Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

சாய்பாபா வாக்கின் மகிமை

மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு

பகுதி – 15

சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்  

நிரஞ்சனா

மகான் ஷீரடி சாய்பாபாவின் பேச்சை கேளாமல் வெளியூர் சென்ற மகல்சபாதி அனுபவித்த சம்பவம் என்ன என்பதை பற்றி இந்த பகுதியில் தெரிந்துக்கொள்ள இருக்கிறோம்.

மகல்சபாதி, புராணகதைகளை சொல்வதில் திறமையானவர். அவர், புராணகதைகளை சொல்ல ஆரம்பித்தால் கேட்பவர்களுக்கு அந்த இடத்தை விட்டு எழுந்து செல்ல மனம் வராது. அந்த அளவில் சிறப்பாக சொல்வார்.  ஒருநாள், அஸ்தினாபுரத்தில் இருந்து ஹர்தே என்பவர் வந்து மகல்சபாதியை சந்தித்தார்.

“நீங்கள் எங்கள் ஊருக்கு வரவேண்டும். எங்கள் வீட்டில் நீங்கள் புராணம் படிக்க வேண்டும்.” எனக் கேட்டுக் கொண்டார்.  

இதை கேட்ட மகல்சபாதி மகிழ்சியடைந்து ஒப்புக்கொண்டார்.  பிறகு சாய்பாபாவிடம் சென்று, “பாபா, நான் புராணம் படிக்க அஸ்தினாபுரத்தில் உள்ள ஹர்தே என்பவர் வீட்டுக்கு வருவதாக சொல்லி இருக்கிறேன். நான் சென்று வருகிறேன். எனக்கு ஆசி வழங்குங்கள்.” என்றார்.

அதற்கு சாய்பாபா,

“நீ அங்கெல்லாம் இப்போது செல்ல வேணடாம். நிலைமை சரியாக இருக்காது. அஸ்தினாபுரம் சென்றால் அங்கு யாரும் நீ சொல்லும் புராணகதையை கேட்க மாட்டார்கள். சாப்பாடு கூட கிடைக்காமல் திரும்புவாய். வீண் விவகாரம்தான் உண்டாகும்.” என்றார் சாய்பாபா.  

சாய்பாபாவின் பேச்சை மகல்சபாதி பொருட்படுத்தவில்லை. விதி விடுமா என்ன?

“சாய்பாபா ஏதாவது சொல்லிக் கொண்டேதான் இருப்பார். அஸ்தினாபுரம் சந்தர்ப்பத்தை விட்டுவிடக் கூடாது” என்று சாய்பாபா பேச்சை மதிக்காமல் மகல்சபாதி, அஸ்தினாபுரம் சென்றார். அங்கே ஹர்தேயின் வீட்டில் மகல்சபாதிக்கு உற்சாக வரவேற்பு. மகல்சபாதியை சந்திக்க வந்தவர்கள் எல்லாம் அவரை புகழ்ந்தார்கள். மகல்சாபதி மகிழ்ந்து போனார்.

“அடடா, இந்த ஊர் மக்கள் மிகவும் நல்லவர்களாக இருக்கிறார்களே. என்னை பற்றி இவ்வளவு நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். இது தெரியவில்லையே சாய்பாபாவுக்கு. சாய்பாபா ஏன் முரண்பாடாக இந்த இடத்தை பற்றி சொன்னார்.? என்ன செய்வது சாய்பாபாவும் மனிதர்தானே… அவர் கணிப்பில் தவறு நேர்ந்துவிட்டது. உங்கள் கணிப்பு தவறானது என்பதை ஊருக்கு சென்றதும் முதலில் சாய்பாபாவிடம் சொல்ல வேண்டும்.” என்ற கர்வமான எண்ணம் மகல்சபாதியின் மனதில் புகுந்தது.

புராணகதை சொல்லும் நிகழ்ச்சி தொடங்கியது.

மகல்சபாதி புராணகதையை சொல்ல ஆரம்பித்தார். அருமையாக புராணகதையை சொல்லிக்கொண்டே வந்தார். மக்களும் மிகவும் ஆர்வமாக கேட்டுக் கொண்டே வந்தார்கள். அப்போது முரடனான ஹர்தேயின் மகன், “ எனக்கு பசிக்கிறது. அதனால் நான் சாப்பிட போகிறேன்.” “ என்றான் தன் தந்தையான ஹர்தேயிடம். .

“சாப்பிடலாம். ஆனால் புராணகதை  முடிந்தபிறகு பூஜைசெய்து வந்திருக்கும் அனைவருடன் சாப்பிடலாம்.” என்றார் ஹர்தே.

“அவன் எப்போது கதை சொல்லி முடிப்பது. நான் எப்போது சாப்பிடுவது.?” என்றான் ஹர்தேயின் மகன்.

“பெரியவர்களை அப்படியெல்லாம் பேசக் கூடாது. அமைதியாக இரு.” என்றார் ஹ்ர்தே.

ஆனால் முரடனான அவன் நேராக சாப்பாடு அறைக்கு சென்றான். “சாப்பாடு போடு.” என்று அங்கு இருந்த வேலையாட்களிடம் கத்தினான். அவன் கத்தும் சத்தம் வெளியே கேட்டது. புராணகதை கேட்டு கொண்டு இருந்தவர்கள், “நாங்களும் சாப்பிட்டு வந்து மீதி கதையை கேட்கிறோம்.” என்று சிலர் எழுந்து சாப்பிட சென்றார்கள்.

சாப்பாடு அறைக்குள் சாப்பிட நுழைந்தவர்களை பார்த்த ஹர்தேயின் மகன், “உங்களை யார் கூப்பிட்டது.? நீங்கள் புராணம் கேட்டபிறகு சாப்பிடுங்கள். எங்கே இலவசமாக சாப்பாடு போடுவார்கள் என்று அலைவதே உங்கள் பிழைப்பாக ஆகிவிட்டது, பிச்சைக்கார பசங்களா” என்று மக்கள் கூட்டத்தை பார்த்து ஆவேசமாக கத்தினான். 

அவன் பேச்சை கேட்டவர்கள் ஆத்திரம் அடைந்தார்கள்.

 “அடேய்… வாயை மூடு. யார் சாப்பிட அலைவது.? நாங்களா பிச்சைக்காரர்கள்.? உன் தந்தை அழைத்தார் வந்தோம். எங்களை பார்த்து பிச்சைகாரர்கள் என்று சொல்லி விரட்டுகிறாயே. ஒழுங்காக மன்னிப்பு கேள். இல்லையென்றால்…” என்று அவர்கள் பேசி முடிப்பதற்குள், “இல்லை என்றால் என்ன செய்வீர்கள்.?” என்று ஒருவனை ஓங்கி அறைந்தான் ஹ்ர்தேயின் முரட்டு மகன். சிறு தீப்பொறி மளமளவென வளர்ந்து காட்டையே அழித்துவிடுவது போல், வார்த்தை வளர்ந்து அமைதியாக இருந்த இடம் யுத்தகளம் மாறியது. சிலருக்கு ரத்தகாயம் கூட ஏற்பட்டது.

புராணம் கேட்டு கொண்டு இருந்த பலர் இதை பார்த்து பயந்து சிதறி ஓடினார்கள்.

எல்லோரும் மகல்சபாதியை மறந்தார்கள். முரடான ஹர்தேயின் பார்வை மகல்சபாதியின் பக்கம் திரும்ப, விட்டால்போதும் என்று மகல்சபாதி அந்த இடத்தைவிட்டு ஓடினார். அவருக்கு அவர் வாழ்நாளில் இப்படியொரு அவமானம் நடந்ததே இல்லை. சாப்பாடு கூட கிடைக்காமல் கண்ணீருடன் ஷீரடியை நோக்கி திரும்பினார்.

அதே சமயம் ஷீரடியில்…..

“மகல்சபாதி வருகிறான். அவன் சாப்பிடவில்லை. அவன் பசி தாங்க மாட்டான். அதனால் அவனுக்கு உணவை எடுத்து வையுங்கள்.” என்றார் சாய்பாபா.

அதற்கு சாய்பாபாவின் அருகில் இருந்தவர்,

“பாபா..மகல்சபாதி அஸ்தினாபுரம் சென்று இருக்கிறார். நாளைதான் வருவார்.” என்றார்.

அப்போது, “பாபா” என்று வேதனை கலந்த குரல் வந்த திசையை அனைவரும் திரும்பி பார்த்தார்கள். மகல்சபாதி கண்ணீருடன் நின்றிருந்தார்.

“வா மகல்சபாதி. உனக்காகதான் காத்திருக்கிறேன். அஸ்தினாபுரத்தில் நடந்த தகராறில், உன்னை அழைத்தவர்கள் உன்னையே மறந்துவிட்டார்கள். முதலில் நீ போய் சாப்பிடு. பிறகு பேசலாம்.” என்றார். சாய்பாபா.

“பாபா… என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் பேச்சை கேளாமல் சென்று, உடலாலும் உள்ளத்தாலும் மிகவும் வேதனையும் கஷ்டங்களும் அனுபவித்துவிட்டேன். இனி உங்கள் பேச்சை மீற மாட்டேன்.” என்றார் மகல்சபாதி.

கோடிக்கணக்கான தன் பக்தர்களின் செயல்களை இப்போதும் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறார் நம் மகான் ஷீரடி சாய்பாபா.

டாக்டர் பிள்ளை.

அவர் காலில் ஏதோ புண் ஏற்பட்டு அது ரணமாகி எந்நேரமும் சீழ் வடிந்து கொண்டே இருந்தது. இதற்கு அவர் பல மருந்து சாப்பிட்டும், அறுவை சிகிச்சை செய்தும் குணம் ஆகாமல் இருந்தார்.

டாக்டர் பிள்ளையின் நோயை ஷீரடி சாய்பாபா குணப்படுத்திய அற்புதம் பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

 இதன் தொடர்ச்சி  

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here

© 2011 bhakthiplanet.com  All Rights Reserved 

 

 

Posted by on Dec 7 2011. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், ஸ்ரீ சாய்பாபா வரலாறு. You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »