பேச்சி திறமை உள்ளவருக்கு எங்கும் வெற்றிதான் என்பதற்கு இந்த சம்பவம்.
நிரஞ்சனா
மலேசியாவில் இந்தியர் ஒருவர் அதி வேகமாக கார் ஓட்டி சென்றார். சென்ற வேகத்தில் சாலையில் இருந்த தடுப்பை கவனிக்காமல் வேகமாக சென்றதால் கார் அந்த தடுப்பை உடைத்து கொண்டு நின்றது. இதை அறிந்த போலீஸார், அந்த இடத்திற்கு வந்தார்கள். போலீசை கண்டதும் அந்த நபர் பதட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தன்னிடம் இருந்த 100டாலரை எடுத்து போலீஸாரிடம் கொடுத்தார். ஆனால் அந்த போலீஸார், கடும் கோபத்துடன், “உன் மீது இரண்டு வழக்கு பதிவு செய்ய போகிறோம். முதல் குற்றம் அரசாங்கத்தின் பொருளை சேதப்படுத்தியதற்கு. இரண்டாவது குற்றம் லஞ்சம் வாங்க வற்புறுத்தியதற்கு.“ என்ற சொல்லி, இரண்டு வழக்குகளை போட்டு கோர்ட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.
வழக்கு கோர்ட்டுக்கு வந்தது. கார் ஓட்டி வந்தவருக்காக திரு. கோபால் செட்டியார் என்பவர் வாதாடினார்.
“எனது கட்சிக்காரர் வேண்டும் என்றே காரை வேகமாக ஓட்டவில்லை. அவருடைய உறவினர் ஒருவர் மருத்துவமனையில் இருந்ததால் அவரை காப்பாற்ற வேண்டும்
என்ற துடிப்பில் வேகமாக காரை ஓட்டி சென்றார். அந்த சமயத்தில் சாலையில் இருந்த தடுப்பில் கார் மோதிவிட்டது. போலீசாருக்கு 100 டாலர் லஞ்சம் கொடுக்கவில்லை. உடைந்த அந்த தடுப்புக்குதான் நஷ்ட ஈடு தந்தார். அதை தரும் இடம் அதுவல்ல என்று என் கட்சிக்காரருக்கு தெரியாது. மலேசிய போலீஸார் மீது என் கட்சிக்காரர் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்ததால், அவர்கள் அந்த 100 டாலரை உரிய இடத்தில் சேர்த்து விடுவார்கள் என்று என் கட்சிக்காரர் கருதினார். மலேசிய போலீஸார் மீது ஒரு இந்தியரின் நம்பிக்கையைதான் இது காட்டுகிறது.“ என்று வாதிட்டார். கோபால் செட்டியாரின் வாத திறமையை எண்ணி சிரித்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்தார்.