புற்று மண்ணில் சிலையான அங்காளம்மன்;சுகப்பிரசவத்திற்கு பரிகார திருக்கோயில்
கோவைக்கு மேற்கில் 6வது கி்மீ.யில் இருக்கிறது பேரூர். இங்குள்ள திருக்கோயில் ஸ்ரீ அங்காளம்மன் கோயில்.
சிவனும் பார்வதிதேவியும் பூலோகத்தில் இருக்கும் மக்களை நேரில் சந்திக்க விரும்பினார்கள். அதனால் இத்தெய்வ தம்பதிகள் பூலோகத்திற்கு வந்தார்கள். ஒரு காட்டுக்குள் சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது ஒரு ஆற்றை கடந்தால்தான் ஊருக்குள் செல்லமுடியும் என்பதால் சக்திதேவி, தன் சக்தியை உபயோகப்படுத்தி பார்த்தாள். இதை கண்ட சிவபெருமான்,
“வேண்டாம் நாம் இப்போது மானிட உருவத்தில் இருப்பதால் அவர்களை போல் செயல்படவேண்டும். வா ஆற்றை கடந்தே செல்வோம்” என்றார்.
கணவரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் பின்தொடர்ந்தாள் பார்வதிதேவி. அப்போது ஆற்றின் ஒருபகுதி ஆழமாக இருந்தது. இதை கண்ட சக்திதேவி, “ஆழம் அங்கே ஆழம்” என்று பயத்தில் ஆவேசமாக கத்தினாள். அமைதியாக இருந்த காட்டில் அதிர்ச்சியான குரல் தந்ததால், சிவன் சினம் கொண்டார்.
“ஏன் ஆழம் என்று கத்துகிறாய்.? எல்லாம் எமக்கு தெரியும்” என்று அவரும் அம்மனை பார்த்து கோபமாக சத்தமிட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத பார்வதி, கணவன் மீது கோபம் கொண்டு அந்த காட்டிலேயே புற்றாக வடிவம் எடுத்து அமர்ந்தாள். இதை கண்ட சிவன், “அங்கே ஆழம் என்று கத்தியதால் வருங்காலத்தில் உன்னை “அங்காளம்மன்” என்று அழைக்கட்டும்” என்று கூறி சிவபெருமானும் அந்த ஊரிலேயே அங்காளம்மனுக்கு துணையாக தங்கிவிட்டார்.
புற்று மண்ணே சிலையானது
பல வருடங்கள் கழித்து அந்த புற்று மண்ணின் மேல் வெயிலும், மழையும்பட்டதால் அந்த புற்று, கல்போல் கெட்டியானது. அந்த காட்டில் வேட்டைக்கும் காய்கனி வகைகளை பறிக்கவும் நடந்து செல்ல ஒத்தையடிபாதை செய்து வைத்தார்கள் ஊர்மக்கள். இதனால் அங்கே மக்கள் நடமாட்டம் தொடங்க ஆரம்பித்தது. இந்த பகுதிக்கு ஒரு சிற்பி அவ்வப்போது வருவார். இங்கு இருந்த புற்று அவர் கண்களில்படும். ஒருநாள் அந்த புற்றின் அருகில் சென்று அதை தொட்டுப்பார்த்தார். சிற்பிக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த புற்று கல் போல் இருந்ததால், இது தெய்வீகசக்திபடைத்தது என்பதை உணர்ந்து அந்த புற்றை அம்மன் சிலையாக செதுக்கினார் சிற்பி. புற்றே சிலையாக ஆனதால் ஊர்மக்கள் அங்கு கோயில் எழுப்பி அந்த புற்று சிலையை பிரதிஷ்டை செய்துவழிபட்டார்கள்.
அங்காளம்மன் மகிமையை கண்ட ஊர்மக்கள்
அங்காளம்மனின் சக்தியில் ஒருபகுதி பேச்சயம்மனுக்கும் அவரை தொடர்ந்து முருகன் – விநாயகர் என்று ஒருவர் பின் ஒருவராக ஆலயத்திற்கு வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். பேச்சியம்மன் மேற்கு முகமாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். பேச்சியம்மனை வணங்கினால் உடல்உபாதைகள் நீங்குகிறது என்று அனுபவத்தில் உணர்ந்தவர்கள் கூறியதால், ஊர்மக்கள் பேச்சியம்மனையும் வணங்க தொடங்கினார்கள்.
பேரூரில் பிரகவதி என்ற பெண் நிறைமாத கர்ப்பவதியாக இருந்தாள். “எந்த நேரத்திலும் குழந்தை பிறந்துவிடும. ஆனால் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை திரும்பியதால் இரண்டு உயிரில் ஒரு உயிரைதான் காப்பாற்ற முடியும். அதுவும் உறுதியாக சொல்லமுடியாது. இரண்டு உயிருக்கும் ஆபத்தும் வரலாம்” என்று மருத்துவச்சி சொல்லிவிட்டாள். பிரகவதியின் பெற்றோருக்கும் அவருடைய கணவர் குடும்பத்தினருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் அழுதார்கள். அப்போது ஒரு பாட்டி, “ஏன் அழுகிறீர்கள்.? நீங்கள் அங்காளம்மனுக்கும் பேச்சுஅம்மனுக்கும் வரும் பவுர்ணமி அன்று வடைமாலை சாத்துவதாக வேண்டிகொள்ளுங்கள். நிச்சயம் தாயும், குழந்தையும் நலமாக இருப்பார்கள்” என்றாள்.
அந்த பாட்டி கூறியதை கேட்ட பிரகவதி குடும்பத்தாரின் மனதில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. பாட்டி சொன்னது போல் அம்மனிடம் வேண்டிக்கொண்டார்கள்.
பிரகவதி பிரசவ விலியால் துடித்தாள். மருத்துவச்சி பிரசவம் பார்த்தாள். ஆனால் இரண்டு உயிரில் ஏதாவது ஒன்றை இழக்க நேரிடும் என்ற எண்ணத்துடன்தான் பிரசவம் பார்க்கப்பட்டது. ஆனால் அம்மனின் சக்தியால் இரண்டு உயிரும் நல்லபடியாக பிழைத்துக்கொண்டது. இதை கண்ட மருத்துவச்சி ஆச்சரியம் அடைந்தாள். “என் அனுபவத்தில் இது அதிசயம்.” என்றாள். இதை கேட்ட பிரகவதியின் குடும்பத்தார், பரிகாரம் சொன்ன அந்த பாட்டியை தேடினார்கள். ஆனால் அவள் காணப்படவில்லை. அம்மனே பாட்டி உருவத்தில் வந்து சொன்னது போல் இருந்தது அவர்களுக்கு.
பவுர்ணமி அன்று பேச்சு அம்மனுக்கும் அங்காளம்மனுக்கும் வடைமாலை சாத்தி, தங்களுடைய நேர்த்திகடனை நிறைவேற்றினார்கள். அன்று முதல் இன்று வரை பவுர்ணமி அன்று இரு அம்மனுக்கும் வடைமாலை சாத்துவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். புற்றால் உருவானதால் அந்த அங்காளம்மனை வணங்கினால் காலசர்பதோஷம், சர்ப்பதோஷத்தால் வரும் பாதகத்தை தடுப்பாள். அங்காளஅம்மனையும, பேச்சு அம்மனையும் வணங்கினால் திருமணதடை, தொழிலில் இருக்கும் மந்தநிலை போன்ற பிரச்சினைகளும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.♦
© 2011 bhakthiplanet.com All Rights Reserved