Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

உயர்வான வாழ்க்கையை தரும் குறுங்காலீஸ்வரர்

நிரஞ்சனா

குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் , கோயம்பேடு- சென்னை  

ஒருவர் சொல்வது அத்தனையும் உண்மை என்று எவ்வளவுதான் எடுத்து சொன்னாலும் அதை கேட்பவர்கள் சிலர் அந்த நபர் சொல்வது பொய் என்று வாதாடுவார்கள். இந்த மனோபாவம் சிலருக்கு இருக்கிறது. அப்படிபட்ட நபர்களிடத்தில் இருந்து சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல கடவுளும் தப்பமுடியாது என்ற உண்மையை  சீதாபிராட்டியின் சரித்திரத்தை படித்தாலே தெரிந்து கொள்ளலாம்.

ஆம். இராவணால் கடத்தப்பட்டு கணவர் ஸ்ரீ ராமசந்திரனால் போராடி மீட்கப்பட்டு, தாம் உத்தமி என்று தீயில் இறங்கி நிரூபித்தும், சீதையின் அருகில் கூட நிற்க தகுதியில்லாத ஒருவன் சீதையின் கற்பை சந்தேகப்பட்டு பேசினான். இதனால் சீதை அடைந்த மனவருத்தம் கொஞ்சம் அல்ல.

ஆதரவு தேடிய சீதை

அயோத்தியில் ஸ்ரீராமர் சிம்மாசனத்தில் அமர்ந்தவுடன் நாட்டுபிரச்சினையை பார்ப்பதற்குள் கற்பவதியாக இருந்த சீதையை பற்றி ஒருவன் அவதூறாக பேசினான். அதனால் இராமர் சீதையை மீண்டும் பிரிய நேர்ந்தது. இதனால் சீதாபிராட்டியார் வனவாசம் சென்றார். கற்பவதியாக இருந்த சீதாதேவியை தன் மகளை போல் கருதிய  வால்மீகி முனிவர், தன் ஆசிரமத்தில் தங்க வைத்தார். லவன், குசன் என்ற இரண்டு அழகான ஆண்குழந்தைகளை பெற்றெடுத்தாள் சீதை.  

தாய் சீதை குழந்தைகள் மேல் அதிக பாசம் காட்டியதால் பிள்ளைகளுக்கு தந்தையின் ஞாபகம் வரவில்லை. அதனால் தங்கள் தந்தையை பற்றி அறிந்துகொள்ள விரும்பாமல் வளர்ந்தார்கள்.

ஒருசமயம், ஸ்ரீஇராமர் அசுவமேத யாகம் நடத்த நினைத்தார். அசுவமேத யாகம் செய்ய வேண்டுமானால்  அந்த மன்னன்,  ஒரு குதிரையை அண்டை நாடுகளுக்கு அனுப்புவான். அந்த மன்னனுடன் போரிட விரும்பாத அண்டைநாட்டு அரசர்கள் அந்த குதிரையை தமது நாட்டில் உலவ விடுவர். அப்படி இல்லாமல் அவ்வூர் அரசன் அந்த குதிரை பிடித்து கட்டிவிட்டால், அந்த நாட்டின் மேல் போர் புரிந்து அந்த நாட்டை வென்ற பிறகுதான் அசுவமேத யாகம் செய்ய வேண்டும் என்பது யாகவிதி.

அதனால் அசுவமேத யாகம் செய்ய விரும்பிய இராமர், தன் குதிரையை அனுப்பினார். அந்த குதிரை,  இராமரின் பிள்ளைகளான லவனும், குசனும் வாழ்ந்த காட்டுபகுதிக்கு வந்தது.  இராமரின் பிள்ளைகள் அந்த குதிரையை பிடித்துக் கட்டினார்கள். இதனால் ஸ்ரீஇராமர், தன் குதிரையை பிடித்துக்கட்டியவர்கள் தம்முடைய பிள்ளைகள் என்று அறியாமல் போர் படையை அனுப்பினார்.

ஆனால் இராமர் அனுப்பிய போர்படை தோல்வியடைந்தது. இதை அறிந்த இராமர், அவரே நேரடியாக வந்து லவன்-குசனுடன் போரிட்டார். ஆனால் போர் முடிவதாக இல்லை. இதை அறிந்த வால்மீகி முனிவர், லவ-குசனிடம், “ஸ்ரீ இராமசந்திரனே உங்கள் தந்தை” என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.

ஒருவர் தெரிந்து விஷம் குடித்தாலும், தெரியாமல் விஷம் குடித்தாலும் விஷம் உடலுக்கு சென்றதும் வேலை செய்கிறது. அதுபோலதான் வால்மீகி முனிவர் லவ-குசனிடம், “தந்தை என்று நீங்கள்  அறியாமல் போர் செய்து இருந்தாலும் உங்கள் மீது பித்ருதோஷம் படிந்துவிட்டது. அதனால் நீங்கள் சிவபெருமானை வழிப்படுங்கள்.” என்றார். 

வால்மீகி முனிவரின் உபதேசத்தின்படி தாங்கள் வசித்த காட்டிலேயே ஒரு பகுதியை தேர்தெடுத்து, அந்த இடத்தில் சிவலிங்கம் அமைத்து பூஜை செய்தார்கள். ஆனால் லிங்கம் பெரியதாக இருந்ததால் அந்த இரு குழந்தைகளால் சிவலிங்கத்தை பூஜிக்க முடியவில்லை. சிவபூஜையின் போது உயரம் எட்டாமல் இந்த இரு குழந்தைகளும் சிரமப்படுவதை கண்ட சிவபெருமான், லவ-குசன் ஆகிய இருவரும் பூஜிக்க வசதியாக தன் சிவலிங்க உயரத்தை குறுகிக் கொண்டார். அதனால் “குறுங்காலீஸ்வரர்” என பெயர் பெற்றார் ஈசன். இதன் பிறகு லவன் – குசன் மகிழ்ச்சியுடன் சிவலிங்கத்தை பூஜித்து தங்களுடைய பித்ருதோஷத்தை நீக்கி கொண்டார்கள்.

கோவில் உருவான கதை.

காலத்தால் லவ-குசனால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம், காற்றாலும் மழையாலும் பூமிக்குள் புதைந்தது. மக்கள் இந்த பகுதியில் நடமாட தொடங்கினார்கள். சோழ மன்னர் ஒருவர் இந்த இடத்திற்கு தேரில் வந்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு பெரிய மேட்டில் தேரின் சக்கரம் ஏற முடியாமல் திணறி ஏறிச் சென்றது. அடுத்த விநாடியே அந்த மேடான இடத்தில் ரத்தம் வெளியேறியது.

பூமியில் இருந்து ரத்தம் வெளிவருவதை கண்ட அரசர், அந்த இடத்தை பக்குவமாக தோண்டிபார்க்க தன் காவலர்களுக்கு உத்தரவிட்டார். அந்த இடத்தை தோண்டியபோது சிவலிங்கம் வெளி்ப்பட்டது. அதனால் அந்த இடத்திலேயே சிவாலயம் கட்டினார் அரசர்.

பித்ருதோஷம் போக்கும் ஸ்தலம்

பொதுவாக திருமணதடை, குழந்தைபாக்கியம் இல்லாமை போன்ற காரணங்களுக்கு பித்ருதோஷம்தான் என்கிறது சாஸ்திரம். அந்த பித்ருதோஷத்தை போக்கும் ஸ்தலம் இந்த குறுங்காலீஸ்வரர் ஆலயம்.

இந்த ஆலயத்திற்கு வந்து இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்தால் பித்ருதோஷம் நிங்கும். திருமணதடை விலகும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும்.

மரத்தின் ஆணிவேர் உறுதியாக இருந்தால் அந்த மரத்திற்கும் ஆயுள் அதிகம். அதுபோல, ஒரு குடும்பத்தில் நிம்மதி இருந்தாலே மற்ற வேலைகளில் மனம் ஈடுபடும் இதனால் உயர்வான வாழ்க்கை அமையும். அந்த உயர்வான வாழ்க்கையை தருபவர் குறுங்காலீஸ்வர். இவரை வணங்கி மகிழ்ச்சியை பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here

© 2011 bhakthiplanet.com  All Rights Reserved 

Posted by on Nov 28 2011. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், சிவன் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »