விக்கிரமாதித்தனிடம் வேதாளம் சொன்ன தீப சாஸ்திர ரகசியம்
நிரஞ்சனா
வீட்டிலும் கோயிலிலும் விளக்கு ஏற்றும் முன்னதாக அந்த விளக்கின் திரியை சரி செய்த பிறகுதான் தீபத்தை ஏற்றுவோம். இப்படி விளக்கின் திரியை சரி செய்த பிறகு அந்த எண்ணை பிசுக்கு கையில் ஒட்டி இருக்கும். அதை பலர் தங்கள் தலையிலேயே தேய்த்துக் கொள்வார்கள். அப்படி செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் என்ன கெடு பலன் வரும்? என்பதை தனக்கு வேதாளம் சொன்ன சாஸ்திர கருத்து எல்லோருக்கும் பொதுவானது என விக்கிரமாதித்தன் சொல்லியிருக்கிறார். அது என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.
யார் மகாராணி?
ஒருநாள் விக்கிரமாதித்த மகாராஜனின் திறமை அறிய ஒருவர் சவால் விடுத்தார். அது என்னவென்றால், ஒரு அரண்மனைக்கு அழைத்து சென்று அந்த அரண்மனையில் யார் உண்மையான மகாராணி என்று சரியாக சொல்ல வேண்டும். விக்கிரமாதித்தனும் அந்த சவாலை ஏற்றுக், வேதாளத்தை அழைத்துக்கொண்டு அந்த அரண்மனைக்குள் சென்றார்.
அந்த அரண்மனையில் உள்ள பணி பெண்களில் இருந்து எல்லா பெண்மணிகளும் மகாராணியை போல் அலங்கரித்து இருந்தார்கள். விக்கிரமாதித்தனுக்கு யார் உண்மையான மகராணி? என்று கண்டுபிடிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. தன்னுடன் வந்த வேதாளத்திடம் ஆலோசனை கேட்டார் அரசர்.
“அரசே பொருமையாக இரு. யார் மகாராணி என்பதை கண்டுபிடித்துவிடலாம்” என்றது வேதாளம்.
அப்போது ஒரு பெண் விக்கிரமாதித்தனுக்கு உணவு பரிமாரினாள். உடனே விக்கிரமாதித்தன் வேதாளத்திடம், “இவள்தானே மகாராணி”? என்றார். அதற்கு வேதாளம் “இல்லை” என்றது. இப்படியே காலை முதல் மாலை வரை பொழுது கழிந்தது. உண்மையான மகாராணி யார் என்பதை கண்டறிய முடியவில்லை. மாலையில் விளக்கு வைக்கும் நேரம் வந்தது.
பூஜையறையில் இருந்த விளக்குகளை ஏற்ற சில பெண்கள் வந்து தீபம் ஏற்றினார்கள். விக்கிரமாதித்தன் மீண்டும் வேதாளத்திடம் “இவர்களில் யார் மகாராணி”? என்றார். அந்த பெண்கள் தீபம் ஏற்றும்வரை கவனித்த வேதாளம்,
“அரசே…அதோ அந்த பெண்களில் மூன்றாவதாக நிற்கிறாளே அந்த பெண்தான் மகாராணி.” என்றது.
விக்கிரமாதித்தன், “நீ எதை வைத்து சொல்கிறாய்?” என்றது.
அதற்கு வேதாளம், “அரசே தீபம் ஏற்றிய அந்த மூன்றாவது பெண்ணை தவிர மற்ற பெண்கள் தரித்திரம் பிடித்த பெண்கள். இவர்கள் யாரும் மகாராணியாக இருக்கவே முடியாது. ஏனென்றால் மற்ற பெண்கள் தீப விளக்கின் திரியை சரி செய்த பிறகு தங்கள் கையில் ஒட்டியிருந்த கருமையான பழைய திரியின் அழுக்கு எண்ணை பிசுக்கை தங்கள் தலையில் தேய்த்து கொண்டார்கள். இப்படி எவர் தன் தலையில் தீபத்தின் எண்ணை பிசுக்கை தேய்த்து கொண்டாலும் அவர்கள் அதிகார அந்தஸ்தில் இருக்கவே முடியாது. அடிமையான நிலையில்தான் இருப்பார்கள். நல்ல நிலைக்கும் வர முடியாது.
காரணம் என்னவென்றால் ஒரு வீட்டின் துஷ்ட சக்தியை தீப ஜோதி பொசிக்கி வைக்கும். தீயவற்றை பொசிக்கி வைத்ததை தலையில் தேய்த்தால் மீண்டும் கஷ்டநிலையில்தான் இருக்க முடியும். ஆனால் அந்த மூன்றாவது பெண் தீபம் ஏற்றிய உடன் தன் கையில் ஒட்டியிருந்த எண்ணை பிசுக்கை தன் அருகில் நின்றவளிடம் துணி ஒன்றை வாங்கி அதிலே துடைத்துக் கொண்டாள். ஆகவே அவள்தான் மகாராணி.” என்றது வேதாளம்.
வேதாளம் சொன்னது உண்மைதான். விக்கிரமாதித்தனும் யார் மகாராணி என்பதை பரீட்சை வைத்தவரிடம் சொல்லி சவாலில் வெற்றி பெற்றார்.
ஆம்.. மின் விளக்கு வருவதற்கு முன்பே அக்னி பகவானின் அருளால் தீப வெளிச்சம் உண்டானது. பஞ்சபூதங்களில் அக்னிக்கே அதிக பலம் என்கிறது சாஸ்திரம். தீபத்தின் நெருப்பு மேல் நோக்கியே எரியும். எக்காரணத்திலும் நெருப்பு கீழ் நோக்கி எரியாது. யாருக்கும் தலை வணங்காது. இப்படி சக்தி வாய்ந்த நெருப்பை வீட்டில் இறைவன் முன்பாக தீபமாக காலை,மாலையிலும் ஏற்றி வைத்தால் அந்த வீட்டிற்குள் இருக்கும் துஷ்ட சக்தியை தீப ஒளி பொசிக்கி வைக்கும். போசிக்கி வைத்ததை தலையில் தேய்த்துக்கொண்டால் உயர்ந்த அந்தஸ்தை தராது. அதனால் தீபத்தின் திரியை சரி செய்த பிறகு கையில் இருக்கும் எண்ணை பிசுக்கை வேறு ஒரு துணியால் சுத்தமாக துடைத்துக் கொள்ளவேண்டும். கோயிலில் விளக்கு ஏற்றும் போதும் இந்த விஷயத்தை நாம் கவனத்தில் வைக்க வேண்டும்.
வீட்டில் விளக்கு வைக்கும் நேரத்தில்….
ஸ்ரீராமபிரானின் நாமம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ அந்த இடத்தில் ஸ்ரீஆஞ்சேனயர் வந்து நிற்பார். அதுபோல் வீட்டில் குறிப்பாக மாலையில் விளக்கு வைத்த நேரத்தில் அபசகுணமாக பேசுவதையோ, வீட்டை பெருக்குவதையோ, குப்பையை வெளியில் கொட்டுவதையோ தவிர்த்தால் அந்த வீட்டில் ஸ்ரீ மகாலஷ்மி வாசம் செய்வாள். மாலை நேரத்தில் உங்களுக்கு பிடித்தமான தெய்வீக பாடல்களையும் ஒலிக்கச் செய்யலாம். இப்படி நல்லமுறையில் சாஸ்திரத்தை கடைபிடித்தால் இன்னல்கள் மறையும் நன்மைகள் ஏற்படும்.
©2011bhakthiplanet.com All Rights Reserved