முருகம்மைக்கு அருளிய முருகப்பெருமான்
நிரஞ்சனா
சோழநாட்டில் குலதிலகர் செட்டியார் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் முருகபெருமானின் பக்தர். நல்ல குணம் படைத்த மனைவியும் பெற்றிருந்தார். “எல்லாம் செல்வங்கள் இருந்தாலும் மழழை செல்வம் இல்லையே” என்று மனம் வருந்தினார். இதனால் ஜோதிடர் ஒருவரை சந்தித்து, தங்களுக்கு குழந்தை பாக்கியம் இருக்கிறதா என்று கேட்டனர் குலதிலகர் தம்பதியினர்.
“உங்கள் ஜாதகப்படி குழந்தை பாக்கியம் இருக்கிறது. நீங்கள் முருகனை தொடர்ந்து வணங்குங்கள். சஷ்டியில் விரதம் இருந்து வந்தால் உங்களுக்கு நிச்சயம் முருகப் பெருமானின் பேரருளால் அழகான குழந்தைக்கு தாய்-தந்தையாகும் பாக்கியம் பெறுவீர்கள்”“ ஜோதிடர்.
ஜோதிடர் சொன்னது இறைவனின் அருள் வாக்காக எண்ணி மகிழ்ந்தார் குலதிலகர் செட்டியார்.
நம்பிக்கையுடன் சஷ்டியில் விரதம் இருந்தார்கள். இதன் பலனாக அழகான பெண் குழந்தைக்கு தாய்-தந்தையாகும் பாக்கியம் பெற்றனர்.
முருகனின் அருளால் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தைக்கு “முருகம்மை” என்று பெயர் சூட்டினார்கள். குழந்தை முருகம்மை மூன்று வயது இருக்கும் போதே “அம்மா-அப்பா” என்று உச்சரிப்பதை விட, “முருகா முருகா” என்றே சொல்லி வந்தாள். இதை எப்போதும் கேட்கும் அவளுடைய பெற்றோர் மகிழ்ந்தனர். “இந்த வயதினிலேயே குழந்தை தெய்வபக்தியுடன் இருக்கிறாள்” என்று முருகம்மையை பற்றி பெருமையாக பேசுவார்கள்.
முருகம்மைக்கு ஐந்து வயது வந்தவுடன் பள்ளியில் சேர்த்தார்கள். பள்ளிக்கு செல்லும் வழியில் அவள் எதிரே முருகனின் அடியார்களை கண்டால் அவர்களுக்கு தன்னிடம் இருக்கும் உணவை தந்து உபசரிப்பாள். சிறு வயதிலேயே அன்னதானம் போன்ற தர்மங்கள் செய்வதில் கர்ணனை போல திகழ்ந்தாள் முருகம்மை.
சூழ்ச்சிகாரர்களின் சதி
நாட்கள் மாதங்களாகி மாதங்கள் வருடங்களாகின. முருகம்மை திருமண வயதை அடைந்தாள். தன் மகளுக்கு சிறந்த இடத்தில் திருமணம் செய்து அனுப்ப வேண்டும் என்று எல்லா தந்தையை போலவே விரும்பினார் குலதிலகர் செட்டியார். சொந்தத்திலேயே வரன் தேடினார். ஆனால் சொந்தத்தில் இருப்பவர்களோ, “முருகம்மை இல்லற வாழ்க்கைக்கு ஒத்து வரமாட்டாள், அவள் முருகனின் பக்தை என்று சொல்லுவதை விட, முருகனின் மீது பைத்தியமாக இருக்கிறாள். எந்நேரமும் எந்த விஷயத்துக்கும் “முருகா, முருகா” என்று பைத்தியம் பிடித்தவள் போல் சொல்கிறாள். ஆகவே உன் மகளுக்கு சொந்தத்தில் வரன் தேடாதே. யாரும் மருமகளாக ஏற்க மாட்டார்கள். வெளியே தேடு” என்றார்கள் உறவினர்கள்.
வைரத்தின் அருமை கூழாங்கல் விற்பவனுக்கு தெரியுமா? முருகம்மையின் தூய்மையான பக்தியை புரிந்து கொள்ளாமல் அவளுக்கு பைத்தியம் என்றார்கள் சிலர்.
தேடி வந்த வரன்
முருகம்மையின் பக்தியையும் அவள் அழகை பற்றியும் அறிந்த தனஞ்சயன் செட்டி என்ற பெரும் வணிகன், தன் தாயை அழைத்துக் கொண்டு முருகம்மையை பெண் கேட்டு வந்தான். தனஞ்சயனின் குலம் கோத்திரம் ஜாதகம் ஒழுக்கம் போன்றவை சிறப்பாக இருப்பதை தெரிந்துக் கொண்ட குலதிலக செட்டியார், தம் மகள் முருகம்மையை தனஞ்சயனுக்கு திருமணம் செய்து தர ஓப்புக் கொண்டார். நம்மிடம் மாப்பிள்ளை கேட்ட குலதிலகருக்கு இப்படிப்பட்ட வசதியான இடத்திலிருந்து வரன் தேடி வருகிறதே, இதை எப்படியேனும் தடுக்க வேண்டும் என்று வயிற்றேரிச்சல் பிடித்தவர்கள், தனஞ்சயனிடமும் அவன் தாயாரிடமும் முருகம்மையை பற்றி இல்லாததும் பொல்லாததுமாக ஏதேதோ சொன்னார்கள். இறுதியாக முருகம்மை பைத்தியம் பிடித்தவள் என்றனர்.
இறைவன் தீர்மானித்துவிட்டதை தடுப்பார் யார்?
தனஞ்சயன் யார் சொல்வதையும் கேட்கவில்லை. முருகம்மை- தனஞ்சயன் திருமணம் போற்றதக்க வகையில் நடந்தது.
தென்றல் மாறியது
முருகம்மையின் இல்லற வாழ்க்கை தென்றல் போல் அமைதியாக சென்றுக் கொண்டிருந்தது. கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தார். மனைவி முருகம்மையை தன் உயிரை விட மேலாக நேசித்தார் தனஞ்சயன்.
ஒருவருடைய புகழ்-பெருமை-அருமை யாவும் உலகத்திற்கு தெரியவேண்டும் என்றால் அவர்கள் சோதனையை கடக்க வேண்டும். சோதனைகளை சந்தித்தவரே சாதனை செய்தவராகிறார். அதன்படி முருகம்மை வாழ்வில் மாற்றங்கள் உண்டானது. தனஞ்சயனின் வியபாரம் நஷ்டத்தை அடைந்தது. இதனால் வெளிநாடுகளில் தங்கி வணிகம் செய்ய நினைத்தார். முருகம்மையையும் உடன் அழைத்து செல்வது பாதுகாப்பாக இருக்காது என்றெண்ணி, வீட்டுக்கு காவலாகவும் வீட்டு வேலைகளை செய்ய உதவியாகவும் இருக்க முருகம்மையின் முருக பக்திக்கு ஏற்ப, “முருகன்” என்ற பெயர் கொண்ட பணியளாரை வேலைக்கு நியமித்து வெளிநாடு சென்றார் தனஞ்சயன்.
முருகம்மை வழக்கம் போல முருகா-முருகா என்று முருகப் பெருமானை நினைத்து அழைக்கும் போதெல்லாம் வேலையாள் முருகன் ஓடோடி வந்து நின்று, “அம்மா என்ன வேண்டும்?” என்று கேட்டு நிற்பான். நான் “என் அப்பன் முருகனை அழைத்தேன்” என்பார் முருகம்மை.
முருகம்மை எந்த நேரமும் முருகா-முருகா என்று அழைப்பதை பற்றி பொறமை குணம் கொண்ட அக்கம்பக்கத்தினர் தவறாக பேச தொடங்கினர். தன் வேலைகாரன் பெயரைதான் இவள் இரவும்-பகலும் சொல்லி கொண்டிருப்பதாக பேசினார்கள்.
என்ன செய்வது நாக்கு இல்லாத நரம்பு, வரம்பு இல்லாமல்தானே பேசும். ஒருசமயம் கண்ணனை பார்க்க துரியோதனனும் அர்ஜுனனும் வந்தனர். கண்ணன் துரியோதனிடம், “என் ஊரை சுற்றி பார்த்து வந்து எப்படி இருக்கிறது என்ச் சொல்” என் கேட்க, துரியோதனனும் அவ்வாறே சென்று பார்த்து திரும்பி வந்து சொன்னான்,“கிருஷ்ணா இந்த ஊரில் பொய்யர்களும் கொடுமைகாரர்களும் அதிகம் இருக்கிறார்கள்” என்றான். ஆனால் அர்ஜுனன் சொன்னான், “கண்ணா உன் ஊர் அழகாக இருக்கிறது. நிறைய மகான்களை பார்த்தேன். பசுமையான தோட்டங்களை பார்த்தேன். நோயற்ற மனிதர்களும், எல்லோரின் முகத்தில் மகிழ்ச்சியையும் பார்த்தேன்” என்றான். அவரவரின் நடத்தைபடியே இந்த உலகையும் பார்க்கிறார்கள் என்று இதன் மூலமாக நமக்கு உணர்த்தினார் கண்ணன்.
அதுபோல, முருகம்மையையும் தங்களை போல நினைத்து பேசிவிட்டார்கள் அயோக்கியர்கள். தனஞ்சயனின் உறவினர்களும், இப்படிதான் அவதூறு பரப்பினார்கள். ஒருநாள் தனஞ்சயன் பெரிய லாபத்தை சம்பாதித்து கொண்டு மகிழ்ச்சியுடன் நாடு திரும்பினார். கணவரை கண்டவுடன் மகி்ழ்ச்சியடைத்தார் முருகம்மை.
சிலநாட்கள் சென்றது. அயோக்கியர்கள் முருகம்மையை பற்றி தவறாக தனஞ்சயனிடம் சொன்னார்கள். “உன் மனைவி முருகா முருகா என்று நீ இல்லாத நேரத்தில் வேலைகாரன் பெயரைதான் இரவும் பகலும் சொல்லி கொண்டு இருந்தாள். நாங்கள் கேட்டால், முருகன் இல்லாமல் நான் இல்லை என்று தைரியமாக சொல்கிறாள். இது ஒரு குடும்ப பெண்ணுக்கு அழகா?” என்றனர்.
“இல்லை நீங்கள் நினைப்பது தவறு. அவள் “முருகா” என்று அழைப்பது அந்த முருகப் பெருமானைதான். அதனால் நீங்கள் இன்னொரு முறை இப்படி கேவலமாக பேசுவதை நிறுத்துங்கள். இல்லையென்றால் நான் உங்களை சும்மாவிட மாட்டேன். இது உங்களுக்கு நான் தரும் எச்சரிக்கை.” என்று கன்னத்தில் அறைவது போல சொல்லி துரத்தினார் தனஞ்சயன்.
ஆனால் சூழ்ச்சிகாரர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் முருகம்மையை பற்றி அநியாயமாக தனஞ்சயனிடம் அவ்வப்போது பழி சொல்லி வந்தார்கள். எறும்பு ஊற கல்லும் தேயும் என்பார்கள் அல்லவா. கல்லே தேயும் போது மனித மனம் தேயாதா என்ன? முருகம்மையை பற்றி இவர்கள் தவறாக பேச பேச, ஒருவேளை இவர்கள் சொல்வது உண்மையாக இருக்குமோ என்று சந்தேகப்பட ஆரம்பித்தார் தனஞ்சயன். அதனால் வேலைகாரன் முருகனை பணியில் இருந்து நீக்கினார் தனஞ்சயன்.
கணவரின் மனகுழப்பம் ஏதும் அறியாத முருகம்மை, எப்போதும் போல முருகா-முருகா என்று முருகப் பெருமானை நினைத்து போற்றி வந்தாள்.
“இனி முருகா என்று சொல்லாதே. நீ அப்படி சொல்வது எனக்கு பிடிக்கவில்லை” என்றார் தனஞ்சயன்.
“நான் இறைவனான என் முருகப் பெருமானின் நாமத்தைதான் உச்சரிக்கிறேன்.” என்று பலமுறை தன் கணவரிடம் விளக்கி சொன்னாலும் அதை நம்ப மறுத்தார் தனஞ்சயன்.
முருகா என்று சொல்வதை நிறுத்து என்று கணவர் சொல்லியும் முருகம்மை, “முருகா” என்று உச்சரிக்காமல் இருந்ததில்லை.
வெட்டபட்ட கை மீண்டும் ஒட்டிக் கொண்ட அதிசயம்
ஒருநாள் முருகம்மையின் மீது கடும் வெறுப்பில் இருந்தார் தனஞ்சயன். அந்த சமயம் பார்த்து வழக்கம் போல முருகனின் வழிபாட்டை முடித்த முருகம்மை, “முருகா முருகா என்று வலது கையில் பூஜை தட்டுடன் கந்தனை போற்றினாள். இதை கேட்ட தனஞ்சயனுக்கு வந்தது வெறி. ஆத்திரம் கண்ணை மறைத்தது. அறிவாலால் ஒரே வெட்டாக மனைவி முருகம்மையின் வலது கையை வெட்டினார். கையில் இருந்த பூஜை தட்டு தரையில் விழுந்தது. தரையில் விழுந்து பூஜை தட்டே அலறுவது போல சத்தம் எழுப்பியது. முருகம்மையின் வெட்டுப்பட்ட கை தரையில் விழுந்து துடித்தது.
“முருகா…. உங்களுக்கு என்ன ஆனது.? ஏன் முருகா என் மேல் இத்தனை கோபம்?” என்று அப்போதும் தன் கணவரை பார்த்து கதறலுடன், “முருகா முருகா” என்று முருகனின் நாமத்தை உசச்ரித்து கொண்டே கேட்டார் முருகம்மை.
“ச்சீ நிறுத்து வேஷக்காரி. உன் பக்தி உண்மையானால், முருகன் இருப்பது உண்மையானால் இப்போதே கூப்பிடு அவனை” என்றார் தனஞ்சயன்.
முருகம்மை வீட்டில் என்ன சத்தம் என்று எண்ணி கொண்டே அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தார்கள். முருகம்மையின் கை துண்டாக வெட்டுப்பட்டு தரையில் இருப்பதை கண்டு பதறினார்கள்.
“என் அப்பனே முருகா… நீ இருப்பது உண்மையென நான் அறிவேன். இவர்களும் அறியட்டும் வா. எனக்காக வா. மயில் மீதேறி வா. வடிவேலா வா.” என்று கதறி கண்ணீருடன் அழைத்தாள் முருகம்மை.
அதிசயம் நிகழ்ந்தது. மயில் வாகனத்தில் முருகம்மையின் முன் தோன்றினார் முருகப்பெருமான்.
இதை கண்ட தனஞ்சயனும், ஊர் மக்களும் அதிர்ந்து அதிசயத்து அப்படியே நின்றார்கள்.
“முருகா…. முருகா…. பார். உன் பக்தையின் நிலையை பார். துண்டிக்கப்பட்ட என் கரத்தை பார்.” என்று வலியால் துடித்தபடி அழுதாள் முருகம்மை.
“கலங்காதே முருகம்மை. உன்னுடைய துய்மையான பக்தியும், உன் பெருமையும் உலகறியவே இந்த நிகழ்வு.” என்று சொல்லி துண்டிக்கப்பட்ட முருகம்மையின் வலது கரத்தை மீண்டும் இணைத்து, தாம் வைத்தீஸ்வரரின் மகன் ஆறுமுகன் என்பதை நிருப்பித்தார் முருகப் பெருமான்.
“உன் கஷ்டங்கள் விலகியது. நீ அனைத்து பாக்கியங்களும் பெற்று மகிழ்வோடு வாழ்வாயாக.” என்று ஆசி கூறி மறைந்தார் முருகப் பெருமான்.
இந்த தெய்வீக நிகழ்வுக்கு பிறகு முருகம்மையை கண்கண்ட தெய்வமாக போற்றினர் மக்கள். முருகப் பெருமானின் கோயில்களுக்கு பல திருப்பணிகளை செய்து முருகம்மை முக்கியடைந்தார்.
“செம்மொழியான தமிழ் மொழிக்கு தலைவர் நம் முருகப் பெருமான். தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம் எனும் மூன்று இனம் உண்டு. மெல்லினத்தில் ஒரு எழுத்து- மு. இடையினத்தில் ஒரு எழுத்து – ரு. வல்லினத்தில் ஒரு எழுத்து – கு. இந்த மூன்றெழுத்தும் சேர்த்து பார்த்தால் முருகு என்று அமையும். முருகு என்றால் முருகனை குறிக்கும். அதனால் அவரை தமிழ் கடவுள் என்கிறோம்.” என்றார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.
முருகப்பெருமானை வணங்கினால் எல்லா நலன்களும் கிடைக்கும்.
“உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.”
கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved