சதுரகிரியில் இரட்டை லிங்கமாக காட்சி தரும் ஸ்ரீசங்கரநாராயணன்
நிரஞ்சனா
நீ பெரியவனா? நான் பெரியவனா? என்று மனிதர்களுக்குள் வேண்டுமானால் போட்டி ஏற்படும். ஆனால் தெய்வங்களுக்கோ அத்தகைய போட்டி – பொறாமை கிடையாது. ஹரியும் சிவனும் ஒன்றே என பல சமயங்களில் நிரூபித்து உள்ளனர்.
சிவபெருமானை வணங்குபவர்களுக்கு அதற்குரிய ஒரு பலனும், ஸ்ரீமந் நாராயணனை வணங்குபவர்களுக்கு அதற்குரிய ஒரு பலனும் கிடைக்கிறது. ஆனால் சங்கரரையும் நாராயணனையும் ஒன்றாக நினைத்து, ஸ்ரீசங்கரநாராயணனாக வணங்கும் பொழுது பன்மடங்கு பலன்கள் கிடைக்கிறது.
ஸ்ரீமகாவிஷ்ணு, சிவபெருமானின் நடனத்தை காண விரும்பினார். அதனால் ஸ்ரீவிஷ்ணு பகவானின் இதயத்தில் மகாவிஷ்ணுவின் மூச்சு காற்றுக்கு ஏற்றபடி நடனம் ஆடினார் சிவபெருமான். அந்த நடனத்தின் பெயர் அஜபா நடனம்.
பிறகு ஸ்ரீநாராயணன், சிவனின் ஆனந்த நடனத்தை காண விரும்பி, சிதம்பர கோவிலுக்கு எழுந்தருளினார்.
அதனால் “கோவிந்தராஜர்” என்ற பெயரோடு தில்லைவாழ் சைவர்களாலும், திருச்சித்திர கூடம் என்று வைஷ்ணவர்களாலும் அழைக்கப்படுகிறார்.
சதுரகிரிக்கு வந்த ஸ்ரீசங்கரநாராயணன்
சதுரகிரிமலையில் கோரக்கர் குகையில் இருந்து சுமார் அரை மணி நேரப் பயணத்தில் இரட்டைலிங்கம் இருக்கிறது. இந்த லிங்கம் உருவான கதையை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும்.
ஆனந்த சுந்தரர் என்ற வியபாரி. இவர் சிவபக்தர். சிவனே தன் உயிர் என்று எப்போதும் உச்சரித்து கொண்டே இருப்பார். ஆனால் இவருடைய மனைவி ஆண்டாள், தன் பெயருக்கேற்ப பெருமாள் பக்தையாக இருந்தாள். அதனால் குடும்பத்தில் அவ்வப்போது கருத்து மோதல்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.
கணவன்-மனைவி என்கிற முறையில் தினமும் சண்டையிட்டு கொண்டே வாழ்வதை விட பிரிந்து செல்லலாம் என்று முடிவு செய்தார்கள் இந்த தம்பதியினர்.
ஆனாலும் வாய்தான், “பிரிந்து போகலாம்” என்று சொன்னதே தவிர உள்ளத்தினுள் நேசம் நன்றாகதான் இருந்தது. இதனால் குழப்பம் அடைந்த இருவரும் தங்களுடைய மனக்கவலையை ஒரு முனிவரிடம் சொன்னார்கள். அதற்கு அந்த முனிவர்,
“ஒன்றாக ஓரே வீட்டில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டே இருப்பதால்தான், உங்களுக்குள் யாருடைய தெய்வம் பெரிது என்கிற தேவையற்ற கருத்து வேறுபாடு உண்டாகிறது. வீட்டிலேயே முடங்கி கிடக்காமல் ஒன்றாக சதுரகிரி யாத்திரை செல்லுங்கள். உங்களுக்கு அங்கே யாருடைய கடவுள் பெரியவர் என்கிற குழப்பத்திற்கு விடை கிடைத்து மனஅமைதி பெறுவீர்கள்.” என்றார்.
முனிவரின் ஆலோசனைப்படி ஆனந்த சுந்தரர், தன் மனைவியுடன் சதுரகிரிக்கு சென்று தவம் இருந்தார். ஆனந்த சுந்தரர், சிவபெருமானை நினைத்தும், அவருடைய மனைவி ஆண்டாள், பெருமாளை நினைத்தும் தவம் இருந்தாள்.
பல வருடங்கள் தவம் செய்ததால் சிவபெருமான், ஆண்டள் முன் தோன்றி, “என்னை ஏன் அழைத்தாய்.” எனக் கேட்டார்.
கண் திறந்து பார்த்த ஆண்டாள். “நான் உங்களை நினைத்து தவம் செய்யவில்லை. என் பகவான் ஸ்ரீவிஷ்ணுவை நினைத்தே தவம் இருக்கிறேன்.” என்றாள்.
“ஓ… அப்படியா..? சரி. அப்படி என்றால் நான் நீ வணங்கும் நாராயணன் இல்லையா?” என்று புன்னகைத்தபடி, ஒருபுறம் சிவனாகவும், மறுபுறம் விஷ்ணுவாகவும் தோன்றினார்கள். சிவனும் – விஷ்ணுவும் ஒன்றே என்கிற உண்மை புரிந்து ஸ்ரீசங்கரநாராயண வடிவத்தை கண்டு வணங்கினார்கள் தம்பதியினர். ஸ்ரீசங்கரநாராயணர், இரட்டை லிங்கமாக மாறினார்கள்.
இன்றுவரை நம் சதுரகிரியில் ஸ்ரீசங்கரநாராயணர், இரட்டைலிங்க வடிவமாக காட்சி தருகிறார்கள். ஆகவே ஹரியும் சிவனும் ஒன்றுதான் என்பதை உணர்ந்து ஸ்ரீசங்கரநாராயணரை வணங்கினால் சங்கடங்கள் தீரும்.
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved