நல்ல வாழ்க்கை தரும் பாண்டுரங்கா திருநாமம்
நிரஞ்சனா
இறைவனுடைய நாமத்தை தினமும் உச்சரிக்க வேண்டுமா? அப்படி உச்சரித்தால் இறைவன் நம்மை வந்து பார்ப்பாரா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.
மக்கள் அதிகம் இருக்கும் கூட்டத்தில் “சீனிவாசா” என்று அழைத்தால், அந்த கூட்டத்தில் தன்னை தான் அழைக்கிறார்களோ என்று, “சீனிவாசன்” என்ற பெயர் உள்ள அத்தனை பேரும் திரும்பி பார்ப்பார்கள். அதுபோல் இறைவனும் யார் நம்மை அழைப்பது என பார்ப்பார். அதனால்தான் மனிதர்களுக்கு இறைவனுடைய பெயர் வைக்கிறார்கள்.
புண்ணியம் தேடி தந்த ஹரிதாசர்
பண்டரிபுரத்தில் ஜத்வாமுனிவர் – சாத்யகி என்ற தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் ஹரிதாசர். அவர் தன் மனதில் எது படுகிறதோ அதையே செய்வார். கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்பதையே நம்ப மாட்டார். அதுபோல யாருடைய பேச்சையும் கேட்க மாட்டார். இப்படி இருந்தவர் ஒருநாள் இறைவனின் மேல் பக்தி கொண்டார். இதை கண்ட அவருடைய பெற்றோருக்கு ஆச்சரியம்.
ஹரிதாசர் எந்நேரமும், “ஹரே கிருஷ்ணா ஹரகிருஷ்ணா” என்று உச்சரித்து கொண்டே தன் பணியை செய்வார். நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், அன்றாடம் தான் சாப்பிடுவதற்கும், தன் பெற்றோருக்கு உணவு தருவதற்கும் கங்கைக்கரைக்கு சென்று, அங்கு இருக்கும் வாழைதண்டு, வாழைப்பூ போன்றவற்றை எடுத்து வந்து சந்தையில் விற்பனை செய்வார். அதில் கிடைக்கும் சொற்ப வருவாயில் கோதுமை மாவு வாங்கி ரொட்டி தயாரித்து, தானும் சாப்பிட்டு பெற்றோருக்கும் கொடுப்பார்.
தினமும் கோவிந்தா, கிருஷ்ணா, பெருமாளே, ஹர ராம ஹர கிருஷ்ணா என்று இறைவனுடைய பெயரை அதிக சத்தத்துடன் உச்சரித்துகொண்டும், கீர்த்தனம் பாடிகொண்டும் இருப்பார்.
இப்படி இவர் சத்தமாக சொல்வது, அக்கம் பக்கத்தினருக்கும் அருகில் இருந்த வியபாரிகளுக்கும் தொந்தரவாக இருந்தது. இதனால் பொறுமை இழந்த வியபாரிகள் ஒன்று கூடி ஹரிதாசரிடம் வந்து, “உங்கள் இறைவனுக்கு காது என்ன செவிடா.? ஏன் இப்படி சத்தமாக அவருடைய பெயரை உச்சரிக்கிறாய்.?” என்றார்கள்.
ஹரிதாசரின் முகமெல்லாம் மகிழ்ச்சி. “உங்களுக்கு கேட்டதா.? நான் இறைவனின் பெயரை உச்சரித்தது உங்களுக்கு நன்றாக கேட்டதா?” உங்களில் அனைவருக்கும் இறைவனுடைய நாமம் நன்றாக கேட்டதா?. அப்படி கேட்கவில்லை என்றால் சொல்லுங்கள். இன்னும் அதிக சத்தத்துடன் நம் இறைவனுடைய திருநாமத்தை உச்சரிக்கிறேன்.” என்றார் ஆனந்தமாக ஹரிதாஸர்.
இதை கேட்ட ஒரு வியபாரி, “ஏன் எங்களை இப்படி கொல்கிறாய்?“ என்றார்.
“நானா உங்களை கொல்கிறேன்.? உங்களுக்கும் புண்ணியம் சேர்க்கதானே நான் இப்படி செய்கிறேன். நீங்கள் இறைவனை வணங்குவதே இல்லை. காலையில் வந்தவுடன் வியபாரம். அந்த பரபரப்பில் இறைவனை மறந்து விடுகிறீர்கள். விடுமுறை நாட்களிலாவது இறைவனை கோயிலுக்கு சென்று தரிசனம் செய்கிறீர்களா என்றால் இல்லை. அவன் திருநாமத்தையாவது உச்சரிக்கிறீர்களா என்றால் அதுவும் இல்லை.
விடுமுறை நாட்களிலும் உங்கள் கடைக்கு வந்து கடையை சுத்தம் செய்வதிலும், கணக்கு பார்ப்பதிலும் கவனமாக இருக்கிறீர்கள். பிறகு எப்போதுதான் உங்கள் ஆத்மாவை சுத்தப்படுத்துவீர்கள். மனதை சுத்தப்படுத்துவீர்கள்.?
உங்கள் வியபார கணக்கில் கண்ணும் கருத்துமாக இருக்கிறீர்களே…அதுபோல உங்கள் பாவ – புண்ணிய கணக்கை எழுதுவதிலும் இறைவன் கண்ணும் கருத்துமாக இருக்கிறான் என்பதை எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா.?
அதனால்தான் – உங்களுக்காகதான் உங்களுக்கு புண்ணியம் கிடைக்க வேண்டும் என்றுதான் இறைவனுடைய நாமத்தை சத்தமாக உச்சரிக்கிறேன். பாடுகிறேன். சூரியனை கண்ட தாமரை மலர்வது போல், இறைவனுடைய நாமத்தை கேட்டு உங்கள் தலைமுறை பிரகாசிக்கட்டும் என்ற எண்ணத்தில்தான் நான் இப்படி பெருமாளின் திருநாமத்தை உச்சரிக்கிறேன்.
இறைவனின் திருநாமம் உச்சரித்து பாடிய புண்ணியம் எனக்கு. இதை கேட்ட புண்ணியம் உங்களுக்கு. “யந்நாம ஸ்ம்ருதி மாத்ரேணே. யந்நாம ச்ருதி மாத்ரேணே.” இறைவனின் நாமத்தை சொல்பவருக்கு எவ்வளவு புண்ணியம் கிடைக்கிறதோ அதுபோல இறைவனின் நாமத்தை கேட்பவருக்கும் புண்ணியம் கிடைக்கும்.. என்றார் ஹரிதாஸர்.
பெருமாளை “செங்கல்லின் மேல் நில்”என்று கட்டளையிட்டார் ஹரிதாஸர்
ஹரிதாசரின் பக்தியை கண்டு ஸ்ரீமந் நாராயணனே மகிழ்ந்து ஹரிதாசரை தேடி வந்தார்.
அன்று நல்ல மழை.
தெருவெல்லாம் சதசதவென இருந்தது. அப்போது ஹரிதாஸரின் வீட்டு வாசலில் ஒரு தெய்வீக குரல்.
“ஹரி. நீ வணங்கும் பாண்டுரங்கன் வந்திருக்கிறேன்.”
ஆம். வந்தது ஸ்ரீமந் நாராயணன்.
“அப்படியா. இருக்கட்டும். நான் என் தாய் தந்தைக்கு பணிவிடை செய்து கொண்டு இருக்கிறேன். அதனால் நீங்கள் சற்று காத்திருங்கள். மழை பெய்கிறது. நிற்க முடியாமல் கஷ்டபடாதீர்கள். அருகே இருக்கும் செங்கல் மேல் நில்லுங்கள். வந்து விடுகிறேன்.” என்றார் வீட்டின் உள்ளே இருந்தபடி ஹரிதாஸர்.
ஆசிரியர் மாணவனிடம், “இருக்கையின் மேல் ஏறி நில்.” என்று சொன்னால் மாணவன் நிற்பானே அதுபோல, ஸ்ரீபாண்டுரங்கனும் தன் பக்தரின் அன்பு கட்டளையை ஏற்று செங்கல் மேல் ஏறி நின்றார். அதனால்தான் பாண்டுரங்கனுக்கு “விட்டல்” என்ற பெயரும் வந்தது. “விட்டல்” என்றால் செங்கல் என்ற பொருள் உண்டு.
இறைவன் நம்மை ஏதேனும் சமயம் தேடி வர காத்திருக்கிறார். அதனால் நாம் முழு மனதுடன் இறைவனை வணங்க வேண்டும்.
பெருமாளுடைய நாமத்தை உச்சரிக்க வேண்டும். அல்லது கேட்கவாவது வேண்டும். இதனால் நிச்சயம் ஒருநாள் ஸ்ரீமந் நாராயணன் ஏதேனும் ஒரு ரூபத்தில் நமக்கு உதவ வருவார். மந்த புத்திகாரர்களையும் அறிவாளியாக மாற்றுவார். தரித்திரவாதிகளையும் அதிர்ஷ்டகாரர்களாக மாற்றுவார் நம் ஸ்ரீமந்நாராயணன்.
“பாண்டுரங்க விட்டலா பண்டரிநாத விட்டலா
ஹர ஹர விட்டல பாண்டுரங்கா பாண்டுரங்கா
பண்டரிநாதா, ஜய ஜய விட்டல பாண்டுரங்கா!”
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved