Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

வெற்றி தரும் ஹயகிரீவர்




நிரஞ்சனா

 சும்மா இருப்பது நல்லதென இருந்தாலும், யாராவது வம்பாய் வருவதும் உண்டு. நரி தந்திரத்துடன் செயல்படும் தீய குணத்தவர்களிடம் சிக்கி அவதிப்பட்டவர்கள் – இன்னல்படுபவர்கள் பலருண்டு. அப்படி அவதிப்பட்டவர்களில் ஒருவராக இருந்தவர் விஷ்ணுபகவான்.

ஆம். அசுரர்கள், தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தார்கள். அவர்களை காக்க விஷ்ணுபகவான், அசுரர்களுடன் போர் செய்தார். அந்த போர் பல வருடங்கள் தொடர்ந்து நீடித்தது. இதனால் சோர்வுற்ற விஷ்ணுபகவான், ஒய்வு எடுக்க ஒரு இடத்தில் தன் கையில் இருந்த வில்லை பூமியில் ஊன்றி வில்லின் மற்றொரு முனையில் சாய்ந்து தூங்கினார்.

தங்களுக்கு நன்மை வேண்டி யாகம் செய்ய நினைத்தார்கள் தேவர்கள். ஆனால் யாகத்திற்கு உரியவரான ஸ்ரீவிஷ்ணுபகவானின் ஆசியில்லாமல் யாகம் செய்ய கூடாதே என்ற எண்ணத்தில் பகவானை தேடி காட்டுக்கு வந்தார்கள் தேவர்கள். ஸ்ரீமகாவிஷ்ணு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் அவரை எப்படி எழுப்புவது என்று சிந்தித்த போது, ருத்திரமூர்த்தி குறிக்கிட்டு, “இந்திரா… நீ பிரம்மன் படைத்த செல் என்கிற ஜந்து உருவம் எடுத்துக்கொண்டு பூமியில் நட்டப்பட்டுள்ள விஷ்ணுபகவானின் வில்லின் நுணியை அறுத்துவிடுங்கள். வில் நுனி அறுப்பட்டவுடன் வில் நிமிரும் போது, வில்லின் மீது சாய்ந்து தூங்கும் விஷ்ணுபகவானின் தலையும் நிமிரும். அவர் தூக்கமும் கலையும்“ என்று யோசனை சொன்னார் ருத்திரமுர்த்தி.

ருத்திரமுர்த்தி கூறியதுபோல் இந்திரன், செல் உருவம் எடுத்துக்கொண்டு பூமியில் நட்டப்பட்டிருந்த வில்லின் நுனியைக் கடித்து அரித்தார். இதனால் அந்த வில்லின் நாண் அறுத்து போனது.. நாண் அறுந்த வேகத்தில் வில்லின் மேல்நுனி நிமிர்ந்தது. அது நிமிரும் போது பூகம்பம் ஏற்படும் அளவில் மிக பெரிய பூமி அதிர்ச்சி உண்டானது. தேவர்களும் – முனிவர்களும்  பயந்தார்கள். அத்துடன் யாரும் எதிர்பாரத பயங்கரம் உண்டானது. விஷ்ணுபகவானின் தலை நாணலால் அறுப்பட்டு கடலில் விழுந்தது. நாணலால் விஷ்ணுபகவானின் தலை அறுபட்டதை கண்டு இந்திரன் பயந்தான்.

“ஒருவர் தூங்கும் போது அவர்களை  தூக்கத்தில் இருந்து எழுப்புவது பிரம்மஹத்தி தோஷத்தை உண்டாக்கும். அந்த தோஷத்துடன், விஷ்ணுபகவானின் தலையைக் கொய்த பாவமும் சேர்ந்து எனக்கு தோஷம் ஏற்பட்டுவிட்டதே.“ என்று மனம் கலங்கினார் இந்திரன்.

“இப்படி நடக்க கூடாதது நடந்துவிட்டதே, என்ன செய்வது?“ என்று பிரம்மதேவரிடம் இந்திரன் பரிகாரம் கேட்டார். “காரணம் இல்லாமல் காரியம் இல்லை. இப்படி நடக்க வேண்டும் என்று விதி இருந்தால் அப்படியே நடந்துதான் தீரும். அவ்விதியில் இருந்து தெய்வமும் தப்பாது. விஷ்ணுபகவானின் தலை அறுப்பட்டதற்கு ஒரு காரணம் இருக்கும். அதை நாம் முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும். அதற்கு சக்தி தேவியை நினைத்து தவம் செய். உன் கேள்விக்கு விடை கிடைக்கும்.“ என்றார் இந்திரனிடம் பிரம்மதேவர்.

பிரம்மதேவர் கூறியது போல் இந்திரனும், மற்ற தேவர்களும், முனிவர்களும் சக்தி தேவியை நினைத்து தவம் செய்தார்கள். அவர்களின் தவத்தை ஏற்று சக்தி தேவி தோன்றினார்.

“கலங்க வேண்டாம். இது லஷ்மிதேவியின் சாபத்தால் நேர்ந்தது. ஒருநாள் விஷ்ணுபகவான், ஸ்ரீமகாலஷ்மியின் முகத்தை கண்டு, “நீ என்ன பேரழகியா?. உன்னை விட இந்த உலகத்தில் அழகான பெண்களே இல்லையா?“ என்று சிரித்துக் கொண்டே கேட்க, இதை கேட்ட லஷ்மிதேவி கோபம் கொண்டு, “எல்லா லோகமே என்னை அழகே வடிவானவள் என்று புகழ்கிறது. எந்த அழகான பெண்ணை பார்த்தாலும், லஷ்மி கடாக்ஷமாக இருக்கிறாய் என்றுதான் சொல்வார்கள். பெண்களில் அழகு என்றாலே அது நான்தான். இதில் உங்களுக்கு ஏன் இந்த சந்தேகம் வந்தது.? என்னை பார்த்து நீ அழகியா? என்ற கேட்ட உங்களுக்கு, முகம் இல்லாமல் போகட்டும்.” என்று விஷ்ணுபகவானை சபித்து விடுகிறாள் லஷ்மிதேவி. லஷ்மியின் சாபத்தால்தான் விஷ்ணுபகவானின் தலை இப்போது இந்திரனால் அறுபட்டுபோனது. ஸ்ரீமகாலஷ்மியின் அந்த சாபத்திலும் ஒரு நன்மை நடக்கும்.

ஆம். ஹயகிரீவர் என்ற ஒரு அசுரன் என்னை நினைத்து தவம் செய்தான். அவன் தவத்தை ஏற்று நான் அவனுக்கு காட்சி தந்து, உனக்கு என்ன வரம் வேண்டும்? என்ற கேட்க, அதற்கு அந்த அசுரன், “தமக்கு யாராலும் மரணமே நேரக்கூடாது” என்று வரம் கேட்டான்.

பிறப்பு என்றால் இறப்பும் நிச்சயம். அதை யாராலும் மாற்ற முடியாது என்று நான் கூற, “அப்படியானால் ஹயகிரீவரான எனக்கு ஹயகிரீவரான ஒருவரால்தான் எனக்கு மரணம் நிகழ வேண்டும்.“ என்ற வரம கேட்டு பெற்றான் அசுரனான ஹயகிரீவன்.

அதனால் அந்த அசுரனை கொல்ல ஸ்ரீ மகாவிஷ்ணுவால்தான் முடியும். மனிதமுகம் இருந்தால் அசுரனை கொல்ல முடியாது என்ற காரணத்தால்தான் ஸ்ரீவிஷ்ணுபகவானின் தலை அறுபட்டு கடலில் விழுந்தது.

அதனால் உடனே நாம் ஒரு குதிரைமுகத்தை பகவானுக்கு பொருத்த வேண்டும்.“ என்றார் சக்திதேவி. அதனால் தேவர்கள் ஒரு குதிரை முகத்தை வெட்டிகொண்டு வந்து, ஸ்ரீவிஷ்ணுபகவானின் கழுத்தில் பொருத்தினார்கள்.

குதிரையின் முகம் பொருத்தியதால் விஷ்ணுபகவான் ஹயகிரீவர் என்று அழைக்கப்பட்டார். இதன் பிறகு அசுரனான ஹயகிரீவரை, பகவான் ஹயகிரீவர் அழித்தார்.

ஸ்ரீஹயகிரீவரை வணங்கினால் விரோதிகள் அழிவார்கள். ஆபத்தான நேரத்தில் குதிரைபோல் வேகமாக வந்து நமக்கு உதவி செய்வார் ஸ்ரீ ஹயகிரீவர்.

தைரியம், வெற்றி, புத்திசாலிதனம், உடல்வலிமை இவை அனைத்தும் ஹயகிரீவரை வணங்கினால் கிடைக்கும். 

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும் 

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள் 

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

 

Posted by on Jan 18 2012. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், பிற கோயில், பெருமாள் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »