பக்தர் டெண்டுல்கருக்கு பாபா தந்த உபதேசம்
மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு
பகுதி – 12
சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
நிரஞ்சனா
யார் இந்த சாய்பாபா? எதற்காக சீரடிக்கு வந்தார்.? அவர் மகானா அல்லது மந்திரவாதியா? போன்ற கேள்விகளை தீயவர்கள் மக்கள் மத்தியில் பரப்பினார்கள். இதை உடனே அறிய வேண்டும், நமக்காக இல்லை என்றாலும் பாபாவை பற்றி அவதூறாக பேசும் சண்டாளர்களின் வாயை மூட வேண்டும் என்ற முடிவுடன் சிலர் கண்டோபா ஆலயத்திற்கு சென்று(சிவன் கோயில்) பூசாரியிடம் குறி கேட்டார்கள். அதை காண சீரடி மக்கள் எல்லோரும் கண்டோபா ஆலயத்திற்குள் குவிந்தார்கள். பூசாரி மீது தோன்றிய சிவபெருமான் உக்கிரமாக பூசாரியை ஆட்டுவித்தான். இதனால் பூசாரி பயங்கரமாக கத்திக்கொண்டும் ஆடிகொண்டும் ஒர் இடத்திற்கு வந்தார்.
“இந்த இடத்தில் ஒரு சக்தியிருக்கிறது. இந்த இடத்தை தோண்டுங்கள். இவ்வூர் வந்திருக்கும் சாய்பாபா என்னால் அனுப்பபட்டவன். அவனுடைய குரு பூஜித்த இடமும் இதுவே” என்று கூறினார் பூசாரி உடலில் இருந்த சிவபெருமான். இறைவன் குறிப்பிட்ட இடத்தில் மண்வெட்டியை கொண்டு தோண்டினார்கள். அந்த இடத்தில் சதுரமாக சிமெண்ட் பலகை மூடியிருந்தது. அதை தூக்கி பார்த்த போது ஆச்சரியம் அடைந்தனர் ஷீரடி மக்கள்.
ஆம்.. சிமெண்ட் பலகையை தூக்கியவுடன் அந்த இடத்தில் பெரிய பள்ளம் இருந்தது. பள்ளத்தில் விளக்கு ஒன்று எரிந்துக் கொண்டிருந்தது. எல்லோரும் பிரம்மிப்பாக அதை பார்த்தார்கள்.
“இந்த விளக்கு பல வருடங்களுக்கு முன் ஏற்றப்பட்டது. இந்த விளக்கை ஏற்றி ஒரு மகான் வழிப்பட்டார். அந்த மகானின் சீடன்தான் இந்த சாய்பாபா. சாய்பாபா சதாரணமான மனிதர் அல்ல. தெய்வப்பிறவி. அந்த தெய்வப்பிறவியை சந்தேகிப்பதை விட்டு அவனுடைய அருள் பெற்று சந்தோஷம் பெறுங்கள்.” என்றார் பூசாரியின் மேல் வந்த சிவன். அந்த நேரம் சாய்பாபா வந்து கொண்டு இருந்தார். தன் குரு தவம் இருந்த பள்ளம் திறக்கப்பட்டு இருப்பதை கண்டு கோபம் கொண்டார்.
“யார் இதை திறந்தது. என் குரு பூஜித்த இடம் இது. அவர் ஏற்றிய விளக்கு இது. இதை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். பள்ளத்தை பழையபடி மூடி விடுங்கள்.” என்றார் சாய்பாபா. உடனே அந்த இடத்தை பழையபடி சிமெண்டு பலகையால் மூடி மண்ணை கொட்டி சரி செய்தார்கள் ஊர் மக்கள். சாய்பாபா தெய்வப்பிறவிதான். அவர் நமக்கு நன்மை செய்யவே வந்தவர் என்பதை ஆணித்தரமாக உணர்ந்தார்கள் ஷீரடி மக்கள்.
அன்னதானத்தின் சிறப்பை உணர்த்திய மகான் சாயி
பேடுல் ஜில்லாவை சேர்ந்த டெண்டுல்கர் என்பவர் ஷீரடிக்கு சென்று மகான் சாய்பாபாவை தரிசிக்க வேண்டும் என்று விரும்பினார். இதனால் பல தடவை ஷீரடிக்கு பயணம் செய்ய நினைக்கும் போதேல்லாம் ஏதாவது ஒரு வேலை வந்து தடை உண்டாகும். “ஷீரடிக்கு செல்ல முடியாமல் நம்மை ஏதோ ஒரு சக்தி தடுக்கிறது. அது தீய சக்தியாகதான் இருக்கும். நமக்கு நன்மை ஏற்பாடாமல் தடுக்கிறதே.” என்று மனம் வருந்தினார் டெண்டுல்கர். ஒருநாள் அவர் கனவில், “நீ அன்னதானம் செய். உன் பாவம் விலகும். அதன் பிறகு நீ என்னை காண எந்த தடையும் வராது” என்றார் சாய்பாபா.
தன்னுடைய கனவை மறுநாள் நிறைவேற்ற முடிவு செய்தார் டெண்டுல்கர். தன்னிடம் போதிய வசதி இருக்கும் போது மற்றவர்களுக்கு அன்னதானம் செய்வார். பணம் இல்லாத சமயத்தில் எறும்புகளுக்கு வெல்லம் அல்லது அரிசி மாவு போடுவார். இப்படி பலமுறை செய்து வந்தார் டெண்டுல்கர். ஒருநாள் டெண்டுல்கரின் நண்பர் ஒருவர், “நான் ஷீரடிக்கு சென்று பாபாவை தரிசிக்க போகிறேன். நீயும் என்னுடன் வந்தால் நன்றாக இருக்கும்” என்றார். இதை கேட்ட டெண்டுல்கர் மகிழ்ச்சியடைந்து உடனே அந்த நண்பருடன் கிளம்பினார் சீரடிக்கு. சீரடிக்கு சென்று மகான் சாய்பாபாவை கண்டதும் டெண்டுல்கரால் ஆனந்தத்தை அடக்க முடியாமல் மகிழ்ச்சியில் “பாபா…” என்று ஆனந்த கண்ணீருடன் கத்தினார்.
“உன் பாவவினை நீங்கியதால் ஆனந்தம் அடைந்தாயா டெண்டுல்கர். நீ செய்த அன்னதானத்தின் மகத்துவத்தால்தான் என்னை நீ சந்திக்க முடிந்தது” என்று காந்த குரலில் சாய்பாபா பேசியதை கேட்டதும், இன்னும் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றார் டெண்டுல்கர். உடன் இருந்தவர்,
“பாபா… தங்களுக்கு டெண்டுல்கரை முன்பே தெரியுமா?” என்றார்.
சாய்பாபா புன்னகைத்தார்.
“உலகத்தில் இருக்கும் ஜீவராசிகளை பற்றி பாபாவுக்கு தெரியாமலா இருக்கும்” என்றார் பாபாவின் பக்கத்தில் இருந்த பக்தர்களின் ஒருவர்.
“பாபா நீங்கள் என் வீட்டுக்கு வர வேண்டும். என் கையால் உணவை உங்களுக்கு நான் பரிமார வேண்டும். அப்போதுதான் என் மனம் நிம்மதியடையும். அத்துடன் உங்கள் பாதம் என் வீட்டில்பட்டால் எங்கள் வம்சமே மேன்மை அடையும் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்றார் டெண்டுல்கர்.
“நிச்சயமாக ஒருநாள் உன் வீட்டுக்கு வருகிறேன் கவலைப்படாதே. ஆனால் தொடர்ந்து நீ அன்னதானம் செய்வதை மட்டும் நிறுத்தி விடாதே. நான் எப்போது வேண்டுமாலும் எந்த உருவத்திலும் உன் வீடு தேடி வருவேன். உன்னிடத்தில் உணவு கேட்பேன்.” என்றார் டெண்டுல்கரிடம் சாய்பாபா.
சாய்பாபாவை தரிசித்துவிட்டு தன் சொந்த ஊருக்கு திரும்பினார்கள் டெண்டுல்கரும அவருடைய நண்பரும். சில மாதங்கள் கழித்து ஒருநாள், பிச்சை கேட்டபடி ஒரு சாது வந்துக் கொண்டிருந்தார். அடுத்ததாக டெண்டுல்கர் வீட்டின் முன் நின்று,
“தம்பி…எனக்கு பசியாக இருக்கிறது. உணவு வேண்டும்.” என்றார்.
“இது இரவு நேரம் என்பதால் எல்லா உணவும் காலியாகிவிட்டது. சற்று முன் வந்திருந்தால் நிச்சயம் உணவு தந்திருப்பேன். இருந்தாலும் பசி என்று கூறுகிறீர்கள். சற்று பொறுங்கள். என் நண்பர்களின் வீட்டில் உணவு இருந்தால் வாங்கி வருகிறேன்.” என்று கூறி விட்டு, டெண்டுல்கர் தன் நண்பர் வீட்டிற்கு சென்று உணவு வாங்கி வந்தார். இதை கண்ட சாது மகிழ்ச்சியடைந்தார்.
“எதற்காக இத்தனை சிரமம் எடுக்கிறாய். உணவு இல்லாத போது வீட்டில் எந்த நேரமும் இருக்கும் வெல்லத்தை கொடுத்தாலே போதும். டெண்டுல்கர் நீ நன்றாக தெரிந்து கொள். முடிந்த அளவு உணவு தானம் செய்வதை மட்டும் விட்டு விடாதே. உன் கைகளால் தரும் உணவு தானத்தால் உன் தலையெழுத்து நன்றாக அமையும். கர்ணன், பல தானம் செய்திருந்தாலும் அன்னதானம் செய்யாததால் அவனால் சொர்க்கம் செல்ல முடியாமல் திணறினான் என்பதையும் எக்காரணங்கொண்டும் மறக்காதே. ஒருநாளைக்கு ஒருவருக்காவது அன்னதானம் செய்வதால் அன்னபூரணி மகிழ்வாள். உனக்கு வரப் போகும் பெரும் ஆபத்தில் இருந்து இறைவன் உன்னை காப்பான். அன்னபூரணியின் அருளால் உன் வம்சத்திற்கே பசி கொடுமை வராது” என்றார் மகான் சாய்பாபா.
“என் பெயரையும் இத்தனை நல்ல உபதேசமும் செய்யும் தாங்கள் சாதாரண பிச்சைகாரனாக இருக்க முடியாது. சொல்லுங்கள் அய்யா தாங்கள் யார்.?” என்றார் டெண்டுல்கர்.
“நான் யாரா… என்னை தெரிந்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாய் டென்டுல்கர். நான் சொன்னதை மட்டும் கேள். அது போதும் இந்த பிச்சைகாரனுக்கு.” என்று சிரித்து கொண்டே விடைப்பெற்றார். விடைபெற்றார் என்பதை விட அந்த நிமிடமே மாயமாக மறைந்தார். தன் வீட்டிற்கு நேரடியாக வந்தது மகான் ஷீரடி சாய்பாபா என்பதை அப்போதுதான் உணர்ந்தார் டெண்டுல்கர்.
சிலர் ஒன்றும் இல்லாத விஷயத்தை “வெங்காயம்” என்பார்கள். வெங்காயத்திலும் இறைவனின் வடிவம் இருப்பதை உணர்த்தினார் மகான் ஷீரடி சாய்பாபா. அது என்ன…?
இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved