சார்லி சாப்ளின் வாழ்வில்…
சார்லி சாப்ளின். உலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர். ஆனால் தன் தனிப்பட்ட வாழ்வில் பல துன்பங்கள், அவமானங்கள், தோல்விகள் போன்றவற்றை சந்தித்தவர். தந்தையின் அன்பு கிடைக்காமல், தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். தன் தாயாருடன் மேடையில் பாடி நடிக்க ஆரம்பித்தார். ஐந்து வயதிலேயே தன் திறமையால் அமோக வரவேற்பை பெற்றார் சார்லி சாப்ளின். சில வருடங்களிலேயே அவர் தன் மகிழ்ச்சியை இழந்தார். காரணம், அவரது தாயார் திடீரென மனநிலை பாதிப்படைந்தார்.
குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக கிடைத்த வேலைகளையும் செய்தார். பிறகு குறும்படங்களில் நடித்து நல்ல பெயர் கிடைத்தது. திருமண வாழ்விலும் கசப்புகள்.
விவாகரத்து வாங்கி பிரிந்த சார்லி சாப்ளினின் இரண்டாம் மனைவி ஜோன்பொ்ரி, தேவையில்லாமல் 1945-ல் அமெரிக்க அரசுவிடம், “சாப்ளின் ஒரு கம்யூனிஸ்ட் தீவிரவாதி” என அபாண்டமாக குற்றம் சாட்டினார். அதை அமெரிக்க அரசும் நம்பியது. இதனால் மனவருத்ததுடன் 1952-ல் சுவிட்சர்லாந்தில் அடைக்கலம் அடைந்தார் சார்லி சாப்ளின்.
காலம் ஒருநாள் மாறும் என்பதற்கு ஏற்ப, தீவிரவாதி என்று குற்றம் சாட்டிய அமெரிக்க அரசு, 1972-ல் சார்லி சாப்ளினை தன் நாட்டுக்கு மீண்டும் அழைத்து உலகின் தலைச்சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற பட்டம் கொடுத்தது. எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் அமெரிக்க அரசு கொடுத்த மரியாதையை ஏற்றுக் கொண்டார் சார்லி சாப்ளின்.
விருதை பெற்று கொண்டு சுவிட்சர்லாந்து திரும்ப, விமானம் ஏறும் முன்னதாக செய்தியாளர்கள் சார்லியிடம், “எப்படி இத்தனை இன்னல்களையும் தாங்கினீர்கள். அதன் ரகசியம் என்ன?“ என்று கேட்டனர்.
அதற்கு சாப்ளின், “எந்த நிலையும் மாறிவிடும் என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. அது இன்பமாக இருந்தாலும் சரி துன்பமாக இருந்தாலும் சரி. எது நடந்தாலும் மன தைரியத்தை மட்டும் இழக்க மாட்டேன்.” என்றார்.
சார்லி சாப்ளின் எந்த அளவில் பணத்தையும் புகழையும் பார்த்தாரோ, அதேபோல் பல கஷ்டங்களையும் அவப்பெயரையும் அவர் சந்தித்தார். இருந்தாலும் மனஉறுதியும் அமைதியுடன் இருந்ததால்தான் அவர் இன்றும் நம் நினைவில் நீங்காமல் நிற்கிறார். வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம் இருக்கத்தான் செய்கிறது. அதை அனுபவமாக ஏற்பவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள்.
– நிரஞ்சனா
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்