விரோதங்களை நீக்கும் கொண்டத்துக்காளியம்மன்
நிரஞ்சனா
கோயம்புத்தூர் மாவட்டம், பெருமாநல்லூரில் உள்ள அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில்.
ஒருவரது முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க வேண்டுமானால் அதற்கு தெய்வ அருளும் வேண்டும். எல்லா தெய்வங்களும் வெற்றி தரும் தெய்வங்கள்தான் என்றாலும், அன்னை சக்திதேவி ஜெயத்தை வழங்குவார். அதனால் துர்கை வடிவத்தில் இருக்கும் அன்னை சக்திதேவியை, “ஜெயஜெய தேவி, ஸ்ரீதுர்கா தேவி” என்று போற்றுவர்.
சேரநாட்டின் மன்னர் ஒருவர், போரில் வெற்றி பெற என்ன வழி? என்று பலரிடம் ஆலோசனை நடத்தினார். ஆனால் ஆலோசகர்கள் சொல்லும் யோசனை எந்த அளவு வெற்றியை தேடி தரும் என்ற சந்தேகமும் மன்னருக்கு இருந்தது. காரணம், எதிர்தரப்பில் திறமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள். இதனால் சேரமன்னர் தன் குருநாதரிடம் தன் மனகுழப்பத்தையும், நாட்டில் எதிரிகளால் உண்டான பதட்டமான சூழ்நிலை பற்றியும் எடுத்துக் கூறினார்.
மன்னரின் துன்பத்தை கேட்ட குருநாதர், “நீ எதற்கும் அஞ்சாதே. அன்னை காளிதேவியை வணங்கினால் எதிரிகள் காலியாகி விடுவார்கள். இதை புராணமும் சொல்கிறது, என் அனுபவமும் இதைதான் சொல்கிறது. அதனால் நீ காளிதேவிக்கு கோவில் கட்டி வழிபடு என்றார்.
குருநாதர் சொன்னதுபோல் ஸ்ரீகாளி அம்மனுக்கு கோவில் கட்டி காளிதேவியை வணங்கி போருக்கு சென்று வெற்றி பெற்றார் அரசர்.
குண்டத்திருவிழா
கொண்டத்துக்காளியம்மனிடம் வேண்டினால் நமது வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும். தங்களின் வேண்டுதல் நிறைவேறியவர்கள், கொண்டத்துக்காளியம்மன் வணங்கி குண்டம் இறங்கி தங்களின் நன்றியை அம்மனுக்கு தெரிவிப்பார்கள். அத்துடன் பக்தர்கள் பலர், உடல்உபாதை நீங்கவும், பிரச்சினைகள் தீர, சுபநிகழ்ச்சிகள் நடக்க வேண்டியும் குண்டம் இறங்குவார்கள்.
அப்போது ஆங்கிலேயர் ஆட்சி காலம்.
கொண்டத்துக்காளியம்மனுக்கு குண்டம் திருவிழா நடத்தக் கூடாது என்று தடை விதித்தார்கள் ஆங்கிலேயர்.
ஆனால் பக்தர்கள் வெள்ளையர்களை எதிர்த்தார்கள். அம்மனுக்கு செய்ய வேண்டியதை செய்தே தீருவோம் என்று தடையை மீறி குண்டத்திருவிழாவுக்கு எற்பாடு செய்தார்கள். பக்தர்கள் குண்டத்தில் இறங்கும் சமயம் அங்கு வந்த ஆங்கிலேய அதிகாரி, பக்தர்கள் இறங்கும் குண்டத்தில் அரக்கை ஊற்றி, “இப்போது குண்டத்தில் இறங்குங்கள். உங்கள் அம்மன் உங்களை காப்பாற்றுகிறாரா என்று பார்க்கிறோம்” என்று அதிகார ஆணவத்துடன் சொன்னார்.
பக்தர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியாமல், “திருவிழா நடத்த முடியாமல் தடை உண்டாக்குகிறார்களே, இது என்ன கொடுமை?.” என்று கலங்கி நின்றார்கள். அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த பன்றி ஒன்று, மக்கள் கூட்டத்தை கடந்து வந்து குண்டத்துக்கள் திடீரென இறங்கி, எந்த காயம் இல்லாமல் மீண்டும் எழுந்து சென்றது.
குண்டத்துக்குள் அரக்கை ஊற்றிய ஆங்கிலேய அதிகாரி, பன்றி குண்டத்துக்குள் இறங்கி மீண்டும் எந்த காயம் இல்லாமல் திரும்பி வருவதை பார்த்த மறுவினாடியே அவர் கண்பார்வை போய்விட்டது.
தான் செய்தது மிகபெரிய தெய்வ குற்றம் என்பதை உணர்ந்த அந்த அதிகாரி, பக்தர்களை குண்டத்துக்குள் இறங்க அனுமதி அளித்தார். பன்றி உருவத்தில் வந்தது கொண்டத்துக்காளியம்மன் என்பதை உணர்ந்த பக்தர்கள், மெய்சிலிர்த்து அம்மனை வணங்கியபடி குண்டத்துக்குள் இறங்கினார்கள். என்ன ஆச்சரியம்… மனம் திருந்திய ஆங்கிலேய அதிகாரிக்கு மீண்டும் கண்பார்வையை அம்மன் அருளினாள்.
அம்மனுக்கு எழுமிச்சை மாலை சமர்ப்பித்து வணங்கினால், கஷ்டங்கள் விலகும். பொங்கல் வைத்துவழிப்பட்டால் சுபிக்ஷம் எற்படும். அம்மனுக்கு சிகப்பு வண்ணம் அல்லது நீலவண்ணம் கொண்ட சேலையை காணிக்கையாக தந்தால், விரோதிகள் அழிவர். செய்வினை பாதிப்பும் விலகும். அருள்மிகு கொண்டத்துக்காளியம்மனை நம்பிக்கையுடன் வணங்கி அம்மனின் அருளை பெறுவோம்.
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved