விக்கிரமாதித்தன் புதைத்து வைத்த தங்க புதையல்
முந்தைய பகுதிக்கு கிளிக் செய்யவும்
அயோத்திப் பட்டிணத்தில் “நம்பியான்” என்ற ஏழை பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் உஜ்ஜைனி காளி பக்தர்.
“ஏழு பெண் பிள்ளைகளை பெற்றிருக்கிறேன். அவர்களை எப்படி கரை சேர்ப்பேன்.” என்று தினம் தினம் காளியிடம் புலம்புவார். அதேசமயம் அயோதியில் பஞ்சம் உண்டானது. ஒருநாள் அவர் கனவில் உச்சிகாளி அம்மன் தோன்றி, “தென்னாட்டின் உஜ்ஜைனி பகுதியில் உள்ள என் கோயிலுக்கு வா” என்று கட்டளையிட்டாள்.
இதனால் பல முயற்ச்சி செய்து எப்படியோ அந்த உச்சிகாளியம்மன் கோயிலுக்கு வந்தார். அந்த கோயில் தர்மகர்த்தாக்களின் நட்பை பெற்று உச்சிகாளியம்மன் கோயில் குருக்களாக பணியில் சேர்ந்தார். காளி பக்தரான நம்பியான், மூன்று வேலையும் சரியாக பூஜைகளை கோயிலில் செய்து வந்தார்.
நம்பியானின் ஏழு பெண் பிள்ளைகளும் திருமண வயதை அடைந்தார்கள். “என் மகள்களுக்கு திருமணம் செய்து தரும் அளவு பண வசதி இல்லையே” என்று உச்சிகாளியம்மன் முன் பலமுறை கண்ணீர் விட்டு அழுவார் நம்பியான். மகாகாளி நம்பியானுக்கு கருணை காட்டினாள். ஒருநாள் கூட தவறாமல் தனக்கு அன்புடன் பூஜிக்கும் நம்பியானுக்கு நல்ல வழி காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் உச்சிகாளியம்மன் பிராமணர் கனவில் தோன்றி, “இந்த கோவிலின் அருகேயே ஒரு இடத்தில் மன்னர் விக்கிரமாதித்தன் புதைத்து வைத்துவிட்டு சென்ற தங்க புதையல் இருக்கிறது. அதை எடுத்து கொண்டு உன் மகள்களுக்கு திருமண ஏற்பாடு செய்“ என்றாள் காளிதேவி.
கோவிலில் இருந்த புதையல்
நம்பியான் தூக்கம் கலைந்து அவசர அவசரமாக கோவிலுக்குள் சென்று உச்சிகாளியம்மன் கூறிய இடத்தை தோண்டி பார்த்தார். காளிதேவி கூறியது போல் தங்ககட்டிகள் கிடைத்தது. அந்த தங்ககட்டிகளை பக்கத்து ஊருக்கு எடுத்து சென்று விற்கலாம் என்ற எண்ணத்தில். பக்கத்து ஊருக்கு சென்று விற்க முயற்சித்தார்.
நம்பியான் ஊருக்கு புதியவர் என்பதால் அந்த ஊர்காரர்கள் யாரும் நம்பியானிட்ம் இருந்து நகை வாங்க முன் வரவில்லை.
நம்பியானை ஒரு வெள்ளைய அதிகாரி குதிரையில் இருந்தபடி கவனித்துக் கொண்டிருந்தார். பிறகு அந்த வெள்ளைக்கார அதிகாரி நம்பியான் அருகில் வந்து, “யார் நீ.? ஏன் ஒவ்வொரு நகைகடையாக செல்கிறாய். உன் பையில் என்ன இருக்கிறது? காட்டு அதை“ என்றார் அதிகாரத்துடன்.
அதிகாரியின் அதட்டலுக்கு பயந்து போன நம்பியான், தன் கையில் இருந்த பையை திறந்து காட்டினார். அந்த பை நிறைய தங்ககட்டிகள் இருப்பதை கண்டு வெள்ளைகார அதிகாரி அதிர்ச்சியடைந்தார். “பை நிறைய தங்ககட்டிகளை வைத்து சுற்றி கொண்டு இருக்கிறானே… இவன் திருடனாக இருப்பானோ? அவன் கை பையில் இருப்பது திருட்டு நகையாக இருக்குமோ” என்று கருதினார் அந்த அதிகாரி.
நம்பியானை தன் அலுவலகத்திற்கு அழைத்து சென்று, அடித்து உதைத்து துன்புறுத்தி, “உண்மையை சொல். இது யாருடைய தங்கக்கட்டிகள்.? உண்மையை ஒப்புக்கொண்டால் தண்டனை குறைவாக கிடைக்கும்.” என்று நம்பியானை அதட்டினார் அந்த வெள்ளைகார அதிகாரி.
வலி தாங்க முடியாமல், “அய்யா..நான் பக்கத்து ஊரில் உள்ள உஜ்ஜைனி மகாகாளி கோயில் குருக்கள். என் மகள்களின் திருமண செலவுகளுக்காக இந்த தங்ககட்டிகள் அனைத்தும் உஜ்ஜைனி மகாகாளி என்கிற அந்த உச்சிகாளியம்மனே கொடுத்தது. வேண்டுமானால் நீங்கள் என்னுடன் என் ஊருக்கு வாருங்கள். நான் சொல்லுவது அனைத்தும் உண்மை என்று நிரூபிக்கிறேன்“ என்றார் நம்பியான்.
அந்த வெள்ளைக்கார அதிகாரியும் மேலும் சில அதிகாரிகளும் பிராமணர் கூறுவது உண்மையா? என அறிய நம்பியானை அழைத்து கொண்டு, உச்சிகாளியம்மன் கோயிலுக்கு வந்தார்கள். நம்பியான் அடையாளம் காட்டிய இடங்களை தோண்டினார்கள். நிறைய தங்ககட்டிகள் கிடைத்தது. இதனால் இன்னும் அந்த கோவிலை சுற்றி தோண்டினார்கள். தோண்ட தோண்ட தங்கம் கிடைத்துக்கொண்டே இருந்தது.
தங்களால் முடிந்ததை எடுத்துக் கொண்டு செல்ல முயன்றனர் வெள்ளையர்கள். அப்போது உச்சிகாளியம்மன் பெரும் கோபம் கொண்டாள். அந்த வெள்ளைகாரர் அதிகாரிகளையும் அவர்களுடன் வந்த பணியாளர்களையும் ஒட ஒட விரட்ட பேய்படைகளை ஏவினாள். எங்கிருந்தோ பல கற்கள் வெள்ளைகார அதிகாரிகள் மீதும் பணியாளர்கள் மீதும் விழுந்தது. கற்கள் அதிகமாக தொடர்ந்து வேகமாக வந்து விழுந்தப்படி இருந்தது. கல்லடி தாங்காமல் அதிகாரிகளும் பணியாளர்களும் விட்டால் போதும் என்று கோவிலை விட்டு ஒடினார்கள்.
நம்பியானுக்கு மகாகாளி தேவி உதவியதையும், வெள்ளையர்களை கோயிலை விட்டு மகாகாளி துரத்தியடித்ததையும் பார்த்த ஊர் பெரியவர்கள், நம்பியானின் ஏழு மகள்களுக்கும் நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தார்கள்.
“ஊர் விட்டு ஊர் வந்து என்ன செய்ய போகிறோம்? என்ற கவலையில் இருந்தேன். ஆனால் உச்சிகாளியம்மன் என்னை காப்பாற்றி, என் மகள்களுக்கும் திருமண பாக்கியம் தந்து, எனக்கும் வசதியான வாழ்க்கை தருவாள் என்று கனவிலும் நினைக்கவில்லை. எல்லாம் உச்சிக்காளியம்மன் என்கிற உஜ்ஜைனி காளியம்மன் மகிமையே.” என்று மகிழ்ந்து, மகாகாளியை போற்றி தன் சேவையை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தார்.
உச்சிகாளியம்மனை வணங்கினால் எதிரிகளின் தொல்லைகள் விலகும். உஷ்ணத்தால் வரும் நோய் அண்டாது. செய்வினை பில்லி சூனியம் போன்ற மாந்திரிகம் பாதிப்பும் அண்டாது. மொத்தத்தில் உச்சமான வாழ்க்கையை நிச்சயம் உச்சிகாளியம்மன் என்கிற உஜ்ஜைனி காளியம்மன் தன் பக்தர்களுக்கு அருளுவார்.
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© bhakthiplanet.com All Rights Reserved