சர்வேஸ்வரனை நம்பினால் சர்வலோகமும் அடிமை பகுதி-1
நிரஞ்சனா
வைகையாற்றின் கரையில் விளங்கும் ஊர் திருவாதவூர். இங்கு ஆமாத்தியர் எனும் அந்தணர் குலத்தில் பிறந்தவர் வாதவூரடிகள். இவர் சிறந்த சிவபக்தர். இவருடைய நல்லறிவு, திறமை, சொல்லாற்றல், கல்வி அறிவு, நற்பெயர், புகழ் ஆகியவற்றை கேள்விபட்ட பாண்டிய மன்னரான அரிமருத்தன பாண்டியன், வாதவூரடிகளை அழைத்து அவரின் அறிவை திறனை சோதித்து ஆச்சரியம் அடைந்தார். மநுசாத்திரப் புலமை வாய்ந்தவராகவும், தனுர் வேதச் சிறப்பும் கொண்டவராகவும் திகழ்ந்தார் வாதவூரடிகள். அதனால் வாதவூரடிகளை “திருவாதவூரர்” என்று அழைத்து, பாண்டிய நாட்டின் முதலமைச்சர் என்கிற பதவியும் தந்து சிறப்பித்தார்.
முதலமைச்சர் திருவாதவூரரும் அரசர் கொடுத்த பணியை சிறப்பாக செய்து வந்தார்.
ஒருநாள் பாண்டிய நாட்டின் குதிரை படை தலைவன், மன்னரை சந்தித்து, “அரசே, நம்முடைய சில குதிரைகள் இறந்தும், சில குதிரைகள் நோய்வாய்ப்பட்டும், சில குதிரைகளுக்கு வயது முதிர்ச்சியும் ஆனதால், தற்போது குதிரை படைக்கு வலிமையான குதிரைகள் குறைவாக உள்ளது“ என்றார்.
இதை கேட்ட அரிமருத்தன பாண்டியன், முதலமைச்சர் திருவாதவூரரை பார்த்து, “நம்முடைய கருவூலத்தில் இருந்து தேவையான பொருள்களை எடுத்துக்கொண்டு நல்ல குதிரைகளை வாங்கி வாருங்கள்.” என்று திருவாதவூரருக்கு கட்டளையிட்டார்.
திருவிளையாடல் ஆரம்பம்.
பாண்டிய மன்னரின் உத்தரவுக்கு இணங்க, தேவையான செல்வங்களை எடுத்துக்கொண்டு, ஒரு ஒட்டகத்தில் அந்த செல்வங்களை முடித்து முன்னே அனுப்பி, சோமசுந்தர இறைவனை வணங்கி புறப்பட கோயிலுக்கு வந்து திருநீறு பெற்று திருப்பெருந்துறைக்கு வந்தார். அங்குள்ள சிவாலயத்திற்கு சென்றார். அங்கே சிவபெருமான், ஓர் அந்தண குருவாக சீடர்களுடன் எழுந்தருளி இருந்தார்.
அந்த சிவாலயத்திற்கு வந்திருந்த வாதவூரர், சிவபெருமானை தரிசித்தார். அங்கே வேத சாஸ்திரங்களும், புராணம் சொல்கிற நிகழ்ச்சியும் நடந்துக்கொண்டு இருந்தது. அதனை சிவபெருமானே குருவாக அவ்வாலயத்தின் தலவிருட்சத்தின் அடியில் உபதேசித்து கொண்டிருந்தார். வாதவூரர் அந்தணரிடம் ஆசி பெற அருகில் சென்றார். அந்தணரும் ஆசி வழங்கினார். அங்கே குருவாக உபதேசிக்கும் அந்தணரின் உபதேசங்களை கேட்ட திருவாதவூரர், அந்த உபதேசங்களில் மெய் மறந்தார். வேத ஆகம உப நிடதப் பொருள்களைக் கொண்ட திருவருட் பாடல்களைப் பாடி, தாம் குதிரைகள் வாங்குவதற்கு கொண்டு வந்திருந்த பொருட்செல்வங்களை, சிவாலய திருப்பணிக்கும் – சிவனடியார் பெருமக்களுக்கும் செலவிட்டார்.
இப்போது குதிரை வாங்க கையில் சுத்தமாக எந்த பொருளும் இல்லை. “பாண்டிய மன்னர் தந்தனுப்பிய பொருள்களை கொண்டு குதிரைகள் வாங்காமல், சிவலாய திருப்பணிகளுக்கு செலவு செய்துவிட்டார் முதலமைச்சர் திருவாதவூரர்.” என்கிற செய்தி பாண்டிய மன்னருக்கு சொல்லிவிட்டார்கள்.
பாண்டிய மன்னரின் கோபம்
முதலமைச்சர் திருவாதவூரரின் செயலை அறிந்த மன்னர் அரிமருத்தன பாண்டியன், கடும் கோபம் கொண்டார். “வாங்கிய குதிரைகளுடன் உடனே பாண்டிய நாடு திரும்புக.” என்று ஓலை அனுப்பினார். அதனை படித்த வாதவூரடிகளுக்கு என்ன செய்வதென்ற விளங்கவில்லை. மனம் கலங்கினார். சிவாலயத்திற்கு விரைந்தோடி வந்து இறைவனை வணங்கி, “ இறைவா…இது என்ன சோதனை.? குதிரைகள் வாங்க பொருள் இல்லையே. மன்னருக்கு என்ன பதில் சொல்வேன்.” என்று கலங்கி வேண்டினார்.
அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. “கவலை வேண்டாம். பாண்டிய நாடு திரும்பு. மன்னரை சந்தித்து குதிரைகள் வந்துவிடும் என்று சொல். நாம் குதிரைகளுடன் வருவோம்.” என்று இறைவன் அசரீரியாக சொன்னார்.
மதுரை திரும்பிய முதலமைச்சர், மன்னர் அரிமருத்தன பாண்டியனை சந்தித்தார். உடனே மன்னர், ”நம் கருவூலத்தில் இருந்து எவ்வளவு பொருள் கொண்டு சென்றீர்கள். எவ்வளவு குதிரைகள் வாங்கினீர்கள்.?” என்று கணக்கு கேட்டார்.
அதற்கு திருவாதவூரர், “கருவூலத்தில் இருந்து கொண்டு சென்ற பொருளும், அதில் வாங்கிய தரமான குதிரைகளை பற்றிய கணக்கும் நாளை குதிரைகள் வந்த உடன் தருவதாகவும், தரமான குதிரைகளையே தேர்தெடுத்து உள்ளதாகவும், அவை நாளை மதுரை வந்துவிடும்.” என்றும் சொல்லிவிட்டார்.
இதனால் மகிழ்ந்த மன்னர், வாதவூரருக்கு பரிசுகளை வழங்கி அனுப்பினார்.
வீடு திரும்பிய வாதவூரரை உறவினர்கள் சூழ்ந்து அறிவுரைகளை சொன்னார்கள். “நாளை குதிரைகள் வரவில்லை என்றால் அதோடு உன்னை தொலைத்துவிடுவார் பாண்டிய மன்னர்.” என்று பயமுறுத்தினார்கள்.
சோமசுந்தரர் கோயிலுக்கு வந்தார் வாதவூரர். விநாயகப் பெருமானையும், இறைவனையும் வணங்கி நின்றார். அப்போது மீண்டும் அசரீரி ஒலித்தது.
“கலங்காதே. சொன்னபடி குதிரைகளுடன் வருவோம்.”
அந்த அசரீரியை கேட்ட திருவாதவூரர் தெளிவு பெற்று வீடு திரும்பினார்.
மறுநாள் குதிரைகள் வரவில்லை.
மூன்று நாட்கள் ஆகியும் குதிரைகள் வரவில்லை. பாண்டிய மன்னர் கடும் கோபம் அடைந்தார். அதிகாரிகளை அழைத்து, “கருவூலத்தில் இருந்து முதலமைச்சர் வாதவூரர் எடுத்து சென்ற பொருள் எவ்வளவு? என்பதை கணக்கு பார்த்து, அதனை வாதவூரரிடம் திரும்ப பெற்று, தண்டனையும் வழங்குக.” என்று உத்தரவிட்டார்.”
அரசகட்டளைக்கு பணிந்து விரைந்த காவலர்கள், வாதவூரரை கைது செய்து, கடும் வெயிலில் நிற்க வைத்து, அவர் தலையில் பெரிய கல்லை சுமக்க வைத்தார்கள். நேரம் ஆக ஆக மேலும் மேலும் கொடுமையான தண்டனைகளை தொடர்ந்து வந்தார்கள். அந்த கொடுமையான தண்டனைகளை காண சகிக்காத கதிரவன், மேற்கில் மறைந்து, பாண்டிய நாட்டில் இருளை நிரப்பினான்.
வாதவூரடிகள் தாம் படும் துன்பத்தைவிட இறைவனின் சொல் பொய்யாகுமோ? அவ்வாறு ஆகாது. என்று நம்பிக்கையுடன், “திருப்பெருந்துறையில் உறையும் பெருமானே, திருவாலவாயில் உறையும் சிந்தாமணியே, இச்சிறியேற்கு இரங்கிக் கருணை புரியாயோ, ஊரார் உன்னை நகைத்தலை நினைக்க வில்லையோ, உன் அடிமை நான் துன்பத்தில் இருக்கிறேன். இதை அறிந்தும் வராமல் இருப்பாயோ.” என்று வேண்டினார்.
அன்று ஆவணி மூல நட்சத்திரம். சிவபெருமான், நந்தி தேவரையும், சிவகணங்களையும் அழைத்தார்.
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved
தமிழ் – ஆங்கில இணையதள பத்திரிக்கையான நமது பக்திபிளானட்.காம், வளரும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்தவும், புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு அறிமுக மேடையாகவும் இருந்து வாய்ப்பு தருகிறது. கதை, கவிதை, கட்டுரை போன்ற உங்கள் படைப்புகள் பக்திபிளானட்.காம் இணையதளத்தில் பிரசுரமாக விரும்பினால் editor@bhakthiplanet.com க்கு அனுப்புங்கள். படைப்புகள் தமிழில் மட்டுமே அனுப்ப வேண்டும். ஏற்கெனவே பிரசுரமாகியிருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புகளை திருத்தவோ, சுருக்கவோ ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு.