Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

சிறுத்தொண்டரை தேடி வந்த காசி அகோரி

அறுபத்து மூவர் வரலாறு

பகுதி – 13

சென்ற பகுதியை படிக்க… 

நிரஞ்சனா

“நம் இல்லத்திற்கு உங்களை தேடி ஒரு வடதேச சிவதொண்டர் வந்தார். அவர் காசியில் இருந்து வந்த அகோரி போல தெரிகிறது. கணபதீஸ்வர ஆலயத்தில் இப்போது இருக்கிறார். நீங்கள் சென்று அழைத்தால் வருவதாக சொல்லி இருக்கிறார்.” என்றாள் சிறுத்தொண்டரின் மனைவி திருவெண்காட்டு நங்கையார். மனைவி கூறியதை கேட்டு மகிழ்ச்சியடைந்த சிறுத்தொண்டர், உடனே அந்த சிவதொண்டரை தன் இல்லத்திற்கு அழைத்து விருந்து கொடுக்க எண்ணி,  கணபதீஸ்வர ஆலயத்திற்கு விரைந்தார்.

திருக்கோயிலில் இருந்த அத்திமரத்தின் கீழே அந்த அகோரி உட்கார்ந்திருந்தார். அவர் அருகில் சென்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட சிறுத்தொண்டர், தம் இல்லம் வந்து உணவு சாப்பிட அழைத்தார்.  

“நான் வருவது இருக்கட்டும், நீதான் சிறந்த சிவதொண்டரா.? அதனால்தான் உன்னை சிறுத்தொண்டர் என்று மக்கள் அழைக்கிறார்களா.?” என்றார் அகோரி.

“அப்படியெல்லாம் இல்லை சுவாமி. சிவதொண்டர்களுக்கு  விருந்து தந்து உபசரித்து அவர்கள் சாப்பிட்ட பிறகே நான் சாப்பிடும் வழக்கம். ஆதனால் என்னை சிறுத்தொண்டர் என்று அழைக்கிறார்கள்.” என்றார் பவ்யமாக.

“நான் வடதேசத்தில் இருந்து வந்திருக்கிறேன். நான் சாப்பிடுவதை உன்னால் தரமுடியாது. அதனால் இங்கிருந்து நீ போய்விடு. வேறு யாராவது ஒரு பிச்சைக்காரன் நீ தரும் உணவை சாப்பிட வருவான். அவனை அழைத்து போ.” என்று அலட்சியமாக சிறுத்தொண்டரிடம் பேசினார் அகோரி்.

“நீங்கள் இவ்வாறு சொல்ல கூடாது சுவாமி. உங்களுக்கு எந்த வகை உணவு வேண்டும் என்று சொல்லுங்கள். அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்.” என்றார் சிறுத்தொண்டர்.

“நான் பசுமாமிசம் சாப்பிடுவேன். உன்னால் அதை சமைத்து தரமுடியுமா.? என்றார் அகோரி.

“இவ்வளவுதானே. என்னிடம் பசு, எருமை, ஆடு போன்றவை இருக்கிறது. உங்களுக்கு எந்த வகை பசுவின் மாமிசம் வேண்டும் என்று சொன்னால் அதற்கு ஏற்பாடு செய்கிறேன்.“ என்றார் சிறுத்தொண்டர்.

பலமாக சிரித்தார் அகோரி.

“நான் கூறும் பசுமாமிசம் என்பது, பசுமாடு மாமிசம் அல்ல. நரமாமிசம். அதுவும் ஐந்து வயது பாலகனாக இருக்க வேண்டும். குடும்பத்தின் மூத்த மகனாக இருக்க வேண்டும். அவன் உடலில் எந்த ஊனமும் இருந்திருக்கக் கூடாது. அத்துடன் அந்த பாலகன் உயர்ந்த குலத்தில் பிறந்தவனாக இருக்க வேண்டும். அவனை பெற்ற தாயே அவனை பிடித்துக்கொண்டு, அந்த பிள்ளையின் தகப்பன் அந்த பாலகனை வெட்ட வேண்டும். அப்படி வெட்டபட்ட பாலகனின் மாமிசத்தை அவனை பெற்றவளே சமைக்க வேண்டும். அப்படி சமைக்கும் போது, அழுது கொண்டே சமைத்தால் நான் சாப்பிடமாட்டேன்.” என்றார் அகோரி.

சிறுதொண்டர் எதுவும் பேச முடியாமல் நின்றார்.

“என்ன யோசிக்கிறாய். உன்னால் எனக்கு உணவு தர முடியாதல்லவா. அதனால்தான் சொல்கிறேன். இங்கிருந்து போய்விடு.” என்றார் அகோரி.

“அப்படியில்லை சுவாமி. உங்கள் உணவுக்கு ஏற்பாடு செய்கிறேன்.”

“அப்படியென்றால் நான் இங்கேயே இருக்கிறேன். நான் கேட்ட உணவுக்கு ஏற்பாடு செய்த பிறகு வந்து கூப்பிடு. நான் உனக்காக இங்கேயே காத்திருக்கிறேன்.” என்றார் அகோரி.

யோசனையோடு கோயிலில் இருந்து வீட்டுக்கு வந்தார் சிறுத்தொண்டர்.

அகோரி கூறியதை அனைத்தும் ஒன்றுவிடாமல் தன் மனைவியிடம் சொன்னார். “அகோரி கேட்ட உணவு நம்மால் தரமுடியுமா.? உன் மகனை கொடு நான் சமைக்க வேண்டும் என்று எந்த பெற்றோர்களிடமும் நாம் கேட்கமுடியும்.? அப்படியே கேட்டாலும் அது பெரும் பாவத்தை அல்லவா நமக்கு சேர்க்கும். அகோரி ஏன் நம் வீட்டிற்கு உங்களை தேடி வந்தார்?. வந்தவர் எதற்காக இப்படியெல்லாம் கேட்கிறார்?. உங்கள் சிவதொண்டில் பாதகம் விளைவிக்க விதி விளையாடுகிறதோ?. இனி என்ன செய்ய போகிறீர்கள்?.” என்றாள் திருவெண்காட்டு நங்கையார்.

“நீ சம்மதித்தால் என் சிவதொண்டுக்கு எந்த பங்கமும் வராது“ என்ற சிறுத்தொண்டர், “நம் பிள்ளையை அந்த அகோரிக்கு உணவாக படைக்கலாம். நீ இதற்கு சம்மதிப்பாயா?.“ என்றார்.

“உங்கள் கேள்விக்கு நம் பிள்ளைதான் பதில் சொல்ல வேண்டும்.” என்றாள் திருவெண்காட்டு நங்கையார்.

பள்ளிக்கு சென்றிருந்த மகன் சீராள தேவனை அழைத்து வந்தார்கள். அவனிடம் விஷயத்தை சொன்னார்கள். “உங்கள் விரும்பமே எனது விருப்பம்” என்றான்  தயக்கம் இல்லாமல்.

சிறுதொண்டரின் வாரிசு, சிவபக்தியில் தன் தந்தைக்கு குறைந்தவனில்லை என்பதை நிரூப்பித்தான். மகன் வெட்டப்பட்டான். பிள்ளைகறியை நன்றாக கழுவி சமைக்க ஆரம்பித்தாள். தலை கறியை அகோரி சாப்பிட மாட்டார் என்ற எண்ணத்தில் தலைகறியை சமைக்காமல் தனியாக எடுத்து வைத்தாள்.

சமையல் தயாராகிவிட்டது. நீங்கள் சிவதொண்டரை அழைத்து வாருங்கள் என்றாள் தன் கணவரிடம் திருவெண்காட்டு நங்கையர்.

கணபதீஸ்வரர் திருக்கோயிலுக்கு விரைந்தோடி வந்தார் சிறுத்தொண்டர். அகோரியை வணங்கி வீட்டுக்கு அழைத்து வந்தார்.

மகன் எங்கே? 

வாழையிலையின் முன்பு அமர்ந்தார் அகோரி. இலையில் பிள்ளைகறி இருப்பதை கண்டார். அவர் முகம் மாறியது.

“சிறுத்தொண்டனே. என்னை ஏமாற்றுகிறாயா. எங்கே தலைகறி.? பசியில் எனக்கு முன்னதாகவே சாப்பிட்டு விட்டீர்களா?” என்றார் கோபமாக அகோரி.

“சிவசிவா.. அப்படியில்லை சுவாமி. தலைகறி நீங்கள் சாப்பிட மாட்டீர்கள் என்று நினைத்து தனியாக வைத்திருக்கிறோம்.” என்றார் சிறுத்தொண்டர்.

“நாம் அதையும் சாப்பிடுவோம். கொண்டு வா.” என்றார் அகோரி.

பணி பெண்ணான சந்தன நங்கையார், சமையலறைக்கு சென்று உடனடியாக தலைகறியை சமைத்து எடுத்துவந்து இலையில் பரிமாறினாள். அகோரி சாப்பிடாமல் இருந்தார்.

“சுவாமி. ஏதேனும் குறையா.? ஏன் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்.” என்றார் சிறுத்தொண்டர்.

“எனக்கும் உன்னை போல் ஒரு பழக்கம் இருக்கிறது. நான் சாப்பிடும் போது என் அருகில் ஒரு சிவதொண்டரையும் அமர வைத்து அவருடன் சாப்பிடுவது என் வழக்கம். நீ போய் ஒரு சிவதொண்டரை அழைத்து வா.” என்றார் அகோரி.

“சுவாமி. ஏனோ தெரியவில்லை இன்று ஒரு சிவதொண்டரையும் காண முடியவில்லை. இறைவன் அருளால் நான் சிவதொண்டரான தங்களை மட்டும்தான் இன்று தரிசித்தேன்.” என்றார் சிறுதொண்டர்.

“ஓ அப்படியா. பரவாயில்லை. நீயும் சிவதொண்டன்தானே. வா. வந்து அமரு. நீயும் என்னுடன் சாப்பிடு.” என்றார் அகோரி.

அகோரியின் அருகில் அமர்ந்தார் சிறுத்தொண்டர். அவருக்கு வாழையிலையில் உணவு பரிமாறினாள் திருவெண்காட்டு நங்கையார்.

சிறுத்தொண்டர் உணவில் கை வைக்கும் போது, அவரின் கையை பிடித்து தடுத்தார் அகோரி.

“ஆமாம். உனக்கு ஒரு மகன் இருப்பதாக கேள்விப்பட்டேனே… எங்கே அவன். அவனையும் அழைத்து வா. ஒன்றாக சாப்பிடுவோம்.” என்றார் அகோரி.

“சுவாமி..அவன் வர மாட்டான்.” என்றார் சிறுத்தொண்டர்.

“ஏன் வர மாட்டான். போய் கூப்பிடு வருவான்.” என்றார் அகோரி.

தங்கள் துக்கத்தை மறைத்துக்கொண்டு வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார்கள் சிறுத்தொண்டரும் அவர் மனைவி திருவெண்காட்டு நங்கையாரும், பணிப் பெண் சந்தன நங்கையாரும்.

“வெளியே நின்று வாயை மூடிக்கொண்டிருந்தால் எப்படி?. வாய் திறந்து உன் மகனை கூப்பிடு வருவான்.“ என்று வீட்டுக்குள் இருந்தபடி அதட்டினார் அகோரி.

சிறுத்தொண்டரும், அவருடைய மனைவியும், “மகனே சீராள தேவா.. ஓடிவா. சிவதொண்டர் உன்னை காண அழைக்கிறார்.” என்று கதறினார்கள் சிறுத்தொணடரும் அவர் மனைவியும்.

அப்போது, “இதோ வந்துவிட்டேன் அம்மா.” என்று குரல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கி திரும்பினார்கள்.

மகன் சீராள தேவன் எங்கிருந்தோ ஓடிவந்தான். தன் தாய்-தந்தையை கட்டி அணைத்துக்கொண்டான்.

சிறுத்தொண்டருக்கும் அவர் மனைவிக்கும், பணிபெண்ணுக்கும் தாங்கள் காண்பது கனவா நிஜமா என்றே நம்ப முடியவில்லை. வெட்டி கறியாக சமைக்கப்பட்ட மகன், உயிருடன் வந்து நிற்பதை கண்டு ஆனந்தம் அடைந்தார்கள். அவர்களின் துக்க கண்ணீர், ஆனந்த கண்ணீராக மாறியது. மகனை தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் ஓடி வந்தார்கள்.

வீட்டுக்குள் அகோரி இல்லை. அவருக்கு சமைக்கப்பட்ட பிள்ளைகறியும் இல்லை. மீண்டும் வெளியே வந்து அகோரியை தேடினார்கள்.

சிவதரிசனம்  

அப்போது வானத்தில் சிவபெருமானும் அன்னை பார்வதிதேவியும் ரிஷப வாகனத்தில் தோன்றினார்கள்.

“சிறுத்தொண்டனே. அகோரியாக வந்தது நாமே, உன் சிவதொண்டு உலகறியவே இச்சோதனை தந்தோம். நம் தொண்டர்களில் சிறந்தவன் நீ என்பதை அனைவரும் தெரிந்துக் கொள்வார்கள். உனக்கும் உன் மனைவி திருவெண்காட்டு நங்கையாருக்கும், மகன் சீராள தேவனுக்கும், பணிப்பெண்ணான சந்தன நங்கையாருக்கும் நாம் அருள் புரிந்தோம். எல்லா வளங்களையும் பெறுவீர்களாக” என்று ஆசி கூறினார்.”

இறைவனை நம்பினால் சோதனைகள் யாவும் கடந்து வந்துவிடலாம். இறைவன் தரும் சோதனைகளை அனுபவங்களாக தாங்கினால், ஒருநாள் உலகபுகழும் கிடைக்கும். பொறுமை என்ற வரத்தை எல்லோருக்கும் தந்தே இருக்கிறார் இறைவன். அந்த வரத்தை நாம்தான் பயன்படுத்த வேண்டும். இன்னல்களை கண்டு மனம் கலங்காமல் பொறுமை என்கிற வரத்தை பயன்படுத்தினால், நீங்காத பெருமை சேரும் என்ற உண்மையை நமக்கெல்லாம் உணர்த்தினார் பரஞ்சோதியார் என்கிற சிறுத்தொண்ட நாயனார்.  

அடுத்து நாம் தெரிந்து கொள்ள இருப்பது கண்ணப்பர் நாயனார் சிறப்பு.

இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்.

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here

 © 2011 bhakthiplanet.com  All Rights Reserved

 

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »