வெங்காயத்தில் இறைவனின் ஆயுத வடிவம்;சாய்பாபா சொன்ன விளக்கம்
மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு
பகுதி – 13
சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
நிரஞ்சனா
சிலர் ஒன்றும் இல்லாத விஷயத்தை “வெங்காயம்” என்பார்கள். வெங்காயத்திலும் இறைவனின் வடிவம் இருப்பதை உணர்த்தினார் மகான் ஷீரடி சாய்பாபா. அது என்ன? என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.
நாச்னே என்பவர் தன் மாமியருடனும் மற்ற உறவினர்களுடன் பாபாவை தரிசிக்க சீரடி வந்தார். மகான் சாய்பாபா, அவர்களை ஷீரடியில் சில நாட்கள் தங்கும் படி சொன்னார். அவர்களும் பாபாவின் பேச்சுக்கு மறு பேச்சு பேசாமல் ஷீரடியில் சில நாட்கள் தங்க சம்மதித்தார்கள். ஒருநாள் மதிய உணவுக்காக அவர்கள் சமையல் செய்து கொண்டிருந்தனர் நாச்னே குடும்பத்தினர். அதில் அவருடைய மாமியார், சாம்பாருக்கு தேவையான காய்கறிகளை நறுக்கிக்கொண்டு இருந்தார். அப்போது அதில் வெங்காயத்தையும் சேர்க்க, அதை நறுக்கிக்கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் தாதா கேல்கர் என்கிற வைதீக பிராம்மணர், சமையல் அறைக்கு வந்தார். நாச்னேவின் மாமியார் வெங்காயத்தை நறுக்கிக்கொண்டு இருப்பதை கண்ட தாதா கேல்கருக்கு கடும் கோபம் உண்டானது.
“உங்களுக்கு அறிவே இல்லையா.? இந்த வயதிலும் வெங்காயத்தை சாப்பிடுகிறீர்களே, வெங்காயம், தமோ குணத்தை தருமே. முட்டாள்தனமாக ஏன் செய்கிறீர்கள்.? இன்னும் என்னென்ன பார்க்க வேண்டுமோ உங்களால், பெருமாளே“ என்று அந்த பெண்ணை வயதில் மூத்தவர் என்ற கூட மதிக்காமல் திட்டி தீர்த்துவிட்டு அங்கிருந்து சென்றார் தாதா கேல்கர்.
“வெங்காயம், இந்த பிராம்மணருக்கு பிடிக்காது என்பதற்காக, ஏதோ நான் செய்யக்கூடாத தவறை செய்துவிட்டது போல இப்படி எல்லோரின் முன் தன்னை தீட்டிவிட்டாரே. இதையெல்லாம் கேட்டு நான் மனவேதனை அடைய வேண்டும் என்பதுதான் சாய்பாபாவின் விருப்பமா.? அதனால்தான், சில நாட்கள் தங்கியிருங்கள் என்றாரா சாய்பாபா.? ஷீரடிக்கு வந்து சென்றாலே அவர்களுக்கு பெருமை கிடைக்கும் என்பார்களே. எனக்கோ முட்டாள் என்ற அவப்பெயரும் வசையும்தானே கிடைத்தது“ என்று தன் மருமகனான நாச்னேவிடம் புலம்பினாள் அவருடைய மாமியார்.
“பொறுமையாக இருங்கள். இதை சாய்பாபாவிடம் சொல்ல வேண்டாம். இப்படி ஒரு சம்பவம் நடந்தது பாபாவிற்கு தெரிந்தால் வருத்தப்படுவார். இன்னும் சில நாட்கள்தானே பொறுத்துக்கொள்ளுங்கள். நெற்பயிருக்கு இடையே புல் முலைப்பதில்லையா?, அதுபோல்தான் நல்ல குணம் படைத்த சாய்பாபாவிடம், தாதா கேல்கர் போன்று அடாவடி குணம் படைத்த பக்தர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அமைதியாக இருங்கள். மனதில் எதுவும் வைத்துக்கொள்ள வேண்டாம்.” என்று தன் மாமியாருக்கு ஆறுதல் சொன்னார் நாச்னே.
“சாய்பாபாவிடம் நடந்ததை சொல்ல வேண்டாம்.” என்று நாச்னே சொன்னாலும், பாபாவிற்கு அது தெரியாமலா போய்விடும்.? உலகத்தையே காப்பவர் நம் பாபா. அவர் நிச்சயம் இந்த சம்பவத்தை அறிந்திருப்பார். அறிந்திருப்பார் என்பதை விட அறிந்துவிட்டார் என்பதே சரி. அதனால்தான் தாதா கேல்கருக்கு, சாய்பாபா பாடம் புகட்ட நினைத்து ஒரு செயலை செய்தார்.
சில நாட்களில் தாதா கேல்கரின் பேத்தி, தனக்கு கண் வலிப்பதாக சொன்னாள். நேரம் ஆகஆக வலி அதிகமாகிவிடடது. பேத்தியின் கண்கள் சிகப்பாக மாறியது. இதை கண்ட கேல்கருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கண்ணில் தாய்பால் ஊற்றினால் சரியாகிவிடும் என்றார்கள். இதனால் அருகில் இருந்த லஷ்மிபாய் என்ற பெண் அவசர அவசரமாக வெளியே சென்று எங்கிருந்தோ தாய்பால் கொண்டு வந்து அந்த குழந்தையின் கண்களில் ஊற்றினாள். ஆனாலும் அந்த குழந்தையின் கண் வலி குறையவில்லை. மேலும் அதிகமாகிகொண்டே போனது.
பேத்தி கண் வலியால் துடிப்பதை காண பொறுக்காமல் உடனே வைத்தியரிடம் அழைத்துச் சென்றார் தாதா கேல்கர்.
“கவலைப்படாதே கேல்கர். உன் பேத்தியின் கண்ணில் ஏதோ சிறு தூசிப்பட்டுவிட்டது. அது நம் கண்களுக்கு தெரியாமல் எங்கோ அவள் கண்ணுக்குள்ளே மறைந்து, அவளை படாதபாடுப்படுத்துகிறது. அவள் கண்ணுக்குள்ளே மறைந்திருக்கும் அந்த தூசி வெளியே வர, வெங்காயத்தை நசுக்கி மெல்லிய துணியில் கட்டி கண்ணுக்கு ஒத்தடம் கொடுத்தால், வெங்காயத்தின் தன்மையால், கண்ணீருடன் அந்த தூசியும் வெளியே வந்துவிடும்.” என்றார் வைத்தியர்.
வெங்காயத்துக்காக கேல்கர் பல இடங்களில் தேடி அலைந்தார். அந்த சமயம் பார்த்து எங்கும் வெங்காயம் கிடைக்கவில்லை. “இப்போதுதான் சமைத்துவிட்டோம்” என்றும், “வெங்காயம் நாங்கள் வாங்குவதில்லை” என்றும் தெரிந்தவர்கள் எல்லாம் சொல்லிவிட்டார்கள். காய்கறி கடைக்கு ஓடி வந்தார்.
“சுவாமி…வெங்காயம் தீர்ந்துவிட்டது. நீங்கள் இன்று மாலை வந்தால், மண்டியில் இருந்து புத்தம் புதிய வெங்காயம் வரும். எத்தனை கிலோ வேண்டும் என்று சொல்லுங்கள். உங்களுக்கு தனியாக எடுத்து வைக்கிறேன்.” என்று காய்கறி கடைக்காரர், தாதா கேல்கரின் அவசரம் புரியாமல் பேசினான்.
“அடேய் உன்னிடம் ஒரு வெங்காயம் கூடாவா இல்லை.?” என்றார் கேல்கர்.
“எலி வலையில் வைக்க கூட, சிறு வெங்காயத் துண்டும் இல்லை சுவாமி.” என்றார் கடைக்காரர்.
“இப்போது என்ன செய்வது.? வேதம் சொன்ன வாய், இன்று வெங்காயம், வெங்காயம் என்கிறதே. வெங்காயத்தை எங்கே தேடுவேன்.? இறைவா…நான் ஆஸ்தி கேட்டேனா, அந்தஸ்து கேட்டேனா.? ஒரு வெங்காயம்தானே கேட்கிறேன். அதை எனக்கு கிடைக்கச் செய்யக்கூடாதா?” என்ற மனம் புலம்பியபடி வந்த தாதா கேல்கருக்கு, நாச்னேயின் மாமியாரின் ஞாபகம் வந்தது.
“அட அந்த அம்மையார் வீட்டில் வெங்காயம் இருக்குமே. இது நமக்கு தெரியாமல் தெரு தெருவாக சுற்றுகிறோமே.” என்று நாச்னே தங்கி இருந்த வீட்டுக்கு விரைந்தோடி வந்தார்.
தாதா கேல்கரை பார்த்த உடன் நாச்னேயின் மாமியார் நடுங்கினாள். “அய்யோ. வந்து விட்டாரே இந்த பிராம்மணர். இன்று என்ன காரணம் சொல்லி திட்டப் போகிறாரோ.?“ என்று குழப்பத்துடன் வரவேற்றாள்.
“அம்மா உங்கள் வீட்டில் வெங்காயம் இருக்கிறதா.?” என்றார் தாதா கேல்கர்.
“அய்யய்யோ…மீண்டும் பழைய கதைக்கே வருகிறாரே இந்த பிராம்மணர், என்ற பயத்தில்,
“சுவாமி.. வெங்காயத்தை சமையலில் பயன்படுத்தக் கூடாது என்று நீங்கள் சொன்னதால், நான் அதை உபயோகப்படுத்துவதில்லை.” என்றாள்.
“அம்மா, நடந்த சம்பவத்தையும் என் மீது தங்களுக்கு இருக்கும் வருத்தத்தையும் மறந்துவிடுங்கள். என் பேத்தி இப்போது ஆபத்தில் இருக்கிறாள்.” என்ற பேத்திக்கு நடந்ததை சொன்னார் தாதா கேல்கர்.
“சுவாமி, உண்மையிலேயே நீங்கள் சொன்னதற்கு பிறகு நான் வெங்காயத்தை சமையலில் சேர்ப்பதில்லை. பழைய வெங்காயம்தான் வீட்டில் இருக்கிறது. இருங்கள் இதோ கொண்டு வருகிறேன்.” என்ற நாச்னேயின் மாமியார், வெங்காயத்தை எடுத்து வந்தார்.
“அம்மா…நீயே என் கடவுள்.” என்ற கேல்கரின் கண்களில் வெங்காயத்தை உரிக்காமலேயே கண்ணீர். அவசர அவசரமாக வைத்தியரின் வீட்டுக்கு ஓடினார்.
நாச்னேயின் மாமியாருக்கு மிக சந்தோஷம். “முட்டாள் என்ற சொன்ன அதே வாயால், தன்னை கடவுள் என்கிறாரே இந்த பிராம்மனர். எல்லாம் சாய்பாபாவின் கருணை. இது புரியாமல் பாபாவின் மீது வருத்தம் அடைந்தேனே. நானும் அந்த பிராம்மனரை போன்ற அவசரக்காரிதான்.” என்று கலங்கினாள்.
அது சாதாரண வெங்காயம்தான் என்றாலும், வெங்காயத்துடன் வைத்தியரின் வீட்டுக்கு ஓடி வந்த தாதா கேல்கரை இந்த சமயத்தில், சஞ்சீவி மலையை பெயர்த்துக் கொண்டு வந்த அனுமனை போல அவரை பலர் பார்த்தனர்.
வெங்காயத்தை வாங்கிய வைத்தியர், வைத்தியமுறைப்படி அதை நறுக்கி, ஒரு துணியால் வெங்காயத்தை கட்டி, கேல்கரின் பேத்தி கண்களில் ஒத்தடம் தந்தார். சில விநாடிகளில் குழந்தையின் கண்ணுக்குள் எங்கோ மறைந்திருந்த அந்த சிறு தூசி, குழந்தையின் கண்ணீருடன் வெளியேறியது. குழந்தையின் வேதனை நீங்கியது.
பிறகு இந்த சம்பவத்தை மகான் சாய்பாபாவிடம் கூறினார் தாதா கேல்கர்.
“எப்போதும் யாரையும் அவமானப்படுத்தகூடாது கேல்கர். உனக்கு பிடிக்காத செயலை பிறர் யாராவது செய்தால், அதை பக்குவமாக அவர்களின் மனம் வேதனைப்படாதபடி எடுத்துச்சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு எடுத்தோம்-கவிழ்த்தோம் என்று பேசினால், அது தவறு. நல்லவர்களின் மனம் வேதனைப்படுத்தியவர் தன் பக்தரே ஆனாலும், நிச்சயம் இறைவனால் அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். மனிதன், இன்னொரு மனிதனை நிராகரித்தால், அப்படி நிரகாரிக்கப்பட்டவன் வேறு எங்கு சென்றாலும் வாழ்ந்துவிட முடியும். ஆனால் தெய்வம் ஒருவரை நிராகரித்தால், தெய்வத்தால் நிராகரிக்கப்பட்வர் எங்கு சென்றாலும் வாழ முடியாது. இது தெய்வநீதி என்பதை மறக்காதே தாதா கேல்கர்.
அதுமட்டுமல்ல தாதா கேல்கர். இறைவனின் படைப்பில் எதுவும் தீண்டதகாதது அல்ல. வெங்காயம் உட்பட. வெங்காயத்தை குறுக்காக வெட்டினால், அது விஷ்ணு சக்கரம் போல தெரியும் பார். இனிமேலாவது யார் மனதையும் புண்படும்படி பேசாதே. ஒருநாள் அவர்களிடமே கையேந்தும் நிலையை இறைவன் தந்து விடுவான் என்பதை மறக்காதே.” என்று மகான் ஷீரடி சாய்பாபா தாதா கேல்கருக்கு அறிவுரை சொல்லி தாதா கேல்கரை மன்னித்தார்.
அதிர்ஷ்டராவ். இவர் ஒரு கிறிஸ்துவர். இவருடைய மனைவியின் உடல்நிலையில் ஒரு பிரச்சினை. அது என்ன கோளாறு என்று சொல்ல தெரியாமல் குழம்பினார்கள் மருத்துவர்கள். இந்த பெண்ணை குணப்படுத்த முடியாமல் திணறினார்கள். இதை கேள்விப்பட்ட ராவின் நண்பர், ஷீரடி சாய்பாபாவின் மகிமையை சொல்லி வணங்க சொன்னார்.
“நீ கிறிஸ்துவர் என்பதற்காக தயங்காதே. தன் மதத்தை உன் மீது திணிக்க மாட்டார். அவர் நம் தந்தையை போன்றவர். குழப்பம் அடையாமல் ஷீரடி சாய்பாபாவை வணங்கு.” என்றார் நண்பர்.
அதிர்ஷ்டராவ் என்ன செய்தார்….? அவருக்கு மகான் ஷீரடி சாய்பாபா வணங்கும் பாக்கியம் இருந்ததா…?அடுத்த பகுதியில் பார்ப்போம்.
இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
© 2011 bhakthiplanet.com All Rights Reserved