அவ்வை தன் மகள் திருமணத்தில் செய்த அதிசயம்
நிரஞ்சனா
சேலம் மாவட்டத்தில் உள்ளது அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில்.
கிளி கண்டறிந்த சிவலிங்கம்
ஜீவராசிகளின் படைப்பின் இரகசியத்தை பற்றி முனிவர்களிடம் சொல்லிக் கொண்டு இருந்தார் பிரம்மன். சிவ வழிபாடே சிறந்த வழிபாடு என்று வாழ்ந்து வரும் சுகமுனிவர், பிரம்மன் கூறுவதை கேட்டுவிட்டு கோபம் கொண்டு, “ஜீவராசிகளின் படைப்பை பற்றிய இரகசியத்தை வெளிப்படையாக உன் கணவர் சொல்லிக் கொண்டு இருக்கிறார்”. என்று சரஸ்வதியிடம் முறையிட்டார். சரஸ்வதியிடம் தம்மை பற்றி சுகமுனிவர் குறைச் சொன்னதை அறிந்து ஆத்திரம் அடைந்த பிரம்மன், “சொல்புத்தியில்லாமல் சொல்வதை திருப்ப சொல்லும் கிளியாக பிறப்பாய் நீ“ என்று சுகமுனிவரை சபித்துவிடுகிறார். இதை கேட்ட சுகமுனிவர் வருந்தினார்.
முனிவர் வருந்தியதால் மனம் மாறிய பிரம்மன்
“நீ பாபநாசப்பகுதிக்கு செல். அங்கு தவம் செய். உனக்கு ஏற்பட்ட சாபம் நீங்கும்.” என்று கூறினார். சுகமுனி, கிளி உருவத்தை அடைந்ததால் மற்ற கிளிகள் முனிவருடன் நட்பாக இருந்தது. அத்தனை கிளிகளையும் தன்னுடனே அழைத்துக் கொண்டு பாபநாசத்தில் தவம் செய்தார் கிளி உருவத்தில் இருந்த முனிவர். எண்ணற்ற கிளிகளை ஒரே இடத்தில் கண்ட வேடன் ஒருவன், “இந்த அத்தனை கிளிகளையும் வேட்டையாடினால் நிறைய லாபம் கிடைக்கும்.” என்ற எண்ணத்தில் கிளிகளை வேட்டையாட முயன்றான். கிளி உருவத்தில் இருக்கும் சுகமுனிவர், தம் அனைவரையும் பிடிக்க வேடன் ஒருவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதை தெரிந்து, தன்னுடன் இருந்த மற்ற கிளிகளையும் அழைத்துக் கொண்டு, ஒரு பெரிய புற்றுக்குள் பதுங்கினர். கிளிகளை நீண்ட தூரம் துரத்தி வந்ததால் கோபத்தில் இருந்த வேடன், “என்னிடம் இருந்து யானை கூட தப்ப முடியாது. இவை சாதாரண கிளிகள். இது தப்புமா.” என்று முணுமுணுத்தப்படி தன் கையில் இருந்த அறிவாளால் புற்றை ஓங்கி வெட்டினார். அடுத்த நொடியில் பல கிளிகள் உயிரிழந்தது. ஆனால் சுகமுனிவரான கிளி மட்டும் அந்த புற்றுக்குள் இருந்த சிவலிங்கத்தின் மேல் தன் சிறகுகளை விரித்து, லிங்கத்தின் மேல் அமர்ந்திருந்தது. இதை கண்ட வேடன், அந்த கிளியையும் வெட்டினார். வெட்டப்பட்ட கிளியின் உடல் மனித உடலாகவும், முகம் கிளியாகவும் மாறியதை கண்ட வேடன், இந்த கிளி தெய்வீக சக்திபடைத்ததாக இருக்கும் என்று உணர்ந்து தன்னை தானே அறிவாளால் வெட்டிக் கொண்டான்.
சிவலிங்கம் இருந்த பகுதியில் இறந்ததால் கிளி உருவில் இருந்த சுகமுனிவரும், மற்ற கிளிகளும், அந்த வேடனும் சிவலோகத்திற்கு அழைக்கப்பட்டார்கள். சுகமுனிவர் சிவபெருமானிடம், “பிரம்மனின் சாபத்தால்தான் கிளி உருவம் அடைந்தேன். இதனால் ஒரு நன்மை ஏற்பட்டது. ஒரு வனத்தில் இருந்த புற்றில் தங்களை லிங்கமாக அங்கு கண்டேன்.” என்றார். அதற்கு சிவபெருமான், “உன்னால் நமது லிங்க உருவம் வெளிஉலகிற்கு தெரிந்தது. அதனால் அந்த சிவலிங்கம் “சுகவனேஸ்வரர்” என்று அழைக்கப்படும்.” என்று ஆசி வழங்கினார். வேடனும் மற்ற கிளிகளும் சிவகணங்கள் ஆகின.
ஒருசமயம், விறகு கொண்டு வர காட்டுபகுதிக்கு வந்தார்கள் ஊர்மக்கள். அதில் இருந்த சிலர், அந்த வனத்தில் சிவலிங்கம் தென்பட்டதை கண்டு, தினமும் பூஜிக்க ஆரம்பித்தார்கள். அந்த காட்டுப்பகுதி கிராமமாக மாறியது. சுகவனேஸ்வரரை வணங்கபவர்களுக்கு சுகமான வாழ்ககை ஏற்பட்டதால், இவரின் சக்தி எல்லோருக்கும் தெரிந்தது. பிறகு ஊர்மக்கள் எல்லோரும் வணங்கும் தெய்வமாக மாறினார் சுகவனேஸ்வரர். இன்றுவரை சுகவனேஸ்வரரின் மூல லிங்கத்தில் வேடனால் வெட்டப்பட்ட தழும்பு இருக்கும்.
அவ்வை தன் மகள் திருமணத்தில் செய்த அதிசயம்
சுகவனேஸ்வரர் ஆலயத்தில் அவ்வையார், தன் வளர்ப்பு மகளான பிறவிக்கு திருமண ஏற்பாடுகளை செய்தார். அப்போது திருமண விழாவுக்கு வந்திருந்த சேரன், சோழன், பாண்டிய அரசர்களிடம், தம் மகளை ஆசிர்வதிக்கும் படி கேட்டுக்கொண்டார் அவ்வை. அதற்கு அவர்கள் அவ்வையிடம் மூன்று பனந்துண்டுகளை தந்து, “இதை மரமாக்கி அதிலிருந்து பனம் பழத்தை காய்க்கச் செய்தால் நாங்கள் மூவரும் உன் மகளுக்கு ஆசி வழங்குவோம்.” என்றார்கள்.
அரசர்கள் தந்த பனந்துண்டுகளை பெற்றுக் கொண்டு, “சுகவனேஸ்வரா.. நீ இருப்பது உண்மையானால், மணிமுத்தா நதியில் நீராடுபவர்களுக்கு, இன்பமும் முக்தியும் தருவது உண்மையானால், இத்துண்டு மரமாக வளர வேண்டும்.” என்று சொல்லி கீழ் கண்ட பாடலை பாடினார் அவ்வை.
“திங்கட்குடையுடைச் சேரனும்
சோழனும் பாண்டியனும்
மங்கைக்கறுகிட வந்து நின்றார்
மணப்பந்தலிலே
சங்கொக்க வெண் குருத்தீன்று
பச்சோலை சலசலத்து
நுங்கு கண்முற்றி அடிக்கண்
கறுத்து நுனி சிவந்து
பங்குக்கு மூன்று பழந்தர
வேண்டும் பனந்துண்டமே”
பாடி முடித்தவுடன் அவ்வை மனம் குளிரும்படி சுகவனேஸ்வரர் அந்த நிமிடமே மூன்று பனந் துண்டுகளை மரமாக வளர்ந்தது. அதிலிருந்து மூன்று பனம் பழத்தை பறித்து சேரன், சோழன், பாண்டிய மன்னர்களுக்கு வழங்கினார் அவ்வை. “அதிசயம் நிகழ்த்தினீர்கள்” என்றனர் மன்னர்கள். இது தாம் நிகழ்த்திய அதிசயம் அல்ல. இத்திருக்கோயில் உள்ள நம் இறைவனான சுகவனேஸ்வரர் நிகழ்த்தி காட்டிய அற்புதம்” என்றார் அவ்வை. சேரன், சோழன் பாண்டிய மன்னர்கள் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்தனர். இதனால் மணமக்களுக்கு முப்பெரும் அரசர்களும் ஆசி வழங்கி, இந்த சம்பவத்தின் நினைவாக மூன்று நகரங்களை அமைத்தனர். அதுவே சேரபுரி, உத்தம சோழபுரம், வீரபாண்டி என்று அழைக்கப்படுகிறது.
பொன்னான வாழ்வு தரும் ஸ்வர்ணாம்பிகை
ஸ்வர்ணாம்பிகை, சொன்னம்மை, மரகதவல்லி, பச்சைவல்லி என்று சிறப்பு பெயர்களால் இங்குள்ள அம்பிகை அழைக்கப்படுகிறார். இத்திருக்கோயிலில் உள்ள அருள்மிகு சுகவனேஸ்வரர் தம் பக்தர்களுக்கு வாழ்க்கை சுகத்தையும் ஸ்வர்ணம்பிகை என்ற பெயருக்கேற்ப அம்பிகை பொன்னொளி பரப்பி பக்தர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டு இருக்கிறார். அம்பிகையும் சுகவனேஸ்வரரும் பக்தர்களின் வாழ்க்கையில் செல்வங்களையும், பொன்னை போன்ற உயர்ந்த அந்தஸ்தையும் கொடுப்பார்கள். பக்தியுடன் வழிப்படுவோம் – வளம் பெறுவோம்.
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved