நம் கர்மவினை நீங்கவே மகான்கள் தோன்றுகிறார்கள்
மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு
பகுதி – 17
நிரஞ்சனா
தீப ஒளி எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் தெய்வம் இருக்கிறது. பாழடைந்த இடங்கள் என்கிறோமே அதன் காரணம் என்ன? தீபம் ஏற்றப்படாத இடங்கள் எல்லாம் பாழடைந்த இடங்கள் ஆகிறது. வெளிச்சம் குடியேறாத இடத்தில் சாத்தான் குடியேறும். அதுபோல் மனிதர்களுக்குள்ளும் தெளிவான மனம் என்கிற வெளிச்சம் வேண்டும். அது இல்லை என்றால் மனதினுள் இருள் சூழ்ந்து அந்த இருள் மனித குணத்தை அரக்க குணமாக்கி அந்த மனிதனையே அழித்து விடுகிறது. ஆகவே அது கோயிலாகட்டும் வீட்டின் பூஜையறை ஆகட்டும், நாம் இறைவனின் எதிரே தீப விளக்கேற்றும்போது, பரவுகிற அந்த வெளிச்சம் அகக்கண்ணையும் சேர்த்து திறக்கிறது ஆகவே வீடாக இருந்தாலும் சரி கோவிலாக இருந்தாலும் சரி விளக்கேற்ற வேண்டும்“. என்று பாபா அறிவுறுத்தினார்
ஷீரடியில் இருந்த எண்ணெய் வியபாரிகள் சாய்பாபாவுக்கு எண்ணெய் தருவார்கள். அந்த எண்ணெயில் தினந்தோறும் மசூதியில் தீபம் ஏற்றி ஜொலிக்க வைப்பார் பாபா. இப்படியே பல வருடங்கள் எண்ணெய் வியபாரிகள் பாபாவுக்கு எண்ணெய் வழங்குவதை வழக்கமாக செய்து வந்தார்கள்.
ஒருநாள் ஒரு எண்ணெய் வியபாரி, “ஏன் நாம் பாபாவுக்கு எண்ணெய் தர வேண்டும். அதை அவர் மசூதியில்தானே தீபம் ஏற்றுகிறார். அதனால் நமக்கு என்ன புண்ணியம்.? அதனால் இன்று முதல் நாமே கோவிலுக்கு நேரடியாக எண்ணெய் வழங்கி புண்ணியம் அடைவோம். வியபாரிகள் தீர்மானித்தார்கள்.
கோடிக்கணக்கான மனிதர்கள் இருந்தாலும் இறைவனின் தூதுவர்களுக்கே மகிமை அதிகம். இறைவனின் அடியார்களை சித்தர்கள், ஞானியர், மகான்கள் என்று நாம் போற்றி வருகிறோம். தன்னலம் இல்லாத நல்லோர்கள் அவர்கள். இறைவனின் அன்பை அவர்களே நேரடியாக முதலில் பெற்றவர்கள். அவர்களை மதித்து நடப்பது அவசியம். அதை போன்றவர்தான் நம் மகான் ஷீரடி சாய்பாபா. இதனை அந்த வியபாரிகள் உணர்ந்தபாடில்லை.
சாய்பாபாவுக்கு தீபம் ஏற்ற எண்ணெய் தருவது மக்களின் வாழ்வில் உள்ள இருளை அகற்றத்தான் என்பதை அவர்கள் உணரவில்லை. விதி யாரைவிட்டது.?
நம் கர்மவினை நீங்கவே மகான்கள் தோன்றுகிறார்கள்
சாய்பாபா ஒவ்வொரு வியபாரியிடமும் சென்று, “விளக்கேற்ற எண்ணெய் தாருங்கள்“ என்று வழக்கமாக கேட்டார். அதற்கு வியபாரிகள், இன்னும் வியபாரம் ஆகவில்லை. அதனால் இப்போது இலவசமாக எந்த பொருளும் தர முடியாது என்றார்கள். இன்னும் சில வியபாரிகளோ, எண்ணெய் தீர்ந்து விட்டது என்றார்கள்.
எல்லாம் தெரிந்த பாபாவுக்கு அவர்கள் எண்ணம் தெரியாதா?. அதனால் கவலையேபடாமல் புன்னகையுடன் அங்கிருந்து சென்றுவிட்டார்.
அன்று மாலை…
“இன்று இரவு முழுவதும் சாய்பாபா அந்த மசூதியில் இருளில்தான் பொழுதை கழிக்க வேண்டும் பாவம்.” என்றார்கள் பாவத்தை தலையில் சுமந்துக்கொண்டிருக்கிறோம் என்றே தெரியாதவர்கள். அப்போது…
அங்கே வந்த ஒருவன், “என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.?” எனக் கேட்டான்.
“சாய்பாபா இனி இரவு முழுவதும் இருளில் முடங்கி கிடக்க போவதை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.” என்றார்கள்.
“அடடா…உங்களுக்கு விஷயமே தெரியாதா.? சாய்பாபா இருக்கின்ற அந்த மசூதி இன்று வழக்கத்தை விட தீப வெளிச்சத்தில் ஜொலிக்கிறது. அதை பார்க்க ஒரு கூட்டமே அங்கே கூடி விட்டது. இனி தாமதித்தால் நீங்கள் நிற்பதற்கு கூட அங்கே இடம் கிடைக்காது. அதனால் உடனே சென்று அந்த அதிசயத்தை பாருங்கள்.” என்றான்.
“நாம் எண்ணெயே தரவில்லை எப்படி பாபா தீபம் ஏற்றினார்.?” என்று சொல்லி அந்த அதிசயத்தை பார்க்க விரைந்து ஓடினார்கள் வியபாரிகள்.
ஆம். தகவல் சொன்னவன் சரியாகவே சொன்னான். வழக்கத்தை விட இன்று மசூதி தீப வெளிச்சத்தில் பிரகாசித்தது. மக்கள் அந்த அதிசயத்தை நேரடியாகவே பார்த்தார்கள். சாய்பாபா கிணற்றடிக்கு செல்கிறார். கிணறில் இருந்து நீர் இரைத்து அந்த தண்ணீரை ஒரு காலி டப்பாவில் ஊற்றி கொண்டுவந்து ஒவ்வொரு அகல்விளக்கிலும் ஊற்றுகிறார். பிறகு தீபம் ஏற்றுகிறார். அது பிரகாசமாக எரிகிறது. எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் தீபம் எரிகிறது.
இந்த அற்புத காட்சியை நேரடியாக கண்ட வியபாரிகள் அதிர்ந்து போனார்கள். தங்கள் தவறை உணர்ந்து பாபாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்கள்.
“உங்கள் பாவ கர்மாவை தீர்க்கத்தான் இறைவன் என்னை படைத்தான். நீங்கள் எனக்கு தருகிற தானம், பொருள் அல்ல. உங்கள் தீய கர்மாவை என்னிடம் தருகிறீர்கள். உங்கள் அன்புக்கு கட்டுப்பட்டு அதை நான் ஏற்கிறேன். இதைதான் கங்கையும் செய்கிறது. காவேரி போன்ற புனித நதிகளும் செய்கிறது. உங்கள் தீவினையை அவை சுமக்கிறது. உங்களை புனித ஆத்மாக்களாக்க நான் முயற்சி செய்கிறேன். உங்களுக்கு வர போகிற ஆபத்து நீங்குகிறது. உங்களை தேடி உங்கள் தீய முன்ஜென்ம கர்மாவையே நான் பிச்சை கேட்கிறேன்.” என்றார் மகான் சாய்பாபா.
சாதுகளுக்கு தரும் தர்மமே நம்முடைய தீய முன்ஜென்மவினையை அழிக்கிறது. சாதுக்களுக்கு மட்டும் தர்மம் செய்ய வேண்டும் என்றில்லை. இறைவனால் படைக்கப்பட்ட எல்லா ஜீவராசிகளுக்கும் நம்மால் முடிந்த உதவிகள் செய்தால், நம் கடுமையான முன்ஜென்ம கர்மவினையை நீக்கிவிடலாம். இதைதான் மகான் ஷீரடி சாய்பாபா நமக்கு அறிவுறுத்தினார்.
சாய்பாபவை குறை சொன்னார் “மாதவபட்“ என்பவர். யார் அவர்.? அடுத்த பகுதியில் பார்போம்.
இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
CLICK FOR VIDEO PAGE
editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved
தமிழ் – ஆங்கில இணையதள பத்திரிக்கையான நமது பக்திபிளானட்.காம், வளரும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்தவும், புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு அறிமுக மேடையாகவும் இருந்து வாய்ப்பு தருகிறது. கதை, கவிதை, கட்டுரை போன்ற உங்கள் படைப்புகள் பக்திபிளானட்.காம் இணையதளத்தில் பிரசுரமாக விரும்பினால் editor@bhakthiplanet.com க்கு அனுப்புங்கள். படைப்புகள் தமிழில் மட்டுமே அனுப்ப வேண்டும். ஏற்கெனவே பிரசுரமாகியிருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புகளை திருத்தவோ, சுருக்கவோ ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு.