நினைத்ததை நிறைவேற்றும் மகாமாரியம்மன் – சிங்கப்பூர்
நிரஞ்சனா
“கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்” என்றனர் நம் ஆன்றோர்கள். இந்த வார்த்தையை வேதமாக ஏற்று நடப்பவர்கள் இந்தியர்களாகிய நாம். “அந்த புதிய ஊர் (அ) நாடு, உன் வாழ்க்கைக்கு நல்ல மாற்றம் தரும். நீ அங்கு செல்” என்று இறைவன், பக்தர்களுக்கு உணர்த்துவார். இதனால் வேலை வாய்ப்புக்காக, முன்னேற்றத்திற்காக நாம் ஊர் விட்டு ஊரோ, அல்லது நாடு விட்டு நாடோ போக வேண்டிய சூழ்நிலை பெறுவோம். இப்படி ஒரு புதிய இடத்திற்கு போனவுடன், நம் மனம் முதலில் தேடுவது ஏதேனும் ஒரு திருக்கோவில். காரணம் நாம் வாழ சென்ற புதிய ஊரில் அல்லது நாட்டில் உடனே நமக்கு நண்பர்களோ உறவினர்களோ அமைய மாட்டார்கள். அதனால் “திக்கற்றவருக்கு தெய்வம்தானே துணை.” நாம் எந்த ஊரில் (அ) நாட்டில் வாழ சென்றாலும், அங்கே நமக்கு முன்னதாக நம் தெய்வம் சென்று, “வருக வருக” என நம்மை வரவேற்று, துணை இருக்கும். அவ்வாறே, சிங்கப்பூர் வரும் இந்துக்களுக்கு, இந்துக்களின் அன்னையான அம்பிகை, நம்ம ஊரு மாரியம்மன், சிங்கப்பூரில் சிங்கப்பூர் மகாமாரியம்மனாக எப்போது வந்தார்? எப்படி வந்தார்? என்ற வரலாறு அறிந்துக் கொள்வோம் வாருங்கள்.
கோவில் உருவான கதை
சிங்கப்பூரில் மாரியம்மனுக்கு ஒரு கோவில் கட்டவேண்டும், அதற்கு முதலில் நிலம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் “திரு.நாராயணப் பிள்ளை” என்பவர்தான் முதலில் கோயில் உருவாக பிள்ளையார் சுழியே போட்டவர்.
கிழக்கிந்திய கம்பெனியிடம் முதல் முதலாக 1822-ஆம் ஆண்டு அவர்களிடம் இதைப் பற்றி பேசி, 1823-ஆண்டு சவுத் பிரிட்ஜ் சாலையில் கோவில் கட்ட அனுமதி வாங்கினார்கள்.
1827-ஆம் ஆண்டு கோவிலுக்கான இடத்தில் அஸ்திவாரம் போடப்பட்டது. தமிழ்நாட்டின் கடலூரை சேர்ந்த அம்மன் பக்தர் ஒருவர், தினமும், தாம் வணங்கும் அம்மன் சிலையை எந்த ஊர் சென்றாலும் உடன் எடுத்துச் செல்லும் வழக்கம் உடையவர். அவர் இப்போது சிங்கப்பூருக்கு வந்திருந்தார். இதனால் தன்னிடம் இருந்த அம்மன் சிலையை, சிங்கப்பூர் தமி்ழ் மக்களின் உறுதுணையோடு மரப்பலகையால் கூரை அமைத்து, “சின்ன அம்மன்” என்று பெயர் சூட்டி, பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தார். சிங்கப்பூரில் வாழும் தமிழ் மக்களும் வணங்கி வந்தனர்.
சிங்கப்பூருக்கு வருபவர்கள் முதலில் தரிசிக்கும் கோவில்
வேலை வாய்ப்புக்காக வந்த தமிழர்களும், .இந்தியர்களும் மற்றும் சிங்கப்பூர் தமிழர்களும் இந்த சின்ன அம்மனை வணங்கி வந்தார்கள். சின்ன அம்மனை வணங்கி வந்த பக்தர்களின் வேண்டுதலை அம்மன் நிறைவேற்றி தந்ததால் மகிழ்ச்சியடைந்து இந்த தாய் சக்தி வாய்ந்தவள் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். “நமது வாழ்க்கை முன்னேற முன்னேற நமது தாயும் வசதி பெற வேண்டும்” என்று பக்தர்கள் விரும்பினார்கள்.
அம்மனுக்கு செங்கல் கட்டிடமாக பெரிய கோவில் கட்ட வேண்டும் என்று எண்ணி, 1862- ஆம் ஆண்டு பெரிய கோவிலாக கட்டினார்கள் சின்ன அம்மன் இன்று மகா மாரியம்மன் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் இருக்கிறது.
தற்பொழுது இருக்கும் மூலவரான பெரிய அம்மன் சிலையை பற்றி சரியான விவரம் பலருக்கு தெரியவில்லை.
1862-ம் ஆண்டு முதல் பெரும் அளவில் இந்துக்களும் பிற மதத்தினரும் பக்தர்களாக வரத் தொடங்கினார்கள். காணிக்கைகளை செலுத்தினார்கள். 1936-ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பிறகு, 1949-ஆம் ஆண்டு இரண்டாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1962 ஆண்டு முதல் நவீனப்படுத்தப்பட்டது இந்த திருக்கோவில். அம்மன் கோவில் திருமண மண்டபம், அரங்கம் போன்றவையும் கட்டப்பட்டன. மகாமாரியம்மன் கோவில் சிங்கப்பூர் அறக்கட்டளை வாரியத்தால் தற்போது நிர்வகிக்கப்படுகிறது.
1977, 1984, 1996 ஆண்டுகளில் குடமுழுக்குகள் நடைபெற்றது.
அம்மனின் மகிமையை உணர்ந்த சீனர்கள்
சீனர்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியில் இந்த மகாமாரியம்மன் கோவில் இருப்பதால், சீனர்கள் அம்மனை வழிபட ஆரம்பித்தார்கள்.
இதனால் ஆண்டுதோறும் நடக்கும் தீமிதி விழாவில் சீனர்கள் பெரும் கூட்டமாக கலந்துக்கொள்ள இன்றுவரை ஆர்வம் காட்டுகிறார்கள். கோவில் கட்டுமான பணிக்கு நிதியுதவி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
விசேஷமான விழாக்கள்
அக்டோபர், நவம்பர் மாதத்தில் திரௌபதை அம்மனுக்கு தீமிதி விழா விசேஷமாக நடக்கிறது.
நவராத்திரி அன்று 1008 சங்கு அபிஷேகம், மகா சத சண்டி யாகம், நவசக்தி அர்ச்சனை, திரௌபதை உற்சவம் போன்ற விழாக்கள் சிறப்பாக நடக்கிறது.
மகாமாரியம்மன் மகிழ்ச்சியான வாழ்க்கை தருகிறாள்
சிங்கப்பூர் மகாமாரியம்மனை வணங்கினால், வணங்கும் பக்தர்களுக்கு நிச்சயம் ஏற்றமான வாழ்க்கை தருகிறார் என்கிறார்கள் பக்தர்கள். அம்மனை வணங்கினால் அவர்களுக்கு எல்லாம் வளங்களும் நலங்களும் கிடைக்கிறது.
புதியதாக அங்கு குடி வரும் பக்தர்களை தன் குழந்தைகளை போல் அரவனைத்து, அவர்களின் வாழ்க்கைக்கு நல்ல வழிகாட்டியாக திகழ்கிறாள் இந்த சிங்கப்பூர் மகாமாரியம்மன் என்கிற நம் அன்னை என்று அனுபவத்தில் உணர்ந்து மகிழ்ச்சி பொங்க சொல்கிறார்கள் பக்தர்கள்.
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved