பிராணலிங்கம் பெற்ற இராவணன்; வாஸ்து வியூக நுட்பங்கள் – பகுதி 8
வாஸ்து வியூக நுட்பங்கள்
பகுதி 8
விஜய் கிருஷ்ணாராவ்
வாஸ்துகலை நிபுணர்
(M) 98411 64648 / 98406 75946
E-Mail : vijaykrisshnarau@yahoo.in
by Vijay Krisshnarau
சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
ஸ்ரீமந் நாராயணனின் இந்த கோபத்திற்கு இது மட்டும் காரணம் இல்லை. வேறு சில காரணங்களும் இருந்தது. அதில் முக்கியமாக, தேவர்களுக்கும்-அசுரர்களுக்கும் அவ்வப்போது ஏதேனும் சச்சரவுகள் இருந்துக் கொண்டு இருப்பது வழக்கம். இந்த நேரத்தில்தான் இலங்கையில் அசுரர்களின் தலைவனாக தன்னை அறிவித்துக் கொண்ட இராவணன், தேவர்களை பெரும் தொல்லைகளுக்கு ஆளாக்கினான். துன்பமே துன்பப்படும் அளவில் தேவர்களை துன்புறுத்தினான். பார்வதிதேவியிடமே வம்புக்கு சென்ற இராவணன், தேவகுல பெண்களை சாதாரணமாக விட்டுவிடுவானா என்ன.? பல தேவர்களை ஓட ஓட விரட்டினான். அவர்களின் மனைவிகளை தன் அந்தபுரத்தில் நிரப்பினான். கிரகங்களை தன் சேவர்களாக அடிமைப்படுத்தினான். தப்பிப்பிழைத்த தேவர்களை தேடி சிறைப்பிடிக்க, ஈரேழு பதினான்கு உலகங்களுக்கு தன் படைகளை அனுப்பி தேடினான். அவர்கள்தான் ஸ்ரீமந் நாராயணனை சரண் அடைந்தார்கள்.
“இராவணனுக்கு வரம் தந்தவர் சிவன். இதற்கு முடிவுதான் என்ன? என்பதை அவரையை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்” என்று தேவர்களை கைலாயத்திற்கு அனுப்பினார் ஸ்ரீமந் நாராயணன்.
தேவர்கள், சிவபெருமானை காண கைலாயம் வந்தார்கள்.
வாசலில் நந்தி.
அவர், தேவர்கள் வந்த காரணத்தை கேட்டறிந்தார்.
“நிச்சயமாக நீங்கள் யாவரும் சிவபெருமானை பார்ப்பதற்கு அனுமதி தருகிறேன். ஆனால் அதற்கு முன் உள்ளே ஒருவர் சிவபெருமானை காண சென்று இருக்கிறார். அவர் வந்த பிறகுதான் உங்களுக்கு அனுமதி.”
“சரி. அப்படியே ஆகட்டும். உள்ளே யார் இருக்கிறார்கள்.?” கேட்டார் தேவர்களின் ஒருவர்.
“யாரை பற்றி புகார் சொல்ல வந்தீர்களோ, அந்த இராவணன்தான் உள்ளே இருக்கிறான். அவன் வெளியே வரட்டும். நான் உங்களை உள்ளே அனுப்புகிறேன்.” என்றார் நந்தியம் பெருமான்.
“அய்யோ” என்று அலறினர் தேவர்கள்.
“நந்தியம் பெருமானே, அவன் உங்களுக்குதான் சாதாரண இராவணன். எங்களுக்கோ, தென்திசையை ஆளும் எமன்தான் அவன். நாங்கள் இங்கே இருப்பதை பார்த்தால் எங்கள் எல்லோரையும் ஒன்றாக கட்டி, மூட்டையை தூக்குவதை போல தூக்கிக்கொண்டு இலங்கைக்கு தன் விமானத்தில் பறந்துப்போவான். நாங்கள் அதோடு தொலைந்தே போவோம். தேவர்குலத்தில் மிச்சம் இருப்பதோ நாங்கள் மட்டும்தான்.” என்று கதறினார்கள்.
அதற்கு நந்தியம் பெருமான், தேவர்களுக்கு ஆறுதல் மொழி சொன்னார்.
“தேவர்களே, அஞ்சுதல் வேண்டாம். நீங்கள் நிற்பது கைலாயத்தின் வாசல். உங்களை அந்த இராவணன் இங்கே ஒன்றும் செய்ய முடியாது. மீறி அவன் உங்களை தாக்க முயன்றால், நிச்சயம் அவன் சிவனின் கோப-சாபத்திற்கு ஆளாவான். அதோடு அழிந்தே போவான் அவன். ஆக அஞ்சாதீர்கள். அஞ்சுதல் அழகல்ல.“ என்றார் நந்தியம் பெருமான்.
“இராவணன் எதற்காக வந்திருக்கிறான்?“ கேட்டார் தேவர்களில் ஒருவர்.
“புதிதாக எதற்கு வருவான். வழக்கம் போல வரம் கேட்டே வந்திருக்கிறான்.“ – நந்தி
“இதுவரை பெற்ற வரங்கள் போதாதோ.? இந்தமுறை எந்த வரம்.?“
“நீங்கள் கேட்பதாக இராவணனிடமே கேட்டு சொல்லட்டுமா?.” என்றார் நந்தியம் பெருமான், கிண்டலான புன்னகையுடன்.
“என்ன நந்தியம் பெருமானே, நீங்களும் எங்களை பயமுறுத்தலாமோ.? இது தகுமோ.? நாங்கள் என்ன பாவம் செய்தோம்.?”
“ஒருவனை துன்புறுத்தும் போது, இது பாவம் என்று தெரியாது. நாம் துன்பப்படும் போது, என்ன பாவம் செய்தோம்? என்றும் தெரியாது.” என்றார் நந்தியம் பெருமான்.
“உணர்கிறோம் பெருமானே. தயவு செய்து சொல்லுங்கள், எந்த வரம் கேட்டு இராவணன் வந்திருக்கிறான்?”
“பிராணலிங்கம் கேட்க வந்திருக்கிறான்.“ என்ற நந்தியின் பதிலை கேட்டு திடுக்கிட்டனர் தேவர்கள்.
“அய்யகோ…. தொலைந்தோம். பிராணலிங்கம் பெற்றுவிட்டால் இனி இராவணன்தான் இன்னொரு சிவன். உலகமே அழிந்தாலும் அவன் அழியமாட்டான். ஆத்மலிங்கத்தை தந்துவிடுவாரா சிவபெருமான்.?” தேவர்களின் ஒருவர் நடுக்கத்துடன் கேட்டார்.
“இந்நேரம் பிராணலிங்கம் இராவணனின் கையில்தான் இருக்கும்.” என்றார் நந்தி.
“எல்லோரும் வாருங்கள் இங்கிருந்து தப்பிச் செல்வோம். பிராணலிங்கத்தை பெற்ற இராவணனை இனி அழிப்பது இயலாது. வாருங்கள், ஸ்ரீமன் நாராயணனையே மீண்டும் சரண் புகுவோம்.” என்று சொல்லி தலைத்தெறிக்க ஓடினார்கள் தேவர்கள், வைகுண்டத்தை நோக்கி.
அதே நேரம் – கைலாயத்தின் உள்ளே…
சிவபெருமானின் முன்பாக பிராணலிங்கத்தை பெற்ற பெரும் மகிழ்ச்சியில் நின்றிருந்தான் இராவணன். அவனுக்கு சிவபெருமான் நல்லாலோசனைகளை வழங்கினார்.
“இராவணா… உன் அன்னையின் விருப்பம் பிராணலிங்கம் பெறுவது. உன் அன்னையின் விருப்பத்துக்காக நீ செய்த தவத்தை ஏற்று, இதோ பிராணலிங்கம் உன் கையில்.இதனை நாள் தவறாமல் பூஜித்து சிறப்பு நிலை பெறுக. சமீபகாலமாக உன்னை பற்றி தவறான செய்திகள் வருகிறதே.?”
“என்ன அய்யனே, நீங்களே அதை தவறான செய்திகள் என்று சொல்லிவிட்டீர்கள். பிறகு நான் என்ன சொல்வதற்கு இருக்கிறது?“
அவன் சொன்னதை கேட்டு சிவபெருமான் கோபம் அடைந்தார்.
“என்ன இராவணா…உன் வார்த்தை ஜாலத்தை என்னிடமே காட்டுகிறாயா.? மண்ணாசை, பெண்ணாசை இவையிரண்டும் ஆலகால விஷத்தைவிட கொடியது. உன் மீது அன்பு கொண்ட காரணத்தால் சொல்கிறேன். இனி தேவர்களை துன்புறுத்தாதே. அவர்களின் மனைவிகளை விட்டுவிடு. நல்ல பலம் பெற்றவன் நீ. அதை நல்ல முறையில் பயன்படுத்தி சிறப்பு பெறு.“
“இராவணா… பிராணலிங்கத்தை பெற்ற மகிழ்ச்சி உன் முகத்தில் தெரிகிறது. இதே மகிழ்ச்சியுடன் இலங்கைக்கு செல். தேவர்களையம் அவர்தம் மனைவிகளையும் விட்டுவிடு. உன் மீது எனக்கு கோபம் இருந்தாலும், உன்னை அழிக்க நான் விரும்பவி்ல்லை.அதற்கு காரணம், உன்னை பெற்ற சிறந்த சிவபக்தையான உன் அன்னை. மற்றும் உன் மனைவி வண்டோதரி.(மண்டோதரி என்றும் அழைப்பர்) அவளும் உன்னை போன்ற ஒரு சிறந்த சிவபக்தை. என் மீதும் மிகுந்த அன்பு கலந்த பக்தி கொண்டவள். சிறப்பான குடும்பத்தில் பிறந்தவள். அவள் உனது மனைவியாக அமைய வரம் தந்தது, உன் மீது எங்களுக்கு உள்ள அன்பால்தான். மகனே, நீ ஒரு மகனாக நடந்துக்கொண்டாள் நானும் கடைசிவரை உனக்கு தாயாக இருப்பேன். என் சொல்லை மீறினாள், பிறகு வருத்தப்பட்டும் பயனில்லாமல் ஆகிவிடும். இதை எச்சரிக்கையாகவும் உனக்கு சொல்கிறேன்.“ என்றாள் அன்னை பார்வதிதேவி.
“தாயே… என் தவறுகளை மன்னித்ததற்கு மகிழ்ச்சி. நான் புறப்படுகிறேன்.” என்றான் இராவணன்.
“நான் இவ்வளவு சொல்லியும், தேவர்களையும் அவர்களின் மனைவிகளையும் விட்டுவிடுகிறேன் என்று சொல்ல மாட்டாயா நீ.” என்றாள் அன்னை பார்வதி.
“இராவணா புறப்படு. அதற்கு முன் ஒரு விஷயம். உன் கையில் இருக்கும் பிராணலிங்கம் உன் கடும் தவத்தால் கிடைத்தது. இதை மிக எச்சரிக்கையுடன் இலங்கைக்கு சென்று பூஜித்துவா. நீ இலங்கைக்கு செல்லும் வழியில், எந்த காரணத்தை கொண்டும் எந்த இடத்திலும் லிங்கத்தை தரையில் வைக்காதே. அப்படி வைத்தால் இந்த பிராணலிங்கம் அந்த இடத்தை விட்டு நகராது. பிறகு இது உனக்கு சொந்தமு்ம் ஆகாது. கவனம் புறப்படு.” என்று சொல்லி அனுப்பி வைத்தார் சிவபெருமான்.
இராவணன் சென்று விட்டான்.
சிவபெருமான் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்தார். அருகில் இருந்த உலக அன்னைக்கு ஒரு யோசனை தோன்றியது. இராவணனுக்கு வரம் தந்த இறைவனே ஒரு புள்ளியும் வைத்தார். அந்த புள்ளியை வைத்தே நாம் கோலம் போடுவோம் என்று தீர்மானித்தாள் அன்னை.
அம்பிகை அப்படி என்ன செய்ய போகிறார்..?
வாஸ்து கேள்வி-பதில்
கேள்வி – என் வீட்டின் வரைப்படம் அனுப்பி உள்ளேன். அதில் வாஸ்து குறை இருக்கிறதா?
– கே.செந்தில் துரை
பதில் – வடகிழக்கு துண்டிக்கப்பட்டுள்ளது. வேறு வாஸ்து குறை எதுவும் நீங்கள் அனுப்பிய வரைப்படத்தில் இல்லையென்றாலும், வடகிழக்கு குறைந்து இருப்பது மிக வாஸ்துதோஷம். அதை சரிப்படுத்துங்கள்.
கேள்வி – புதிய வீடு கட்டி வருகிறோம். எந்த நிறத்தில் TILES பதிக்கலாம்?
– அனிதா ராகவன்
பதில் – கருப்பு நிறத்தை தவிர மற்ற நிறங்கள் நல்லது.
கேள்வி – எங்கள் வீட்டின் வடக்கு காம்பவுண்ட் சுவர் உயரமாக இருக்கிறது. அது தவறா?
எம்.சண்முகம்
பதில் – ஒரு வீட்டின் நான்கு பக்க காம்பவுண்ட்டும் ஒரே உயரத்தில் இருக்க வேண்டும். அல்லது வடக்கு-கிழக்கை விட தெற்கு-மேற்கு பகுதியின் காம்பவுண்ட் சுவர், சற்று உயரமாக இருக்க வேண்டியது அவசியம்.
வாஸ்து தொடர்பான பொதுவான கேள்விக்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சலில் “வாஸ்து கேள்வி-பதில்” என்று தலைப்பிட்டு, கேள்வியை bhakthiplanet@gmail.com என்ற மின்னஞசல் முகவரிக்கு அனுப்பவும்.
உங்கள் கட்டடத்தின் விரிவான வாஸ்து பலன் அறிய, கீழ்கண்ட குறைந்த கட்டண சேவையை பார்க்கவும்.
© 2011 bhakthiplanet.com All Rights Reserved