Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

கண்ணப்ப நாயனார்




அறுபத்து மூவர் வரலாறு

பகுதி – 14

சென்ற பகுதியை படிக்க…  

நிரஞ்சனா

குண்டக்கல் அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள இராசம் பேட்டைக்கு அருகில் உள்ளது உடுக்கூர். இது முன்னொரு காலத்தில் உடுப்பூர் என்று அழைக்கப்பட்டது. இந்த ஊரில் பிறந்தவர் நாகன். இவர் வேடவர்களுக்கு தலைவர். இவருடைய மனைவி பெயர் தத்தை. வேடவர் குலத்தில் பிறந்தவளான இவளிடத்தில் தைரியம் அதிகமாகவே திகழ்ந்தது. தத்தை நடந்து வந்தால் சிங்கம் நடந்து வருவது போல் இருக்குமாம். அந்த அளவில் வீர நடையில் வருவாள். கணவருக்கு ஏற்ற மனைவி என்று காண்போர் அனைவரும் போற்றும்படியான நல்ல குணமும் கொண்டவள் தத்தை.

நாகன் – தத்தையின் ஒற்றுமையை கண்டு, சிவ-சக்தி என்றும் ஊர்மக்கள் புகழ்வதும் உண்டு.

நாகன் வேடவர்களுக்கு அரசராக இருந்தார். பல வசதிகள் இருந்தும் குழந்தை செல்வம் இல்லையே என்று வருந்தினார்கள் இந்த தம்பதியினர்.

“வயதும் கூடி கொண்டே போகிறது. இனி உங்களுக்கு பிள்ளை பிறக்காது. அதனால் ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளுங்கள்  என்றார்கள் உறவினர்கள். “தத்து  எடுப்பது பற்றி எங்களுக்கு பிரச்னையில்லை. ஆனால் அந்த குழந்தை வளர்ந்து பெரியவனான பிறகு, நீங்கள் என்னை பெற்றவர்கள் இல்லை என்கிறார்களே என்று அந்த பிள்ளை கூறிவிட்டால், அந்த துன்பம் தரும் சொல்லை எங்களால் தாங்க முடியாது. பாசத்தை கொட்டி வளர்த்து கவலையை பெறுவதை விட, பிள்ளை இல்லா குறையோடு இறந்து போவது நல்லது.” என்றாள் தத்தை.

இதை கேட்ட பெரியவர் ஒருவர், “நீங்கள் முருகப் பெருமானை வணங்குங்கள். உங்களுக்கு பிள்ளை பிறப்பான். சஷ்டியில் விரதம் இருந்தால், நிச்சயம் உன் வயிற்றில் பிள்ளை பிறப்பான். அத்துடன் முருகப்பெருமான் நம் வேடவர் குலத்தில் பிறந்த பெண்ணைதான் மணந்தார். அதனால் முருகனும் நமது உறவினர்தான். நம் உறவினரான முருகன், நமக்கு உதவாமல் வேறு யாருக்கு உதவ போகிறார்.?” என்றார் தத்தையிடம் அந்த பெரியவர்.

பெரியவர் சொன்னதை இறைவனின் அருள்வாக்காக எண்ணி, “உடனே முருகப்பெருமானை வழிபட ஏற்பாடு செய்யுங்கள்.” என்றாள் தன் கணவரிடம் தத்தை.

நாகனும், தத்தையும் முருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று முருகனை வணங்கி, சேவல் – மயிலை கோவிலுக்கு காணிக்கையாக தந்தார்கள். கோவிலை மலர்களால் அலங்கரித்தார்கள். மிகபெரிய திருவிழாவே நடத்தினார்கள். என்னென்ன அபிஷேகங்கள் உள்ளனவோ அவ்வனைத்தையும் விடிய விடிய முருகப்பெருமானுக்கு செய்தார்கள். 

தாயானாள் தத்தை  

முருகப்பெருமானின் கருணை கிடைத்தது. தத்தை சில நாட்களிலேயே கருவுற்றாள். பத்தாவது மாதத்தில் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.

கருப்பு நிறத்தை விரும்பாதவர் கூட கண்ணன் பிறந்ததும் அவன் கருப்பு முகமும் தெய்வீக அழகு என்று போற்றியது போல, தத்தை பெற்ற குழந்தையும் கருப்பாக இருந்தாலும் கலையாக இருந்தான். நம் நாட்டுக்கு இளவரசன் பிறந்துவிட்டான் என்று மக்கள் கொண்டாடினார்கள். தனக்கு வாரிசு பிறந்துவிட்டான் என்று தந்தையான நாகன் மகிழ்ந்தார். தங்கள் குழந்தைக்கு “திண்ணன்” என்று பெயர் சூட்டினார்கள்.

குழந்தை பிறக்காதா என்று ஏங்கிய தம்பதிகளுக்கு வாரிசு பிறந்ததால் கோலகலமாக விழா எடுத்தார்கள். திண்ணனின், குறும்பும் சுறுசுறுப்பும் அனைவரையும் கவர்ந்தது. தனக்கு பிறகு நாட்டை ஆளப்போகும் திண்ணன், வேட்டையாடும் கலையை கற்கவேண்டும் என்று விரும்பினார் நாகன்.

திண்ணன் நாட்டை ஆள பிறந்தவன் இல்லை. உலகை ஆளப் பிறந்தவன். எந்நாட்டவருக்கும் இறைவனான ஈசனுக்கு பிரியமானவன் என்று உலகமே போற்றி வணங்கும் நாயன்மார்களில் ஒருவராக திகழ போகிறார் என்பதை அறியாமல், வேட்டையாடும் கலையை கற்று கொள் என்றார் நாகன்.

அப்படி கற்று கொண்டால்தான் எனக்கு பிறகு நீ சிம்மாசனத்தில் அமர்ந்து ராஜ்யத்தை ஆள முடியும் என்றார் நாகன்.

மிருகத்தை வேட்டையாட சென்ற இடத்தில், திண்ணனின் மனதை வேட்டையாடினார் ஒருவர்.

இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்.

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும் 

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள் 

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

 

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »