பூர்வ புண்ணிய யோகம்
V.G.Krishnarau, Astrologer
இரண்டு நபர்கள் இருப்பார்கள். இரண்டு நபர்களுக்கும் ஒரே கல்வி இருக்கும். ஒரே குடும்ப சூழ்நிலை இருக்கும். வேலைகளில் ஒரே திறமை இருக்கும். ஆனால் சில ஆண்டுகளுக்கு பிறகு பார்த்தால் அந்த இரண்டு நபர்களில் ஒருவன் மட்டும் தன் வாழ்க்கையில் சுகமான நிலைக்கு வந்திருப்பான். யாரும் எட்ட முடியாத வெற்றி சிகரத்தை எட்டி இருப்பான்.ஆனால் அதே திறமையும் தகுதியும் கொண்ட அந்த இன்னொரு நபர் மட்டும் அப்படியேதான் இருப்பான். அவன் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்ற நிலையும் வந்திருக்காது. அதற்கான நல்ல சந்தர்ப்பங்களும் அமைந்திருக்காது. இந்த வேற்றுமைக்கு காரணம் என்ன என்று பார்க்கும் போது அதற்கு ஜோதிட சாஸ்திரம் சொல்கிற பதில், “பூர்வ புண்ணிய யோகம்”.
வாழ்க்கையின் சுகமான வாழ்க்கைக்கும், படிபடியான முன்னேற்றத்துக்கும், எந்த பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவதற்கும், ஒருவரின் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப் பெற்று இருக்க வேண்டும்.
நேற்றுவரை அடுத்தவேளை சோற்றுக்கு தாளம் போட்டவன், இன்று லட்சாதிபதியாக-கோடிஸ்வரனாக ஆவதற்கு காரணம் அவை, பூர்வ புண்ணிய ஸ்தானம் செய்யும் வினோதங்களே.
இந்த பூர்வ புண்ணிய யோகத்தை எவ்வாறு அறிவது?
பல வருடங்களுக்கு முன்புவரை பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எழுத தங்கள் குடும்ப ஜோதிடரை அணுகி ஜாதகம் எழுத கேட்பார்கள். அந்த குழந்தையின் பிறந்த நேரம் எதுவானாலும், அந்த குழந்தையின் தலையெழுத்தை சொல்கிற அந்த ஜாதகத்தை எழுதுகிற நேரம் மிக முக்கியமானது என்று ஜோதிடரும் தொழில் பக்தியுடன் நல்ல நேரம் பார்த்து ஜாதகம் கணித்து தர சில நாட்களை எடுத்துக் கொள்வார். அதன் பிறகு வந்த காலத்தில், பிறந்த குழந்தை ஏதோ நாளைக்கே படித்து முடித்து, நாளை மறுநாள் ஒரு வேலைக்கு சென்று சம்பாதித்து, அதற்கு அடுத்த நாள் திருமணத்தை முடிப்பது போல அவசரப்பட்டு, உடனே அன்றே ஜாதகம் எழுதி தர வேண்டும் என்று ஜோதிடரை அவசரப்படுத்தி ஜாதகம் எழுதி கொண்டு சென்றார்கள். இதன் காரணமாக கணிப்பில் தவறுகள் நேரும் நிலை வந்தது.
இப்போது கணினி யுகம்.
பிறந்த தேதியும் நேரமும், பிறந்த இடமும் சரியாக தந்துவிட்டால் போதும். சிறிதும் கணிப்பில் தவறு இல்லாமல் சரியான இராசி-லக்கினம்-நட்சத்திரம்-கிரகங்கள் போன்றவற்றை மென்பொருள் கணித்து தந்துவிடும். இது ஒரு விதத்தில் சௌகர்யமானது ஆனால் சாஸ்திர ரீதியானதல்ல. ஆனால் இன்று, பிறந்த குழந்தையின் ஜாதகத்தை பஞ்சாங்கம் பார்த்து கணித்து எழுதுகிற பொறுமை ஜோதிடர்களுக்கே இல்லை என்பதால் சாஸ்திரத்தை கொஞ்சம் தள்ளி வைத்து விஞ்ஞான மென்பொருளை ஏற்கலாம்.
ஜோதிடர்கள் ஒரு குழந்தைக்கு முதன்முதலில் ஜாதகம் கணித்து எழுதுகிற போது, நாம் பூர்வ புண்ணியத்தின் அவசியம் உணரும் விதமாக ஒரு ஸ்லோகம் எழுதுவார்கள். அது –
‘ஜனனீ ஜென்ம சௌபாக்யானாம்
வர்த்தனி குல சம்பிரதாம்
பதவீ பூர்வ புண்ணியானாம்
லிக்யதே ஜென்ம பத்ரிகா.!’
சௌபாக்கியமான இந்த குழந்தையின் ஜென்ம பத்ரிகா என்கிற ஜாதகம், இந்த குழந்தையின் பூர்வ புண்ணியப்படி வாழ்க்கையை நடத்தி செல்ல இருக்கிறது.
பூர்வ புண்ணியம்படி என்றால் முன் ஜென்மவினைப்படி என்று பொருள். பதவி என்றால், நீதிபதி பதவி, வக்கீல் பதவி, மருத்துவர் பதவி, எம்.எல்.ஏ. பதவி, அமைச்சர் பதவி என்று மட்டுமல்ல. ஒருவர் அடுத்தடுத்து முன்னேறி செல்கிற நிலைக்கும் “பதவி” என்றுதான் அர்த்தம். நோயற்ற வாழ்க்கையும் பதவிதான். இதுவரை ஏதோ சுற்றிக்கொண்டிருந்தவனுக்கு திருமணம் நடந்து ஒரு பெண்ணுக்கு கணவன் ஆவதும் பதவிதான். கணவன் ஆனவன், ஒரு குழந்தைக்கு தந்தையாவதும் பதவிதான். அதே போல ஒரு பெண் மனைவியாவதும், தாயாவதும், மாமியார் ஆவதும், பேரன்-பேத்திகளுக்கு பாட்டி ஆவதும் பதவிதான். இப்படி எந்த ஒரு வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு பெயரும் பதவிதான். எந்த பதவிகளும் தடையின்றி கிடைக்க ஒருவரின் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் வலுப் பெற்று இருக்க வேண்டும்.
இந்த பூர்வ புண்ணியத்தை அறியும் இடம் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 5-ம் இடம்.
இந்த 5-ம் இடம் வலுத்திருந்தால் பள்ளத்தில் இருப்பவனும் பல்லக்கில் அமருவான்.
இந்த 5-ம் இடம் சிறப்பு வலிமை இல்லாவிட்டால், வாழ்க்கை முழுவதும் எதிர்நீச்சல்தான். கரை சேர முடியாது.
பொதுவாக மீன லக்கினத்திற்கு 5-ம் இடம் கடகம். அந்த வீட்டுக்கு உரிய சந்திரன், திரிகோணம் அதாவது 9-ல் அமைந்தால், அந்த ஜாதகர் பல கோடிகளுக்கு அதிபதி.
ரிஷப லக்கினத்திற்கு 5-ல் புதன் அமர்ந்தால், அஷ்டலஷ்மியும் அவனை தேடி வருவார்கள்.
கடக லக்கினத்திற்கு 5.-க்குரிய செவ்வாய் உச்சம் பெற்று இருந்தால் அல்லது ஆட்சி பெற்று இருந்தால், நிறைய சொத்துகளுக்கு அதிபதி.
ஒருவனுக்கு நல்ல மனைவி, மகன், மகள் மருமகன், மருமகள், சொத்து சுகம் கிடைத்தால் அவர்களை பார்த்து அடுத்தவர் கூறுவது, “அவர் பூர்வ புண்ணியம் செய்தவர்” என்பதுதான்.
எவர் ஒருவர் முன் ஜென்மத்தில் புண்ணியங்களை செய்தாரோ அவர்களின் இந்த பிறவியின் ஜாதகத்தில் நிச்சயமாக 5-ம் இடம் மிக பிரமாதமாக அமைந்து இருக்கும்.
லக்கினத்திற்கு 5-ம் இடத்து அதிபதி, 6,8,12-ல் அமரக் கூடாது. நீச்சம் பெறக்கூடாது. ராகு, கேது உடன் சேரக் கூடாது.
அந்த 5-க்குரிய கிரகம், 2-க்கு 9-க்கு 4.க்கு. 11க்கு உரிய கிரகத்துடன் இணைந்து அமைந்திருந்தால், ஏ.டி.எம். மிஷனே அவன் வீட்டில் இருப்பது போலதான். பணத்திற்கு பஞ்சமே இருக்காது. இந்த ஜாதகரிடம் Any Time Money தான்.
என்னுடைய அனுபவத்தில் ரிஷப லக்கின ஜாதகர். அவருக்கு 9-ல் புதன். வாழ்க்கையின் முற்பகுதி வாழ்க்கை நாய் பட்டபாடு. ஆனால் பிற்கால வாழ்க்கையில் அமோகமாக இருக்கிறார்.
ரஜினி ஜாதகத்தில் சிம்ம லக்கினம். 5-ல் புதன்-சுக்கிரன். அவரின் முற்பகுதி வாழ்க்கை போராட்டம் நிறைந்தது. பிற்பகுதியில் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார்.
இன்னொரு ஜாதகர். அந்த நபர் தனுசு லக்கினம். 5-க்குரிய செவ்வாய், 8-ல் நீச்சம் அடைந்து இருந்தது. அந்த ஜாதகர் பல தொழில் செய்து பார்த்தவர். ஆனால் எதிலும் முன்னேற்றம் இல்லை. ஆகவே எவருடைய ஜாதகத்திலும் 5-ம் இடம் சிறப்பாக இருக்க வேண்டும்.
நிறைய புண்ணியங்களை செய்வது, நேர்மையாக நடந்துக் கொள்வது, இறைவனின் மீது நம்பிக்கையுடன் நல்ல செயல்களை மட்டும் செய்வது போன்றவை, “பூர்வ புண்ணிய யோகம்” அமைய காரணமாக இருக்கிறது. ஆகவே நல்லதையே செய்வோம். எல்லா பிறவிகளிலும் ஆமோக வாழ்க்கை அமைந்து இறைவனின் அருள் பெறுவோம். – வாழ்த்துக்கள்.
V.G.Krishnarau, Astrologer-chennai
(M) 98411 64648
படித்து விட்டிர்களா…
செவ்வாய்-சனி சிறப்பும் சேர்க்கையும் பரிகாரமும்
சினிமா துறையில் ஜெயிக்க வைக்கும் கிரகங்கள்
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved