தடைகளை நீக்கும் கோவை தண்டுமாரியம்மன்
நிரஞ்சனா
முகவரி: அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் கோயம்புத்தூர் – கோவை மாவட்டம்
இறைவன் தரும் நம்பிக்கை
நாம் நம்மை நம்புகிறோமோ இல்லையோ ஆனால் இறைவனை நம்பிக்கையுடன் வணங்குகிறோம். அந்த நம்பிக்கையே நமக்கு மேலும் வெற்றியை தருகிறது. இப்படி இறைவனை நம்பி வெற்றி பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் வரலாற்று கால அரசர்களும் உண்டு. ஏன் அரசர்களை பற்றி சொல்கிறேன் என்றால், அரசர்கள் தங்கள் குடும்பத்திற்காக மட்டுமல்லாமல், தங்கள் நாட்டுக்காகவும் போராட வேண்டும். போராட்டம் நிறைந்த அரசர்களின் வாழ்க்கைக்கு முதலில் தேவை மன தைரியம். அந்த மன தைரியத்தை முதலில் நமக்கு தருபவர் இறைவன்.
குழந்தை பிறக்கும் போது தன் உள்ளங்கையை மூடியபடி பிறக்கும். அதற்கு என்ன காரணம் என்றால், “கர்ணன் கவச குண்டலத்துடன் பிறந்தது போல, பிறக்கும் போதே தன்னம்பிக்கை என்ற பெரிய ஆயுதம் என் உள்ளங்கையில் வைத்திருக்கிறேன்” என்று சொல்லாமல் சொல்கிறது. இறைவனால் படைக்கப்பட்ட ஜீவராசிகளை படைத்தவன் நிச்சயம் காப்பான் அதற்கு முதலில் தேவை இறைவனின் மீது நம்பிக்கை.
இந்த உலகமே இறைவனால் இயங்குகிறது. நாளை இறைவன் விட்ட வழி. அந்த வழி நன்மையாகவும் வெற்றியாகவும் அமையும் என்று எல்லோரை போல் திப்பு சுல்தானும் நினைத்தார்.
திப்பு சுல்தானின் படை வீரர்களின் நோயை நீக்கிய அம்மன்
வியபாரம் செய்ய வந்த வெள்ளையர்கள் பிறகு நம் நாட்டையே அவர்களின் அடிமை நாடாக்கினர். அந்த வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய திப்புசுல்தான், கோவை கோட்டை மதில்களுக்கிடையில் ஓர் கூடாரத்தை அமைத்து, அதில் அவரும் அவரது போர்படையினரும் தங்கினார்கள்.
அந்த வீரர்களில் ஒருவர் தீவிர அம்மன் பக்தர். “காலை பொழுது என் தாய் மகாசக்தியின் கருணையாலே விடிகிறது” என்று ஆழமான நம்பிக்கையுள்ள பக்தராக வாழ்ந்து வருபவர்.
அப்போது அந்த போர் வீரர் கனவில் அம்மன் தோன்றி, “இங்கிருந்து சிறிது தூரம் சென்றால் அங்கு நீர்ச்சுனை இருக்கும். அந்த இடத்தின் பக்கத்தில் பெரிய வேப்பமரம் இருக்கிறது. அந்த மரத்தின் கீழே நான் பல வருடங்களாக தவம் செய்து கொண்டு இருந்தேன். அதனால் அந்த இடத்தை நீ சென்று வணங்கு” என்று அம்பாள் அந்த போர் வீரரின் கனவில் கூறி மறைந்தாள்.
தன் கனவை பற்றி வெளியே சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள் என்ற எண்ணத்தால் யாரிடமும் சொல்லாமல், தானே அந்த நீர்ச்சுனை இடத்திற்கு சென்று அங்கு இருந்த வேப்பமரத்தின் கீழே இருந்த மண்ணை தோண்டி அம்மன் சிலையேதும் புதைந்து இருக்கிறதா என்று தேடினார்.
மிக ஆச்சரியமாக அம்மன், அந்த வீரரின் கனவில் எந்த உருவத்தில் தோன்றினாளோ அந்த உருவத்திலேயே சிலையாக காட்சி கொடுத்தாள். அந்த அம்மன் சிலையை அதே வேப்பமரத்தின் கீழே வைத்து பயபக்தியுடன் வணங்கி வந்தார் அந்த போர்படை வீரர்.
ஒருநாள் திப்பு சுல்லாதனின் வீரர்களுக்கு அம்மை தாக்கியது.
“இது என்ன சோதனை.? வெள்ளையனை வீழ்த்த வந்த இடத்தில் இப்படி வீரர்கள் எல்லோரும் அம்மை நோயால் அவதிப்படுகிறார்களே என்று கலங்கினார் திப்பு சுல்தான்
நோய் தீர்த்த அம்மன்
அப்போது அம்மன் பக்தரான அந்த வீரர், “அரசே என் கனவில் ஒருநாள் அம்மன் தோன்றி வேப்பமரத்தின் கீழே மண்ணில் புதைந்திருப்பதாக சொன்னார். நானும் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது என் கனவில் வந்த உருவத்திலேயே அம்மன் சிலையாக வேப்பமரத்தடியின் அடியில் பூமிக்குள் இருந்தார். அதை நான் பத்திரமாக வெளியே எடுத்து அந்த மரத்தின் கீழேயே வைத்து பூஜித்து வருகிறேன். அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நம் வீரர்கள் அந்த அம்பாளை பூஜை செய்து வணங்குவதற்கு தாங்கள் அனுமதி தர வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார் அந்த வீரர்.
திக்கற்றவனுக்கு தெய்வம் தானே துணை. “சரி உன் விருப்பம் எதுவோ அதை செய்” என்றார் திப்பு சுல்தான்.
நோயால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்காக அம்மனை வேண்டினார் பக்தரான அந்த வீரர்.
“அம்மா…வெள்ளையர்களிடம் போர் செய்ய வந்த எங்களிடம் உனக்கு பிடித்த அபிஷேக பூஜை பொருட்கள் எதுவும் இல்லை. நாடோடிகள் போல் உன் இடத்திற்கு வந்திருக்கிறோம். அதனால் நான் தருவதை மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டு அருள் புரியுங்கள் தாயே.” என்ற கூறி அந்த இடத்தில் இருந்த தண்டுக்கீரையை இடித்து அதன் சாறை எடுத்து,“அம்மா தாயே… உனக்கு பச்சிலை அபிஷேகம் செய்கிறேன். எங்கள் போர் படை வீரர்களின் உடலில் இருந்து இறங்கி சென்றுவிடம்மா.” என்று வேண்டிக் கொண்டே தண்டுக்கீரை சாறை சுயம்புவாக தோன்றிய அம்மன் சிலைக்கு அபிஷேகம் செய்து வந்தார் அந்த வீரர்.
விரல் விட்டு என்னக்கூடிய சில நாட்களிலேயே அந்த போர் படை வீரர்களை வாட்டிய அம்மை அம்பாளின் கருணையால் நீங்கியது.. இதனால் மகிழ்ச்சியடைந்த போர்படை வீரர்கள் அனைவரும் தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவிக்க அந்த அம்மனுக்கு சிறியதாக மரத்தாலேயே கூரை அமைத்து வழிபட்டார்கள்.
அபிஷேகமாக தண்டுக்கீரை சாற்றை மகிழ்சியுடன் ஏற்றுக் கொண்டு தங்களுடைய நோயை நீக்கியதால் இந்த அம்மனுக்கு “தண்டுமாரியம்மன்” என்று பெயர் வைத்தார்கள். பிறகு இந்த அம்மனின் சக்தியை தெரிந்த ஊர்மக்கள் இந்த அம்மனை வழிபட தொடங்கினார்கள். பக்தர்களின் குறையை செவிகொடுத்து கேட்டு அவர்களுடைய கஷ்டங்களை தீர்த்ததால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்து அம்மனுக்கு ஒன்றுக் கூடி கோவில் கட்டினார்கள்.
திப்பு சுல்தானின் போர்படை வீரர் முதலில் வணங்கியதாலும் அவர்களை வாட்டிய அம்மை தண்டுமாரியம்மன் கருணையால் நீங்கியதாலும் இந்த அம்மனை ஜாதி-மதம் பாராமல் அனைவரும் வணங்குகிறார்கள்.
சுயம்புவாக தோன்றிய தண்டுமாரியம்மனை வணங்கினால் தடைகள் விலகும். உடலில் இருக்கும் பிணி நீங்கும். அம்மனுக்கு பொங்கல் வைத்தால் குடும்பம் சுபிக்க்ஷம் பெறும். சர்க்கரை பொங்கல் வைத்து வழிபட்டால், எடுக்கும் நல்ல முயற்சிகள் சகலமும் வெற்றி பெறும்.
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved