Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

பைரவரை வணங்கினால் வெற்றி எதிலும் வெற்றி

நிரஞ்சனா

ஒருசமயம் பிரம்மன், சிவபெருமானை கண்டும் வணங்காமல் ஆணவமாக சென்று விடுகிறார். “மகாவிஷ்ணுவே மகேஸ்வரனை வணங்கிவிட்டு செல்கிறார். ஆனால் இந்த பிரம்மனின் கர்வத்தை பாருங்கள்“ என்று கைலாய மலையில் இருக்கும் தேவரிஷிகள் பேசி கொண்டார்கள். ஆனால் ஈசன், பிரம்மனின் செயலை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. இருந்தாலும், உலகமே வணங்கும் தம் கணவரை, பிரம்மதேவன் இப்படி அலட்சியம் செய்கிறாரே என்று மனம் வருந்தினார் அன்னை பார்வதிதேவி. தன் மனகவலையை தன் கணவரிடமும் சொன்னார் தேவி. இதனால் பிரம்மனை அழைத்த ஈசன், “உன்னை விட பெரியவர்களாக இருந்தாலும், சிறியவர்களாக இருந்தாலும் எவருக்கும் மரியாதை தர வேண்டும்.” என்று பிரம்மனுக்கு அறிவுரை சொன்னார்  சிவன்.

கிளி பிள்ளைக்கு சொல்லுவது போல் பிரம்மனுக்கு புத்தி சொன்னாலும் அதை காது கொடுத்து கேட்காமல் அங்கும் இங்குமாக பார்ப்பதும் சைகையை செய்து கொண்டே சிவனின் பேச்சை அலட்சியம் செய்தபடி இருந்தார் பிரம்மன்.

“சிவனே.. எமக்கும் எல்லாம் தெரியும். உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் ஐந்து தலைதான். அதனால் நீங்கள் எனக்கு எந்த அறிவுரை சொல்லியும் என் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் வீணாக்க வேண்டாம்” என்றார் பிரம்மன்.

பைரவர் உருவானார்

விதி யாரை விட்டது.? பிரம்மனின் பேச்சும் செயலும் ஈசனுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் தன் உடலில் இருந்து ஒரு சக்தியை வெளிப்படுத்தினார். அந்த சக்திக்கு “பைரவர்” என்று பெயர் வைத்தார். உடல் முழுவதும் திருநீறு பூசி, சர்பங்களை தன் உடலில் சூட்டி கொண்டும், பாதத்தில் சலங்கையை கட்டி கொண்டும், மண்டை ஓடுகளை மாலையாக அலங்கரித்து அணிந்து, சூலம், பாசம் வைத்து கொண்டு சிவந்த விகாரமான சடைகளை கொண்டவராக கோபம் நிறைந்தவராக இருந்தார் பைரவர்.

“அய்யனே… ஆணையிடுங்கள். சிவபெருமானை மதிக்காதவன் கதி என்னவாகும் என்பதை, பிரம்மனின் நிலையே ஒரு உதாரணமாக உலகுக்கு காட்டுகிறேன்.” என்றார் பைரவர்.

“ஐந்து தலை இருக்கிறது என்கிற ஆணவத்தில்தானே பிரம்மன் எம்மை அலட்சியம் செய்கிறான். போனால் போகட்டும் என்று விட்டால், பிரம்மனின் போக்கு பிரம்மனுக்கே அழிவை தந்திடும் போல இருக்கிறது. அதனால் பிரம்மனுக்கு ஆணவ புத்தியை தந்த, அவன் ஐந்தாவது தலையை மட்டும் எடுத்து விடு பைரவா” என்றார் பரமேஸ்வரர்.

“தங்கள் ஆணைபடி செய்வேன்.” என்று கூறிய பைரவர், பிரம்மனின் ஐந்து தலையில் இருந்து ஒரு தலையை தன் நுனி நகத்தால் மலரை பறிப்பது போல் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்தார். இதனால் பிரம்மனின் தலையில் இருந்து ரத்தம் வடிய ஆரம்பித்தது. பல மணிநேரம் ஆகியும் பிரம்மனின் உடலில் இருந்து வெளிவரும் இரத்தம் நிற்கவில்லை.

“என் ஆணவன் அழிந்தது. மன்னித்துவிடுங்கள்” என்று வலியால் துடித்து இறந்தார் பிரம்மன். சிவபெருமானின் விருப்பபடி பிரம்மனை மன்னித்து உயிர் தந்தார் பைரவர்.

“பைரவரே… நான் செய்த தவறுக்கு தண்டனையாக நீங்கள் என் தலையை கீரை கிள்ளுவது போல் கிள்ளி எறிந்தீர்கள். அந்த தலையை நீங்களே என்றும் உங்கள் கையில் வைத்து கொள்ள வேண்டும். உங்கள் கையில் இருக்கும் என் தலையை பார்ப்பவர்களுக்கு ஆணவத்தால் பிரம்மன் ஐந்து தலையில் ஒரு தலையை இழந்தான் என்று தெரிந்து கொண்டு, அவர்களும் என்னை போல் திருந்த வேண்டும்.” என்று பிரம்மன், பைரவரிடம் வேண்டிக் கொண்டதால், பிரம்மனின் மண்டை ஓட்டை பிக்ஷ பாத்திரமாக வைத்து கொண்டார். இந்த சம்பவத்தை கேள்விபட்ட தேவலோகமே பைரவரை கண்டு பயந்தது. சிவபெருமானால் உருவானதால் சிவபிள்ளையாக சிவபெருமானுக்கு மட்டுமே கட்டுப்படுபவராக திகழ்கிறார் பைரவர்.

விஷ்ணுபகவானுக்கு வந்த வினை

முன்னொரு சமயம், பைரவர் விஷ்ணுபகவானை பார்க்க வைகுண்டம் சென்றார். அப்போது அங்கு காவலுக்கு நின்றிருந்த பூத தலைவரான “விஷ்வக்ஸேனர் பைரவரை வைகுண்டத்தில் அனுமதிக்காமல் தடுத்தார். இதனால் கோபம் கொண்ட பைரவர், விஷ்வக்ஸேனரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து, அவரை உயிர் இழக்கச் செய்து, வைகுண்டத்தில் கோபமாக நுழைந்தார்.

விஷ்ணுபகவான் சயனித்திருந்தாலும் பைரவர் கோபமாக வருவதை அறிந்து அவசர அவசரமாக எழுந்து வரவேற்று மரியாதை செய்தார்.

“நான் வந்திருப்பதை ஞானத்தால் அறிந்தும் அதை பற்றி பெரியதாக நினைக்காமல் சயனித்து கொண்டிருந்தாயா? உன் காவலன் என்னை அலட்சியம் செய்ததை அறிந்தும் கண்டுக்கொள்ளாமல் இருந்த உன்னை என்ன செய்கிறேன் பார்.” என்று கூறிகொண்டே விஷ்ணுபகவானை நெருங்கினார் பைரவர்.

“பைரவா… உனக்கு ஏன் அவ்வளவு சிரமம். நானே என் தலையை அடித்து கொள்கிறேன்“ என்று கூறி தன் தலையை பலமாக அடித்து கொண்டார் பகவான். இதனால் அவருடைய தலை  இரண்டாக பிளந்தது. ரத்தம் நிற்காமல் வெளியேறியது. அதனால் விஷ்ணுபகவானின் உடலில் இருந்த சக்திகள் குறைந்து மயங்கி விழுந்தார்.

ஸ்ரீமந் நாராயணனின் தலையில் இருந்து வடியும் ரத்தத்தை தன் கையில் இருந்த பிரம்மனின் மண்டை ஓட்டில் பிடித்தார் பைரவர்.

தம் கணவரின் நிலை கண்டு கலங்கினார்கள் ஸ்ரீதேவியும் பூதேவியும். அதனால் பைரவரிடம், “தயவு செய்து அவரை காப்பாற்றி தாருங்கள்” என்று வருத்ததுடன் கேட்டு கொண்டார்கள்.

பெண்களின் கண்ணீரை கண்ட பைரவர், மனம் இறங்கினார். விஷ்ணுபகவானை மயக்கத்தில் இருந்து விடுவித்தார். வைகுண்டத்தின் காவலரான விஷ்வக்ஸேனருக்கும் உயிர் தந்தார் பைரவர்.

பைரவருக்கு சிவன் தந்த அந்தஸ்து

“எம்மை வணங்கும் பக்தர்களுக்கு நீயும் துணை இருந்து அவர்களை வழிநடத்து. அத்துடன் யார் உன்னை வணங்குகிறார்களோ அவர்களுக்கு எந்த தீங்கும் நெருங்காமல் காப்பாற்று.” என்று இறைவன் சிவபெருமான் பைரவருக்கு அருளாசி வழங்கினார்.

ஒரு காலத்தில் சிவாலயங்களில் கோவில் நடை சாத்திய பிறகு, அந்த கோவிலின் சாவியை பைரவரின் கால் பாதத்தில் வைத்து விட்டு செல்லும் வழக்கம் இருந்தது.

மிளகு தீப பரிகாரம்

பைரவர் சன்னதியில் தீபம் ஏற்றினால் மிக நல்லது. அதுவும் மிளகை துணியில் சிறு மூட்டையாக கட்டி நல்லெண்ணைய் ஊற்றி தீபம் ஏற்றினால், இன்னல்கள் யாவும் மறையும்.

பைரவருக்கு சிகப்பு நிறத்தில் இருக்கும் மலர்களை சமர்பிக்கலாம் அல்லது பைரவருக்கு பிடித்த அரளிப்பூவை சமர்பித்தால், நினைத்தது நடக்கும். பைரவரை வணங்கினால் விரோதிகளும் அடிபணிவார்கள். முப்பெரும் தெய்வங்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும். பிறகென்ன… வெற்றி வெற்றி எதிலும் வெற்றிதான்.

Feedback: editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here

 © 2011 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Oct 27 2011. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், பிற கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »