கல்வியும் தைரியமும் அருளும் ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி
நிரஞ்சனா
முகவரி: அருள்மிகு ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி திருக்கோயில், நேரு காலனி, பழவந்தாங்கல் நங்கநல்லூர், சென்னை.
ஒருசமயம் காஞ்சி மகாபெரியவர், சென்னை பரங்கிமலை அருகில் இருக்கும் நந்தீஸ்வரரை வணங்க வேண்டும் என்று விரும்பினார். அதேபோல பழவந்தாங்கல், நங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள திருக்கோயில்களை தரிசிக்க, பக்தர்களுடன் பாதயாத்திரையாக சென்னை வந்தார்கள். சுவாமிகள் திரிசூலம் வந்தாகள். அங்கு கோயில் கொண்டிருக்கும் திரிசூலநாதரையும், திரிபுரசுந்தரியையும் தரிசித்து விட்டு பழவந்தாங்கல் வந்துக்கொண்டு இருந்தார். நீண்ட தூரம் நடந்து வந்ததால் களைப்படைந்த சுவாமிகளும் பக்தர்களும், அங்கேயே ஓர் இடத்தில் ஒய்வு எடுக்க எண்ணினார்கள். பழவந்தாங்கலில் இருந்த ஒரு அரசமரத்தடியில் தங்கினார்கள். பெரியவர் அந்த மரத்தடியில் அமர்ந்தார். உடன் வந்த பக்தர்கள் ஒரு பக்கமாக அவர்களும் அந்த மரத்தடியின் கீழ் அமர்ந்து ஒய்வு எடுத்தார்கள்.
பெரியவரின் நா வரச்சியை நீக்கிய சிறுமி யார்?
அப்போது பெரியவருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. இதனால் அருகில் இருந்தவரை அழைத்து, “தண்ணீர் தாகமாக இருக்கிறது. குடிக்க ஜலம் கொண்டு வா.“ என்றார். அந்த நபருக்கு சரியாக காது கேட்கவில்லை போல, “என்ன சுவாமி சொன்னீங்க“ என்றார். இதனால் பெரியவர் குரலை உயர்த்தி, “குடிக்க ஜலம் வேண்டும்.“ என்றார். அந்த சமயம் எங்கிருந்தோ வந்த தெய்வீக முககலையுடன் காணப்பட்ட ஒரு சிறுமி தண்ணீர் சொம்புடன், “குடிக்க ஜலம் கேட்டிங்களே வாங்கிக் கோங்கோ.“ என்று பெரியவரிடம் தண்ணீருடன் சொம்பை தந்தாள். அந்த சிறுமி கொடுத்த தண்ணீரை வாங்கி குடித்துவிட்டு, “இந்தா பாப்பா” என்று கூறி கொண்டே சொம்பை நீட்டினார் பெரியவர்.
ஆனால் அவர் எதிரே யாரும் இல்லை. இதனை ஆரம்பத்தில் அறியாத ஜகத்குரு, தனக்கு தண்ணீர் கொடுத்த சிறுமியை காணவில்லையே என்று கருதி, தன் உடன் இருந்த சீடர்களிடம், தமக்கு சிறுமியிடம் தண்ணீரை கொடுத்தனுப்பியது யார்?“ எனக்கேட்டார்.
பெரியவர் கூறியதை கேட்ட பக்தர்கள், “நாங்கள் யாரிடமும் தண்ணீர் கொடுத்தனுப்பவில்லையே“ என்றனர். அப்படியானால் தனக்கு தண்ணீர் கொடுத்தது யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் மகாபெரியவர் கண்களை மூடி தியானம் செய்தார். தொண்டை வரட்சியில் தண்ணீருக்காக தவித்த மகாபெரியவரை தன் குழந்தையின் தவிப்பாக எண்ணிய அகிலத்தை காக்கும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, சிறுமி உருவத்தில் தோன்றி தண்ணீர் தந்துள்ளாள். அத்துடன் அந்த தாய் இங்கேதான் இந்த கிராமத்தில்தான் எங்கோ மறைந்து இருக்கிறாள் என்பதை உணர்ந்து, அந்த ஊர் கிராம பெரியவர்களையும் ஊர்மக்களையும் அழைத்து, “உங்கள் கிராமத்தில் அம்பிகை எங்கோ புதைந்து கிடக்கிறாள். உடனே கண்டுபிடியுங்கள்“ என்று சொன்னார்.
ஸ்ரீவித்யா ராஜராஜேஸ்வரி என்று பெயர் வைத்த காஞ்சி மகாமுனிவர்
காஞ்சி மகாபெரியவர் கூறியதை கேட்ட கிராம மக்கள், உடனே பல இடங்களில் அம்பிகையை தேட தோண்டினார்கள். அப்போது ஒரு இடத்தில் அம்பிகை குழந்தை வடிவத்தில் ஒரு விக்ரகமும், சண்டிகேஸ்வரி விக்ரகமும் கிடைத்தது. இதை கண்ட ஊர்மக்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். “நமது ஊரில் அம்மன் இருப்பதை இத்தனை காலம் அறியாமல் இருந்தோமே. இதை நமக்கு முதலில் தெரிவித்த காஞ்சி மகாமுனிவரை சந்தித்து அம்மன் வெளிப்பட்டதை சொல்ல வேண்டும்.” என்று காஞ்சி மகாமுனிவரை சந்தித்து விக்ரகம் கிடைத்ததைச் சொன்னார்கள். அதை கேட்ட ஜகத்குரு மகிழ்ச்சியடைந்து, விக்ரகம் தோன்றிய இடத்திலேயே அம்பிகையை பிரதிஷ்டை செய்து, “ஸ்ரீவித்யா ராஜராஜேஸ்வரி” என்று பெயர் வைத்தார்.
இந்த கோவிலில் ஒரு அதிசயம்
மாசி மாதத்தில் ஆறு நாட்கள் சூரிய பகவான் காலை ஆறு மணியளவில் தனது சூரிய ஒளியை அம்மன் மீது செலுத்தி தாயை ஜொலிக்கச் செய்யும் அற்புதமா காட்சி ஒவ்வொரு வருடமும் நடக்கிறது.
ஸ்ரீவித்யா ராஜராஜேஸ்வரியை வணங்கினால், நியாயமான தேவைகள் எல்லாம் நிறைவேறும். குழந்தை உருவத்தில் ஒரு தாயை போல் வந்து பெரியவரின் நா வரச்சியை நீக்கியது போல், தன் பக்தர்களின் வரச்சியை நீக்குவாள் அம்மன். குழந்தைகள் ஸ்ரீவித்யா ராஜராஜேஸ்வரியை வணங்கினால், கல்வி அறிவும் மற்றும் வித்தைகளையும் அந்த குழந்தைகளுக்கு வரச்சியில்லாமல் அள்ளி தருவாள் அன்னை.
ஸ்ரீவித்யா ராஜராஜேஸ்வரி அம்மனை வணங்குவோம் நல்ல மாற்றத்தை பெறுவோம்.
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved