பதவி பூர்வ புண்ணியம்
நிரஞ்சனா
ஒருவர் வெற்றி பெற்றால், தன் முயற்சியால் அந்த வெற்றியை அடைந்ததாக சொல்வார்கள். தோல்வியை மட்டும் விதி என்று கூறுவார்கள். ஆனால் வெற்றியும் – தோல்வியும் நம் செயல்களை அனுசரித்து இறைவனால் தரப்படுகிறது.
இறைவனின் மேல் நம்பிக்கையுடன் தவம் செய்து பயன் பெற்ற பலர் உண்டு. அதில் ஒரு புராண சம்பவத்தை தெரிந்துக் கொள்வோம்.
பணிப்பெண்ணின் மகன்
மகரிஷிகளின் ஆசிரமங்களை சுத்தப்படுத்தி அவர்களுக்கு உணவு சமைத்து தரும் வேலையை செய்து வந்தாள் ஒரு பணிப்பெண். மகரிஷிகளும் அந்த பணிப்பெண்ணுக்கு வேலைக்கு சன்மானமாக உணவு தந்து விடுவார்கள். அந்த உணவை அவளும் அவள் மகனும் சாப்பிட்டு வந்தார்கள்.
அந்த பணிப்பெண், கடமைக்கு என்று மகரிஷிகளின் ஆசிரம பணியை எண்ணாமல், சேவை மனப்பான்மையுடன் ஈடுப்பட்டு வந்தாள். நாட்கள் நகர்ந்தது விதி விளையாட தொடங்கியது. ஆம், அந்த பணிப்பெண் இறைவனடி சேர்ந்தாள்.
மரத்திற்கு வேர்தான் ஆதாரம். அந்த வேர் சக்தி இழந்தால் அந்த மரத்திற்கு பலம் ஏது.?. அதுபோல்தான் ஆனது அந்த பணிப் பெண்ணின் மகனுக்கும்.
தாய் இறந்தவுடன் அந்த குழந்தைக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மகரிஷிகளுக்கு சுமையாக இருக்கவும் அந்த பிள்ளை விரும்பவில்லை. வேலைகார பெண்ணின் குழந்தையை நாம் எடுத்து வளர்ப்பதா?. அதனால் நமக்கென்ன லாபம் என்று லாப நோக்கத்தோடு சிலர் பார்த்தார்கள். சிலர் கௌரவம் பார்த்தார்கள்.
“என்ன செய்வது.? கிணற்றின் ஆழம் பார்க்க ஊரார் வீட்டு பிள்ளையை கிணற்றில் இறக்கி விடும் கல் நெஞ்சம் படைத்த மனிதர்கள் என்று சிலர் அந்த குழந்தையின் பற்றி வக்கனையாக பேசினார்களே தவிர, அவர்களும் அந்த குழந்தையை வளர்க்க முன் வரவில்லை. அதனால் அந்த பிள்ளை, யாருக்கும் பாரமாக இருக்க விரும்பாமல், கால் போன போக்கில் சென்றான். ஒரு மரத்தின் அடியில் அமைதியாக அமர்ந்தான். “திக்கற்றவனுக்கு தெய்வம் துணை என்பார்கள். நமக்கு இறைவன்தான் துணை என்று அவ்வப்போது நம் தாயார் சொல்வாரே, அதனால் நமக்கு தெய்வம் துணை இருக்கும்.” என்ற மன தெளிவோடு, ஈசனை நினைத்து தவம் செய்ய ஆரம்பித்தான்.
ஒருநாள் அந்த தவம் கைலாயத்தை எட்டியது. பிள்ளையின் தவத்தை ஏற்று சிவபெருமான் தோன்றினார். ஆனால் அந்த குழந்தைக்கு இறைவனை பார்த்தவுடன் என்ன கேட்க வேண்டும் என்றே தெரியவில்லை. இறைவனை உற்று பார்த்து கொண்டே இருந்தது. இறைவனும் அந்த குழந்தையிடம் பேசாமல், சிறிது நேரம் நின்றுவிட்டு மறைந்தார். அப்போது வானத்தில் ஒரு அசரீரி ஒலித்தது.
“குழந்தாய்…உன் தவத்தை விட உன் முற்பிறவியின் கொடும் பலன் வலிமையாக இருக்கிறது. அதனால் நீ இந்த பிறவியில் செய்த தவம், உன் அடுத்த பிறவிக்கே பலன் தரும்.” என்று ஒலித்தது அசரீரி.
இதை கேட்ட அந்த குழந்தை தமக்கு எப்போது மரணம் நேரும். அடுத்த பிறவிக்கு இன்னும் எத்தனை காலமாகும்.? என்று யோசித்து, இதற்கு யமதர்மராஜன் விடை சொல்வார் என்று எண்ணி, யமதர்மராஜனை நினைத்து தவம் இருந்தான். சிவபெருமானோ தவத்தை ஏற்று நேரில் காட்சி தந்தார். ஆனால் யமதர்மராஜன் வரவேயில்லை.
காரணம், மகரிஷிகளுக்கு அந்த குழந்தையின் தாய் பணிவிடை செய்ததால் அவள் செய்த புண்ணிய பலனால், சிறிது காலம் யாராவது அந்த குழந்தைக்கு ஆதரவு தந்து வந்தார்கள். இப்படியே வாழ்நாள் கழிந்து ஒருநாள் இறைவனடி சேர்ந்தான்.
அந்த ஆத்மா பூலோகத்தில் சிவ தவம் செய்ததாலும், அதனால் சிவபெருமானே அந்த ஆத்மாவுக்கு பூலோகத்தில் காட்சி தந்ததாலும், தன் வாழ்நாள் முழுவதும் யாருடைய வம்பு தும்புக்கும் போகாததாலும், யமதர்மனை நினைத்து தவம் செய்த பலனால் யமதர்மராஜர் பூலோகத்தில் நேரில் காட்சி தராவிட்டாலும், யமலோகத்தில் பலன் கிடைத்தது. ஆம், அந்த ஆத்மா யமலோக பாவ கணக்கில் இடம் பெறவில்லை. இது புண்ணிய ஆத்மா என்று பெயரெடுத்தது.
இந்த தகவல் பிரம்ம தேவனை எட்டியது. மிகவும் மகிழ்ந்தார். இதனால் அந்த புண்ணிய ஆத்மா, பிரம்மனின் மனதில் பிரம்ம தேவனின் மகனாக தோன்றியது. அவர் புனித ஆத்மாதான் நாரதர் முனிவர்.
பூலோகத்தில் ஒரு வேலைகார பெண்மணிக்கு மகனாக பிறந்து, பல இன்னல்களில் அவதிப்பட்டு,. மனம் தளர்ந்து விடாமல் தவம் செய்து, இறைவனையும் நேரடியாக தரிசித்தும், எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்கவில்லை என்பதை உணர்ந்து, பிறகு இறைவனடி சேர்ந்து, மேலோகத்தில் புனித ஆத்மாவாக போற்றப்பட்டு, பிரம்மனுக்கு மகனாக பிறந்து, சிறந்த நீதிமான், அதிபுத்திசாலி, நினைவாற்றல் நிறைந்தவராகவும், நல்லது கெட்டது என்ன என்பதை உடனே உணரும் சக்தி படைத்தவராகவும் திகழ்ந்து, வைகுண்டம் முதல், கைலாயம்வரை நுழைய அனுமதி தேவையின்றி, தடையேதும் இல்லாமல் சென்று ஸ்ரீமந் நாராயணனையும், சிவபெருமானையும் தரிசிக்கின்ற செல்வாக்கும் பெற்று திகழ்ந்தார் நாரத முனிவர் என்றால் அவரின் பூலோக பிறவியில் இருந்த பொறுமையை தான் போற்ற வேண்டும்.
பூர்வ புண்ணியம்
நல்லதுக்கு காலம் இல்லை. கடவுளுக்கும் கண் இல்லை என்று பலர் புலம்புவார்கள். அதற்கு காரணம் பூர்வஜென்ம புண்ணியம்தான். அதனால்தான் ஜோதிட சாஸ்திரமும் சொல்கிறது,
“ஜனனி ஜென்ம சொக்கியானாம் பதவி பூர்வ புண்ணியாம் நாம்” என்கிறது ஜோதிட சாஸ்திரம். வசதி இருக்கும் போது பல அட்டகாசங்களை செய்வார்கள். இவ்வாறு செய்யாதே, மறுபிறவில் அவதிப்படுவாய் என்று சாஸ்திரங்களும் – ஆன்றோர்கள் எச்சரித்தாலும், “அடுத்த பிறவி என்பதெல்லாம் இல்லை“ என்று நம்பிக்கை இல்லாத சிலரும், “அடுத்த பிறவியில்தானே அவதிப்படுவேன், அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று மறுபிறவியில் நம்பிக்கை இருந்தாலும் சிலர் முட்டாள்தனமாக எண்ணுவார்கள்.
நிழலுக்கு எப்படி முடிவில்லையே அதுபோல் ஆத்மாவுக்கு முடிவில்லை. தவறு செய்தால் இந்த பிறவி அந்த பிறவி என்று பல பிறவிகளை அனுபவிக்க வேண்டும் என்பதை மறவாமல், நன்மை செய்யாவிட்டாலும், பிறருக்கு துன்பம் செய்வதை கனவிலும் நினைக்காமல் இருந்தால், இந்த பிறவி மட்டுமல்ல, எந்த பிறவியிலும் நாம் அதிர்ஷ்டசாலிகள்தான்.
வயல் நெல்லுக்கு பாயும் தண்ணீர், புல்லுக்கும் பாய்ந்து பலன் தருவது போல, இந்த பிறவில் செய்த தான-தர்மங்களுக்கும், நன்மைகளுக்கும், அந்த நல்ல செயலை செய்தவர்களின் வாரிசுகளுக்கு நிச்சயம் பலனுண்டு.
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved
தமிழ் – ஆங்கில இணையதள பத்திரிக்கையான நமது பக்திபிளானட்.காம், வளரும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்தவும், புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு அறிமுக மேடையாகவும் இருந்து வாய்ப்பு தருகிறது. கதை, கவிதை, கட்டுரை போன்ற உங்கள் படைப்புகள் பக்திபிளானட்.காம் இணையதளத்தில் பிரசுரமாக விரும்பினால் editor@bhakthiplanet.com க்கு அனுப்புங்கள். படைப்புகள் தமிழில் மட்டுமே அனுப்ப வேண்டும். ஏற்கெனவே பிரசுரமாகியிருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புகளை திருத்தவோ, சுருக்கவோ ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு.