சிவனின் மந்திரத்தை சிவனுக்கே எளிமையாக சொன்ன போகர்
நிரஞ்சனா
போகர். இவருக்கு பெருமைகள் பல உண்டு. இவரின் வைத்தியமுறைகள், சித்து வேலைகள், கூடுவிட்டு கூடு பாயும் அதிசயம் என்று இன்னும் இன்னும் எத்தனையோ அற்புதங்களை போகர் நிகழ்த்தி இருந்தாலும், “போகர்” என்று சொன்ன உடன் நம் நினைவுக்கு வருவது பழனி முருகன். இந்த போகர் யார்.? எதற்காக பழனியில் முருகன் சிலையை உருவாக்கினார்.? அந்த பழனி முருகன் சிலையானது நவபாஷாணங்களால் ஆனது. அந்த நவ பாஷாணங்களை யார் சொல்லி செய்தார்? பொதுவாக சில பாஷாணங்கள் விஷதன்மை கொண்டது என்று சொல்வார்கள். ஆனால் பழனி முருகன் சிலையில் உள்ள அந்த ஒன்பது பாஷாணங்களும் சிறந்த மூலிகைகளினால் உருவாக்கபட்டது. இவைதான் நல்ல மூலைகள் என்று போகருக்கு தெரிவித்தது யார்? இந்த கேள்விகளுக்கு இங்கே விடை காண்போம்.
போகர், மருத்துவ குடும்பத்தில் பிறந்தவர் அல்ல. நம் அண்டை நாடான சீனாவில் சலவை தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர். பல சக்திகளை இறைவனின் அருளால் பெற்றவர். இதனால் பல நாடுகளுக்கு சென்றார். போகர் சென்ற இடம் எல்லாம் சிறப்பை பெற்றாரா? என்றால் அதுதான் இல்லை. வித்தை கற்றவராக இருந்தாலும், செல்வந்தராக இருந்தால்தானே சிறப்பு இந்த உலகத்தில். போகரோ, பல வித்தைகளை கற்றவர். அதனால் இவர் மக்களால் பல இன்னல்களுக்கும், கேலிகளுக்கும் ஆளானார்.
வேதகோஷமிட்ட பூனை
போகர், தொடர்ந்து பல மணி நேரம் கால்நடையாக நடந்து கலைத்துப்போனார். வழியில் ஒரு அக்ரஹாரத்திற்கு சென்றார். அங்கு ஒரு வீட்டில் தண்ணீர் வேண்டும் என்று கேட்டார். அவருடைய உருவத்தை பார்த்த அந்தணர், “போகரின் உருவத்தை பார்த்த உடன் இவன் வெளிநாட்டை சார்ந்தவன் என்பதை தெரிந்து, “போடா பரதேசி” என்று வாய்க்கு வந்தபடி தண்ணீர் கூட தராமல் திட்டினார். போகர் ஒன்றும் பதில் பேசவில்லை. அந்தணரின் வீட்டுக்குள் மந்திர கோஷம் ஒலிப்பதை கேட்டார். அந்த பக்கமாக வந்துக்கொண்டிருந்த ஒரு பூனையை பிடித்தார் போகர். அதை தூக்கிபிடித்து பூனையின் காதில் ஏதோ சொன்னார். அடுத்த நிமிடமே அந்த பூனை, அந்தணர்களுக்கு இணையாக சத்தமாக வேத மந்திரம் சொன்னது. இதை கண்ட அந்தணர்கள் திகைத்தார்கள். வந்திருப்பவர் இறைவனா? அல்லது இறைவனின் அருள் பெற்ற சித்தனா? என்று எண்ணி, போகரிடம் மன்னிப்பு கோரினார்கள். மன்னிப்பது இறைவனின் குணம். போகர் இறைவனின் அருள் பெற்றவர் அல்லவா. அதனால், மறப்போம் மன்னிப்போம் என்ற உயர்ந்த குணத்தால் அந்த அந்தணர்களை மன்னித்தார்.
“அந்தணர்களே…நான் சித்துவேலை காட்டி உங்களை எனக்கு அடிமைப்படுத்த விரும்பவில்லை. வேதங்களை உங்கள் வாய்தான் சொல்கிறதே தவிர, உங்கள் மனம் அந்த வேதத்தின் உண்மையில் இல்லை. அதனால் இறைவனே நேரில் வந்தாலும் சந்தேகிக்கும் உங்களுக்கு சித்துவேலை காட்டிதான் நம்ப வைக்க வேண்டியிருந்தது. உண்மையில் வேதம் அறிந்தவன் எதையும் இறைவனாகவே நோக்குவான். வேதம் பாடுவது பெரிதல்ல. அதிலும்-எதிலும் இறைவன் இருப்பதை உணருங்கள்.” என்று கூறி சிரித்தகொண்டே சென்றார் போகர்.
தங்க பாத்திரம்
பூனை வேதம் ஓதிய செய்தி, காட்டு தீ போல நான்கு திசைகளுக்கும் பறந்தது. மக்கள், கூட்டம் கூட்டமாக போகரை சந்தித்து தங்கள் குறைகளையும் கஷ்டங்களையும் கூறினார்கள். அதில் அதிகமானவர்கள், நாங்கள் பசியால் வாடுவதாகவும், வறுமையின் கொடுமையில் இருந்து எங்களை நீங்கள்தான் விடுவிக்க வேண்டும் என்றார்கள். அவர்களின் கஷ்டத்தை கண்ட போகர் மனம் இறங்கி, “அவரவர் வீட்டில் இருந்து பாத்திரங்களை கொண்டு வாருங்கள்” என்றார். மக்களும் எதற்காக சித்தர் பாத்திரம் கேட்கிறார்.? என்று புரியாமல், தங்களுடைய வீட்டில் இருந்து பாத்திரத்தை கொண்டு வந்தார்கள். மக்கள் கொண்டு வந்த பாத்திரங்களை வாங்கி ஒரு இடத்தில் அவற்றை வைத்து, வரட்டிகளை கொண்டு அந்த பாத்திரங்களை மூடும் அளவில் அடுக்கி வைத்து தீ மூட்டினார்.
வரட்டிகள் பஸ்மமானது. பாத்திரங்கள் உருகும் நிலையில் இருந்தது. பிறகு தன் இடுப்பில் வைத்திருந்த சில மூலிகைகளை அந்த பாத்திரத்தில் போட்டார். ஒரு அற்புத நிகழ்வாக எல்லா பாத்திரங்களும் பொன்னாக ஜொலித்தது. பாத்திரங்கள் தங்கமாக மாறியதை கண்ட மக்கள் ஆனந்தம் அடைந்தார்கள். இதனால் போகர் சித்தரிடம் அற்புதங்களை கற்கவே பலர் வந்து சேர்ந்தார்கள். அவர்களில் சிலரை தன் சீடர்களாக ஏற்று அவர்களுக்கு மூலிகை ரகசியம், வைத்திய சாஸ்திரம் போன்றவைகளை கற்றுகொடுத்தார்.
போகரை எச்சரித்த நவசித்தர்கள்
ஒருநாள் போகர், வீதியில் நடந்து சென்று கொண்டு இருக்கும் போது, ஒரு இளம் பெண் தன் கணவரை பறிகொடுத்து கணவரின் உடல் அருகே அழுது கதறிக் கொண்டு இருந்தாள். அதை கண்ட போகர் மனம் வருந்தி, இறப்பே இல்லாமல் செய்யவேண்டும். அல்லது இறந்தவர்களை மீண்டும் உயிர்பிக்க வேண்டும். அதற்கு சஞ்சீவினி மார்க்கத்தை அறியவேண்டும் என்று முடிவு செய்தார். அந்த மந்திரத்தை பெற மேருமலையில் சித்தியடைந்திருக்கும் நவசித்தர்களை தவசக்தியால் வரவழைத்தார். சமாதியடைந்தவர்களாக இருந்தாலும் நவசித்தர்கள் போகருக்காக ஆத்ம நிலையில் வந்தார்கள்.
“இறந்தவர்கள் மீண்டும் எழ வேண்டும். அதற்கான மந்திரத்தை நீங்கள் எனக்கு உபதேசிக்க வேண்டும்.” என்றார் போகர். இதைகேட்ட ஒன்பது சித்தர்களும், “பிறப்பு-இறப்பு என்பது இறைவனால் படைக்கப்பட்ட எல்லா ஜீவராசிகளுக்கு உண்டு. இதை மாற்ற நாம் யார்.? இறைவனிடம் நமக்கு உள்ள அதிகாரத்தையும், இறைவனுக்கு நம் மீது உள்ள அன்பையும் நாம் பயன்படுத்தி எல்லை மீறக் கூடாது. வீண் பரீட்சையில் நீ இறங்காதே. இதனால் உனக்கு பல இன்னல்கள் நேரும். எங்கள் சொல்லையும் மீறி இயற்கைக்கு எதிராக செய்ய முயற்சித்தால், நீ கற்ற வித்தையை மறப்பாய்.” என்று சபித்தார்கள் நவசித்தர்கள்.
“நீங்கள் எனக்கு அந்த சஞ்சீவினி மார்க்கத்தை சொல்லி தரவில்லை என்றால் இங்கேயே இறந்து விடுவேன்.” என்றார் போகர்.
“மக்கள் மேல் அதிக அன்பு வைத்திருக்கிறாய். அதுவே உனக்கு பல கஷ்டங்களை தரப்போகிறது.” என்ற கூறி, “சரி உனக்கு காயகல்ப முறையை சொல்லி தருகிறோம். ஆனால் அதை நல்லவர்களுக்கு மட்டும் பயன்படுத்து.” என்று கூறி ரகசியத்தை உபதேசித்தார்கள் நவசித்தர்கள். அதை தெரிந்துக்கொண்டு மேலும் போகரே தன் கண்டுபிடிப்பாக பல காயகல்ப முறையை தெரிந்துக்கொண்டு அனைத்தையும் ஒரு நூலாக எழுதினார். ஆகாயத்தில் நடப்பது, வானத்தில் படுப்பதும், நிற்பதுமான சகாச பயிற்சில் போகர் வல்லவராக திகழ்ந்தார். போகர் அவ்வப்போது சீன நாட்டுக்கு நினைத்த நேரத்தில் சென்று வந்தார்.
சிவனின் மந்திரத்தை சிவனுக்கே எளிமையாக சொன்ன போகர்
சிவபெருமான் ஒருமுறை சவுக்காரம் என்கிற மகிமையை பார்வதிதேவிக்கு சொல்லிகொண்டுவந்தார். அதை தேவி, நந்திக்கு உபதேசித்தாள். நந்தி, திருமூலருக்குக் கூறினார். திருமூலர் காலாங்கிநாதருக்கு உபதேசிக்க, காலாங்கிநாதர் போகரின் நல்ல குணத்தை அறிந்து, அதை போகருக்கு இரகசியமாக சொல்லிகொடுத்தார். . ஆனால், போகரோ சவுக்காரத்தின் இரகசியத்தை சித்தர்களுக்கு மட்டும் புரியும்படி இருந்த பாஷையை எளிய நடையில் பாமர மக்களுக்கும் புரியும் விதமாக எளிமையாக வெளிப்படையாக மூலமந்திரத்தை எழுதிவிட்டார்.
இப்படி வெளிப்படையாக எழுதிவிட்டதை கண்ட மற்ற சித்தர்கள் பயந்தார்கள். “தீயவர்களிடம் சவுக்கார மந்திரம் கிடைத்தால் உலகமே இரண்டாகி விடும்” என்று வருந்தி, கூர்ம முனிவர், அகத்தியரிடம் புகார் செய்தார். அகத்தியர் கடும் கோபமாக சிவபெருமானிடம் போகரை பற்றி புகார் கூறினார். ஈசன் போகரை அழைத்து, “நீ இப்படி செய்யலாமா? இரகசியத்தை பூலோக மக்களுக்கு புரியும்படி எழுதலாமா.?” என்றார்.
“அய்யனே, நல்லவை நாலு பேருக்கு தெரியவேண்டும் என்பது தர்மம். அதை நீங்கள் மறுக்கலாமா.? என்றார் போகர் பணிவாக. அதை கேட்ட சிவபெருமான், “சரி நீ எழுதியதை காட்டு.” என்றார். போகர், சிவபெருமானிடம் தான் எளிமையாக எழுதியதை படித்தே காட்டினார்.
“இவ்வளவு தெளிவாக புரியும்படி எழுதி இருக்கிறாயே. அதை பிறர் அறிய வண்ணம் ஒரு குகைக்குள் மறைத்தவை.” என்றார் சிவபெருமான்.
“இறைவா மன்னிக்கவும். எல்லாம் தெரிந்த தங்களுக்கு தெரியாததா? இதை நான் எப்போதோ பூலோக மக்களுக்கு தெரியப்படுத்திவிட்டேன்.” என்றார் போகர்.
“சரி ஆகட்டும். எல்லாம் நன்மைக்குதான். நல்ல மனம் கொண்டிருக்கிறாய். அதிலும் குழந்தை மனம் உனக்கு.” என்று சிவபெருமான் போகரின் மீது கோபம் கொள்ளாமல் அமைதியாக பேசி வழி அனுப்பி வைத்தார்.
முருகனின் உபதேசத்தில் பழனி முருகன் சிலை
அதன் பிறகு போகர், அன்னை பார்வதிதேவியை நினைத்து கடுமையாக தவம் இருந்தார். ஸ்ரீபார்வதிதேவி, போகரின் தவத்தை ஏற்று, “நீ பழனிக்கு செல். அங்கு என் மைந்தன் உனக்கு அருள் தருவான்.” என்றார். போகர் ஆகாயமார்க்கத்தில் பழனிக்கு சென்றார். அங்கு முருகனை நினைத்து தவம் இருந்தார். போகரின் தவத்தை ஏற்ற முருகப் பெருமான் காட்சி தந்தார்.
“போகரே, மொத்தம் 64 பாஷாணங்கள் இருக்கிறது. அத்தனையும் சேர்த்து என் உருவத்தை சிலையாக தயாரிக்க வேண்டாம். நான் கூறும் ஒன்பது சக்தி வாய்ந்த மூலிகையினால் அதாவது நவபாஷாணத்தினால் என் சிலையை தயார் செய். இதனால் உன் புகழ் நிலைத்திருக்கும். அத்துடன் உன் கைவண்ணத்தால் உருவாகும் சிலையில் பட்டு வரும் நீரும் மருத்துவ சக்தி பெரும். அந்த நீரை மனிதர்கள் சாப்பிட்டால் அவர்களின் தீராத பிணி நீங்கும்.” என்று கூறி, ஒன்பது பாஷாணத்தை பற்றி கந்தன் போகருக்கு உபதேசித்தார். அந்த ஒன்பது பாஷாணங்களை சேர்த்து திருமுருகனின் சிலையை செய்ய தொடங்கினார். அதற்கு உதவியாக போகரின் சீடர் புலிப்பாணி சித்தர் இருந்தார். புலிப்பாணி சித்தர், இறுதிவரையிலும் பழனி ஆண்டவர் திருவுருவம் செய்யும் பணியில் போகருக்கு உதவியாக இருந்தார்.
“எனக்குப் பின் பழனியாண்டவரை அபிஷேக ஆராதனை செய்து பராமரிப்பது உன் வேலை.” என்று புலிப்பாணிசித்தரிடம் கூறினார் போகர். பிறகு சிலகாலத்திலேயே போகர் சமாதி நிலையினை அடைந்தார். பழனிஆண்டவர் மூலவர் சிலையில் அபிஷேகம் செய்த அபிஷேக நீரையோ அல்லது முருகன் சிலைமேல்பட்டு வரும் அபிஷேக விபூதி, பஞ்சாமிர்த்தம் போன்றவற்றை கொஞ்சம் சாப்பிட்டால் உடலில் இருக்கும் அத்தனை நோயும் தீரும்.♦
© 2011 bhakthiplanet.com All Rights Reserve