Sunday 17th November 2024

தலைப்புச் செய்தி :

அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில்

பகுதி – 1 

நிரஞ்சனா

திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் உள்ளது ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில்.

பிரம்மனால் அன்னை ஆணாக மாறிய சம்பவம்

பிரம்மன், தன் படைக்கும் தொழிலை சிறப்பாக செய்துவந்தார். சித்திர குப்தரும் அவரவர் செய்யும் பாவ புண்ணிய கணக்கை பிரம்மனிடம் தருவார். ஒருநாள் சித்திரகுப்தர், ஒரு ஆத்மாவின் பாவ புண்ணிய கணக்கை சரிபார்த்த போது அந்த ஆத்மா பாவமே செய்யாமல் அதிக புண்ணியம் மட்டுமே செய்திருந்தது. இதனால் அந்த அந்த ஆத்மாவை பற்றி “புண்ணியவான்” வரிசையில் எழுதி பிரம்மனிடம் அனுப்பி வைத்தார். சித்திரகுப்தர் கொடுத்த கணக்குப்படி பார்த்தால் அந்த ஆத்மா, அழகான பெண் உருவத்திலும் அதிக வசதி படைந்த குடும்பத்திலும் உயர்ந்த குலத்திலும் பிறக்க வேண்டும் என்று விதியிருப்பதால் பிரம்மன் ஒரு பெண் உருவத்தை அந்த ஆத்மாவுக்கு தந்தார்.

கொடும் விதி பிரம்மனையும் விடவில்லை. மதி கெட்ட புத்தியை பிரம்மனுக்கு தந்தது விதி. ஆம்…தான் படைத்த பெண்ணை பார்த்து பிரம்மனே மதி மயங்கினார். அந்த பெண்ணை தாமே திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்பி அந்த பெண்ணிடமே தன் விருப்பத்தை கூறினார்.

“படைத்தவர் தந்தையாகிறார். ஆகவே நீங்கள் என் தந்தை ஸ்தானத்தில் இருக்கிறீர்கள்.” என்று கூறி நிராகரித்தாள் அந்த பெண். பிரம்மனும் இதை ஒப்புக்கொண்டார். இருந்தாலும் புத்தி தடுமாறியதால் பிரம்மனின் பதவிக்கே பங்கம் ஏற்பட்டது. அத்துடன் பெரும் பாவமும், தோஷமும் பிரம்மனை பிடித்துக்கொண்டது. பாவத்தை போக்க சிவனை நினைத்து தவம் இருந்தார். பிரம்மனின் தவத்தை ஏற்ற சிவபெருமான், பிரம்மனுக்கு காட்சி தர விரும்பினார். அப்போது அன்னை பார்வதிதேவி, “பிரம்மன் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தான் படைத்த பெண்ணின் மீதே ஆசைக்கொண்டான். அவன் மன்னிப்புக்கு அருகதையற்றவன்.” என்று கோபப்பட்டாள் பார்வதி தேவி. சக்திதேவி ஆத்திரத்துடன் இருப்பதால் இந்த நேரத்தில் பிரம்மனுக்கு வரம் தந்தால் அது தன் மனைவியை அவமானப்படுத்தியதாகிவிடும் என்று கருதிய சிவபெருமான், ஒரு பெண்ணால் துன்பத்தில் துவண்டு இருக்கும் பிரம்மனை ஒரு பெண் மன்னிப்பதுதான் சரியாக இருக்கும் என்பதால், “பார்வதிதேவியே மன்னிக்கும் வரை பிரம்மன் காத்திருக்கட்டும்” என்று முடிவு செய்தார்.

பார்வதிதேவி தன் பங்குக்கு பிரம்மனை சோதித்தாள். தன் கணவனின் நிலை கண்டு கலங்கி நின்ற சரஸ்வதிதேவிக்காக அன்னை பார்வதி கோபம் தணிந்தாள். பெண்ணாசையில் இருந்து பிரம்மன் திருந்தினாரா என்று அறிய சிவபெருமான் உருவத்தில் தானும் அழகிய தன்னுடைய உருவத்தில் சிவபெருமானும் பிரம்மனை சந்திப்பது என்று அன்னை பார்வதிதேவி முடிவு செய்து பிரம்மன் முன் தோன்றினார்கள். சிவ-சக்தியை கண்டு கண்ணீருடன் வணங்கி நின்று போற்றினார் பிரம்மன்.

பார்வதியின் உருவத்தில் இருந்த சிவபெருமானிடம்,

“அம்மா என்னை நீங்கள்தான் மன்னிக்க வேண்டும். விதியே என் மதிக்கு கெடான எண்ணத்தை தந்தது. இனி எந்த சமயமும் இது போல் தவறாக பேசவும் மாட்டேன் எண்ணமும் மாட்டேன். பெண்ணாசையில் கெடு நிலையை சந்தித்த எனக்கு, தாயாக இருந்து என்னை தாங்களே மன்னி்த்தருள வேண்டும்.” என்று கலங்கிய பிரம்மன், சிவபெருமானின் உருவத்தில் இருந்த பார்வதிதேவியிடம்,

“அய்யனே…தாங்களும் என்னை மன்னிக்க வேண்டும். அன்னைக்கு என் மீதுள்ள கோபத்தை தாங்களே தணிக்க வேண்டும். இனி எந்த நிலையிலும் தவறு செய்ய மாட்டேன். எனக்கான பிரம்ம பதவி-அதிகாரம் தாங்கள் அருளியது. அதனை இனி எப்போதும் தவறாக பயன்படுத்த மாட்டேன்.” என்று நான்முகனின் எட்டு கண்களும் கலங்கியபடி சொன்னார். அன்னை பார்வதிதேவிக்கு பிரம்மனின் வாக்குறுதியின் மீது நம்பிக்கை ஏற்பட்டது. கருணையுடன் பிரம்மனை மன்னிப்பதாக சொன்னாள் சக்திதேவி. தனக்காக சிவபெருமானும் அன்னை பார்வதிதேவியும் தோன்றி, பாப விமோசனம் தந்த இடத்தில் பிரம்மன் குளம் ஒன்றை உருவாக்கினார். அது “பிரம்ம தீர்த்தம்” என அழைக்கப்படுகிறது.

ஜம்புகேஸ்வரர் என்று சிவலிங்கத்திற்கு பெயர் வந்ததன் காரணம்

பிரம்மனை சோதிக்க சிவன் உருவத்தில் சக்தி தோன்றினாலும் பிரம்மனை ஏமாற்றியதால் சக்திதேவிக்கு பாவம் பிடித்துக்கொண்டது. அதை பற்றி பெரிதாக பொருட்படுத்தாமல் சிவபெருமான் இருந்தாலும், “அகிலத்தையே காப்பவள் என்றாலும் என் மீது சிறு குற்றமும் இல்லாமல் இருந்தால்தான் நல்லது. அத்துடன் என்னையே பக்தர்கள் பின் பற்றுவதால் பொய் வேஷம் போடுவது  தவறு இல்லை என்கிற எண்ணம் என் பக்தர்களுக்கும் தோன்றிவிடும்.” என்று எண்ணிய சக்திதேவி, பிரம்மனுக்கு அருளிய இடத்திலேயே தன் தவ வலிமையால் பெரும் அதிசயமாக காவிரி நீரால் சிவலிங்கத்தை உருவாக்கி அங்கேயே தவம் இருந்து வழிப்பட்டு வந்தார். காவிரி நீரால் உருவாக்கபட்ட லிங்கத்தை ஜம்பு என்ற முனிவரும் வழிபட்டு வந்தார்.

ஒருநாள், சிவலிங்கத்தின் அருகே சக்திதேவி நாவல் பழத்தை படைத்து வணங்கினார். அதை ஜம்பு முனிவர் சிவ பிரசாதம் இருக்கிறதே என்றெண்ணி எடுத்து சாப்பிட்டார். அகிலாண்டேஸ்வரி இறைவனுக்கு படைத்த நாவல் பழம் அல்லவா. அதனால் அந்த பழம் அதிசய சக்தியுடன் இருந்தது. முனிவர் விதையோடு பழத்தை விழுங்கியதால் வயிற்றிலே நாவல் மரம் வளர்ந்து முனிவரின் தலையை வெடித்துக்கொண்டு வந்தது. “இது என்ன புது பிரச்னை. தன்னால் ஒரு முனிவருக்கு இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டுவிட்டதே.” என்று வருந்திய சக்திதேவியை சிவபெருமான் சமாதானப்படுத்தினார்.

“கவலைவேண்டாம். இந்த ஜம்புமுனிவர் பெயரால் நான் “ஜம்புகேஸ்வரர்” என்ற நாமத்தில் நீ உருவாக்கிய லிங்கத்தில் காட்சி தருவேன். இந்த முனிவர் நாவல் மரமாக இருந்து நமக்கு நிழல் தரட்டும்” என்றார்.

கோயில் உருவான கதை

கைலாய மலையில் புட்பதந்தன், மாலியவான் என்கிற இரண்டு சிவகணங்கள் இருந்தார்கள். சிவபெருமானுக்கு பணிவிடை செய்வதில் இருவரும் போட்டி போடுவார்கள். ”நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருங்கள்.” என்று பலமுறை சிவபெருமானும் சொல்லி பார்த்தார். ஆனால் அந்த சிவகணங்கள் கேட்பதாக இல்லை. ஒருநாள்…

இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்…

© bhakthiplanet.com All Rights Reserved  

Posted by on Aug 5 2011. Filed under அம்மன் கோயில், ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech