தொலைந்த பொருட்களை மீட்டு தரும் அரைகாசு அம்மன்
நிரஞ்சனா
அரைகாசு அம்மன் திருக்கோயில், சென்னை ரத்னமங்கலம், வண்டலூர்.
அரை காசு அம்மன் உருவான கதை
புதுக்கோட்டையில் வீற்றிருக்கும் அன்னை அருள்மிகு பிரகதாம்பாளை வணங்கி வந்தார்கள் புதுக்கோட்டையை ஆட்சி செய்து வந்த மன்னர்கள். புதுக்கோட்டை பிரகதாம்பாளுக்கு திருவிழா போன்ற விழாகள் எடுக்கும் போது, அம்மனை மகிழ்விப்பதற்காக அம்மன் உருவத்தை அரை காசியில் பதித்து திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு கொடுக்கும் வழக்கம் இருந்தது.
“புதுக்கோட்டை பிரகதாம்பாள்“ என்று இந்த அம்மனின் பெயரை சிலருக்கு உச்சரிக்க வராததால் நாளடையில் “அரைகாசு அம்மன்“ என்று அழைத்தார்கள்.
ஒருமுறை அரசர் ஒருவரின் உயர்ந்த பொருள் தொலைந்த போனது. அந்த பொருள் கிடைத்தே ஆக வேண்டும், இல்லை என்றால் பெரிய பாதிப்பு ஏற்படும் என்ற ஒரு இக்கட்டான நிலை அரசருக்கு உருவானது. இதனால் அரசர் பல இடங்களில் தேடியும், பல காவலர்கள் தேடியும் அவர்கள் தேடியது கிடைக்கவில்லை. இச்சூழ்நிலையில், “அரைகாசு அம்மனுக்கு அரிசி, வெல்லம் பிரசாதமாக வைத்து வேண்டினால், நிச்சயம் நீங்கள் தொலைத்தது திரும்ப கிடைக்கும்.” என்றார் புதுக்கோட்டை பிரகதாம்பாள் ஆலயத்தில் இருந்த ஒருவர். அந்த நபர் கூறியதை தெய்வத்தில் அருள்வாக்கு என்று நம்பிய அரசர், அதன்படி அரைகாசு அம்மனுக்கு வெல்லத்தால் விநாயகர் பிடித்து, வெல்லம் கலந்த பானகத்தை நெய்வேதியமாகவும் படைத்து வேண்டினார்.
தெய்வ அருள் இருந்தால் எதுவும் அதிசயம். சில விநாடிகளிலேயே அரைகாசு அம்மனின் சக்தியால் தொலைந்த பொருள் இருக்கும் இடம் பற்றி தகவல் கிடைத்தது. அன்றுமுதல் இன்றுவரை தொலைந்த பொருளோ அல்லது காணாமல் போனவர்கள் கிடைக்க வேண்டும் என்று அரைகாசு அம்மனிடம் வேண்டினாலோ உடனே பிராத்தனைக்கு பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஸ்ரீலட்சுமி குபேர ஆலயத்தில்…
500 வருடங்கள் பழமை வாய்ந்த அரைகாசு அம்மன் கோயில் சென்னை வண்டலூர் அருகில் உள்ள ரத்னமங்கலம் என்கிற சிற்றூரில் இருக்கிறது. அங்கு அரைக்காசு அம்மனை மூலவராகக் கொண்டு இத்தலத்தில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அரைகாசு அம்மனை வணங்கினால் கைமேல் பலன் கிடைக்கும் என்று ஆனித்தரமாக சொல்கிறார்கள் அனுபவத்தில் உணர்ந்தவர்கள்.
அதேபோல் ஸ்ரீலட்சுமி குபேரர் ஆலயத்தில் நடந்த அரைகாசு அம்மனின் மகிமையை பற்றி விரிவாக கூறுகிறார்கள் அங்குள்ள பக்தர்கள். ஒருநாள் சென்னை வண்டலூரில் உள்ள ஸ்ரீலட்சுமி குபேரர் ஆலயத்தில் திருவிழா நடந்தது. அந்த நேரத்தில் குபேரர் கழுத்தில் இருந்த தங்கசங்கிலி காணாமல் போய்விட்டது. பல இடங்களில் தேடியும் தொலைந்த தங்கசங்கிலி கிடைக்கவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் மனம் வருந்தினார்கள். அப்போது பக்தர் ஒருவர், “அரைகாசு அம்மனை வேண்டி வணங்கினால், காணாமல் போன தங்கசங்கிலி கிடைக்கும்.” என்றார்.
விழா குழுவினரும் பக்தர்களும் அரைகாசு அம்மனை வேண்டினார்கள். அன்னை கருணை காட்டினாள். ஆம். பல மணி நேரம் தேடியும் கிடைக்காத தங்கசங்கிலி கிடைத்தது.
வேண்டிய உடனே கருணை காட்டுபவள்தானே தாய். அதனால் அரைகாசு அம்மன் என்கிற அந்த தாய் நம்முடனே எப்போதும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்ரீலஷ்மி குபேரர் ஆலயத்தில் தனி பீடத்தில் அரைகாசு அம்மனுக்கு சந்நதி அமைத்தார்கள் பக்தர்கள்.
காணாமல் போனவர்கள் அல்லது தொலைந்த போன பொருள் திரும்ப கிடைக்க, வெல்லத்தால் விநாயகரை பிடித்து, அம்மனுக்கு வெல்லம் கலந்த பானகத்தை நெய்வேதியம் படைக்கிறார்கள். அதேபோல் சிலர் வெல்லத்தால் தயாரித்த சர்க்கரை பொங்கல் செய்தும் படைக்கிறார்கள். இவ்வாறு பூஜித்தால் தொலைந்து போனது அம்மனின் சக்தியால் திரும்ப கிடைக்கிறது என்று பக்தர்கள் தங்களுடைய அனுபவத்தில் கண்டதை மெய்சிலிர்க்க சொல்கிறார்கள்.
அரைகாசு அம்மனுக்கு வஸ்திரம் அணிவித்தால் குடும்பத்திற்கு சுபிக்ஷம் ஏற்படும். எலுமிச்சை மாலை அணிவித்தால் இன்னல்கள் மறையும். வெல்லத்தால் சர்க்கரை பொங்கல் அல்லது வெல்லத்தில் தயாரித்த பானகம் படைத்தால் தொலைந்தது திரும்ப கிடைக்கும். அரைகாசு அம்மனை ஒருமுறை தரிசித்தாலே அம்மனின் முகம் எப்போதும் நம் மனதில் நிரந்தரமாக பதிந்து விடுகிறது. புதுக்கோட்டை பிரகதாம்பாள் எனும் அரைகாசு அம்மனை வணங்குவோம் நல்லவையாவும் பெறுவோம்.
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved