நோய் தீர்க்கும் தெய்வ மருத்துவர்
நிரஞ்சனா
ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் அதற்குரிய தெய்வத்தை வணங்கினால் நலம் பெறலாம். ஆனால் உடல் உபாதைகள், உடல்நலக் கோளாறுகள் இருந்தால் வைதீஸ்வரரையும், தன்வந்திரி பகவானையும் விட்டால் வேறு யாராலும் மருத்துவரால் கைவிடப்பட்ட வியாதியை தீர்க்க முடியாது. இந்த தெய்வங்களின் அருளாசி இருந்தால்தான் மருந்து கூட வேலை செய்யும். என்னதான் விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும் மின்சாரம் எடுக்க இறைவனால் படைக்கப்பட்ட இயற்கை வளமான காற்றையும் தண்ணீரையும் நம்பி இருக்கிறோம். அதுபோல் உடல்நிலை சரி இல்லாதவர்களுக்காக உலகத்தில் எந்த மூலையில் இருந்து தேடிப் பிடித்து மருந்து வாங்கி வந்து தந்தாலும் அவர்களின் உடலுக்கு அந்த மருந்து ஏற்றுக்கொண்டு மருந்து வேலை செய்ய இறைவனின் கருணை பரிபூரணமாக வேண்டும்.
ஒருவருக்கு கோடி ரூபாய் கொடுத்து குணமாகாத நோய், இறைவனின் கருணை கிடைத்துவிட்டால் அவர்களின் காலுக்கு கீழே தென்படும் சாதாரண பூல்லும் மூலிகையாக மாறி குணப்படுத்தி விடும். அறுகம்புல் கூட மருத்துவ மூலிகைதானே. அந்த அறுகம்புல்லுக்கு இத்தனை மருத்துவ மகத்துவத்தை தந்தது யார்? விஞ்ஞானிகளா?
முடிந்தவரை நம் உடலை ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டும். அதையும் மீறி விதிவசத்தால் உடல்நிலையில் துன்பம் நேர்தால் முதலில் நாம் சரண் அடைய வேண்டியது இறைவனை.
இறைவன், தன்வந்தரி பகவானாக நமக்கு அருள்புரிகிறார். இப்போது தன்வந்தரி பகவானை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
தன்வந்தரி உருவான கதை
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது, அந்த பாற்கடலில் இருந்து அமிர்த கலசத்துடன் வெளிப்பட்டவர். அப்போது தன் எதிரில் நின்றிருந்த மகாவிஷ்ணுவை வணங்கினார். பாற்கடலில் இருந்து வெளிப்பட்டவருக்கு “அப்சா” என்று பெயர் வைத்தார் ஸ்ரீமகாவிஷ்ணு.
“நான் இந்த அமிர்தத்தை கொண்டு வந்ததால், தேவர்களுக்கு அமிர்தத்தை பங்கிட்டு தரும்போது ஒரு பங்கு எனக்கும் தர வேண்டும்“ என்று விஷ்ணு பகவானிடம் கேட்டுக்கொண்டார் அப்சா. அதற்கு ஸ்ரீமகாவிஷ்ணு, “உனக்கு முன்பே தோன்றியவர்கள் தேவர்கள். அவர்களின் கடின உழைப்பால் கிடைத்த அமிர்தத்தை நீ எந்த முயற்சியும் எடுக்காமல் எளிதாக கொண்டு வந்தாய். உனக்கு அமிர்தத்தை தர முடியாது. அதே போல் அசுரர்களுக்கும் அமிர்தம் கிடைக்காது. அசுரர்கள் அமிர்தம் உண்டால் பூலோகவாசிகளுக்கும், தேவலோகத்தினருக்கும், பிரம்மனுக்கும் வரம் தந்த இறைவனான எங்களுக்கும் அசுரர்களால் என்ன விளைவுகள் உண்டாகும் என்பது எனக்கு தெரியும். அதனால் இந்த அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டும்தான் தர முடியும்“ என்றார் விஷ்ணுபகவான்.
இதை கேட்ட அப்சா, “நானும் அசுரர்களை போல் தீமை செய்வேன் என்று எண்ணத்தில் எனக்கு அமிர்தம் தர மறுக்கிறீர்களா?“ என்றார்.
“இல்லை. நீ அமிர்தம் உண்டால் யாருக்கு என்ன பலன்? நீ பூலோகத்தில் நன்மை செய்யவே தோன்றியவன். பூலோக மக்களை காக்கவே பிறந்தவன். உனது இரண்டாவது பிறவி பூலோக மக்களுக்கு பயன்படும். நீ ஆயுர்வேதத்தில் சிறந்தவனாக வல்லவனாக திகழ்வாய். தன்வந்தரி என்று அழைக்கப்படுவாய். தேவர்களைவிட உன் புகழ்தான் சிறந்து இருக்கும். உலகம் இருக்கும்வரை உன்னை யாரும் மறக்க மாட்டார்கள். உன் ஆசியை பெற நாடி வருவார்கள்.“ என்று ஸ்ரீமகாவிஷ்ணு, அப்சாவுக்கு ஆசி வழங்கினார்.
காசி மன்னருக்கு மகனாக பிறந்தார்
காசியை ஆட்சி செய்து வந்த அரசருக்கு மகனாக பிறந்தார் அப்சா. அவருக்கு தன்வந்தரி என்று பெயர் வைத்தார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் ஆர்வம் ஏற்பட்டு, அதில் பெரும் திறமைசாலியாக திகழ்ந்தார். இதனால் அவரிடம் அதிக சீடர்கள் சேர்ந்தார்கள். ஒருநாள் தன்வந்தரியும் அவருடைய சீடர்களும் கைலாயநாதரை தரிசிக்க கைலாயத்திற்கு சென்று கொண்டு இருந்தார்கள். இதை விரும்பாத தக்சன் என்ற நாகம், இவர்களை வழி மறைத்தது தன்னுடைய விஷத்தை அவர்களின் மேல் பொழிந்தது. உடனே தன்வந்தரியின் சீடர்கள் அந்த பாம்பை கொல்ல முயற்சித்தார்கள்.
இதை கண்ட வாசுகி என்ற பாம்பு, கோபம் கொண்டு அத்தனை சீடர்களையும் விஷ காற்றால் மயக்கம் அடைய செய்தது. இதனால் சீடர்கள் உயிரற்ற உடல்போல் பூமியில் வீழ்ந்தார்கள். உடன் வந்த தன்வந்தரி, தன்னுடைய சீடர்களுக்கு ஆயுர்வேத மருந்தை கொடுத்து மயக்கத்தை தெளிய செய்தார். தன்வந்தரியின் செயலால் மேலும் கோபம் அடைந்த வாசுகி, தன்னுடைய சகோதரியான மானசதேவியை அழைத்து வந்து உயிர் பெற்ற அத்தனை சீடர்களையும் கொல்லும்படி உத்தரவிட்டார்.
மானசாதேவியும் தன்வந்திரியின் சீடர்களை, விஷ காற்றால் மயக்கம் அடைய செய்வதும், அதை தன்வந்தரி தன்னுடைய ஆயுர்வேத மருத்துவத்தால் மயக்கத்தை தெளிய வைப்பதுமாக இருந்தார். இதனால் வாசுகியும், மானசதேவியும் தன்வந்தரியிடம் போராடி ஜெயிக்க முடியாமல் சோர்வடைந்தார்கள்.
“யார் நீ” என்று தன்வந்தரியை வாசுகியும் மானசாதேவியும் விசாரித்தார்கள். தன்வந்தரி விஷ்ணுவினால் படைக்கப்பட்டவர், அவர் தேவர்களைவிட மேலானவர் என்பதை தெரிந்துக் கொண்டு வாசுகியும், மானசாதேவியும் மரியாதையுடன் தன்வந்தரியை கைலாயத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.
தேவர்கள் தன்வந்தரியின் மகிமையை தெரிந்துக்கொண்டு வணங்கினார்கள். தேவர்களுக்கும் ஆஸ்தான மருத்துவராக மாறினார் தன்வந்தரி. அதனால் பூலோகவாசிகளின் வியாதிகள் தீர்க்க முதலில் தன்வந்தரியை வணங்கி மருந்து உட்கொண்டால் அவர்களின் நோய் நீங்கும். மருத்துவரால் கைவிடப்பட்ட நோயாளிகள் தன்வந்தரி பகவானை வணங்கி வந்தால் அவர்களுக்கு இறைவனின் ஆசியால் யார் வழியிலாவது அவர்களுக்கு நோய் தீர மருந்து கிடைக்கும்.
கடவுளுக்கு மனிதர்களின் சில பேச்சுகளுக்கு சிரித்துவிடுகிறாராம். அதில் ஒன்று, “உன்னை நான் காப்பாற்றுகிறேன்” என்று ஒரு நோயாளியை பார்த்து மருத்துவர் சொல்லுபோது சிரிக்கிறார். மருத்துவராக இருந்தாலும் அவர்களின் வியாதியும் தீர தன்வந்தரியின் ஆசி கிடைக்க வேண்டும். அதற்கு எளியவழி அவரை வணங்க வேண்டும். அவருடைய மந்திரம் மகிமை வாய்ந்தது. உடல்நலம் இருந்தால் பொருள் வளம் கிடைக்கும். அதற்கு தன்வந்தரியின் கருணையை பெறுவோம்.
தன்வந்திரி மந்திரம்
ஓம் நமோ பகவதே வாஸூதேவாய
தந்வந்த்ரயே அம்ருத
கலசஹஸ்தாய
ஸர்வ ஆமய விநாசநாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹாவிஷ்ணவே நம.
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved