Tuesday 24th December 2024

தலைப்புச் செய்தி :

சென்னையில் விநாயகருக்கு திருமணம் நடந்த இடம்

நிரஞ்சனா

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில், சென்னை நகரின் மேற்குப் பகுதியில் பாடி என்னும் இடத்தில் திருவல்லீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.:

ஒருவரின் வாழ்நாளில் நல்ல மாற்றங்கள் ஏற்பட இன்னாரால்தான் முடியும் என்று இறைவன் எழுதிவைத்தால் அப்படிதான் நடக்கும். இதை குருபகவானே அனுபவத்தில் உணர்ந்தார். ஆம். குரு பார்த்தால் கோடி புண்ணியம் என்பார்கள். ஆனால், தன்னுடைய மகனான பாரத்வாஜ மகரிஷி, கரிக்குருவியின் (வலியன்) என்கிற  பறவை உருவத்தில் பிறந்திருக்கிறானே என்று மனம் வருந்தினார் குரு பகவான்.

“அவனை எத்தனைமுறை நான் பார்த்தாலும் அவனுக்கு புண்ணியம் ஏற்படும். ஆனால் உடலில் மாற்றம் ஏற்படுமா? பறவை உருவத்தில் பிறந்ததால் மற்றவர்களின் கேலிக்கு ஆளாகிறானே” என்று மனம் வருந்தினார் குரு பகவான். தன் தந்தையின் மனவருத்தத்தை கண்டு மகன் பாரத்வாஜ மகரிஷியும் மனம் வருந்தினார் – கலங்கினார். 

இதனால் பாரத்வாஜ மகரிஷி, பல புண்ணியதலங்களுக்கு சென்று வர முடிவு செய்து அவ்வாறே பல ஸ்தலங்களுக்கும் சென்றார். அப்போது ஒரு ஊரில், கொன்றை மரத்தின் அடியில் சுயம்புவாக சிவலிங்கம் எழுந்தருளியிருப்பதை கண்டார். அது எப்படி உருவானது? என்பதை பற்றி தன் ஞானத்தால் அறிய முயன்றார்.

பிரம்மாவின் புத்திரிகள் 

பிரம்மா தன் இரண்டு மகள்களான சித்தி-புத்தி என்கிற கமலி, வல்லி இருவருக்கும் திருமணம் செய்துவைக்க விரும்பினார். ஆனால் பிரம்மாவின் மகள்களுக்கோ திருமணம் தடைபட்டுக்கொண்டே இருந்தது. அதனால் “நீங்கள் இருவரும்  சிவபெருமானை வழிபட்டு தவம் செய்யுங்கள். நீங்கள் தவம் செய்ய ஏற்ற இடம், கொன்றை மர காட்டு பகுதி. அங்கு தவம் இருங்கள். உங்கள் தவத்தை ஏற்று நிச்சயம் சிவபெருமான் அருள்புரிவார்” என்றார் பிரம்மா.

தந்தையான பிரம்மா கூறியதை போல் தவம் இருந்தார்கள் பிரம்மபுத்திரிகள். ஒருநாள் பிரம்ம புத்திரிகளின் தவத்தை ஏற்ற ஈசன், இரு பெண்களுக்கும் காட்சி தந்து அவர்களின் வேண்டுதல் அறிந்து, “உங்கள் தவத்திற்கு பலன் கிடைக்கும்.” என்று ஆசி வழங்கிய ஈசன்,

அந்த இரண்டு இளம் பெண்களையும் பிரம்மாவின் விருப்பத்தோடு விநாயகப் பெருமானுக்கு திருமணம் செய்து வைத்தார். சிவபெருமானுக்கு மருமகள்கள் ஆனார்கள் பிரம்மபுத்திரிகள்.

அந்த தெய்வீக திருமணம் நடந்த இடம் இதுவே என்பதை தன் ஞானத்தால் அறிந்தார் பாரத்வாஜ முனிவர். சிவபெருமானை “திருவல்லீஸ்வரர்” என்று போற்றி வணங்கினார்.

இப்படி ஒரு சுபநிகழ்ச்சி நடக்க வழிவகுத்த இந்த இடத்தில் தவம் செய்தால் நன்மை ஏற்படும் என்பதை உணர்ந்தார். அதனால் திருவல்லீஸ்வரர் காட்சி தந்த இடத்தில் தவம் இருந்தார் குரு பகவானின் மகன்..

தலைமை பதவியை அடைந்த பறவை

பாரத்வாஜ பூஜையை ஏற்ற சிவபெருமான், அவர் முன்தோன்றி “உனக்கு என்ன வரம் வேண்டும்?” எனக்கேட்டார்.

“அய்யனே..எம்மை பறவையாக படைத்ததன் காரணம் என்ன?. எனக்கு மனித உருவத்தை அருளுங்கள்.” என்றார் பாரத்வாஜ.

“நீ பறவை உருவத்தில் பிறக்க வேண்டும் என்பதே உன் விதி. அதை மாற்ற கூடாது. அப்படி மாற்றினால், நீ மீண்டும் மறுபிறவியை அனுபவிக்க வேண்டும். உனக்கு மறுபிறவி வேண்டுமா? அல்லது இந்த பிறவிலேயே நல்ல புகழோடு வாழ விரும்புகிறாயா?” எனக் கேட்டார் ஈசன்.

“தன் குழந்தைக்கு எது தந்தால் நன்மை என்பது தாய்-தந்தைக்கு தெரியும் என்பார்கள். ஈசனே என் தந்தையை போல் நீங்கள். உங்கள் வாக்குக்கு நான் கட்டுப்படுவேன். தெளிவு பெற்றேன். உங்கள் விருப்பத்தை மகிழ்ச்சியுடன் ஏற்பேன்.” என்றார் பரத்வாஜர்.

“நீ கரிக்குருவியின் (வலியன்)  உருவத்தில் இருப்பதால்  பறவைகளுக்கு தலைவனாக இருந்து புகழ் பெறுவாய்.” என்று ஆசி வழங்கினார் சிவபெருமான்.

அதனால்தான் இந்த தலத்தில் பாரத்வாஜ மகரிஷி கரிக்குருவியின் (வலியன்)  உருவத்தில் சிவலிங்கத்தை பூஜித்ததால், இங்கு இருக்கும் சிவாலயம், “திருவலிதாயம்” என்றும் திருவல்லீஸ்வரர் என்றும்  பெயர் பெற்றது.

குருபகவானும் தனக்கு ஏற்பட்ட பாவதோஷத்தை இந்த ஸ்தலத்திற்கு வந்து திருவல்லீஸ்வரரை வணங்கி பாவத்தை போக்கி கொண்டதால், இங்கு இருக்கும் குருபகவானை வணங்கினால் ஜாதகத்தில் குருதோஷம் இருந்தால் நீங்கி, ஜாதகம் சாதகமாக அமையும்.

திருமண தடையை போக்கும் விநாயகர்

விநாயகருக்கு திருமண வரம் அமைந்த இடம் இந்த பகுதி.

இந்த இடத்தில் அன்னை பார்வதிதேவி, தேவசிற்பியான விஸ்வகர்மாவை அழைத்து, சொர்க்கலோகம் போல இந்த பகுதியை உருவாக்கச் சொன்னார். அதன்படி உருவாக்கிய விஸ்வகர்மா, இங்கே ஒரு கல்யாண மண்டபத்தையும் கட்டினார். அந்த திருமண மண்டபத்தில்தான் விநாயகப் பெருமானின் திருமணம் நடந்தது என்கிறது இத்தலபுராணம். அதனால் இந்த   ஆலயத்தில் விநாயகர் தன் இருமனைவிகளான   சித்தி-புத்தி என்கிற கமலி, வல்லி ஆகியோருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்குள்ள விநாயகரை வணங்கினால் திருமண பாக்கியம் அமையும்.

திருவல்லீஸ்வரரை வணங்கி சிவலிங்கதிற்கு பால் அபிசேகம் செய்தால், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.  வஸ்திரம் அணிவித்தால் கவுரவம் காக்கபடும். வில்வ இலை அணிவித்தால்  செல்வம் பெருகும். திருநீர் கொடுத்தால் ஜாதகதோஷங்கள் நீங்கும். திருவல்லீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று திருவல்லீஸ்வரரையும் அம்பிகை ஜெகதாம்பிகையும் வணங்கி சகல நன்மைகளும் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம.

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here

© 2011 bhakthiplanet.com  All Rights Reserved

 

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »