வீட்டுக்கு மூட்டை மூட்டையாக பரிசுகளுடன் வந்த திருவாதவூரரை குடும்பத்தினரும், உறவினர்களும் வரவேற்று புகழ்ந்தார்கள்.
ஆனால் திருவாதவூரருக்கு நடப்பது கனவா – நிஜமா?. என்றே புரியவில்லை. “குதிரை வாங்குவதற்கு கொண்டு சென்ற பொருளை சிவாலய திருப்பணிளுக்குதானே செலவு செய்தோம். யார் இந்த குதிரை வீரர்கள்.? இவர்களை நாம் இதற்கு முன்னர் பார்த்தது கூட இல்லையே.? ஆனால் என்னை இதற்கு முன் சந்தித்தது போல பேசினார்களே.? ஏதோ ஒன்று நடக்கிறது. இது எங்கே போய் முடியுமோ?” என்று குழப்பத்தில் தனியாக சென்று ஒரு இடத்தில் அமர்ந்து சோமசுந்தர கடவுளை தியானித்தபடி இருந்தார் திருவாதவூரர்.
அன்று நள்ளிரவு. தூங்கி கொண்டிருந்த மதுரை மக்களை அதிர வைத்தது நரிகளின் ஊளை.
குதிரை இலாயத்தில் கட்டப்பட்டிருந்த அந்த புதிய குதிரைகள் அனைத்தும் நரிகளாக மாறியது. ஊளையிட்டபடி கயிறுகளை அறுத்தெரிந்தது. இலாயத்தில் இருந்த மற்ற நிஜ குதிரைகளை கடித்து தின்றது. நரிகளின் ஊளையை கேட்டு திடுகிட்டு விழித்த காவலர்கள், குதிரை இலாயத்தில் இருந்த புதிய குதிரைகள் ஒன்று கூட இல்லாமல், அவை அனைத்தும் நரிகளாக மாறி மற்ற குதிரைகளை கொன்று, அவற்றின் குடல்களை கடித்து தின்பதை கண்டு பதறினார்கள்.
காவலர்கள் அந்த நரிகளை விரட்ட, அவை அனைத்தும் சிதறி ஊளையிட்டபடி மதுரை நகரின் சாலைகளிலும், தெருக்களிலும் ஓடியது. வழியில் இருந்த ஆடு, மாடு, கோழிகளை கொன்று தின்றபடி அட்டகாசம் செய்தது. இந்த நள்ளிரவில் நரிகளின் ஊளையை கேட்ட மதுரை மக்கள் திடுகிட்டு விழித்தனர். பறவைகளும், காகங்களும் நரிகளின் ஊளையை கேட்டு, பயத்தில் அந்த இருளிலும் திசை தெரியாமல் பறந்தது.
தெருவில் உள்ள நாய்கள், நரிகளை கண்டதும் இவை எப்படி இங்கே வந்தது? இனி நமக்கு இங்கே இடமில்லையோ? என்று யோசித்தப்படி குரைத்துக் கொண்டே ஓடியது.
செந்தமிழ் இசையும், தெய்வ பாடல்களும், வேத மந்திரங்களும், புலவர்களின் கவிதைகளும், ஆடல் மங்கையரின் சலங்கை ஒலியும் கேட்ட கூடல் மாநகரில், நரிகளின் ஊளைகள் ஒலிப்பதை கேட்ட மதுரை மக்கள், ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என் பயந்து போனார்கள்.
மதுரை நகரையே அட்டகாசம் செய்த நரிகள், சில நிமிடங்களுக்கு பிறகு காட்டுக்குள் சென்று மறைந்தது.
மறுநாள்…. அரசவை அவசரமாக கூடியது. மதுரை நகரில் நடந்த அலங்கோலத்தை காவலர்களும், அதிகாரிகளும் பாண்டிய மன்னரிடம் விவரித்தார்கள். முதலமைச்சர் வாதவூரரையும் உடனே அழைத்து வந்தார்கள்.
நடந்தது ஏதும் அறியாமல் இருந்த வாதவூரரை கடுமையாக கண்டித்த மன்னர், மாயவித்தை செய்து நரிகளை குதிரைகளாக்கி அரசாங்கத்தை ஏமாற்றியதாக குற்றம் சுமத்தி தண்டனை வழங்கினார்.
காவலர்களும் வாதவூரரை அழைத்து சென்று கடும் வெயிலில் நிற்க வைத்தும், பெரிய கற்களை அவரை சுமக்க செய்தும் கொடுமை செய்தார்கள். இவையாவும் இறைவன் செயலே என்று உணர்ந்த வாதவூரர் “நமசிவாய” என்று மந்திரத்தை மனதினுள் உச்சரித்தபடி தண்டனை ஏற்று நடந்தார். பாண்டிய மன்னர் தம் தொண்டனுக்கு தரும் தொல்லைகளை இனியும் பொறுப்பதற்கில்லை என நினைத்த இறைவன், வைகையாறை பெருக்கெடுத்து ஒட செய்தார். நரிகளால் ஏற்பட்ட சேதங்களை கூட சமாளித்து விடலாம். ஆனால் வெள்ளத்தால் உண்டாகும் சேதத்தை சமாளிக்க முடியுமா.? மதுரையே வெள்ளத்தில் முழ்கும் நிலை உண்டானது. வீடுகள் இடிந்து தடைமட்டமானது.
“நரிகளை பரிகளாக்கிய சிவதொண்டரான திருவாதவூரரை நாம் தண்டிப்பதால் உண்டான தெய்வ குற்றம் இதுவோ? என்று நினைத்தார் பாண்டிய மன்னர்.
வாதவூரரை தண்டித்து சித்ரவதை செய்த காவலர்களின் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. காவலர்கள் அனைவரும் தங்கள் குடும்பம் என்ன ஆனதோ என்று அஞ்சி நடுங்கி தேடி ஓடினார்கள். இதுவும் சிவசெயலே என்று உணர்ந்து, பாண்டிய மன்னரே சட்டவிதிபடி விடுதலை செய்கின்றவரை வீடு திரும்புவதில்லை என்று அமைதியாக சிவபெருமானை நினைத்து சிறைச்சாலையிலேயே இருந்தார் திருவாதவூரர்.
புது பிரச்னை உண்டானால் பழைய பிரச்னை மறந்துவிடும் அல்லவா.? அதன்படி திருவாதவூரர் பிரச்னையை மறந்து தன் நாட்டு மக்களை காப்பாற்றும் ஆலோசனையில் ஈடுப்பட்டார் பாண்டிய மன்னர். எத்தனை ஆயிரம் பணியாளர்களை நியமித்தாலும் வைகை ஆற்றின் வெள்ளத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. இதனால், “வைகை ஆற்றின் கரையை உயர்த்தி கட்டும் பொறுப்பு, ஒவ்வொரு மதுரை குடிமக்களுக்கும் உண்டு. அதனால் வீட்டுக்கு ஒருவர் வந்து கரையை உயர்த்தி கட்டுகிற பணியில் வந்து சேர வேண்டும்.என்று மன்னர் உத்தரவிட்டார்.
மக்களும் வேறு வழியில் இல்லாமல் அதனை ஏற்று, வீட்டுக்கு ஒருவர் விதம் வந்து பணியில் ஈடுப்பட்டார்கள். அந்த சமயம் மதுரை நகரில், “வந்தி” என்கிற வயது முதிர்ந்த பெண் ஒருவர் இருந்தார். அவருக்கு வாரிசுகளும் இல்லை, குடும்பமும் இல்லை. பிட்டு செய்து முதலில் அதனை சிவபெருமானுக்கு படைத்து, பிறகு விற்பனை செய்து தன் வாழ்நாளை ஓட்டி வந்தார். வயது முதிர்ந்த காரணத்தால் அவளால் மன்னர் இட்ட கட்டளையை செய்ய முடியாது. ஆனாலும் தம் சொந்த நாட்டின் போதாத காலத்தை கண்டு துயரம் அடைந்த வந்தி, தன்னால் எந்த உதவியும் தன் நாட்டுக்காக செய்ய முடியவில்லையே என் நினைத்து, சிவபெருமானை வழிப்பட்டு அழுதாள்.
பிட்டுக்கு மண் சுமந்த இறைவன்
அப்போது அவள் வீட்டு வாசலில் ஒரு இளைஞன் வந்து குரல் கொடுத்தான்.
“பாட்டி…?”
அரசாங்கத்தின் காவலர்கள் வந்துவிட்டார்கள் என்று நினைத்து அவசர அவசரமாக வெளியே வந்து பார்த்தாள். ஒரு இளைஞன் நின்றிருந்தான்.
“யாரப்பா நீ?” என்றாள் வந்தி.
“பாட்டி.. நான் ஒரு நடோடி. சில நாட்களாக இந்த ஊரில்தான் இருக்கிறேன். தினமும் உன்னிடம்தான் பிட்டு வாங்கி சாப்பிடுவேன். இன்று உன்னை காணவில்லை. அதனால்தான் உன் வீடு தேடியே வந்துவிட்டேன்.” என்றான் இளைஞன்.
“அடபோபா..நானே வருத்ததில் இருக்கிறேன்.” என்றாள் வந்தி. என்ன வருத்தம் என்ற கேட்ட இளைஞனிடம் தன் நிலையை சொன்ன வந்தி, நீயும் சென்று மன்னரிடம் கட்டளையை ஏற்று வேலையை செய்.” என்றாள் வந்தி.
“அடபோ பாட்டி. இது உங்க ஊரு, உங்க பிரச்னை. நான் நாடோடி எனக்கென்ன.?” என்றான் இளைஞன். அப்படியென்றால் உனக்கு பிட்டு கிடையாது என்றாள் வந்தி.
“சரி பாட்டி. உனக்காக பிட்டுக்கு மண் சுமக்கிறேன்.” என்ற இளைஞன், பாட்டியிடம் இருந்து பிட்டு வாங்கிக் கொண்டு பணி நடக்கும் இடத்துக்கு அவளுடன் வந்து, அங்குள்ள அதிகாரிகளிடம், “வந்தியின் சார்பாக வந்துள்ளதாக” சொன்னான். அரசு அதிகாரிகளும் அந்த இளைஞனுக்குரிய பகுதியை ஒதுக்கி பணி செய்யும்படி உத்தரவிட்டார்கள். வந்தியும் நிம்மதியாக சென்றுவிட்டாள்.
ஆனால் அந்த இளைஞனோ வேலை எதுவும் செய்யாமல் ஒரு ஓரமாக அமர்ந்து வந்தி தந்த பிட்டை ருசித்து சாப்பிட்டான். அவன் செயலை அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். அந்த இளைஞனும் வேலை செய்து கொண்டிருப்பவர்களை பார்த்து சிரித்து வேடிக்கை பார்த்துக் கொண்டே சாப்பிட்டான். பிறகு அங்கேயே நன்றாக தூங்கினான்.
மாலையில் பாண்டிய நாட்டின் காவலர்கள், வெள்ளம் வரக்கூடிய எல்லா பகுதிகளும் அடைக்கப்பட்டு கரை உயர்ந்து உள்ளதா என்று சரி பார்த்தபோது, அனைத்தும் வேலைகளும் சரியாக முடிக்கப்பட்டு இருந்தது. வந்தியின் பங்கை தவிர.
அந்த சமயம் பாண்டிய மன்னரும் வந்துவிட்டார். அவரிடம் சென்று, “வந்தியின் பங்கில் மட்டும் வேலை நடக்கவில்லை.“ என்றார்கள்.
இதனால் பாண்டிய மன்னர் அந்த பகுதியை சென்று பார்த்து கோபம் அடைந்தார். “வந்தியின் சார்பாக வந்த கூலியாள் யார்.?“ என்று கேட்க, அந்த இளைஞனை காவலர்கள் கையை பிடித்து இழுத்து வந்தார்கள்.
அந்த இளைஞனின் தலையில் கூடை நிறைய மண். அவனை பார்த்த பாண்டிய மன்னர், “ இந்த வேலையை கூட செய்ய தெரியாதா.?“ என்றபடி தன் அருகில் இருந்த காவலரிடம் இருந்து பிரம்பை பிடுங்கி, அந்த இளைஞனின் முதுகில் ஓங்கி அடித்தார். அந்த பிரம்படி, மன்னரின் முதுகிலும், அங்கிருந்த அனைவரின் முதுகிலும், மற்ற எல்லா உயிரினத்திலும், இந்திரன் போன்ற தேவலோகத்தினர் மீதும் விழுந்தது.
அந்த இளைஞன் சட்டென்று தன் தலையில் இருந்த கூடையில் இருந்து மண்ணை கொட்டி மறைந்தான். உடனே அணையின் உடைப்பு ஒரே கூடை மண்ணில் அடைத்தது.
“என்ன இது விபரீதம்?“ என்று மன்னர் திகைக்க, வானில் ரிஷப வாகனத்தில் சிவசக்தி சமேதராக சிவபெருமான் தோன்றி,
“அரிமருத்தன பாண்டியா…நடந்தவை யாவும் நம் திருவிளையாடலே. திருவாதவூரர் நம் திருத்தொண்டர். அவன் பெருமை உணர்த்தவே இத்திருவிளையாடல் செய்தோம். நம் திருவாதவூரருக்கு பெருமை செய். உன் ஆட்சியும், உன் புகழும் உலகம் உள்ளவரை போற்றப்படும்.“ என்று ஆசி கூறி அருளினார் ஈசன்.
திருவாதவூரர், பிறகு சிதம்பரத்தில் திருவாசகம் இயற்றி, “மாணிக்கவாசகர்“ என்று இறைவனால் பெயர் சூட்டப்பட்டு உலகபுகழ் அடைந்து, இன்றுவரை திருவாசகம் வழியாக நம்முடன் வாழ்கிறார்.
சர்வேஸ்வரனை வணங்கினால் பாதகமும் சாதகமாக மாறும். நன்மைகள் நம்மை வந்தடையும். மாணிக்கவாசகரை போல் ஆழ்ந்த நம்பிக்கையும், பொறுமையும் இருந்தால் இறைவனின் ஆசியை பரிபூரணமாக பெறுவோம். சுபிக்ஷமாக வாழ்வோம்.
தமிழ் – ஆங்கில இணையதள பத்திரிக்கையான நமது பக்திபிளானட்.காம், வளரும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்தவும், புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு அறிமுக மேடையாகவும் இருந்து வாய்ப்பு தருகிறது. கதை, கவிதை, கட்டுரை போன்ற உங்கள் படைப்புகள் பக்திபிளானட்.காம் இணையதளத்தில் பிரசுரமாக விரும்பினால் editor@bhakthiplanet.com க்கு அனுப்புங்கள். படைப்புகள் தமிழில் மட்டுமே அனுப்ப வேண்டும். ஏற்கெனவே பிரசுரமாகியிருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புகளை திருத்தவோ, சுருக்கவோ ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு.