வியாபாரம் விருத்தியாக, குடும்ப நிம்மதிக்கு-குச்சனூர் சனிஸ்வர பகவான்
நிரஞ்சனா
சென்னையிலிருந்து தேனிக்கு சென்று, அங்கிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஊர் குச்சனூர். இவ்வூருக்கு தேனியிலிருந்து குறிப்பிட்ட நேரங்களில் நகரப் பேருந்து வசதி இருக்கிறது.
மனித உருவத்தில் வரும் சனிஸ்வரர்
சனிபகவானை போல் கொடுப்பார் இல்லை கெடுப்பார் இல்லை என்று கூறுவார்கள். ஆம். சனிஸ்வர பகவானின் ஆதிக்கம் ஒருவருக்கு நல்ல விதத்தில் இருந்தால் அவர்களுக்கு யார் மூலமாவது யோகம் ஏற்படும். தீயவிதத்தில் இருந்தால் அவர்களுக்கு யார் மூலமாவது தோல்லைகள் வந்து சேரும்.
சிவனே சனிஸ்வரருக்கு பயந்து குகைக்குள் ஒளிந்துகொண்ட கதை எல்லாருக்கும் தெரியும். இறைவனுக்கே சனிஸ்வரர் என்றால் பயம் என்கிறபோது, நாமெல்லாம் எந்த மூலைக்கு?. சனிஸ்வர பகவானின் தொல்லையில் இருந்து தப்பிக்க என்ன வழி.? ஒருவழிதான் இருக்கிறது.
சண்டைகாரன் காலில் விழுவதைவிட சாட்சிகாரன் காலில் விழுவதே மேல் என்பது போல், சனி பகவானிடமே சரண் அடைவது நல்லது.
அரசனை பிடிக்க வந்த சனி பகவான்
தினகரன் என்ற அரசருக்கு வாரிசு இல்லாமல் வருந்தினார். தினமும் இறைவனிடம் குழந்தை பாக்கியம் வேண்டுவார்.
“உன் அரண்மனைக்கு ஒரு பிராமணச் சிறுவன் வருவான். அவன் வருகையால் உனக்கு சந்தானபாக்கியம் ஏற்படும்.” என்று ஒரு அசரிரீ கேட்டது. மறுநாள், அதேபோல் அரண்மனை வாசலில் அரசரை தேடி ஒரு பிராமணச் சிறுவன் வந்து நின்றான். அரசரும் அரசியும் மகிழ்ந்து சிறுவனுக்கு “சந்திரவதனன்” என பெயர்சூட்டி தங்கள் மகனாக வளர்த்து வந்தார்கள்.
அசரிரீ கூறியது போல் ஒருநாள் அரசி கருவுற்றாள். பத்தாவது மாதத்தில் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். அந்த குழந்தைக்கு “சதாகன்” என்று பெயர் வைத்தார்கள். பல வருடங்கள் கழித்து, தத்துபிள்ளையாக இருந்தாலும் அரசரின் முதல் வாரிசாக சந்திரவதனன் இருப்பதால் அவனுக்கு முடி சூட்டப்பட்டது.
சனிஸ்வர பிடியில் இருந்து தப்பித்த அரசர்
அரசர் தினகரனின் ஜாதக இராசிப்படி ஏழரைச்சனியின் காலம் வந்தது. இதனால் பல கஷ்டங்களுக்கு ஆளானார் மன்னர். தன் தந்தைபடும் இன்னல்களை கண்ட சந்திரவதனன் வருத்தம் அடைந்தான். இதற்கு பரிகாரம் தேடி, சுரபி நதிக்கரைக்கு சென்று இரும்பால் சனியின் உருவத்தை செய்து, சனிபகவானை வழிப்பட்டான். அவனின் தவத்தை ஏற்ற சனிபகவான் சந்திரவதனனின் முன் தோன்றி, “உனக்கு என்ன வரம் வேண்டும்?.“ என்றார்.
“தற்காலம் உங்கள் பிடியில் இருக்கும் என் தந்தைக்கு மேலும் எந்த தொல்லையும் கொடுக்காதீர்கள். நான் வளர்ப்பு மகனாக இருந்தாலும், சொந்த மகனை போலவே என் தாயும், தந்தையும் வளர்த்தார்கள். அதனால் நீங்கள் அவர்களுக்கு தர வேண்டிய துன்பத்தை நானே ஏற்கிறேன். எனக்கே துன்பத்தை தாருங்கள். என் தந்தையை விட்டுவிடுங்கள்.” என்றான் சந்திரவதனன்..
“சொந்த தாய்-தந்தையை பேச்சாலும் செயலாலும் கொடுமை படுத்துகிற மகன்களைதான் பார்த்திருக்கிறேன். ஆனால் நீ வளர்ப்பு மகனாக இருந்தாலும், தாய்-தந்தையின் நிம்மதிக்காக துன்பங்களை நீ ஏற்பதாக சொல்கிறாயே. உண்மையிலேயே குணத்தால் உயர்ந்தவன் நீ. அதனால் ஏழரை வருடம் உன் தந்தையை பிடித்து, அவர் அனுபவிக்க வேண்டிய கஷ்டங்களை – துன்பங்களை உனக்கு ஏழரை நாளிகை மட்டும் தருகிறேன்.
அத்துடன் நீ என்னை விரும்பி வேண்டி அழைத்ததால், நான் இதே இடத்தில் சுயம்புவாக தோன்றி, என் பிடியில் இருக்கும் காலத்தில் துன்பங்களை அனுபவித்தாலும் என்னை மறக்காமல் வணங்குபவர்களுக்கு முடிவில் நன்மைகளை அள்ளி தருவேன்.” என்று சந்திரவதனிடம் கூறி அதே இடத்தில சுயம்புவாக தோன்றினார்.
கோவில் உருவான கதை
தமக்கு அருள் செய்தது மட்டுமல்லாமல், இதே இடத்தில் சுயம்புவாக தோன்றிய சனிபகவானுக்கு நிழல் தர வேண்டும் என்பதால், குச்சுப்புல்லால் கூரை செய்து அழகாக கோவில் எழுப்பினான் சந்திரவதனன். குச்சுப்புல்லால் கோவில் உருவானதால் “குச்சனூர்” என்று பெயர் வந்ததாக ஸ்தல வரலாறு சொல்கிறது.
இந்த ஆலயத்தில் சனிஸ்வர பகவான் சுயம்புவாக தோன்றி, அரூபி வடிவ லிங்கம் பூமியில் இருந்து வளர்ந்து கொண்டே வருகிறதாம். இதனால் அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்த மஞ்சனகாப்பு பூசப்பட்ட நிலையிலேயே சுயம்பு உள்ளது என்கிறாது ஸ்தலபுராணம்.
இந்த ஆலயத்துக்கு வந்து வணங்கினால் சனிஸ்வர பகவானால் உண்டாகிற தோஷம் நீங்கும். வியாபார விருத்தியாக, குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க, குச்சனூர் சனிஸ்வர பகவான் ஆசி வழங்குவார். நல்லெண்ணெயில் தீபம் ஏற்றினால் தீபம் எரிந்த பிறகு திரியும் எண்ணையும் இல்லாமல் போவது போல், சனிபகவான் தரும் அர்தாஷ்டம – அஷ்டம – ஜென்ம – பாத – ஏழரை போன்ற சனி தோஷங்கள் பெரும் துன்பங்கள் இல்லாமல் போகும். இன்பமே எந்நாளும் சேரும்.
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved