Friday 27th December 2024

தலைப்புச் செய்தி :

வீர சிவாஜியின் உருவில் எதிரிகளுக்கு தோன்றிய ஸ்ரீபாண்டுரங்க விட்டலேஸ்வரர்

நிரஞ்சனா

அருள்மிகு ஸ்ரீபாண்டுரங்க விட்டலேஸ்வரர் திருக்கோயில் விட்டலாபுரம் – 627 304 திருநெல்வேலி மாவட்டம்.  

கோயில் உருவான கதை  

16ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசரின் தமிழகப் பிரதிநிதியாக விட்டலாராயன் என்ற விட்டலதேவன் ஆட்சி செய்து வந்தார். இவர் பகவான் பாண்டுரங்கன் மீது தீவிர பக்தி கொண்டு இருந்தார். எதையும் பாண்டுரங்கனால்தான் செய்ய முடியும் என்று அதிகமாக நம்பிக்கை கொண்டு இருப்பார். இவருடைய பக்தியை கண்ட எல்லோரும் பாராட்டி வணங்கும் பக்திமானாக திகழ்ந்தார். ஒருநாள்  பாண்டுரங்க பக்தரான அரசரின் கனவில் ஸ்ரீபாண்டுரங்கனே தோன்றி, “தாமிரபரணி ஆற்றில் புதைந்திருக்கும் எனது விக்கிரகத்தை எடுத்து கோயில் கட்டி வழிபாடு செய். பக்தர்களுக்கு வரம் தருவேன்.” என்று அரசரின் கனவில் கூறி மறைந்தார். தான் கண்ட கனவை மறுநாளே நிறைவேற்ற வேண்டும் என்ற ஆவலில் தூங்காமல் விழித்து கொண்டே இருந்தார். அத்துடன் பொழுது விடிந்ததும் காவலர்களை அழைத்து கொண்டு தாமிரபரணி ஆற்றுக்கு சென்று பாண்டுரங்கனின் சிலையை தேடினார்கள்.

அப்போது ஒர் இடத்தில் சிலை இருந்தது. அதை எடுத்தவுடன் பாண்டுரங்கனுக்கு பிடித்தமான இந்த பகுதியிலேயே ஆலயம் எழுப்பினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தபோது ஒரு அசரீரி குரல், “இந்த பகுதியின் அருகேயே கோயில் கட்டி இந்த சிலையை பிரதிஷ்டை செய்” என்ற குரல் கேட்டது. மன்னர், “கோயில் கட்ட நல்ல இடம் எங்கு இருக்கிறது?” என்று பார்வையிட ஆற்றின் கரை வழியா நடந்து சென்று கொண்ட இருந்தார். 2 கிலோமிட்டர் தூரம்தான் சென்று இருப்பார். அப்போது அங்கே ஒரு கல் தடுக்கியது. உடனே அரசர் மகிழ்ச்சியடைந்தார். இந்த இடம்தான் ஸ்ரீபாண்டுரங்கனுக்கு பிடித்த இடமாக இருக்கும் என்று உணர்ந்து அந்த இடத்திலேயே கோயிலை கட்டினார். அந்த கோயிலுக்கு விட்டலாராயன் என்ற தன் பெயருடன் பாண்டுரங்கன் என்று இறைவனின் பெயரையும் சேர்த்து “விட்டலாபுரம் பாண்டுரங்கன்“ என்று கோயிலுக்கு பெயர் வைத்தார்.

தன் பக்தர்களை எந்நேரமும் காத்தருளும் ஸ்ரீபாண்டுரங்கன்

கன்னட மாநிலத்தில் புரந்தடகட என்ற ஊரில் வரதப்பா என்பவருக்கு புரந்தரதாசர் என்பவர்  மகனாக பிறந்தார். இவர்கள் குடும்பம் இரத்தின வியபாரம் செய்து செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்தது. சிறு வயதிலேயே புரந்தரதாசரின் திருமணம் நடந்தது. சரஸ்வதிபாய் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இப்படி வியபாரம்-இல்லற வாழ்க்கை என்று போய் கொண்டு இருந்த புரந்தரதாசருக்கு இறைவன் மேல் பக்தி வந்ததற்கு, அதுவும் பாண்டுரங்கன் மீது பக்தி வந்ததற்கு காரணம் வயிற்றுவலி.

எத்தனையோ மருந்து சாப்பிட்டும் நோய் நீங்கவில்லை. பண்டரிநாதரை வணங்கினால் நம் நோய் நீங்கும் என்ற நம்பிக்கை அந்த ஸ்ரீபாண்டுரங்கன் அருளாலே தோன்றி பண்டரிநாதரை வணங்க பல திருதலங்களுக்கு சென்றார். நம்பிக்கை பலித்தது. வயிற்று வலி மறைந்தது. இதன் பிறகு ஸ்ரீபாண்டுரங்கனின் பரிபூரண ஆசி பெற்ற இவர், கர்நாடக இசையின் தந்தை எனப் போற்றப்பட்டார்.  “மாயாமாளவகெளளை“ என்னும் இராகம்தான் ஆரம்பப் பயிற்சி பெறுவதற்கு ஏற்ற ராகம் எனத் தேர்ந்தெடுத்தவர். மாஞ்சிபைரவி, மாரவி, வசந்தபைரவி, சியாமகல்யாணி போன்ற ராகங்கள் இவர் உருவாக்கியதுதான். இத்தகைய புகழை ஸ்ரீபாண்டுரங்கனே இவருக்கு அருளினார்.

தனது நாமத்தை கேட்கும் பக்தர்களின் துன்பத்தை தீர்க்க விரைந்து வருவான் ஸ்ரீபாண்டுரங்கன்.

துக்காராம் என்பவரை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. ஸ்ரீபாண்டுரங்கனின் சிறந்த பக்தர்களில் ஒருவர். இவர் ஒருநாள்  ஸ்ரீபாண்டுரங்கனைப் நினைத்து பாடிக்கொண்டே வீதி வீதியாக வந்துக் கொண்டிருந்தார்.  இவரின் குரலை கேட்ட மகாராஷ்ட்ர மன்னரான சத்ரபதி சிவாஜி ஆனந்தம் அடைந்தார். “இது ஸ்ரீபாண்டுரங்கனின் பக்தன் குரலா? அல்லது அந்த ஸ்ரீபாண்டுரங்கனே வந்து பாடுகிறானா? என்ன இனிமையான குரல்.” என்று மெய் மறந்து மாறுவேடத்தில் மக்களோடு மக்களாக சென்று ரசிக்க நினைத்தார். இதை எப்படியோ தெரிந்துக் கொண்ட மன்னரின் எதிரிகள், அந்த இடத்திலேயே சத்ரபதி சிவாஜியை கொல்ல திட்டம் போட்டார்கள்.  பகைவரின் சூழ்ச்சி அறியாமல் இரவு பொழுது என்பதையே மறந்து ஆனந்தமாக கேட்டு கொண்டு இருந்தார் வீர சிவாஜி். ஆனால் ஸ்ரீபாண்டு ரங்கனின் சக்தி பெற்ற  துக்காராம், சத்ரபதியை சத்ருக்கள் நெருங்குவதை அறிந்து பாடல்களைப் பாடியப்படியே, அரசரை காக்கும்படி மனதுக்குள் ஸ்ரீபாண்டுரங்கனை வேண்டினார். அந்த நிமிடமே ஸ்ரீபாண்டுரங்கன்,  சத்ரபதி சிவாஜியின் உருவில் எதிரிகளுக்கு தோன்றி குதிரை மீதேறிச் சென்றார். சத்ரபதி சிவாஜிதான் குதிரையில் சென்றுக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துவிட்ட எதிரிகள் ஸ்ரீபாண்டுரங்கனை பின் தொடர்ந்து போய்விட்டார்கள்.

மறுநாள் துக்காராமிடம் இருந்து விடை பெற்று தன் அரண்மனைக்கு திரும்பினார் சிவாஜி. அப்போது காவலர்கள், “நேற்று நீங்கள் எதிரிகளை தனி நபராக நின்று வெட்டி வீழ்த்தியதை கண்டு எல்லோரும் பெருமையாக பேசுகிறார்கள்.” என்றார்கள். இதை கேட்ட சத்ரபதி சிவாஜி, “ஸ்ரீபாண்டுரங்கனின் பெருமைகளை கேட்டுகொண்டு துக்காராமின் அருகில்தானே இரவு முழுவதும் இருந்தோம். அப்படி என்றால் இந்த அதிசயங்களை நிகழ்த்தியது ஸ்ரீபாண்டுரங்கனே.” என்பதை உணர்ந்தார்.

மன்னரின் அன்பு வேண்டுதலை ஏற்ற ஸ்ரீபாண்டுரங்கன்

பாண்டுரங்க விட்டலேஸ்வரரிடம், “தங்களை தரிசிக்க வரும் பக்தர்களின் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பெருக செய்திட வேண்டும்.” என்று வேண்டினார் அரசர் விட்டலாராயர். அதனால் இன்றுவரை தம் பக்தர்களின் வேண்டுதலை உடனே நிறைவேற்றுவார் ஸ்ரீபாண்டுரங்கன் என்கிறது புராணம். ஸ்ரீபாண்டுரங்கனை வழிப்பட்டவர்களான புரந்தரதாசர், துக்காராம், போன்றவர்களின் வம்சத்தினர் இன்றும் இத்தலத்தில் வந்து வழிபாடு செய்கிறார்கள் என்கிறார்கள்.

ஆலயத்தின் பரிகாரம்  

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க பால்பாயாசம் படைத்து வழிபடுகிறார்கள். திருமணம் தடை உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் திரட்டுப்பால் செய்து வழிபாடு செய்கிறார்கள். விட்டலாபுரம் ஸ்ரீபாண்டுரங்கனை வணங்கினால் வாழ்க்கையில் விடியல் பிறக்கும்.

© 2011 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Aug 3 2011. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், பெருமாள் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »