சர்வேஸ்வரனை நம்பினால் சர்வலோகமும் அடிமை-பகுதி -2
சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
நிரஞ்சனா
வாதவூரடிகள், தாம் படும் துன்பத்தைவிட இறைவனின் சொல் பொய்யாகுமோ? அவ்வாறு ஆகாது. என்று நம்பிக்கையுடன், “திருப்பெருந்துறையில் உறையும் பெருமானே, திருவாலவாயில் உறையும் சிந்தாமணியே, இச்சிறியேற்கு இரங்கிக் கருணை புரியாயோ, ஊரார் உன்னை நகைத்தலை நினைக்க வில்லையோ, உன் அடிமை நான் துன்பத்தில் இருக்கிறேன். இதை அறிந்தும் வராமல் இருப்பாயோ.” என்று வேண்டினார்.
அன்று ஆவணி மூல நட்சத்திரம். சிவபெருமான், நந்தி தேவரையும், சிவகணங்களையும் அழைத்தார்.
“பாண்டிய மன்னன் கடும் கோபத்தில் இருக்கிறான். நாம் இனியும் வாதவூரனை சோதிக்க வேண்டாம். காட்டில் திரியும் நரிகளை குதிரைகளாக மாற்றி, நீங்கள் அவற்றை செலுத்தும் வீரர்களாக மாறி முன் செல்லுங்கள். நாம் ஒரு குதிரை வீரானாக வருவோம்.” என்று உரைக்க, நந்தியம் பெருமானும், சிவகணங்களும் காட்டில் திரிந்த நரிகளை பிடித்து குதிரைகளாக மாற்றினர். அவர்களும் குதிரை வீரர்களாக மாறினர். சிவபெருமான் ஒரு குதிரை வீரனாக தலைமை ஏற்று புறப்பட்டார். குதிரைகளை புயல் வேகத்தில் செலுத்தி பாண்டிய நாடு நோக்கி விரைந்தார்கள்.
எண்ணற்ற குதிரைகளில் அதன் வீரர்கள் பாண்டிய நாட்டை நோக்கி வருகிறார்கள் என்கிற செய்தி வாதவூரருக்கு சொல்லப்பட்டது. அவர் மிகவும் நிம்மதி அடைந்தார். அதற்குள் இச்செய்தி மன்னருக்கும் எட்டியது. அந்த குதிரை வீரர்களை வரவேற்க அரண்மனையின் முன்னே பிரமாண்ட மேடை அமைத்து, அதில் அழகியதோர் சிம்மாசனமும் அமைத்து, அதில் அமர்ந்திருந்தார் பாண்டிய மன்னர். வாதவூரரையும் அழைத்து பேசி மகிழ்ந்தார். குதிரைகள் விரைந்து வரும் ஓசைகள் கேட்டுக் கொண்டிருந்தது. மன்னவரும் மற்றவர்களும் காத்திருந்தனர்.
ஆனால் இறைவன் மீண்டும் விளையாடினான். ஆம், சற்று நேரத்தில் கேட்டுக் கொண்டிருந்த குதிரைகள் விரைந்து வரும் ஓசை மறைந்தது. குதிரைகள் எதுவும் வருவதாக இல்லை. இதனால் மன்னரும் மற்றவர்களும் ஏமாற்றம் அடைந்தார்கள். குதிரைகள் வருவதாக தகவல் சொன்ன காவலர்களை அழைத்து விசாரித்தார் பாண்டிய மன்னர்.
குதிரைகள் வரும் ஓசையை கேட்டு, தூரத்தில் குதிரைகள் வருவது போலவே இருந்தது எனவும், அதனால்தான் மன்னருக்கு தெரிவித்ததாக காவலர்கள் சொன்னார்கள். வாதவூரர் ஏதோ ஏமாற்று வேலை செய்கிறார் என்று மன்னர் மீண்டும் கோபம் அடைய, காவலர்கள் வாதவூரரை மீண்டும் தண்டிக்க அவரை பிடித்தார்கள்.
இதனால் பெரும் துன்பம் அடைந்த திருவாதவூரர், இறைவனை நினைத்து.“ இறைவா… என் மீது உனக்கு கருணை இல்லையோ.? என்ன இது விளையாட்டு.? உன் அடியவன் படும் துயரம் உனக்கு இன்பம் தருமோ.? என் உயிர் பிரிவதை பற்றி எனக்கு கவலையில்லை. நீ உன் அடியவருக்கு துணை இருக்க மாட்டாய் என்று உலகம் பேசுவதை நீ விரும்புகிறாயா.? அஞ்சாதே நான் இருக்கிறேன் என்று சொல்ல மாட்டாயா.?” என்று கலங்கி வேண்ட, மீண்டும் குதிரைகள் சீறி பாய்ந்து வரும் ஓசை கேட்டது. அந்த குதிரைகளின் ஓசைகளால் விண்ணும் மண்ணும் அதிர்ந்தது. பாண்டிய மன்னன் அந்த நிமிடம் திடுகிட்டு போனார். புழுதி பறக்க எண்ணில் அடங்கா குதிரைகளும் அவற்றின் வீரர்களும் விரைந்து வந்து நின்றார்கள்.
மிகவும் மகிழ்ந்த பாண்டிய மன்னர், ”உங்களின் தலைமை யார்.?” என்று வினவ, “பாண்டிய மன்னரே… குதிரைகளின் சிறப்பை முதலில் பாருங்கள்.” என்று குதிரையை இறைவன் செலுத்த, அது வீரரின் கட்டளையை ஏற்று பல வித்தைகளை காட்டியது. அந்த குதிரையை போலவே மற்ற வீரர்களும் தங்கள் குதிரைகளை தங்கள் சொல்லுக்கு கட்டுப்பட சொல்லி வியக்க வைத்தார்கள். இது போன்ற சிறப்பான குதிரைகளை பாண்டிய மன்னர் தம் வாழ்நாளில் இதுவரை கண்டதில்லை. அதிசயத்து போனார்.
“அருமை அருமை. நல்லது. உங்களின் தலைமை யார்.?” என்று மீண்டும் கேட்க,
“யாவருக்கும் தலைவர் இவரே.” என்று மற்ற வீரர்கள் தலைமை வீரர் உருவில் இருந்த இறைவனை காட்டினார்கள். பாண்டிய மன்னரும் வீரர்கள் சுட்டிக்காட்டிய தலைமை வீரரை பார்த்தார். அப்போது மன்னர் தம்மை மறந்து சிம்மாசனத்தில் இருந்து எழுந்து, தம் தலைக்கு மேல் இருகரம் கூப்பி கும்பிட்டு வணங்கினார். ஒரு குதிரை வீரனை நம் மன்னர் கும்பிட்டு வணங்குகிறாரே என்று மற்றவர்கள் நினைக்க, மன்னரும், “ஒரு குதிரை வீரனையா கும்பிட்டோம்.?” என்று நினைத்து சட்டென்று சிம்மாசனத்தில் அமர்ந்தார்.
“பாண்டிய மன்னரே. உங்கள் முதலமைச்சர் வாதவூரர் எங்களிடம் பெரும் பொருள் தந்து குதிரைகளை வாங்கி உள்ளார். எங்களுக்கும் பல சிறப்புகளை செய்தார். நாங்களும் அந்த பொருளின் மதிப்பை அறிந்து அவ்வாறே அனைத்து லட்சணங்களும் பொருந்திய உலகின் மிக சிறந்த குதிரைகளை பாண்டிய நாட்டுக்கு தருகிறோம். இவை நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, இவை எங்கிருக்கிறதோ அந்த நாடு அஷ்டஐஸ்வர்யங்களுடன் திகழும்.
இந்த குதிரை நாங்கள் அப்போதே வாதவூரரிடம் ஒப்படைத்து இருப்போம். ஆனால் நாங்கள் குதிரை விற்பனை செய்யும் விதிமுறைபடி, குதிரைகளை யாருக்காக வாங்குகிறார்களோ அவர்களிடமே கயிறு மாற்றி தர வேண்டும் என்பது விதி. ஆகவே பாண்டிய மன்னருக்காக வாங்குவதை உங்களிடமே கயிறு மாற்றி தருவதற்கு நாங்கள் வந்தோம்.” என்று சொல்லி குதிரைகளின் சிறப்புகளை இன்னும் பல சொன்னார் வீரனாக வந்திருந்த சோமசுந்தர கடவுள்.
எத்தனை குதிரைகள் இருக்கிறது என்று பார்க்க பாண்டிய மன்னர் மேடையில் இருந்து இறங்கி பார்த்தார். அவர் பார்க்கும் இடங்கலெல்லாம் குதிரைகளாக தெரியும்படி செய்தார் இறைவன். ஒரு குதிரைக்கு பூஜை செய்து கும்பிட்டு கயிறு மாற்றி வாங்கினார் பாண்டிய மன்னர்.
பிறகு ஒவ்வொரு வீரர்களுக்கும் பரிசுகள் – பட்டாடைகள் தந்து அனுப்பினார் மன்னர். அவர்கள் சென்றுவிட்டார்கள்.
வாதவூரரை அரண்மனைக்கு அழைத்து சென்ற பாண்டிய மன்னர், அவருக்கு விருந்து தந்து, விலை மதிக்கமுடியாத பொன்-பொருள் பரிசுகள் தந்து, இராஜமரியாதையுடன் வழியனுப்பி வைத்தார்.
வீட்டுக்கு மூட்டை மூட்டையாக பரிசுகளுடன் வந்த திருவாதவூரரை குடும்பத்தினரும், உறவினர்களும் வரவேற்று புகழ்ந்தார்கள்.
ஆனால் திருவாதவூரருக்கு நடப்பது கனவா – நிஜமா?. என்றே புரியவில்லை. “குதிரை வாங்குவதற்கு கொண்டு சென்ற பொருளை சிவாலய திருப்பணிளுக்குதானே செலவு செய்தோம். யார் இந்த குதிரை வீரர்கள்.? இவர்களை நாம் இதற்கு முன்னர் பார்த்தது கூட இல்லையே.? ஆனால் என்னை இதற்கு முன் சந்தித்தது போல பேசினார்களே.? ஏதோ ஒன்று நடக்கிறது. இது எங்கே போய் முடியுமோ?” என்று குழப்பத்தில் தனியாக சென்று ஒரு இடத்தில் அமர்ந்து சோமசுந்தர கடவுளை தியானித்தபடி இருந்தார் திருவாதவூரர்.
அன்று நள்ளிரவு. தூங்கி கொண்டிருந்த மதுரை மக்களை அதிர வைத்தது நரிகளின் ஊளை.
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved
தமிழ் – ஆங்கில இணையதள பத்திரிக்கையான நமது பக்திபிளானட்.காம், வளரும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்தவும், புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு அறிமுக மேடையாகவும் இருந்து வாய்ப்பு தருகிறது. கதை, கவிதை, கட்டுரை போன்ற உங்கள் படைப்புகள் பக்திபிளானட்.காம் இணையதளத்தில் பிரசுரமாக விரும்பினால் editor@bhakthiplanet.com க்கு அனுப்புங்கள். படைப்புகள் தமிழில் மட்டுமே அனுப்ப வேண்டும். ஏற்கெனவே பிரசுரமாகியிருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புகளை திருத்தவோ, சுருக்கவோ ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு.