்துக்கொண்ட பிறகு பிரம்ம தேவருக்கு சிவபெருமான் இந்த தலத்தில்தான் விளக்கம் தந்தார். அதனால் சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர் எனப் பெயர் பெற்று இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அம்பிகையின் பெயர் பிருஹந்நாயகி.
இந்த ஸ்தலத்தில் தம் பெற்றோரை விட எண்கண்வேலவனே பக்தர்களின் மனகண்ணில் நிறைந்திருக்கிறார்.
இந்த எண்கண்வேலவனை வணங்கினால் நல்ல எண்ணங்கள் தோன்றும். அந்த நல்ல எண்ணங்களை எண்கண்வேலன் நிறைவேற்றி வெற்றி தருவார். கண் திருஷ்டி விலகும். கண்பார்வை கோளாறு நீங்கும். கல்விதடை விலகும். நிரந்தரமான வேலைவாய்ப்பு அமையும்.
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved
தமிழ் – ஆங்கில இணையதள பத்திரிக்கையான நமது பக்திபிளானட்.காம், வளரும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்தவும், புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு அறிமுக மேடையாகவும் இருந்து வாய்ப்பு தருகிறது. கதை, கவிதை, கட்டுரை போன்ற உங்கள் படைப்புகள் பக்திபிளானட்.காம் இணையதளத்தில் பிரசுரமாக விரும்பினால் editor@bhakthiplanet.com க்கு அனுப்புங்கள். படைப்புகள் தமிழில் மட்டுமே அனுப்ப வேண்டும். ஏற்கெனவே பிரசுரமாகியிருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புகளை திருத்தவோ, சுருக்கவோ ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு.