பக்தர்களுக்கு அருளும் தென்னாட்டின் உஜ்ஜைனி மகாகாளி
அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில் மாகாளிக்குடி, சமயபுரம் திருச்சி மாவட்டம்.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது மந்தர மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை நாணாக்கி பாற்கடலை கடைந்தார்கள். அப்போது அந்த பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் வெளி வந்தது. மூவுலகையும் அழித்துவிடும் தன்மை கொண்டது அவ்விஷம். அதனால் அந்த விஷத்தை கண்டவுடன் அசுரர்களும் தேவர்களும் பயந்தார்கள். உலக நன்மைக்காக அந்த விஷத்தைக் சிவபெருமானே வாயில் போட்டுக்கொண்டார். இதை கண்டு அதிர்ந்து போன சக்திதேவி, விஷம் சிவபெருமானின் வயிற்குள் இறங்கிவிட கூடாதே என்று இறைவனின் கண்டத்தை (தொண்டையை) அழுத்தி பிடித்துக்கொண்டார். அதனால் விஷம் கண்டத்திலேயே தங்கிவிட்டது. இதனால் இறைவன் “நீலகண்டன்” எனப் பெயர் பெற்றார். அதே போல இறைவனின் கண்டத்தில் இருக்கும் ஆலகால விஷத்தை வெளியேற்ற, சிவபெருமானின் உச்சி தலையில் தன் கைகளால் தட்டினார் அன்னை பார்வதி. விஷம் வெளியேறக்கூடாது என இறைவனுக்கு தெரியாதா? அதனால் அதற்கு பதிலாக அந்த விநாடியே சிவனின் உச்சி தலையில் இருந்து ஒரு சக்திதேவி உருவானாள். அந்த சக்தி தேவிக்கு “உச்சிகாளி அம்மன்” என்று பெயர் வைத்தாள் பார்வதி தேவி.
“உன்னை வணங்குபவர்களுக்கு பெரியம்மை, சின்னம்மை, உஷ்ண சம்மந்தமான வியாதிகள் அண்டாது.” என்ற பார்வதி தேவி, அத்துடன் உச்சிகாளி அம்மனுக்கு துணையாக பச்சைவேதாளம், கறுப்பன், மோகினி, பிசாசுக் கூட்டங்களையும் படைத்தாள்.
“நீ இப்போது பூலோகத்திற்கு புறப்படு.” என்று ஆசி வழங்கி உச்சிகாளியம்மனை கயிலையிலிருந்து பூமிக்கு அனுப்பி வைத்தார் பார்வதிதேவி.
திருச்சி பகுதிக்கு வந்த உச்சிகாளியம்மன்
பூமியின் பல நாடுகளை சுற்றி வந்த உச்சிகாளியம்மன், அடுத்ததாக தமிழகத்தின் திருச்சி பகுதிக்கு வந்தார். இங்கே எங்கு தங்குவது என்று சிந்தித்த போது அவருக்கு பெரிய மலை ஒன்று தென்பட்டது. அந்த மலையின் உச்சியில் தங்கினார். அந்த இடத்தையே தன் இருப்பிடமாக அமைத்து கொண்டாள் உச்சிகாளியம்மன். ஒருநாள் அந்த தென்னாட்டின் இந்த மலையில் விக்கிரமாதித்தனும் பட்டியும் வேட்டையாட வந்தார்கள். பல மிருகங்களை வேட்டையாடியதால் களைப்படைந்த விக்கிரமாதித்தனும் பட்டியும், ஒரு மரத்தடியில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார்கள்.
அப்போது விக்கிரமாதித்தனுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. தன் அருகில் இருந்த பட்டியிடம், “குடிக்க தண்ணீர் வேண்டும்.” என்றார் விக்கிரமாதித்தன். பட்டியும் தண்ணீருக்காக பல இடங்களில் தேடினார். தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது சிறிது தூரத்தில் ஒரு சுனையைக் கண்டார். அந்த சுனையில் இருந்து தண்ணீர் வந்துக்கொண்டு இருந்தது. அந்த இடத்தின் அருகே சென்றபோது அந்த பகுதியே நல்ல நறுமணம் வீசியது. இந்த நறுமணத்தின் காரணம் என்னவென்று சுற்றி பார்த்தார் பட்டி. இருந்தாலும் காரணம் எதுவும் கண்களுக்கு தெரியவில்லை. ஆனால் உண்மையில் அந்த சுனையின் அருகில் உச்சிகாளியம்மன் தவம் செய்து கொண்டு இருந்தாள். பட்டிக்கு அது தெரியாமல் சுனையில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து விக்கிரமாதித்தனிடம் கொடுத்தார்.
அந்த தண்ணீரை குடித்தவுடன் விக்கிரமாதித்தனுக்கு தூக்கம் தூக்கமாக வந்தது. அதனால் அந்த மரத்தடியிலேயே உறங்க நினைத்தார். அதனால் பட்டியை காவலுக்கு இருக்கும் படி கூறினார் விக்கிரமாதித்தன்.
கனவில் உத்தரவிட்ட காளியம்மன்
அப்போது விக்கிரமாதித்தன் கனவில் மகாகாளி தோன்றினாள். “பட்டி உனக்கு தண்ணீர் கொண்டு வந்த இடத்தின் அருகே நான் தவம் செய்கிறேன். நான் தவம் செய்யும் இடத்தில் எனக்கு கோவில் எழுப்பு.” என்று விக்கிரமாதித்தனின் கனவில் உச்சிகாளியம்மன் கூறினார்.
தூக்கம் கலைந்து, தாம் கண்ட கனவை பட்டியிடம் கூறினார் விக்கிரமாதித்தன். “ஆம் அரசே. சுனையின் அருகில் சென்ற போது தெய்வீக மணம் வீசியது. அப்போதே அந்த இடத்தில் ஏதோ ஒரு தெய்வீக சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்தேன்“ என்றார் பட்டி.
உடனே கோவில் கட்டும் பணியை துவங்க ஏற்பாடு செய்தார் விக்கிரமாதித்தன். கோவில் சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டது. அந்த ஆலயத்தில் மகாகாளி அம்மனை பிரதிஷ்டை செய்தார். அதற்கு “உஜ்ஜைனி மகாகாளி” என்று பெயர் சூட்டினார். அத்துடன் அம்மனுக்கு காணிக்கையாக ஏராளமான தங்கக் கட்டிகளையும் மற்றும் விலையுயர்ந்த பொருட்களையும் தந்தார் அரசர் விக்கிரமாதித்தன். பல பொன் நகைகளையும் நவரத்தினங்களையும் அந்த கோவிலை சுற்றி புதைத்து பாதுகாப்பாக வைத்தார் அரசர்.
விக்கிரமாதித்தனுக்கு பிறகு அந்த கோவில் சரியாக பராமரிக்காமல் போனது. அதனால் அந்த கோவில் சிதிலம் அடைந்தது. கோவில்தான் சிதிலம் அடைந்ததே தவிர அந்த கோவிலில் இருந்த உஜ்ஜைனி காளி என்கிற உச்சிகாளியம்மனின் சக்தி மட்டும் குறையவே இல்லை. விக்கிரமாதித்தன் புதைத்து வைத்திருந்த தங்க புதையல்களை தன்னுடைய காவலர்களான பூதங்களின் படை துணையுடன் காத்து வந்தாள் உச்சிகாளியம்மன்.
பிறகு ஒருசமயம் அந்த புதையல்கள் உள்ள இடத்தை பற்றி தன் பக்தர் ஒருவரிடம் சொன்னாள் உச்சிகாளியம்மன்.
யார் அந்த அதிர்ஷ்டசாலி பக்தர்?
இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© bhakthiplanet.com All Rights Reserved