ஹரி ஓம் – அறிவோம்! புதிய பகுதி ஆரம்பம்
ஹரி ஓம் – அறிவோம்!
புதிய பகுதி
விஜய் கிருஷ்ணாராவ்
எதற்கெடுத்தாலும் டென்ஷன்-டென்ஷன் என்கிறோமே, எனக்கு தெரிந்து டென்ஷன் ஆகாத தெய்வம் விநாயகர் மட்டும்தான். அன்பே சிவம் என்றாலும் சிவபெருமான் கோபக்காரர். காக்கும் கடவுள் என்று மகாவிஷ்ணுவை சொன்னாலும், அவதாரம் எடுத்து வந்து அழிப்பார். முருகப்பெருமான் யுத்த கடவுள். இப்படி எந்த கடவுளை நீங்கள் கவனித்தாலும் அவர்கள் ஒருவிதத்தில் கோபம்கொண்டவர்கள்தான். ஆனால் விநாயகப்பெருமான், “டேக் இட் ஈசி” என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதுபோல, எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வார். அவருக்கும் கோபம் வரும். ஆனால் அதை அவர் கோபமாக செய்ய மாட்டார். வேடிக்கையாக செய்து முடிப்பார்.
எதை எப்படி செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். நமக்கெல்லாம் தெரிந்த “ஞானப் பழம்” கதை சம்பவமே ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இப்படி நிறைய இருக்கிறது. அவ்வையின் வாழ்க்கையில் இப்படிதான் ஒரு சம்பவம். அது – 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர், தம் பூலோக கடமை முடிந்து கைலாயம் புறப்படுகிறார். அவரின் நண்பரான சேரமான் பெருமானும் உடன் வர, சுந்தரர் இறைவன் அனுப்பிய வெள்ளை யானையிலும், சேரமான் பெருமான் குதிரையிலும் ஆகாய மார்க்கமாக புறப்பட்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். அப்போது அந்த சமயம் விநாயகர் வழிப்பாட்டில் இருந்த அவ்வைக்கு இந்த காட்சி தெரிகிறது.
உடனே சிவபெருமானை காண சுந்தரரையும், சேரமான் பெருமானையும் பின்தொடர்ந்து கைலாயம் அடைய வேண்டும் என்கிற விருப்பத்தால், விநாயகர் வழிப்பாட்டை அவசர அவசரமாக செய்கிறார் அவ்வை. இதனை உணர்ந்த விநாயகப் பெருமான், “அவ்வையே… பதறாதே. நான் இருக்கிறேன் அல்லவா. நீ அமைதியாக பூஜை செய்.” என்றார். அவ்வை தன் தவறை உணர்ந்து விநாயகரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் முறையாக வழிப்பாட்டை தொடங்கி செய்து நிறைவு செய்கிறார். விநாயகப் பெருமானும் அவ்வைக்கு தந்த வாக்குக்கு ஏற்ப, கைலாயத்தை சுந்தரரும், சேரமான் பெருமானும் அடைவதற்கு முன்னதாகவே, சிவபெருமான்-அன்னை பார்வதியின் முன்பாக அவ்வையை அழைத்து வந்து சேர்க்கிறார் விநாயகப் பெருமான் அவ்வை, சிவ-பார்வதியை வணங்குகிறார். பிறகு சுந்தரரையும் சேரமான் பெருமானையும் வரவேற்கிறார் அவ்வை. தங்களுக்கு முன்னதாகவே சிவகைலாயத்தில் அவ்வை நிற்பதை கண்ட சுந்தரரும் – சேரமான் பெருமானும் இது விநாயகப் பெருமானின் திருவருள் என்று வியந்து போற்றுகிறார்கள். இப்படியாக நமக்கு இஷ்ட தெய்வம் எதுவானாலும் நம் கஷ்டத்தை தீர்க்கும் முதல் தெய்வம் விநாயகப் பெருமான்.
எப்போதும் அதிகம் சோதிக்கப்படுவது நாத்திகனை விட ஆத்திகன்தான்.
“விழுந்து விழுந்து கும்பிட்டேன் எந்த பயனும் இல்லை” என்று பலர் புலம்புவதை பார்க்கிறோம். விழுந்து விழுந்து கும்பிடுவதை விட விரும்பி கும்பிடுவதைதான் இறைவன் விரும்புகிறான். நன்மையும்-தீமையும், இன்பமும்-துன்பமும் இப்படி சகலமும் நமக்கு தருபவன் இறைவன். “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பார்கள். அதாவது- இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இறைவன் கூட காரணமில்லை. அதற்கு நாமேதான் காரணம் என்பார்கள். அதுவும் கூட உண்மைதான்.
துன்பம் எல்லோருக்கும் வரும். அதில் மீண்டு வருவதற்கு இறைவனின் அருளாசி வேண்டும். இறைவனின் அருள் இருக்கிறது என்று சொன்னால், நமக்கு எந்த தன்பம் வந்தாலும் தொலைந்து விட மாட்டோம். நமக்கு இறைவன் துன்பம் தருகிறானே என்று வெறுத்துவிடக் கூடாது. நம்மை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கே துன்பம் வருகிறது என எண்ண வேண்டும். ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது.? “நீ எப்பேர்ப்பட்ட மனிதனாக இருந்தாலும் சரி, உனக்கும் ஏழரை-அஷ்டம சனி போன்ற கேடு காலங்கள் வரும். அப்போது நீ நாட வேண்டிய ஒரே துணை, தெய்வம்.” இப்படி ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
சோதனை காலம் வரும் போதுதான் நமக்கு அதுவரையில் தெரியாத உண்மைகள் தெரிகிறது. புரியாத தத்துவங்கள் புரிகிறது. நம் நண்பன் யார்? – விரோதி யார்? – துரோகி யார்? – உறவினன் யார்? – வஞ்சகன் யார்? – நல்லவன் யார்? இப்படி பல “யார்”களுக்கு விடை கிடைக்கிறது.
நமக்கு துன்பம் வரும் போதோ அல்லது நாம் விரும்புகிற ஒரு விஷயம் கிடைக்காத போதோ நமக்கு இறைவன் மீது மிக பெரிய வெறுப்பு உண்டாகிறது. “எவ்வளவு விரும்பினேனே.. எனக்கு இறைவன் அதை கிடைக்காமல் செய்து விட்டானே” என்று கதறுகிறோம் – புலம்புகிறோம். இதனால் இறைவனை வெறுத்து விடுகிறோம். ஆனால் உண்மையில் நமக்கு எதை தர வேண்டும் என்று இறைவனுக்கு தெரியும். அதை மட்டும்தான் அவன் தருவான். ஒருவன், தான் விரும்புகிற எல்லாவற்றையும் அடைகிற போது, அவை இறைவனால் தமக்கு தரப்பட்டது என்பதை மறந்து, தன்னுடைய திறமை என நினைத்துக் கொள்கிறான். அதே திறமைசாலி, வேறு ஒரு சந்தர்ப்பத்தில் தோல்வியை சந்திக்கும் போது, “இறைவன் என்பவன் இல்லை” என்று ஆத்திரத்தில் புலம்புகிறான்.
இதனால் தெரிய வேண்டியது என்ன? திறமை என்பது, இறைவன் அந்த சமயத்தில் தருகிற வரம். உண்மையில் இறைவன் விரும்பிய போது அது அவனுக்கு கிடைத்தது. இறைவன் விரும்பாத போது அது அவனுக்கு கிடைக்கவில்லை. இதுதான் உண்மை நிலை.!
(இன்னும் அறிவோம்)
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved