வாழ்வில் நல்ல மாற்றமும் – ஏற்றமும் தரும் திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர்
நிரஞ்சனா
அருள்மிகு திருவேட்டீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி – சென்னை.
சிவபூஜை செய்து திருமண பாக்கியம் பெற்ற ஸ்ரீமகாலஷ்மி
ஸ்ரீமந் நாராயணனை திருமணம் செய்ய பல முயற்சி எடுத்தும் அத்தனை முயற்சியும் சரியான பலன் கிடைக்காததால், தமது விருப்பம் சிவ வழிபாடு செய்தால் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் ஒரு செண்பக மலர் காட்டில் சிவபூஜை செய்து தவம் இருந்தாள் ஸ்ரீமகாலஷ்மி. தவத்தையும் வழிபாட்டையும் ஏற்ற சிவபெருமான் ஸ்ரீலஷ்மிதேவிக்கு காட்சி தந்து திருமணம வரம் அருளினார். இதன் பிறகுதான் ஸ்ரீமகாவிஷ்ணுவை ஸ்ரீமகாலஷ்மி திருமணம் செய்தார்.
திருவேட்டீஸ்வரர் உருவான கதை
அர்ஜுனன் பல திருதலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார். அப்போது செண்பக காடு வழியாக வந்த போது ஒரு பன்றி வித்தியாசமான நிறத்தில் இருப்பதை கண்டார். அர்ஜுனன் அந்த பன்றியை வேட்டையாட எண்ணி அம்பு ஏய்தார். அம்புபட்டு பன்றி இறந்து விழுந்த இடத்தை நெருங்கி சென்று பார்த்த போது அந்த பன்றியின் உடலில் இரண்டு அம்புகள் குத்தி இருந்ததை கண்டார் அர்ஜுனன். அப்போது எங்கிருந்தோ வந்த வேடன் ஒருவன், “இந்த பன்றியை நான்தான் குறி வைத்து வேட்டையாடினேன். ஆகவே இது எமக்கே சொந்தம்.” என்றான்.
“வேடனே இந்த பன்றி நான் ஏய்த அம்புபட்டுதான் இறந்தது. பிறகே உன் அம்பு இதன் உடலில் தைத்துள்ளது. ஆகவே முதலில் வேட்டையாடிய எமக்குதான் இந்த பன்றி சொந்தமாகும்.” என்றான் அர்ஜுனன். இதனால் கோபம் அடைந்த வேடன் ஒரு அம்பை எடுத்து அர்ஜுனனை குறி பார்த்தான்.
தன்னை இந்த வேடன் கொன்று விடுவானோ என்ற பயத்தில் அவசர அவசரமாக அர்ஜுனன், தானும் ஒரு அம்பை வேடனின் தலையை குறி பார்த்து ஏய்தான். அர்ஜுனன் ஏய்த அம்பு வேடன் தலையில் பட்டு ரத்தம் வடிந்தது.
அடுத்த விநாடியே வேடன் சிவபெருமானாக தோன்றினார். ஈசனை கண்ட அர்ஜுனன் பதறினான். “தங்களை காயப்படுத்திவிட்டேனே” என்று கண்ணீருடன் வருந்தினான். “கவலை வேண்டாம் அர்ஜுனா. காரணம் இல்லாமல் எதுவும் நடப்பது இல்லை. இதுவும் ஒரு காரணத்தால்தான் நடந்திருக்கிறது. நீ அடுத்த பிறவியில் கண்ணப்பராக பிறந்து என்னை வணங்கி வழிபட்டு என்றென்றும் உன் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.” என்று அர்ஜுனனுக்கு ஆசி வழங்கினார் சிவபெருமான்.
சிவன் ரத்தம் கொட்டிய இடத்தில் சிவலிங்கம் உருவானது. சிவ பெருமான் வேடன் வடிவில் தோன்றியதாலும், ஸ்ரீமகாலஷ்மி சிவபூஜையும் தவமும் செய்த இடம் என்பதாலும் “திருவேட்டீஸ்வரர்” என்று இந்த ஆலயத்திற்கு பெயர் உருவானது.
கோவிலின் சிறப்பு
அர்ஜுனர் மறுபிறவில் கண்ணப்பராக பிறந்து, சிவனுக்கு தன் கண்ணயே தந்து தன்னுடைய பக்தியை உலகத்திற்கு தெரியப்படுத்தியதால் அவர் “கண்ணப்ப நாயனார்” என்று 63 நாயன்மார்களில் ஒருவராக புகழ் பெற்றார். இதன் காரணமாக இந்த ஸ்தலத்தில் கண்ணப்ப நாயனார், உற்சவராக இருந்து பக்தர்களின் குறைகளை சிவபெருமானிடம் எடுத்து சொல்லி பக்தர்களின் குறைகளை தீர்த்து வருகிறார்.
என்னதான் இறைவன் நமக்கு அருள் செய்பவராக இருந்தாலும் எப்போதும் இறைவன் நமக்கு அருள் செய்ய இறைவனின் அடியார்கள் ஆசியும் வேண்டும். அதனால் கண்ணப்ப நாயனார் போன்ற தூய்மையான அடியார்களையும் நாம் வணங்க வேண்டும்.
சூரியனையும், சந்திரனையும் விழுங்க முயற்சிப்பது போல் சுவாமி சன்னதி எதிரேயுள்ள மண்டபத்தின் மேல் சுவரில் காட்சி தருகிறார்கள் இராகு – கேது. இத்திருதலத்தில் அமைய பெற்றுள்ள ராகு-கேது பகவான்களை வணங்கினால் ஜாதகத்தில் உள்ள காலசர்ப்ப தோஷம், நாகதோஷம் நீங்கும்.
சிவபெருமானை முதன் முதலில் இங்கு வணங்கி தன் மனகுறை நீங்கி திருமணம் பாக்கியம் பெற்றதால், இந்த ஆலயத்தில் ஸ்ரீ மகாலஷ்மி சிவனுக்கு தன் கையில் கலசம் ஏந்தி சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல், ஒரு தூணில் வடிவம் அமைய பெற்று பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.
எப்படி தண்ணீர் குழாயில் அடைப்பு இருந்தால் தண்ணீர் தொட்டி நிறைய நீர் இருந்தாலும் குழாயில் தண்ணீர் வராதோ, அது போல் என்னதான் திறமை இருந்தாலும் ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தால் சந்தோஷம்-முன்னேற்றம் தடைபடும். திருமண தடை விலகவும், மகிழ்ச்சியை பெறவும், அப்பன் திருவேட்டீஸ்வரருக்கு வில்வ மாலையும் விபூதி காணிக்கையும் தந்தால் போதும். ஈசனின் ஆசியை பெறலாம்.
அத்துடன் உங்களால் முடிந்தால் வஸ்திர தானமும் செய்யலாம். சிவனை தேடி அன்னை செண்பகவனத்திற்கு வந்ததால், இங்குள்ள அம்பிகை “செண்பகாம்பிகை” என்ற பெயர் பெற்றார். செண்பகாம்பிகைக்கு வாசனை மலர் மாலையும், மஞ்சள்-குங்குமமும் தந்தால் சுபிக்க்ஷம் ஏற்படும். அம்மை-அப்பனை வணங்கி வாழ்வில் நல்ல ஏற்றமும், நல்ல மாற்றமும் பெற்று சிறப்புடன் வாழ்வோம்.
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved